Published:Updated:

ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!
ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!

வெடிக்கிறார் வேல்முருகன்!

பிரீமியம் ஸ்டோரி

ஜினியை மையமாக வைத்து, இரண்டாவது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். ‘‘ராஜபக்சே உறவினர்களுடன் தொடர்புடைய லைகா நிறுவனம், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரிக்கக் கூடாது’’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் அமைப்புகள் முதன்முறையாகப் போர்க்கொடி தூக்கின. இப்போது, ரஜினி விழா. இலங்கையின் வவுனியாவில் உள்ள சின்னடம்பனில், ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக லைகா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழாவில், ஏப்ரல் 10-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக இருந்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. எதிர்ப்பு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி அறிவித்தார்.

ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!

இது தொடர்பாக கடந்த மார்ச் 25-ம் தேதி இரவு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், லைகா நிறுவனத்துக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். இவை, லைகா நிறுவனத்தின் புகழைக் கெடுப்பதாகக் கூறி, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.  

இதுபற்றி  வேல்முருகனிடம் பேசினோம். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் துணைத்தலைவர் ஆகியோருடன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன், அக்கா மகன் ஆகியோர் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களை அப்போதே நான் வெளியிட்டேன். ராஜபக்சேவின் குடும்ப உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருந்து வருகின்றனர். எனவே, ‘கத்தி’ படத்தில் விஜய் நடிக்கக் கூடாது என்றோம். மற்றபடி, விஜய்யை தனிப்பட்ட ரீதியில் நாங்கள் எதிர்க்கவில்லை.

இப்போதும் அதே ரீதியில்தான், லைகா நிறுவனத்தை எதிர்க்கிறோம். ரஜினியை எதிர்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. ராஜபக்சேவுடன் தொடர்புடைய லைகா நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அப்பாவித்தனமாக ரஜினி இலங்கை போவதால், அவரை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்வார்கள். எனவேதான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் மூலம் அவருக்குத் தெரிவித்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அவரும் பயணத்தை ரத்து செய்தார்.

ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!

இலங்கையில் திரிகோண மலை, வவுனியா உள்ளிட்ட இடங்களில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக எந்தவித அரசியல் கட்சியையும் சாராத ஈழத் தமிழர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ‘காணாமல்போன தங்கள் உறவினர்கள் 24 ஆயிரம் பேரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’, ‘தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் அங்கே போனால், ஈழத்தமிழர்களின் போராட்டம் திசைமாற்றப்படக் கூடும். இதை அங்கிருக்கும் ஈழத்தமிழர்களே எங்களுக்குத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். 

ஈழத் தமிழர்கள் போராட்டத்துக்கு முன்பே இவர்கள் திறப்பு விழா நடத்தியிருக்கலாம். இலங்கை போர் தொடர்பாக ஐ.நா-வில் விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவும் இந்தச் செயலை அவர்கள்

ரஜினியை வைத்து சிங்களர்கள் அரசியல் செய்கிறார்கள்!

செய்திருக்கலாம். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின்போதும், ஐ.நா விவாதம் நடக்கும் போதும் திசைதிருப்பும் வகையில் ரஜினியை அழைத்து விழா நடத்துவதைத் தான் நாங்கள் எதிர்த்தோம். இதுகுறித்துதான் தொலைக்காட்சி விவாத்தில் பேசினேன். அதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாகச் செய்திகள் பார்த்தேன். ‘தொலைக்காட்சி விவாதத்தில் சொல்வதை வைத்து 10 கோடி ரூபாய் கேட்க முடியுமா? 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொடக்குப் போட்டு எச்சரிக்கை செய்ய முடியுமா?” என்பதுதான் என் கேள்வி. எனினும், இந்த மிரட்டலை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

இது குறித்து லைகா நிறுவனத்தின் வழக்கறிஞர் வில்சனிடம் கேட்டோம். “தொலைக்காட்சி விவாதத்தில் வேல்முருகன், லைகா நிறுவனத்துக்கு எதிராகப் பேசியது மிக மிக அவதூறாக இருந்தது. ஒரு விஷயத்தை தொலைக்காட்சி போன்ற பொதுவெளிகளில் பேசும் முன்பு, அது சரியான தகவல்தானா என ஆராய்ந்து அதன் பின்னர் பேசியிருக்க வேண்டும். லைகா நிறுவனத்தைப் பாதிக்கும் வகையில் அவதூறாகப் பேசியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு எதிராக 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். சட்டப்படி இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு