பிரீமியம் ஸ்டோரி

ழுபதுகளில் கண்ணதாசன் வேடிக்கையாகச் சொல்வார்... ‘‘இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவைதான்’’ என்று.

மாறாத சின்னம்!

காங்கிரஸிலிருந்து பெரியார் பிரிந்து திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை 17-09-1949-ல் அண்ணா தொடங்கினார். தி.மு.க-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அ.இ.அ.தி.மு.க-வைத் தொடங்கினார்.

காங்கிரஸிலிருந்து பிரிந்துபோய் ராஜாஜி, சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் இண்டிகேட், சிண்டிகேட், இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன (பழைய) காங்கிரஸ் என பல காலகட்டங்களில் பலவிதமாகப் பிரிந்தது.

இதைத்தான் கண்ணதாசன் அப்படிக் குறிப்பிட்டார். தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உடைபடும்போதெல்லாம் தொண்டர்களின் மண்டை உடையும். கூடவே, அந்தக் கட்சியின் சின்னமும் உடையும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, தொடக்கத்தில் கிடைத்த சின்னம், பூட்டிய இரட்டை காளை மாடு. 1969-ம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் உடைந்தபோது, இந்தச் சின்னம் முடக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னமும், ஸ்தாபன காங்கிரஸுக்குக் கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. 1978-ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் உடைந்தபோது, கை சின்னத்தைக் கேட்டு வாங்கினார் இந்திரா. 

மாறாத சின்னம்!

முதன்முதலில் தேர்தலில் போட்டியிட தி.மு.க முடிவு செய்தபோது, அவர்களுக்குக் கிடைத்த சின்னம் சேவல். பிறகு கிடைத்த சின்னம் உதயசூரியன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது, கதிர் அரிவாள் சின்னம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரிவாள் சுத்தி நட்சத்திரம் சின்னம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் கிடைத்தன. ‘எம்.ஜி.ஆரின் வெற்றிச்சின்னம்’ எனப் போற்றப்படும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, 1989 தேர்தலில், அ.தி.மு.க ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் அ.தி.மு.க ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன.

ம.திமு.க-வுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட சின்னம் குடை. பின்னர் கிடைத்த சின்னம், பம்பரம். பா.ம.க-வுக்கு முதலில் கிடைத்தது யானைச் சின்னம்... பிறகு, மாம்பழம்.

இப்படித் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் சின்னங்கள் மாறித்தான் போயிருக்கின்றன. ஆனால், கடந்த 60 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் சின்னம், தி.மு.க-வின் உதயசூரியன்.

- எஸ்.கதிரேசன்

படம்: அருண் டைட்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு