பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

? நிதிநிலை அறிக்கை ஆவணம் வைக்கப்பட்ட பெட்டியை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து வணங்கியது முறையா?


கழுகார் பதில்கள்

! இதே கேள்வியை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டார். உடனே அமைச்சர் ஜெயக்குமார், ‘வெறும் பெட்டியை வைத்துதான் வணங்கினோம்’ என்ற தொனியில் பதில் சொன்னார். ஜெயலலிதாவையே எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரிகிறதா?

பழைய நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்தை தி.மு.க அறிவித்தது. போராட்டத்தையும் நடத்தியது. சட்டத்தை இவர்கள் கொளுத்தியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் கலந்து கொண்ட 10 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கும் நடவடிக்கையை அன்றைய அ.தி.மு.க அரசு எடுத்தது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, ‘நாங்கள் சட்டத்தைக் கொளுத்தவில்லை. தாளைத்தான் கொளுத்தினோம்’ என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி. அதைவிட மோசமான விளக்கத்தை முரசொலி மாறன் கொடுத்தார். ‘நாங்கள் சட்டத்தைத்தான் கொளுத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது காதல் கடிதமாகக்கூட இருக்கலாம்’ என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் மாறன். இவர்கள் தமிழுக்கும் அவ்வளவுதான் உண்மையாக இருந்தார்கள். அவர்களது வீரமும் இவ்வளவுதான். வார்த்தைகளால் வானத்தை வளைப்பதும், ஏய்ப்பதும்தான் அரசியலில் கைவந்த கலையாக ஆகிப் போனது. அன்று கருணாநிதி சொன்னதற்கும் இன்று ஜெயக்குமார் செய்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அப்போது, ‘சட்டத்தைத்தான் கொளுத்தினேன்’ என்று நாடாளுமன்றத்தில் துணிச்சலாகச் சொன்னவர், அன்றைய தி.மு.க எம்.பி-யான வை.கோபால்சாமி மட்டும்தான்!

கழுகார் பதில்கள்

நெல்லை.தேவன், தூத்துக்குடி.

எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.


? உத்தரப்பிரதேசத்தில் ஒரு மடாதிபதி முதல்வர் ஆகியுள்ளாரே? அது குறித்து கழுகார் என்ன நினைக்கிறார்?

! மடாதிபதி முதல்வர் ஆவதில் தவறு இல்லை. ‘மட’ (அறிவற்ற) அதிபதிகள்தான் முதல்வர் ஆகிவிடக்கூடாது!

அவர் இதுவரை எப்படி இருந்தார், என்ன மாதிரி பேசினார் என்பதெல்லாம் இருக்கட்டும். சட்டமன்றத் தேர்தலுக்கே போட்டியிடாத ஒருவரை முதல்வராக்கி இருக்க வேண்டுமா? பி.ஜே.பி-யில் ஜெயித்த 312 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர்கூட முதலமைச்சராகத் தகுதி படைத்தவர் இல்லையா? உ.பி-யை யோகி ஆதித்யநாத் மட்டும்தான் காப்பாற்ற முடியுமானால், அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்படாதது ஏன்? அவரை முன்னிலைப்படுத்தி இருந்தால், பி.ஜே.பி வெற்றி பெற்றிருக்காதா? எம்.எல்.ஏ-வாக இல்லாத ஒருவரை முதல்வராகத் திணிப்பதன் உள்நோக்கம் என்ன? இப்படிப்பட்ட பல கேள்விகளை பி.ஜே.பி எதிர்கொண்டாக வேண்டும்!

டி.சந்திரன், ஈரோடு.

? தமிழில் நாவலாசிரியர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?


! சூல் (சோ.தர்மன்), நடராஜ் மகாராஜ் (தேவிபாரதி), பார்த்தீனியம் (தமிழ்நதி) ஆகிய மூன்று நாவல்களைப் படிக்கவும்.

ப.சீனிவாசன், கோடியக்கரை.

? அரசியல்வாதிகள் தங்கள் கட்சிச் சின்னத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை, ஏன் வேட்பாளர்கள் மீது வைப்பது இல்லை?


! சின்னம், கொள்ளை அடிக்காது; லஞ்சம் வாங்காது; கட்டப் பஞ்சாயத்து செய்யாது; கமிஷன் வாங்காது; கெட்ட பெயர் வாங்காது... அல்லவா? அதனால்தான்!

சிவபாக்யா கண்மணி யப்பா, கருப்பம்புலம்.

? எத்தனை தடவை அழைத்தாலும் நீதிமன்றத்துக்கு வராமல் தவிர்க்கப் பார்த்தாரே சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். அவ்வளவு துணிச்சலா?


! ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கெல்லாம் சாமான் யர்களைத்தான் கடிக்கும்’ என்று ஜார்ஜ்கள் நினைத்திருப்பார்கள்!

கழுகார் பதில்கள்

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? தீபா - மாதவன் கருத்து வேறுபாட்டுக்கான காரணம் என்ன?


! பணமாற்றமும் மனமாற்றமும்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

? ‘ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று தீபா சொல்கிறாரே?


! ‘தீபா போட்டியிடுவதால் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக’ தினகரன் நினைக்கிறார்.

கழுகார் பதில்கள்

இரா.வளையாபதி, தோட்டக் குறிச்சி.

? இளையராஜா - எஸ்.பி.பி. விவகாரம் குறித்து..?


! கலை, வர்த்தகம் ஆகும்போது, லாப நஷ்டக் கணக்குச் சண்டை வரத்தான் செய்யும்!

கழுகார் பதில்கள்

என்.காளிதாஸ், சிதம்பரம்.

? மதுவிலக்கை வலியுறுத்தி குமரி அனந்தன் நடைபயணம் தொடங்கியுள்ளாரே?

! நடையாய் நடந்தாலும் நடக்காத கொள்கைகளில் ஒன்று அது!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

? உங்களால் புரிந்துகொள்ள முடியாதவர் யார்?


! மக்கள்தான்! 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள்தான் விழுந்துள்ளன. விரக்தி காரணமாக அவர் கேரளாவுக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டார். அவரை ‘ஆனந்த விகடன்’ நிருபர் சந்தித்துப் பேட்டி எடுத்துள்ளார். ‘`இங்கு அரசியல் முழுக்கவே பணம் சார்ந்த வியாபாரமாக இருக்கிறது’’ என்று சொல்லி இருக்கும் அவர், ‘‘சமூக மாற்றத்துக்கு மக்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை’’ என்கிறார். தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்டபோது, ‘‘மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி யவர் ஜெயலலிதா  என்றபோதிலும், மக்கள் அவரை அன்புடன் மரியாதையுடன் ‘அம்மா’ என்று அழைப்பதாகப் படித்தேன். அது மிக ஆச்சர்யமாக இருந்தது’’ என்று சொல்லியிருக்கிறார்.

கழுகார் பதில்கள்

‘கருணாநிதி தவறு செய்தவர்தான்... ஆனால், அவருடைய தமிழ் பிடிக்கும்’ என்றும், ‘ஜெயலலிதா தவறு செய்தவர்தான்... ஆனால், அவருடைய துணிச்சல் பிடிக்கும்’ என்றும் சொல்பவர்களை அதிகமாகப் பார்க்கிறோம். அந்தத் தமிழும் அந்தத் துணிச்சலும் யாருக்குப் பயன்பட்டது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு