Published:Updated:

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’
மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

பிரீமியம் ஸ்டோரி

‘‘மீண்டும் ரஜினியை முன்வைத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கும் போலிருக்கிறது” என்ற பீடிகையுடன் வந்தார் கழுகார்.

‘‘இலங்கைக்கு ரஜினியை அழைத்துச் செல்ல லைகா நிறுவனம் எடுத்த முயற்சிகளையும், அதற்கு தமிழகத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையும், ரஜினி பின்வாங்கியதையும் சொல்கிறீரா?” என்றோம்.
‘‘இல்லை” என்று சொல்லிவிட்டு, அர்த்தம் பொதிந்த ஒரு சிரிப்பை உதிர்த்த கழுகார், தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு, கர்நாடகமும், தமிழ்நாடும்தான். கர்நாடகாவில்கூட அவர்கள் முட்டி மோதினால் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலைமை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான எந்தச் சுவடும் இல்லை. எனவே, எதையாவது செய்து, எப்படியாவது முன்னேறி வந்துவிடத் துடிக்கிறது பி.ஜே.பி. தேசம் முழுவதும் ஒரே கொடியாகக் காவிக்கொடி பறக்கவேண்டும் என்பதுதான் பி.ஜே.பி தலைமைக்கு இப்போது உள்ள ஒரே அஜெண்டா. ‘உத்தரப்பிரதேச மாநில வெற்றிக்குப் பிறகு தனிப்பெரும் தலைவராக மோடி உருவாகிவிட்டார், இதைத் தவறவிடக் கூடாது’ என்ற முனைப்பில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா இருக்கிறார். வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பி.ஜே.பி வசமாகிவிட்டது. எனவே, இப்போது தென் மாநிலங்களைக் குறிவைக்கிறார்கள். ஆந்திராவில் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகாவுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவும், ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் இருப்பதும் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாக பி.ஜே.பி கருதுகிறது. எனவே, இந்த இரண்டு மாநிலங்களையும் இப்போது அமித் ஷா டிக் செய்துள்ளார். கர்நாடகாவில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியாக பி.ஜே.பி இருப்பதால், கட்சியை லேசாக வலுப்படுத்தினாலே போதும். ஆனால், தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதே டெல்லி தலைமைக்குக் குதிரைக்கொம்பான விஷயமாக உள்ளது. அதனால் புதிய யுக்தியைக் கையில் எடுக்க உள்ளார்கள்.”

‘‘பீடிகை ரொம்ப பலமாக இருக்கிறதே?”

‘‘மற்ற மாநிலங்களில் தாங்கள் செய்யும் அரசியலுக்கும் தமிழக அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதை பி.ஜே.பி தேசியத் தலைமை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ‘முதல்வர் வேட்பாளர் யார்’ என்பதைச் சொல்லாமலேயே அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. ஆட்சிக்கு வந்ததும், யோகி ஆதித்யநாத் என்ற சாமியாரை அவர்களால் முதல்வர் ஆக்க முடிகிறது. தேர்தல் நேரத்தில் கடுமையாகப் பிரசாரம் செய்தவர் அவர். ஆனால், தமிழகத்தில் ‘இவர்தான் உங்களை ஆட்சி செய்வார்’ என ஒரு முகத்தைக் காட்டாமல் இப்படி ஜெயிப்பது சாத்தியமில்லை என்பதை பி.ஜே.பி புரிந்துகொண்டிருக்கிறது.’’

‘‘சரிதான்!”

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி வலுவாகக் காலூன்ற வேண்டுமானால், பலமான வி.ஐ.பி ஒருவர் தலைமை தாங்க வேண்டும், அப்படித் தலைமை தாங்கினால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நினைக்கிறார்கள் பிரதமர் மோடியும் அமித் ஷாவும்.  அந்த பலமான வி.ஐ.பி ரஜினிதான். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே அவரை பி.ஜே.பி-க்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது அவர் பிடிகொடுக்கவில்லை. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி வீட்டுக்கே வந்து மோடி அழைப்புவிடுத்தார். ரஜினி ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளித்தார். ஆனால், ரஜினியை விடுவதாக இல்லை பி.ஜே.பி. அதன் துவக்கம்தான், ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் ரஜினியைப் பேச வைத்தது. சோ மறைவுக்கான இரங்கல் கூட்டம் என்று சொல்லி ரஜினியை வரவைத்தார்கள். டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸில் பிரதமர் மோடி பேசினார். அந்த விழாவில்தான், ‘தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் சோ இல்லையே என்பது வேதனையாக இருக்கிறது’ என்று சொன்னார் ரஜினி. இந்த ஒற்றை வார்த்தையே பலத்த கண்டனத்தைக் கிளப்பியது. ரஜினி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி இங்கு கவனிக்கப்படுகிறது என்பது பி.ஜே.பி தேசியத் தலைவர்களுக்குப் புரிந்திருக்கிறது. ரஜினி மாதிரியான ஒருவர் வந்தால் மட்டும்தான் பி.ஜே.பி-யை தமிழகத்தில் வளர்க்கமுடியும் என்று மோடியும் அமித் ஷாவும் நினைக்கிறார்கள்.”

‘‘அதற்கு என்ன செய்வார்களாம்?”

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

‘‘ரஜினியைத் தீவிர அரசியலுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது டெல்லி பி.ஜே.பி தலைமை. மோடியின் தூதுவராக இருவர் ரஜினியிடம் பேசியுள்ளார்கள். ‘தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஜெயலலிதா மறைந்துவிட்டார். விறுவிறுப்பான அரசியல் செய்யும் உடல்நிலையில் கருணாநிதி இல்லை. இந்தச் சூழ்நிலையில், நாட்டுக்காக நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான அடித்தளத்தை பி.ஜே.பி உங்களுக்கு அமைத்துத் தரும். நீங்கள் எப்போதும் பி.ஜே.பி-யுடன் நெருக்கமாக இருந்துள்ளீர்கள். வாஜ்பாய், அத்வானி ஆகியோர்மீது உங்களுக்குப் பாசம் உண்டு. இப்போது மோடியுடன் உங்களுக்கு இணக்கமான உறவு இருக்கிறது. அவர் உங்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளர் என்பதைக் கூடப் பார்க்காமல் உங்கள் வீட்டுக்கு வந்தார். பண முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், முதல் ஆதரவை நீங்கள்தான் தெரிவித்தீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், உங்கள் ஆதரவை வெளிப்படையாக பி.ஜே.பி-க்குத் தர வேண்டும். அப்படிச் செய்தால் தமிழகத்தில் ஒரு தேசிய - தெய்வீக அரசை அமைக்கலாம்’ என்று தூபம் போட்டுள்ளனர். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, ‘நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். அதற்காக நான் அரசியலுக்குள் வர முடியாது. எனக்கு அந்த எண்ணமும் இல்லை. அதற்கு என் உடலும் ஒத்துழைக்காது’ என்று சொல்லி இருக்கிறார் ரஜினி!”

‘‘அதற்கு அவர்கள் என்ன சொன்னார்களாம்?”

‘‘அவர்கள், ‘தீவிர அரசியல் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, போராட்டம் என்று தினமும் பரபரப்பாக இருப்பது அல்ல. அது தேவையும் இல்லை. பி.ஜே.பி-யுடன் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால் போதும், மற்றதை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். பேச்சு சினிமா பக்கமாக திரும்பியது. இரண்டு, மூன்று படங்களில் கமிட் ஆகி இருப்பதாகவும், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு சினிமாவில் பிஸியாக இருப்பதாகவும் ரஜினி சொல்லி இருக்கிறார். ‘மோடியை ஒருமுறை சந்தியுங்கள். டெல்லி வாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ரஜினி எந்த உறுதியும் கொடுக்கவில்லை. இரண்டு முறை அமித் ஷாவும், ஒரு தடவை மோடியும் ரஜினியுடன் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அப்போதும் ரஜினி பிடி கொடுக்கவில்லையாம். மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் ரஜினி திணறுவதாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ரஜினி, தனக்கு நெருக்கமான இருவரிடம் பி.ஜே.பி-யின் அழைப்பைப் பற்றி பேசி இருக்கிறார். அந்த நண்பர்கள், ‘தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியாது. பொறுமையாக இருங்கள். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை மற்ற மாநில நிலைமைகள் வேறு, தமிழக நிலைமைகள் வேறு. ஆதரவு என்று அறிவித்த பிறகு அரசியல் சூழ்நிலைகள் மாறி எதிர்மறையான ரிசல்ட் வந்தால் இப்போது இருக்கும் நிம்மதி போய்விடும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இது ரஜினியை அதிகமாகக் குழப்பிவிட்டது. ரஜினி இப்படி குழப்பத்தில் இருப்பதை அறிந்து, அந்த பி.ஜே.பி பிரமுகர்கள் மீண்டும் பேசி இருக்கிறார்கள். அப்போது, ‘நீங்கள் அமைதியாக இருந்தால், நீங்கள் விரும்பாதவர்கள் கையில் தமிழக ஆட்சி சென்றுவிடும். இந்த சூழ்நிலையைவிட்டால் பி.ஜே.பி-யை தமிழகத்தில் கால் ஊன்ற வைக்கமுடியாது என மோடியும் கருதுகிறார். நீங்கள் கட்சிக்குள் நேரடியாக வந்தாக வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ரஜினி அப்போதும் பிடி கொடுக்கவில்லை. அப்புறம் அவர்கள் இறங்கிவந்து, ‘நீங்கள் நேரடியாக வராவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சொல்லும்படி நடந்தாலே போதும்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

‘‘சொல்படி என்றால் எப்படி? புரியவில்லையே?”

‘‘என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றி டெல்லியில் விசாரித்தேன். தமிழகத்துக்கு என்று தனித்திட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளது அமித் ஷா டீம். முதலில் ரஜினி்யை நேரடியாக களத்தில் இறக்காமல், அவரை வைத்து ஒரு சேவை அமைப்பை ஏற்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள். கொஞ்ச நாட்களில், அந்த அமைப்பின் கீழ் ரஜினி ரசிகர் மன்றங்களை ஒன்றிணைக்கச் சொல்வார்கள். அந்த அமைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக பி.ஜே.பி-க்கு ஆதரவாகக் கொண்டுவந்து, கடைசியாக கட்சியோடு இணைப்பது என்ற திட்டத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ‘தனது அரசியலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது’ என்பதை ரஜினி புரிந்துகொள்வார் என நம்புகிறது பி.ஜே.பி. இந்த மெகா பிளானின் தொடக்கமாக, ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பை ரஜினி தொடங்குவது மாதிரியும், அதன் தொடக்க விழாவுக்கு மோடி வருவது மாதிரியுமான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான அமைப்பு, இதில் யார் யார் உறுப்பினர்களாக இருக்கலாம் என்பதையெல்லாம் ரஜினியே முடிவு செய்யலாமாம். இதன் தொடக்க விழா, அதைத் தொடர்ந்த நிகழ்வுகளில் மட்டுமே பி.ஜே.பி கருத்து செலுத்துகிறதாம்.”

‘‘மோடியும் ரஜினியும் இருக்கிற போட்டோ மட்டுமே தமிழ்நாட்டில் ஜெயிக்க போதுமானது என்று நினைக்கிறார்களா?”

‘‘இருக்கலாம்! அதற்கான முன்னோட்டமாகத்தான், ஆர்.கே. நகர் பி.ஜே.பி வேட்பாளர் கங்கை அமரன், ரஜினியைச் சந்தித்த புகைப்படங்களை பி.ஜே.பி தரப்பே பத்திரிகைகளில் வெளியிடச் செய்தது. கங்கை அமரனும், ‘ரஜினியின் ஆதரவு எனக்குத்தான்’ என்பதைப் போல் கருத்தும் தெரிவித்தார். ‘இதன் பின்னணியில் டெல்லி லாபி இருந்தது. இது ஏதோ வலையில் சிக்கவைக்கும் முயற்சி’ என்று ரஜினி உணர்ந்ததால்தான், உடனடியாக மறுப்புச் செய்தியை வெளியிட்டார். ‘யாருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை’ என்றார். இந்த மாத இறுதியில் இமயமலை செல்லும் திட்டத்திலும் ரஜினி உள்ளாராம். அங்கு போய் வந்தபிறகுதான் எந்த முடிவையும் எடுப்பார் என்கிறார்கள்.”

‘‘லைகா நிறுவனம் கட்டிய வீடுகளைத் திறக்க இலங்கை செல்லும் திட்டமும் இதன் ஒரு அங்கமா?”

‘‘லைகா பற்றி பல்வேறு தகவல்கள் உண்டு. அந்தப் பழிகளைத் துடைப்பதற்காக அவர்கள் இந்த மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்தச் சூழலில் நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைத்தால், அது படத்துக்கான பில்டப் ஆகவும் அமையும். படம் ரிலீஸ் ஆகும்போது எதிர்ப்பும் இல்லாமல் இருக்கும் என்று நினைத்துதான் இந்த நிகழ்ச்சிக்கு லைகா ஏற்பாடு செய்தது. பட புரமோஷனுக்காக இந்த மாதிரி செய்வது வழக்கமானதுதானே!”

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

‘‘ரஜினி பிடி கொடுக்காவிட்டால் பி.ஜே.பி என்ன செய்யும்?”

‘‘ஏதாவது ஒரு வி.ஐ.பி-யை வளைப்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். கமல், விஜய் என்று அவர்கள் சினிமா ஆட்களைத்தான் வளைக்க நினைக்கிறார்கள். விஜய் ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மோடியைப் பார்த்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமலை சந்தித்ததும்கூட இந்தத் திட்டத்தின் ஒரு அங்கம்தான்.”

‘‘கமல் கொள்கைக்கும் பி.ஜே.பி-க்கும் ஒத்துப் போகுமா?”

‘‘அந்த ஒரு சந்தேகம்தான் பி.ஜே.பி-க்கும் இருக்கிறது. மோடியின் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தில் கமல் இருக்கிறார். ஏரியைத் தூர் வாரினார். பண முடக்க நடவடிக்கையை ஆதரித்தார். இன்னும் சில வாரங்களில் டெல்லி செல்லும் கமல், மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ‘திராவிடத்தை வீழ்த்த முடியாது’ என்று பேட்டி அளித்த கமல், இன்னொரு பக்கம் மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். கமல் மிகக் கடுமையாக அ.தி.மு.க-வை விமர்சிப்பதன் பின்னணியும் இதுதான்’ என்று சொல்கிறார்கள். எப்படியோ பி.ஜே.பி தனது அனைத்து அஸ்திரங்களையும் தமிழகத்தில் பிரயோகிக்கத் திட்டமிட்டுவிட்டது. இனி தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும்” என்றபடி பறந்தார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

கருணாநிதியின் கண்ணீர்த் துளிகள்!

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டார் கருணாநிதி. ‘அப்போலோவில் சிகிச்சை பெறும் முதல்வரின் படத்தை வெளியிட வேண்டும்’ என முதலில் கருணாநிதிதான் சொன்னார். அவ்வளவு ஆக்டிவாக இருந்த கருணாநிதிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு, கருணாநிதி வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். அவ்வப்போது கட்சியின் முன்னணியினர் அவரை பார்த்துவிட்டு வருகிறார்கள். தினமும் காலையும் மாலையும் ஸ்டாலின் சந்திக்கிறார். குடும்ப உறுப்பினர்களை மட்டும் கருணாநிதி அடையாளம் கண்டுகொள்கிறார். 

இந்தச் சூழலில், ‘தி.மு.க வரலாறு’ நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற பேராசிரியர் அன்பழகன், அதன்பிறகு கருணாநிதியை வீட்டில் போய்ப் பார்த்திருக்கிறார். அவரை அடையாளம் கண்டுகொண்ட கருணாநிதி, அன்பழகனின் கைகளைப் பற்றி உருகியிருக்கிறார். அப்போது அவர் விழியில் இருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள், அன்பழகனின் கைகளில் பட்டு தெறித்தன. அன்பழகன் நெகிழ்ந்து கண்கலங்க, பக்கத்தில் நின்றிருந்த கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் அழுதிருக்கிறார். ‘‘ரொம்ப உருக்கமாகவே இருந்தது அந்த சந்திப்பு’’ எனச் சொல்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

நடராசன் அளித்த விருந்து!

பத்திரிகையாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் உட்பட மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் எனச் சொல்லப்பட்ட அந்த கருத்தரங்கில் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து பல பத்திரிகையாளர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். அவர்கள் மகாபலிபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு நடராசன் விருந்து அளித்தார். பலர் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கர்நாடக பத்திரிகையாளர்களிடம் மட்டும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நடராசன் மீண்டும் ஆக்டிவ் ஆகிவிட்டார்.

சசிகலாவுக்கு மிரட்சி தரும் அதிகாரி!

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சில வசதிகள் செய்து தர வேண்டும்’ என அவரின் சார்பில் கர்நாடக அரசு அதிகாரிகள் மட்டத்தில் பிரஷர் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவுக்கு சில அதிகாரிகள் உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள். சசிகலாவின் துரதிர்ஷ்டம்... அந்த அதிகாரிகள் அப்படிச் சொன்னதில் சத்யநாராயண ராவ் கடுப்பாகி விட்டார். ‘இவர்கள் யார் எனக்கு உத்தரவு போடுவதற்கு’ என நினைத்து, பரப்பன அக்ரஹாரா சிறைமீதான கண்காணிப்பை அவர் தீவிரப்படுத்திவிட்டார். இதனால், வெளியிலிருந்து சசிகலாவுக்கு சாப்பாடு எடுத்துப் போவதுகூட கஷ்டமாகி விட்டதாம். சிறை சாப்பாடு பிடிக்கவில்லை என்று புலம்பும் சசிகலாவுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று புரியாமல், சத்யநாராயண ராவை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும் முயற்சி செய்திருக்கிறார்கள் சசிகலா உறவுகள் சிலர். ஆனால், ‘‘இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறப் போகும் நிலையில் அவரை இடமாற்றம் செய்வது நன்றாக இருக்காது’’ எனச் சொல்லிவிட்டார்களாம். இதனால், சத்யநாராயண ராவ் ஓய்வுபெறும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், சசிகலா தரப்பினர்.

மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’

பி.ஜே.பி-யை எதிர்க்கும் முடிவில் தினகரன்!

‘‘ஆர்.கே. நகர் தொகுதியின் ரிசல்ட் எப்படியாக இருந்தாலும், டி.டி.வி.தினகரனை மத்திய அரசு கடுமையாகவே அணுகும்’’ என்கின்றன டெல்லி வட்டாரங்கள். குறிப்பாக, தினகரனுக்கு எதிரான வழக்குகளை முடுக்கிவிடுவதில் டெல்லி தீவிரமாக இருக்கிறது. தினகரன் மீது கடந்த 1994-ம் ஆண்டு அமலாக்கத் துறை தொடர்ந்த, இரண்டு அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள், சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான இரண்டாம் நீதி்மன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில், ‘ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிடுவதால், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்’ என தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ‘இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கில், இப்போது இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்தடிக்க முயற்சி செய்கிறார்’ என அமலாக்கத் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தினகரனின் பதவி ஆசைகளின் மீது கத்தியாகத் தொங்குகின்றன இந்த வழக்குகள்.

டெல்லி தட்பவெப்பம் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை தினகரனும் உணர்ந்திருக்கிறார். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி பெற்ற வெற்றிக்கு தமிழகத்திலிருந்து முதலில் வாழ்த்துச் சொன்னது தினகரன்தான். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பிறகு, தினகரனின் மனநிலை மாறியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ‘பி.ஜே.பி-யை தாக்கிப்பேசுமாறு’ கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கு இதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். நாஞ்சில் சம்பத் உடனே மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேட்டி கொடுத்தார்.

இன்னொரு பக்கம், ஜெயா டி.வி-யிலும் கட்சித் தொண்டர்களின் பேட்டிகளை வாங்கி ஒளிபரப்பினார்கள். ‘இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு, தமிழகத்தில் பி.ஜே.பி கால் பதிக்கத் திட்டமிடுகிறது’, ‘மோடி அரசு முடக்கிய இரட்டை இலை சின்னத்தை, தினகரனும் சின்னம்மாவும் மீட்பார்கள்’ எனப் பலரும் கொடுத்த பேட்டிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு