Published:Updated:

ஆர்.கே.நகர் ரவுண்ட் அப்

தி.மு.க அழிக்கப் பார்க்குது... நான் மருது வந்திருக்கேன்... நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...மாப்பிள்ளை வேட்பாளர்... ஸ்டார் வேட்பாளர் நான்தான்... நானும் மண்ணின் மைந்தன்தான்

பிரீமியம் ஸ்டோரி

மிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பார்வையையும், தன் பக்கம் திருப்பி, ஆரவாரமாகக் காட்சி தருகிறது ஆர்.கே. நகர். இங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார், யார் தோற்பார் என்பதைப் பொறுத்து, தமிழகத்தின் அரசியல் போக்கே மாறப் போகிறது. ‘அ.தி.மு.க என்ற கட்சி, எதிர்காலத்தில் யார் கையில் இருக்கப் போகிறது’ என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது இருக்கிறது. எனவே, தமிழகமே இந்த இடைத்தேர்தல் ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

‘அ.தி.மு.க அம்மா கட்சி’ டி.டி.வி.தினகரன்

‘அ.தி.மு.க அம்மா கட்சி’யின் வேட்பாளரான டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலாவின் சகோதரி மகன். 1999-ல் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி-யானவர். 2004ல் தோல்வி அடைந்ததார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தேர்தலில் மக்களை நேரடியாகச் சந்திக்க வருகிறார். பணம், பவர் என பகாசுர வேட்பாளராக வலம் வந்தாலும், தொகுதிக்குள் அவருக்கான அறிமுகம் குறைவாகவே இருக்கிறது.

‘‘உங்கள் வேட்பாளர்... நம் அம்மாவின் வேட்பாளர்... சின்னம்மாவின் வேட்பாளர். வாக்குக் கேட்டு வருகிறார்... எம்.ஜி.ஆரின் தொப்பியோடு வருகிறார். உங்களுக்காகவே வருகிறார்’’ என அவரது ஜீப்புக்கு முன்பாக மற்றொரு வண்டியில் மைக்கில் முழங்கியபடியே வந்தார் ஒரு பெண்மணி. தொப்பி போன்ற ஒரு பொம்மையைக் கையில் ஏந்தியபடி வந்தார் தினகரன்.

சில மணித்துளிகள் மௌனத்துக்குப் பிறகு மைக் பிடித்த தினகரன், ‘‘நமது எம்.ஜி.ஆரின் அடையாளம் தொப்பி. எம்.ஜி.ஆரின் சின்னம் தொப்பி’’ என்று முழங்கத் தொடங்கினார். சசிகலா பெயரை மட்டுமல்ல... பல இடங்களிலும் மருந்துக்குக்கூட ஜெயலலிதா பெயரையும் அ.தி.மு.க அம்மா கட்சியினர் உச்சரிக்கவில்லை.

தொப்பி அணிந்து இரு கரமும் கூப்பிய நிலையில், வாக்காளர்களை நோக்கிப் புன்னகைத்த படியே பிரசாரம் செய்தார் டி.டி.வி.தினகரன். இடையிடையே தொப்பியைக் கழற்றிவிட்டு, அருகிலிருப்பவரிடம் சீப்பு வாங்கி, ஓப்பன் ஜீப்பில் தலைவாரியபடியே இருந்தார்.

ஆர்.கே.நகர் ரவுண்ட் அப்

‘இதுதான் எம்.ஜி.ஆர் ஸ்டைல்’ என சொல்லியிருப்பார்கள் போல... வழியில் தென்படும் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவதும், சிறுமிகளை அருகில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாக இருந்தார். பிரசாரம் அடுத்த தெருவுக்குள் நுழைந்தபோது, ‘‘உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? தி.மு.க நம்ம கட்சியை அழிக்கப் பாக்குது... அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது’’ என தி.மு.க-வுக்கு எதிராக மூச்சு முட்டப் பேசி முடித்தார். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கர்சீப்பால் நெற்றியைத் துடைத்துக்கொண்டே இருந்த தினகரனுக்கு, ஐந்து வீடுகளுக்கு ஒரு வீட்டில் ஆரத்தி எடுக்கப்பட்டது. பிரசார ஜீப் அருகில் செல்லும் ஒருவர் அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம், மாடி வீடுகளில் இருந்து பெண்கள் பூக்களைத் தூவியபடியே இருந்தனர். ஏதோ சிக்னல் போலிருக்கிறது. பத்து வீடுகளுக்கு ஒருமுறை மேலே மாடியிலிருந்து தினகரன் மீது பூக்கள் தூவப்படுகின்றன.

பிரசாரத்தில், ஒருசில லோக்கல் ஆட்கள் தென்பட்டாலும், பெரும்பாலும் வேறு மாவட்ட ஆட்களே நிரம்பியிருந்தனர். ‘‘ஆளும்கட்சியால் மட்டுமே மக்களுக்கு முழுமையாக நன்மைகள் செய்ய முடியும். எனவே, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்பதே தினகரன் பிரசாரத்தின் சாரமாக இருக்கிறது.

‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி’ மதுசூதனன்

சசிகலா அணியிலிருந்து ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிய மதுசூதனன், இப்போது ஆர்.கே. நகர் தொகுதியின் வேட்பாளரும் ஆகிவிட்டார். அதாவது, ‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி’ வேட்பாளர். ‘ஆர்.கே நகர் எனது கோட்டை’ எனக் களமிறங்கி இருப்பவர், வயதின் தள்ளாட்டத்தை மீறி இண்டு இடுக்கில்லாமல் புகுந்து புறப்படுகிறார். ‘எம்.ஜி.ஆர் தொப்பி’ எனும் டி.டி.வி-யின் பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர் பாடல்களாலேயே கவுன்ட்டர் கொடுக்கிறார்.

வண்ணாரப்பேட்டையில் வலம் வரும்போது, ‘‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’’ என அட்டகாசமான உடல்மொழியோடு பாடி வாக்கு சேகரித்தவர், காசிமேடு மீனவ மக்களைச் சந்திக்கும்போது, ‘‘தரை மேல் பிறக்க வைத்தான். எங்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்’’ என மக்களைக் கட்டியணைத்து உருகிப் பாடினார். வசூல்ராஜா கமல் போல எல்லோருக்கும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து, ‘‘மறந்துடாதீங்க. இரட்டை மின்கம்பம் பார்த்து ஓட்டு போடுங்க’’ என்கிறார். தெலுங்கு மக்கள் பெரும்பான்மையாக நிரம்பியிருக்கும் பகுதிகளில், தெலுங்கு பாடல்களைப் பாடுகிறார். தமிழர் பகுதிகளில்     எம்.ஜி.ஆராகவும், தெலுங்கு  மக்கள் மத்தியில் என்.டி.ஆராகவும் ‘அந்நியன்’ அவதாரம் எடுக்கிறார். இயல்பான பேச்சு, பிரசார வியூகம் ஆகியவை மக்களிடம் மதுசூதனன் நெருக்கமாகப் பயணிப்பதை உணர்த்துகிறது.

இது, மருது கணேஷ் டெக்னிக்!

‘‘முன்பு பர்கூரில் ஜெயலலிதாவை எதிர்த்து சாதாரண வேட்பாளர் சுகவனம் வெற்றிபெற்றார். அதை, ‘யானை காதில் புகுந்த எறும்பு’ என்றார் கலைஞர். அப்படி இன்று கோடீஸ்வர வேட்பாளரை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ள சாதாரண வேட்பாளர் மருது கணேஷ் வெற்றிபெறுவார்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் ஆர்.கே. நகர் தி.மு.க-வினர். 

மருது கணேஷின் தாயார் பார்வதி, 1996-2001-ல் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இந்த முறை மகனுக்காக அவரே மைக் பிடித்தபடி, தொகுதி முழுக்க ஆட்டோ பிரசாரம் செய்துவருகிறார். மருதுவோ வீடு வீடாக வாக்குச் சேகரிக்கிறார். வீரகுட்டி தெருவில் ஒரு தள்ளாத பாட்டியிடம், ‘‘அம்மா என்னைத் தெரியுதா? மருது... மருது வந்திருக்கேன்’’ என்கிறார். ‘‘அட, நம்ம நாராயணசாமி மகன்தானே... உங்கப்பா அப்பவே கட்சிக்காகக் கண்ணை இழந்தவருப்பா’’ என்றார், அந்தப் பாட்டி புருவத்தைச் சுருக்கி. ‘‘மறக்காம உதயசூரியன் பட்டனை அழுத்துங்கம்மா’’ என்றபடியே அடுத்த ஏரியாவுக்குக் கிளம்பினார் மருது.

செரியன் நகரில், ஒரு சிறுவன் தி.மு.க கொடியசைத்தபடி வரவேற்க, ‘‘அடேய் பொடியா, இந்த வயசுலதாண்டா நானும் கருப்பு சிவப்புக் கொடியைத் தூக்கினேன்’’ என்று பையனைத் தூக்கி அணைத்து சாக்லேட் ஊட்டியவர், ஒரு தர்பூசணி கடைக்குச் சென்று ‘‘அண்ணே, எல்லோருக்கும் கீத்து கொடுங்கண்ணே’’ என்றார்.

பிரசாரங்களில், ‘‘தங்களோட கட்சி சின்னத்தையே காப்பாத்த முடியாத டி.டி.வி.தினகரனும், மதுசூதனனும் மக்களை எப்படிக் காப்பாத்தப் போறாங்க?’’ என்ற கேள்வியை பிரதானமாக வைக்கும் மருது கணேஷ், பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். தொகுதியில் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து எழுதியுள்ளதாலும், தொகுதிவாசி என்பதாலும் அவரைப் பெரும்பாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள் ஆர்.கே. நகர்வாசிகள்.

ஆர்.கே.நகர் ரவுண்ட் அப்

‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தீபா

‘‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான். அதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நிரூபிக்கும்’’ என்று ஜரூராக வேட்புமனு தாக்கல் செய்தார் தீபா. டி.டி.வி.தினகரனும், மதுசூதனனும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த, சின்னம் ஒதுக்கிய திங்கள்கிழமை மாலை வரை தீபா பிரசாரத்தையே தொடங்கவில்லை. படகு சின்னம் அவரைக் கரையேற்றுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ‘‘நான் மூன்று மாதங்களாகவே இந்தத் தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறேன். ஜெயலலிதா இந்தத் தொகுதி மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை எல்லாம் நான் நிறைவேற்றித் தருவேன். நிச்சயம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ என்கிறார் , அபார நம்பிக்கையோடு.

ஸ்டார் கங்கை அமரன்


தாமரையைக் கையில் ஏந்தியபடி ஆர்.கே. நகர் தொகுதியில் வலம் வருகிறார் கங்கை அமரன். எப்படியும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இவரை பி.ஜே.பி நிறுத்த, ‘‘இப்போதைக்கு இந்தத் தொகுதியில நான்தான் ஸ்டார் வேட்பாளர்’’ என்கிறார் தமது வேடிக்கையான பேச்சின்மூலம்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தவர், சாலையில் தென்பட்ட பெண்களிடம், ‘‘நான் நிக்கிறேன்மா... எனக்கு ஓட்டுப் போடுங்க’’ என்றார். அதற்கு, ‘‘இதுவரை ஒண்ணும் ஆகல. இதுக்கு மேல என்ன நல்லது நடந்துடப் போகுது?!’’ என அவர்களிடமிருந்து படாரென பதில் வந்தது. கங்கை அமரன் அசரவில்லை. ‘‘இதுவரை யாருக்கோ போட்டுருக்கீங்க. அதவிடுங்க... இப்போ நான் நிக்கிறேன். மத்திய அரசே நம்ம கட்சிதான். என்னை ஜெயிக்க வைங்க. மோடிஜிகிட்ட பேசி தொகுதிக்கு எல்லாமே வாங்கித்தரேன்’’ என்கிறார் புன்னகைத்தபடி. படு கேஷுவலாக பேசும் கங்கை அமரனை மக்கள் ரசிக்கவே செய்கின்றனர்.

கலங்கவைத்த சைக்கிள் கடைக்காரர்!

‘‘ ‘ஃபெரா’ வழக்குல அபராதமே 28 கோடி ரூபாய் கட்டப் போகிற டி.டி.வி.தினகரனையும், சாதாரண வீட்டுல இருந்து இந்தத் தொகுதி வளர்ச்சிக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு உங்கள்ல ஒருத்தரா இருக்குற எங்க தோழர் லோகநாதனையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்க’’ என்று வ.உ.சி நகரில் கட்சிப் பணிமனையைத் திறந்துவைத்துப் பேசினார் மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். லோகநாதனுக்கு இடது, வலது புறங்களில் ஜி.ராமகிருஷ்ணனும், டி.கே.ரங்கராஜனும் நின்று அவரை அறிமுகம் செய்ய, ‘‘பொண்ணு, மாப்பிள்ளைபோல நிக்கிறீங்களே!’’ என்று குழுமியிருந்த பெண் தோழர்கள் கலாய்த்தனர். ‘‘ஆமா ஆமா... ஆனா இங்க மாப்பிள்ளை என்பவர் தொகுதியின் வெற்றிதான்’’ என்றார் டி.கே.ரங்கராஜன்.

குணா சைக்கிள் கடையின் உரிமையாளர், ‘‘நான் பஞ்சர் ஒட்டி, சைக்கிள் பெண்டு எடுத்து இன்னைக்குச் சம்பாதிச்ச காசு. இதைத் தேர்தல் செலவுக்கு வெச்சுக்கோங்க’’ என லோகநாதன் கையில் பணத்தைக் கொடுக்க, ‘‘உங்களைப் போன்றவர்களால்தான் கம்யூனிஸ்ட் கட்சி உயிர்ப்போடு இருக்கு’’ எனக் கண்கலங்கி கைகூப்பி நன்றி கூறினார் ஜி.ராமகிருஷ்ணன்.

‘‘அ.தி.மு.க ரெண்டுபட்டு கெடக்குது. பி.ஜே.பி இவங்கள சிண்டு முடிஞ்சு விளையாடிக்கிட்டு இருக்கு. அ.தி.மு.க மட்டுமல்ல, தி.மு.க-வும் ஊழல் கட்சி. இந்தமுறை மாற்று அரசியல் பேசுற மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு கொடுங்க’’ என வாக்கு கேட்டு வருகிறார் லோகநாதன்.

‘‘நானும் மண்ணின் மைந்தன்தான். இந்த தொகுதியில் முரசு கொட்டட்டும்’’ என்கிறார் தே.மு.தி.க வேட்பாளர் ப.மதிவாணன்.  இவர்களோடு நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட பலரும் ஆர்.கே. நகரில் வட்டமிடுகின்றனர். ஆனால், தொகுதியில் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில், ‘‘அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வர்ற தேர்தல். இங்க ஒன்றரை வருசத்துல மூணு முறை வந்துடுச்சு. ‘ஆர்.கே. நகரை சொர்க்க பூமியாக்குவேன்’னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. வேட்பாளர்கள், சின்னங்கள் மாறினாலும் ஆர்.கே. நகருல எந்த மாற்றமுமில்லை’’ என வருத்தக் குரல்கள் பரவலாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

மக்களின் நம்பிக்கையை நிஜமாக்குவதுதானே சிறந்த அரசியல். வேட்பாளர்களே, மக்களின் நம்பிக்கையைப் பெற கொஞ்சமாவது மெனக்கெடுங்களேன்!

- சே.த.இளங்கோவன்
படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு