Published:Updated:

‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்
‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

பிரீமியம் ஸ்டோரி

காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவராக இந்தியாவில் அடையாளப்படுத்தப்படும் மிர்வாஸ் உமர் ஃபரூக், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர். இவரின் தந்தை மிர்வாஸ் மெளல்வி ஃபரூக், அடையாளம் தெரியாத நபர்களால் 1990 மே 21 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது உமர் ஃபரூக்குக்கு 17 வயது. அரசியல், சமூக மற்றும் மத இயக்கங்கள் என 26 அமைப்புகளின் கூட்டணியாக ஹூரியத் மாநாட்டுக் கட்சியைத் தொடங்கிய மிர்வாஸ் உமர் ஃபரூக், இன்று முக்கியமான காஷ்மீர் தலைவர்களில் ஒருவர். அவரைச் சந்தித்தோம்...

‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

‘‘காஷ்மீர் ஆயுதக் கிளர்ச்சிக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது. இது மட்டும்தான் காரணமா?”

‘‘அடிப்படையில் இது ஓர் அரசியல் பிரச்னை. தொடர் அடக்குமுறைகளும், ராணுவத் தாக்குதல்களும், இளைஞர்களையும் மாணவர்களையும் ஆயுதக் கிளர்ச்சிக்குள் தள்ளுகின்றன. இங்கு அரசியல்ரீதியான போராட்டத்துக்கு இடமேயில்லை. புர்ஹான் வானியைப் போல பல காஷ்மீரிய இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைக் காண்கிறோம். அவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, காஷ்மீரிகள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்களால் மட்டும்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும். காஷ்மீர் சிக்கலை அரசியல்ரீதியாக அணுக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

சர்வதேசரீதியாக இது இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், அடிப்படையில் இது காஷ்மீர் மக்களின் பிரச்னை. அரசியல் பிரச்னை என்பதைக் காட்டிலும், இது மனிதாபிமானம் சார்ந்த பிரச்னை. ஜம்மு-காஷ்மீர், லடாக், முசாஃபராபாத், வட பகுதி உள்ளிட்ட மொத்தம் 84 ஆயிரம் சதுர மைல் பகுதியில், 1947 ஆகஸ்ட் 14 வரை இணைந்து வாழ்ந்த மக்கள், இப்போது பிரிந்து கிடக்கின்றனர். அதனாலேயே, ‘அடிப்படையில் இது காஷ்மீர் மக்கள் சார்ந்த பிரச்னை’ என்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தச் சிக்கலில் பங்கு வகிப்பவர்கள் மட்டும்தான்.”

‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆள்வதால் இந்தப் பிரச்னையை அணுகுவதில் சிக்கல் உள்ளதா?”

‘‘தற்போதைய அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாள்கிறது. கடந்த ஆறு மாதங்களில், துப்பாக்கிச்சூட்டில் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300 பேர் பெல்லட் குண்டுகளால் காயம் அடைந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் அதிகமானோருக்குப் பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையைச் சொல்லப்போனால், காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லா அரசாங்கங்களும் காஷ்மீர் சிக்கலை ராணுவப் பார்வை கொண்டே அணுகு கின்றன. அரசியல் பார்வையுடன் அணுகவில்லை. இந்தப் பிரச்னையைத் தள்ளிப்போடுவது மட்டுமே இரு கட்சிகளின் பொதுக் கொள்கையாக இருக்கிறது. காஷ்மீரின் நான்காவது தலைமுறை, இப்போது வீதிகளில் நிற்கிறது.

இதில் வாஜ்பாய் அரசாங்கம் மட்டும் அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகளை காஷ்மீரிகளுடன் நடத்தியது. அப்போது டெல்லி சென்றோம், பாகிஸ்தான் சென்றோம். வாஜ்பாய் காலத்தை, மோடி அரசாங்கம் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. ‘அரசியலமைப்பைவிடவும் மனிதாபிமானம் பெரியது’ என்ற வாஜ்பாய், ‘அரசியலமைப்பின் கீழ் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்’ என்ற பிரச்னை எழுந்தபோது, ‘மனிதாபிமான வரம்புக்குள் பேச்சுவார்த்தை நடத்தலாம்’ என்றார். மனிதாபிமான வரம்புக்குள் நிறைய செய்யலாம், முதலில் பேசத் தொடங்குவோம். ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகள் விடுதலை, கல்லெறி சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பான பிரச்னை கள் என முதலில் பேச ஆரம்பிக்கலாம். அது நல்ல தொடக்கமாக இருக்கும். ஆனால், இதற்கான திறவுகோல் மோடியிடம்தான் உள்ளது. ஏனெனில், அவரே கடுமையான போக்கைக் கையில் எடுத்துள்ளார். அது எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை. மாறாக, இங்கு படுகொலைகளே அதிகரிக்கும்.”

‘‘வாஜ்பாய் பாதையில் மோடி பயணிக்க வேண்டும்!” - மிர்வாஸ் உமர் ஃபரூக்

‘‘சீனா- பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (China Pakistan Economic Corridor) உருவாகி வருகிறதே? இது காஷ்மீரில் தாக்கத்தை ஏற்படுத்துமா?”

‘‘நிச்சயமாக! ரஷ்யா உள்ளிட்ட பெரும் பலம்வாய்ந்த நாடுகளும் இதில் இணையப்போவதால், பொருளாதாரம் வளர்ச்சிபெறும். காஷ்மீரையும் அங்கமாகக் கொண்ட பழைய சில்க் பாதை சீரடைவது, இந்தியாவுக்குப் பெரும் பயன்களைக் கொடுக்கும். காஷ்மீர் அதற்கான வழியாக இருக்கும். இதனால், பெரிய பொருளாதார மாற்றங்கள் நிகழப்போகின்றன. இது இந்தியா முடிவெடுக்க வேண்டிய நேரம். நினைத்துப் பாருங்கள்... இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா என நான்கு அணு ஆயுத சக்திகள் வரும்போது, இந்தப் பிரச்னை எவ்வளவு சிக்கலுக்குள்ளாகும்? இந்தப் பகுதியின் நிலைத் தன்மைக்காகக் காஷ்மீர் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்.

காஷ்மீர் சிக்கலை இஸ்லாமிய தீவிரவாதத்தோடு் இணைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இங்கு ஐ.எஸ் இல்லை, அல்கொய்தா இல்லை, தலிபான் இல்லை. அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் சிறிய ஆயுத இயக்கங்கள்தான் உள்ளன. சில இந்தியர்கள் ஐ.எஸ் பயிற்சிக்குச் சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், ஒரு காஷ்மீரிகூட ஐ.எஸ் இயக்கத்துக்கோ, அல்கொய்தாவுக்கோ சென்றதாக அரசு தகவல்களில் கூட இல்லை.”

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு