Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

? தமிழகத்துக்கு முழுநேர கவர்னர் ஒருவரை நியமிப்பதற்கு மோடி அரசு ஏன் தயங்குகிறது?

! முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டிய அளவுக்கு தமிழ்நாடு முக்கியமான மாநிலம் அல்ல என்று

கழுகார் பதில்கள்!

அவர்கள் நினைக்கலாம். மாநிலத்தில் ஒரு பிரச்னை என்றால், உடனே போய் புகார் கொடுக்கக்கூட வசதி இல்லாமல் மும்பையில் உட்கார்ந்து இருக்கக்கூடிய ஒருவரை கவர்னர் பொறுப்பில் போட்டு தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழித்து வருகிறது. அவர் வருகிறார், இவர் வருகிறார், அவரை நியமிக்கப்போகிறோம், இவரை நியமிக்கப்போகிறோம் என்று அவர்களாகவே வதந்திகளைச் செய்தியாக்கி மாதம் ஒருமுறை பரப்புவதை வழக்கமாக்கி வருகிறார்கள். ‘தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டம்’ என்கிறார்கள். அதுவரை முழுநேர கவர்னரை நியமிக்க மாட்டார்கள்.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

? ஒரே நேரத்தில் கமலும் ரஜினியும் அரசியலில் நுழைந்தால் எப்படி இருக்கும் தமிழகம்?

! நாடாக இருக்காது. ‘தியேட்டராக’ வேண்டுமானால் இருக்கலாம்!

கழுகார் பதில்கள்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

? ‘தமிழகத்தில் அ.தி.மு.க அழிந்துவிட்டது. தி.மு.க அழியும் நிலையில் உள்ளது’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது எப்படி?


! அவர் தனது ஆசையைச் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க ஆளும் கட்சியாகத் தொடர்கிறது. கருணாநிதி உடல்நலமில்லாமல் படுத்திருக்கும் நிலையிலும், தி.மு.க சட்டமன்ற எதிர்க் கட்சியாகத் தொடர்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் பொன்னார் சொல்வது அபத்தம்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

? தனிக்கட்சி தொடங்குவது அவ்வளவு சுலபமா?


! தனிக்கட்சி தொடங்குவது சுலபம். ஓட்டு வாங்குவதுதான் கஷ்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘சமாதிக்குப் போய்விட்டு வந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள், ஜெயலலிதாவின் ஆவிதான் கட்சி ஆரம்பிக்கச் சொல்கிறதா? ஜெயலலிதாவின் ஆவியிடம் கேட்பதற்கு என்னிடமும் சில கேள்விகள் உள்ளன’ என்று சொல்லி இருக்கிறார். கட்சி தொடங்கத் தூண்டுவது ஆவியாக இருக்கலாம். ஓட்டுப் போட வருமா ஆவிகள்?!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

? ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குழப்பம் அடைவார்களா தெளிவாக இருப்பார்களா?


! ‘யாருக்கு வாக்களித்து விடக் கூடாது’ என்ற தெளிவு முதலில் அந்த வாக்காளர்களுக்கு வேண்டும்!

தீ.அசோகன், திருவொற்றியூர்.


? ‘உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலையீடு இல்லை’ என்று பி.ஜே.பி சொல்கிறதே?


! ‘ஆர்.எஸ்.எஸ்-ஸின் நேரடி ஆட்சிதான்’ என்பதை இப்படிச் சொல்லி இருக்கலாம்!

கழுகார் பதில்கள்!

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி,

? தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி தொடங்குகிறாராமே? பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

! தீபாவின் கணவர் இன்னமும் புதிய கட்சி தொடங்கவில்லை. தொடங்கப் போவதாகச் சொல்லி தீபாவை விட்டுப் பிரிந்துள்ளார். ‘எனது கட்சியின் லட்சியம், தீபாவை முதலமைச்சர் ஆக்குவதுதான்’ என்று அவர் சொல்லி இருப்பதுதான் சிரிப்பாக இருக்கிறது. ஒருவரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி, அவரை முதலமைச்சர் ஆக்கப் போகிறேன் என்று சபதம் எடுத்த காமெடி நடந்துள்ளது. அதை விட, ‘தீபா ஆரம்பித்தது பேரவைதான், நான் ஆரம்பிக்கப்போவது கட்சி’ என்று சொல்லி இருக்கிறார் மாதவன். பேரவை, தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், கட்சி போட்டியிடவில்லை.

பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள். ‘தீபாவை சசிகலா இயக்குகிறார்’ என மாதவன் சொல்கிறார். ‘நான் தேர்தலில் நிற்பதைத் தடுக்க நினைப்பவர்கள் மாதவனுக்குப் பின்னால் இருக்கிறார்கள்’ என்று தீபா சொல்லி இருக்கிறார். இரண்டு பேரும் சுய எண்ணத்துடன் இல்லை என்பது மட்டும் யாரும் சொல்லாமல் தெரிகிறது!

கழுகார் பதில்கள்!

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.

? ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என்று டி.டி.வி.தினகரன் சொல்லி இருப்பது எந்த நம்பிக்கையில்..?


! பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, ஆட்சி இருக்கிறது என்ற அதீத நம்பிக்கையில்!

கே.வேலுச்சாமி, தாராபுரம்.


? ‘இடைத்தேர்தலில் வென்றாலும் முதல்வர் ஆகும் எண்ணமில்லை’ என்கிறாரே டி.டி.வி.தினகரன்?

! ‘பொம்மை வாங்கித் தா அம்மா... நான் அதை வைத்து விளையாட மாட்டேன்’ என்று குழந்தை சொல்வதை நம்புவராக நீங்கள் இருந்தால், இதையும் நம்பலாம்!

கு.முருகானந்தம், பருத்திக்குடி.


? ஊழல் செய்துவிட்டு சிக்குபவர்கள், ‘எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை’ என்று பேட்டி அளிக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?


! அந்தக் காலத்தில் பணத்தை, நகைகளை மடியில் கட்டிக் கொண்டுதான் பயணம் செய்வார்கள். இதனால் வழியில் திருடர்களுக்குப் பயந்தாக வேண்டும். காட்டுவழியில் பயணம் போகும்போது பயம் இருக்கத்தானே செய்யும். மடியில் கனம் இல்லாதவர்கள், வழியில் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. தைரியமாகப் போகலாம். அதற்காகச் சொல்லப்பட்ட பழமொழி இது.

ஆனால், இப்போது யாரும் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு நடப்பது இல்லை. ஊழல் செய்பவர்கள், தீவுகளில் பதுக்குகிறார்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் எதற்கு வழியில் பயப்பட வேண்டும். இதெல்லாம் சும்மா கப்சா!

கழுகார் பதில்கள்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்

? யாருடைய தூண்டுதலின் பெயரில் ஆர்.கே. நகரில் கங்கை அமரன் போட்டியிடுகிறார்?

! யார் அவரைத் தூண்டியதாக நீங்கள் சந்தேகப் படுகிறீர்கள்? அவர் பி.ஜே.பி-யில் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சி சார்பில் நிற்கிறார். பொதுவாகவே, அரசியல் எண்ணங்கள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர். கம்யூனிஸ்ட் பாடகர் பாவலர் வரதராஜனின் தம்பி அவர். அதனால் அரசியலை அவருக்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. மேலும், ஜெயலலிதா மற்றும் சசிகலாவால் 1995 காலகட்டத்தில் மிரட்டப்பட்ட, ஏமாற்றப்பட்ட மனிதர்களில் அவரும் ஒருவர். அந்தக் கோபமும் அதற்குள் இருக்கிறது. எனவே, தனிப்பட்ட யாரும் கங்கை அமரனைத் தூண்டி இருக்க முடியாது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!