Published:Updated:

இழைக்கப்பட்ட அநீதிகள்; மறுக்கப்பட்ட உரிமைகள் தாண்டி ஆளுமையாய் மாறிய அம்பேத்கர்! #AmbedkarJayanti

அண்ணல் அம்பேத்கரின் சட்ட அறிவு, சமூக அறிவு, அவரால் சமூகம் பெற்ற உரிமைகள், சமயம் குறித்த அவரின் பார்வை ஆகியவை குறித்த பல்வேறு ஆளுமைகளின் ஆடியோ, வீடியோ கருத்துகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிறு வயதில் நாம் பார்க்கும் சம்பவங்களால் நம் மனதில் ஏற்படும் தாக்கமும், ஏன் எதற்கு என்று மனதில் எழும் சில கேள்விகளும்தான் நமது வாழ்கையைத் தீர்மானிக்கும். அந்தக் கேள்விகளுக்கான தேடலே சிலருக்கு வாழ்க்கையின் லட்சியமாக அமையும். அப்படி ஒரு சிறுவனின் கேள்விதான் பிற்காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக விதையிட்டது. அந்தச் சிறுவனின் பெயர் Dr.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.

சற்று வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிக் கூடத்தில் சக மாணவர்களுடன் ஒன்றாக உட்கார முடியாது. தரையில் பாய் விரித்து, தனியாகத்தான் உட்கார வேண்டும், பொதுத் தண்ணீர்க் குழாயில் தானாகப் போய்த் தண்ணீர் குடிக்கக் கூடாது. அந்தப் பள்ளியின் ஊழியர் ஒருவர்தான் குழாயைத் திறக்க வேண்டும். ஒருவேளை அவர் வரவில்லை என்றால் அன்று அவருக்கு தண்ணீர் கிடையாது. அன்று நாள் முழுவதையும் தண்ணீர் தாகத்தோடுதான் கழிக்கவேண்டும் என மிகச் சிறிய வயதிலேயே பலவிதமான ஒடுக்கு முறைக்கு ஆளானார் அம்பேத்கர்.

Dr. Ambekar Life
Dr. Ambekar Life

அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பால், கோரேகானில் காசாளராகப் பணிபுரிந்துவந்தார். கோடை விடுமுறைக்காக தந்தையைப் பார்க்க ஒன்பது வயது அம்பேத்கர், அவரது மூத்த சகோதரர் மற்றும் அவரது அத்தை மகன்களில் ஒருவர் என மூவரும் சதாராவிலிருந்து கோரேகானுக்கு ரயிலில் செல்ல முடிவு செய்தனர். அவர்களின் முதல் ரயில் அனுபவம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருந்தனர். ரயில் பயணம் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. ஆனா‌ல் ரயில் நிலையத்தில் அவர்களுக்கான அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

மசூரில் உள்ள ரயில் நிலையத்தில் அவர்களை அழைத்துவர யாரும் வரவில்லை. விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்த அவர்களை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து கருணையுடன் பேசிய ஸ்டேஷன் மாஸ்டர் பின்னர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்த உடன் கடுமையாக நடந்துகொண்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அழுத சிறுவர்களைப் பார்த்து சற்று மனம் இரங்கிய ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களை அழைத்துச் செல்ல அங்கிருந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களிடம் பேசினார். ஒருவர் மட்டுமே அவர்களை ஏற்றிச் செல்ல நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். இரண்டு மடங்கு வாடகை தர வேண்டும் மற்றும் அவர் வண்டிக்கு அருகில் நடந்து வர, இந்தச் சிறுவர்களே வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும். கடும் இருட்டில் பாதை தெரியாமல் மிகுந்த பயத்துடன் அந்தப் பயணம் தொடர்ந்தது. வழியில் அவர்களுக்குத் தண்ணீர் தரக்கூட மறுத்துவிட்டார்கள் அந்தப் பகுதி மக்கள். பள்ளிக்கூடக் கொடுமைகளை விட்டு சந்தோஷமாக விடுமுறையைக் கழிக்க வந்த சிறுவனுக்கு இ‌ந்தச் சம்பவம் மேலும் அவரின் மனதில் ஆறாத ரணத்தை உண்டாக்கியது.

 அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

கல்வி ஒன்றுதான் இந்தச் சாதி எனும் கொடிய மிருகத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று கருதி படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினான் அந்தச் சிறுவன். உள்நாட்டில் இளங்கலைப் பட்டம், பரோடா சமஸ்தான உதவியுடன் மேலை நாடுகளில் முதுகலைப் பட்டப்படிப்பு பின்னர் முனைவர் பட்டம்வரை பெற்று மிகச் சிறந்த கல்வியாளராக மாறினார். பரோடா சமஸ்தானத்திலிருந்து அவருக்கு வழங்கிய நிதி உதவி நிறுத்தப்பட்டது. ஏனெனில் அவர் படித்த பிறகு 10 ஆண்டுக்காலம் சமஸ்தானத்தில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

அம்பேத்கர் நடத்தி வந்த மராட்டிய பத்திரிகைகளில் அவர் எழுதிய தலையங்கங்கள் தற்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதைப் படிப்பதன் மூலம் சமகாலத்தில் அவர் கையாண்ட யுக்திகளை தெரிந்துகொள்ள முடியும். மேலும் அரசியலமைப்பு அவையில் நடைபெற்ற விவாதங்களின் எழுத்து வடிவம் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அந்த விவாதங்களை படிக்கும்போதுதான் அம்பேத்கர் தன்னிச்சையாகப் பதில் சொல்லி இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இதைப் படித்து முடிக்கும்போது மாமேதை ஒருவர் அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளார் என்ற பெருமிதம் நிச்சயமாக அனைவரின் மனதிலும் ஏற்படும்.
துரை.ரவிக்குமார் எம்.பி

அண்ணல் அம்பேத்கரால் நமக்குக் கிடைத்த உரிமைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆடியோ... #Ambedkar #129thBirthanniversary #Seeman credits : ஆ.லிடியா

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து தைரியமான, துடிப்பான அவருக்கு அரசின் உயரிய பதவியான ராணுவத் தலைமை அதிகாரி பதவி வழங்கப்பட்டது. உயரிய பதவிக்கு வந்தாலும், தீண்டாமை மற்றும் சாதி அவரை விடாமல் துரத்தியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்குக் கீழ் பணி புரிந்த எவரும் அவருடன் ஒத்துழைக்கவில்லை. கோப்புகளைக் கையில் தராமல் மேசை மீது தூக்கி எறிவது, தங்குவதற்கு இடம், குடிக்கத் தண்ணீர் என அடிப்படை வசதிகள் செய்துதர மறப்பது என அவருக்குப் பல அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் மிகவும் மனமுடைந்த அவர் கையில் இருந்த சிறிது பணத்துடன் மீண்டும் லண்டன் சென்றார். அங்கு தனது நேரத்தை முழுவதும் நூலகத்திலே செலவிட்டார். காலையில் ஒரு டீ, ரொட்டி பின்னர் இரவில்தான் உணவு என தூக்கம், உணவு மறந்து கடுமையாகப் படித்தார்.

அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

சிறு வயதிலேயே சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது அவருக்கு. இந்தியாவில், இந்து அல்லாத பிற மதத்தினரின் கூட சம்ஸ்கிருதம் கற்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்டோர் எ‌ன்ற ஒரே காரணத்தினால் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஜெர்மனியில் வெறும் மூன்று மாதங்களில் சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார் அம்பேத்கர். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியும் மறுக்கப்பட்ட உரிமைகளும் அவருள் மிகக் கடுமையான கோபத்தையும் மனக் காயங்களையும் உண்டாக்கியிருந்தது. அதை மடைமாற்ற தன் கவனம் முழுவதையும் கல்வியின் மீது திருப்பிய அம்பேத்கர் பல புத்தகங்கள் எழுதினார். நிர்வாக ரீதியான பல நல்ல கருத்துகளை அப்போதைய ஆங்கிலேய அரசாங்கத்திடம் முன்வைத்தார். தன்னை ஒரு சிறந்த மனிதராக, பெருமைமிகு ஆளுமையாகச் செதுக்கிக் கொண்டார்.

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

தலித் அல்லாத மக்களுக்கு ஏதும் செய்யவில்லையா அண்ணல் அம்பேத்கர் - வே.மதிமாறன் எழுத்தாளர் #Ambedkar #129thBirthanniversary #Mathimaran

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020

அம்பேத்கரின் வாழ்க்கை கல்வியாளர், சட்ட வல்லுநர், சமூக சீர்திருத்தவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. இ‌ந்தச் சமூகம் அவருக்குக் கொடுத்தது அநீதியும், பாகுபாடும், மனக் காயங்களும்தான். ஆனால் அவரோ, பெண்களுக்கான உ‌ரிமை, தொழிலாளர்கள் நலன் என அனைத்துத்தரப்பினருக்கும் குரல் கொடு‌த்து தன்னிகரற்ற மனிதராக விளங்கினார். தான் ஏற்படுத்திய அரசியல் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக சாதி எதிர்ப்பு மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை என ஒரு சமத்துவ அரசியலில் ஈடுபட்டார். வர்ண ரீதியான பாகுபாட்டை மட்டுமல்லாமல், வர்க்க ரீதியான பாகுபாட்டையும் சரி செய்ய பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடத் தொடங்கினார்.

அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

தென்னிந்தியாவில் எப்படி பெரியார் சம உரிமை கோரி குரல் கொடுத்தாரோ அதேபோல் அம்பேத்கர் நாடு முழுவதும் குரல் கொடு‌த்தார். பின்னாளில் அம்பேத்கரும் பெரியாரும் ஒரு புள்ளியில் இணைந்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் எப்படியும் பிரிட்டிஷ் அரசு வெளியேற நேரிடும்; அதன் பின்னர் யார் ஆட்சி செய்வது என்ற கேள்வி எழுந்தது. இவர்களுடன் முகமது அலி ஜின்னாவும் இணைந்துகொண்டார். காங்கிரஸில் பிராமணர்கள் அல்லாத குழுவை உருவாக்குவது, முஸ்லிம்கள் மற்றும் பட்டியலின மக்களை காங்கிரசில் இருந்து விலக்குவது போன்று பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அப்போதுதான் பெரியார் திராவிட நாட்டுக்கான கோரிக்கையும், ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு கோரிக்கையும் முன் வைத்தனர்.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றித் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள்!

பரிந்துரை: துரை.ரவிக்குமார் எம்.பி

Dr.Ambedkar life mission -Dhananjay keer

Ambedkar's world -Eleanor zelliot

Transformative constitution- Gautam Bhatia

Thus spoke Ambedkar-Bhagawan Das

what Gandhi says about Ambedkar-Aravindhan

Annihilation of caste - Ambedkar

அண்ணல் அம்பேத்கரின் சட்ட அறிவு குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் பேசிய ஆடியோ பதிவு #HariParanthaman #Ambedkar #129thBirthanniversary Credits ; கற்பகவள்ளி.மு

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020

இந்தியாவை இந்தியர்கள் ஆட்சி செய்வது மட்டும் சுதந்திரம் அல்ல; சாதி, வர்க்கம், பாலின வேறுபாடுகளால் மக்கள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் அதுவே சுதந்திரம் என சுதந்திரத்திற்குப் புது அர்த்தம் அளித்தார் அம்பேத்கர். சமத்துவத்தை நாடு முழுவதும் ஏற்படுத்த நினைத்த அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றார். மேலும் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அவரை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நியமித்தது. அவரின் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத சுதந்திரம், தீண்டாமையை ஒழித்தல், மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் சட்டவிரோதமாக்குதல் உள்ளிட்ட தனிப்பட்ட குடிமக்களுக்கான பரந்த அளவிலான சிவில் உரிமைகளுக்கான அரசியலமைப்பு உத்தரவையும் பாதுகாப்புகளையும் வழங்கியது. நாட்டின் பொருளாதாரத்தில் அதீத கவனம் செலுத்தினார் அண்ணல். தொழில்மயமாக்கல் மற்றும் விவசாய வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனக் கருதிய அவரின் பார்வை அரசாங்கத்துக்கு அதன் உணவுப் பாதுகாப்பு இலக்கை அடைய உதவியது.

அம்பேத்கரின் சமூக அறிவு குறித்து தோழர் தியாகு #AmbedkarJayanti2020 #129thBirthanniversary #ThozharThiyagu

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020

தமது இளம் பிராயம் முதலே புத்தரைப் பற்றித் தொடர்ந்து படித்து வந்த அம்பேத்கர் புத்த மதத்துக்குத் மாறத் திட்டமிட்டார். தந்தை பெரியாரையும் தம்மோடு புத்த மதத்துக்கு மதம் மாற வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பெரியார் மறுத்துவிட்டார். எனினும் ஒரு பெரிய குழுவாக புத்த மதத்தைத் தழுவ அம்பேத்கருக்கு ஆலோசனை வழங்கினார் பெரியார். தான் இறக்கும் பொழுது ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்று கூறிய அம்பேத்கர் அதன்படி சுமார் ஒரு லட்சம் பேருடன் புத்த மதத்தைத் தழுவினார். தனது வாழ்க்கை முழுவதும் ஒரு தேடலுடன் சென்ற அவர், இந்தச் சமூகத்தில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, கொடிய நோயான தீண்டாமையை விரட்டி அடிக்க பல முன்னெடுப்புகளைச் செய்தார். பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்து, தன்னையும், நாட்டையும் செம்மைப் படுத்திய அண்ணல் அம்பேத்கர் தூக்கத்திலேயே உயிர் நீத்தார்.

தன் இளம் வயதில் சாதியின் பெயரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் மறுக்கப்பட்ட உரிமைகளையும் படிக்கற்களாய் மாற்றி, அதை வைத்து தன் வாழ்க்கையை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை அண்ணல். அவை தந்த படிப்பினைகளை வைத்து முறையாகச் சட்டம் இயற்றி பலகோடி பேரின் வாழ்க்கையை முன்னேற்றினார்.

தான் மட்டும் உயர்ந்தால் அவன் மனிதன். பல தலைமுறைகளை உயர்த்தினால் அவன் தலைவன். அண்ணல் அம்பேத்கர் தலைவன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு