Published:Updated:

தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!

தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!
பிரீமியம் ஸ்டோரி
News
தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!

குழப்பத்தில் ஆர்.கே. நகர் வாக்காளர்கள்

ரட்டை இலைச் சின்னம் தங்கள் கையை விட்டு நழுவியதால், தொப்பி மற்றும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்களை வாக்காளர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அ.தி.மு.க-வின் இரு அணிகளும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!

1973-ல், திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க, முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது. அதன் வேட்பாளர் மாயத்தேவரிடம், ‘‘ஏப்பா... விளக்கு, ஏணி என ஒதுக்கப்பட்ட 16 சின்னங்கள்ல, நீ ஏன் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செஞ்ச?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘இரண்டு விரல் காட்டும் வெற்றிக் குறியீட்டைக் கொண்ட  சின்னமாக இருப்பதாலும், எளிதில் மக்களிடம்  கொண்டு செல்ல முடியும் என்பதாலும் இதைத் தேர்வு செய்தேன் தலைவரே’ என்றார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற, இரட்டை இலைச் சின்னத்தையே அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இது வரலாறு. 

ஒரு கட்சிக்கு முகவரியாக இருப்பது சின்னம். அப்படி, எம்.ஜி.ஆர் கொடுத்த முகவரியை 1989-க்குப் பிறகு தற்போது இரண்டாம் முறையாகத் தொலைத்துவிட்டு, ‘அ.தி.மு.க’ தவிக்கிறது.      ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை போட்டதால், தொப்பி சின்னத்தில் டி.டி.வி.தினகரனும், இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனனும் களமிறங்கியுள்ளனர்.

தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!

இவர்களின் சின்னங்கள், மக்கள் மனதில் எந்த அளவுக்குப் பதிந்துள்ளன என்பதை அறிய ஆர்.கே. நகருக்குள் வலம்வந்தோம். நம் எதிரில் தென்பட்ட முதியவர் பவுனம்மாள், “நாங்கள்லாம் பழைய ஆளுங்க. எங்களுக்கு எம்.ஜி.ஆரும் ரெட்டை எலையும்தான் தெரியும். எலெக்‌ஷன்னு வந்துச்சுன்னா ரெட்டை எலையப் பாத்துக் குத்திட்டு வந்துடுவோம். இப்போ தொப்பிங்கிறாங்க, ரெட்டை லைட்டு கம்பம்ங்
கிறாங்க. ஒண்ணும் புரியல’’ என்றார் குழப்பமாக.

“அம்மா இருந்தப்போ தொகுதியில எல்லாமே நல்லா நடந்துச்சு. அம்மா போனப்புறம் கட்சி, கொடி, சின்னம் எல்லாமே போச்சு. ரெண்டு ஆளுங்களுமே ‘அம்மா’, ‘புரட்சித் தலைவி’னுதான் சொல்றாங்க. யாருக்கு ஓட்டு போடுறதுன்னே தெரியல’’ என்றார் வீரக்குட்டி தெரு சுப்பிரமணி. அதே தெருவில் எதிர்ப்பட்ட மூர்த்தி, ‘‘ஒரு அப்பத்தை மூணா பங்கு போட்ட மாதிரி அ.தி.மு.க பிரிஞ்சு கெடக்கு. யாருக்குத் தொப்பி, யாருக்கு இரட்டை விளக்கு மின்கம்பம்னு சரியா தெரியல. ஒரே கொழப்பமா இருக்கு. தீபாவுக்கு என்ன சின்னம்னே தெரியல” என்றபடி நகர்ந்தார். பழைய வண்ணாரப்பேட்டையில் ரோட்டோரம் பஜ்ஜி சுடும் சுமதி, “எங்க மனசுல ரெட்டை இலை நல்லா பதிஞ்சுருக்கு. இப்போ அந்த இடத்துல வேற சின்னத்தை வெச்சு யோசிக்க முடியல. என்ன பண்றதுன்னு தெரியல” என்றார் அப்பாவியாக.

தொப்பின்னு சொல்றாங்க... இரட்டை மின் கம்பம்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியல!

அ.தி.மு.க அனுதாபிகள் ஒருவிதக் குழப்ப நிலையில் இருப்பதைக் களம் உணர்த்துகிறது. தி.மு.க அனுதாபியான எம்.ஆர்.நாகு, “அ.தி.மு.க மூணா சிதறிக் கெடக்கு. அவங்க சின்னம் மக்கள் மனசுல பதியல. போட்டியிடுற சின்னத்தில் அவங்க சின்னத்தை மக்கள் தேடிக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதனால், எல்லோருக்கும் தெரிஞ்ச உதயசூரியனுக்கு மக்கள் வாக்களிக்க வாய்ப்பு அதிகம்” என்றார் தமது விருப்பமாக. தே.மு.தி.க வேட்பாளரான ப.மதிவாணன், “ஆளும்கட்சியின் சின்னம் அவங்ககிட்ட இருந்து போயிடுச்சு. ஆனா, கடந்த தேர்தலில் தோற்றுவிட்டோம்னு சொல்லப்பட்ட எங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம் இருக்கு. இதுவே எங்களுக்கு வெற்றிதான்” என்கிறார், இந்த நேரத்திலும். 

 “அம்பது பேருக்கு ஒரு ஆளைப் போட்டு, அவருக்குக் கீழ் ஐந்து பேரை நியமிச்சு ஒவ்வொரு வாக்காளரிடமும் தொப்பியைக் கொண்டுபோய் சேர்க்கிறோம். முதற்கட்டமாக, ஒரு லட்சம் தொப்பிகளை விநியோகிச்சுட்டு இருக்கோம். தேர்தலுக்குள் குறைஞ்சது மூன்று முறை எல்லா வாக்காளர்களுக்கும் தொப்பிகள் கொடுத்திடணும்னு டி.டி.வி உத்தரவு போட்டுருக்கார். எல்லா இடத்துலயும் தொப்பிச் சின்னம் தெரியுற மாதிரி போஸ்டர்கள் ஒட்டிட்டு இருக்கோம்’’ என்கிறார், மன்னார்குடியில் இருந்து வந்துள்ள டி.டி.வி. ஆதரவாளர் ஒருவர். ‘‘மக்களிடம் தொப்பி அறிமுகமாகிவிட்டது. தொப்பியின் மூலம் இரட்டை இலையை மீட்போம்’’ என்கிறார் டி.டி.வி.தினகரன்.

 இதேபோல், ‘இரட்டை விளக்கு மின்கம்பம்’ வடிவ பொம்மைகளை விநியோகித்து வருகிறது மதுசூதனன் டீம். ‘‘ஓ.பி.எஸ் கூறியதுபோல எங்கள் சின்னத்தில், ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொரு விளக்கு ஜெயலலிதா. நிச்சயம்        ஆர்.கே. நகர் தொகுதியில் நாங்கள் விளக்கேற்றுவோம்’’ என்கிறார் மதுசூதனன்.

 தொப்பி, இரட்டை விளக்கு மின்கம்பம் அணிகள் தம் பழைய அரசியல் அடையாளத்தை மீட்க ரொம்பவே போராடிக்கொண்டிருக் கின்றன.

- சே.த.இளங்கோவன்

படங்கள்: மீ.நிவேதன்