Published:Updated:

"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...

"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...

"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...

ரண்டு பேர் சந்தித்துக்கொண்டால், ‘‘உங்களுக்குப் பணம் வந்துடுச்சா? எங்க ஏரியா பக்கம் இன்னும் வரலையே!’’ என்பது போன்ற விசாரிப்புகளை ஆர்.கே. நகர் தொகுதி முழுக்கப் பார்க்க முடிகிறது. இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுக்க நடைபெறும் கூத்துகள், இரண்டரை மணி நேரத் திரைப்படத்தைவிட அதிக சுவாரஸ்யம் தருகின்றன. குறிப்பாக டி.டி.வி.தினகரனுக்காக ஆதரவு கேட்டுவரும் தேர்தல் பணிக்குழுவினர் படு பிஸியாக இருக்கிறார்கள். சொகுசு விடுதிகள் இந்தத் தொகுதிக்குள் இல்லாததால் சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை என மற்ற பகுதிகளில் உள்ள விடுதிகளில் இவர்கள் தங்கியுள்ளனர். காலையில் ரெடியாகி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என முக்கியப் புள்ளிகள் எல்லோரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆர்.கே. நகருக்கு வந்துவிடுகின்றனர்.

"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...

இவர்களுக்குப் பாதுகாப்பு தருவதற்கும், தேர்தல் தொடர்பான திரைமறைவு வேலைகளுக்காகவும் வாட்டசாட்டமான ஆட்கள் எல்லாம் தொகுதியில் உள்ள கட்சியினரின் வசதிமிக்க வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக, காசிமேட்டில் இருந்து விதவிதமான மீன்கள் தினமும் வாங்கிச் செல்லப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான சரக்குகளும் டாஸ்மாக்கில் இருந்து சப்ளையாகின்றன. அசைவ உணவுகளை மூச்சுமுட்ட ருசி பார்க்கும் அந்த ஆசாமிகள், பகல் முழுவதையும் டி.வி பார்ப்பதிலேயே கழிக்கிறார்கள். அவர்களுக்கு இரவில் மட்டுமே வேலை. இரவில்தானே பட்டுவாடா நடக்கிறது. பட்டுவாடா நடக்கும்போது, எதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்துவிடாமலும், ஊடகங்களின் பார்வையில் படாமலும் பார்த்துக்கொள்வது அவர்களின் முக்கிய வேலை.

 அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், நாடாளுமன்ற மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை, மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் ஒட்டுமொத்த சூப்பர்வைசர்களாக இருக்கிறார்கள். ‘வேலைகள் சரியாக நடக்கின்றனவா’ என்பதைப் பார்ப்பது மட்டும் இவர்கள் வேலை. இவர்களுக்குக் கீழே ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு, மூன்று அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள ஏழு வார்டுகளிலும் வீதிக்கு வீதி அமைச்சர்களைச் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது.

"உங்களுக்குப் பணம் வந்துடுச்சா?” - ஆர்.கே. நகர் விசாரிப்புகள்...

தண்டையார்பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நேதாஜி நகரில் அமைச்சர் செல்லூர் ராஜு, மீனவர்கள் அதிகமுள்ள காசிமேடு, ராயபுரம் பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ரவுண்டு அடிக்கிறார்கள். ஆதி ஆந்திரர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் மீனாம்பாள் நகரை இரண்டு விஜயபாஸ்கர்களும் கவனிக்கிறார்கள். தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கில் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார், முன்னாள் அமைச்சர் ரமணா. அவரிடம், “நைனாவை (ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன்) கூட்டிட்டு வரலையா? அவரோட வாங்க” என்று அந்தப் பகுதி மக்கள் சொல்ல... தினகரனுக்கு வாக்குக்கேட்டுச் சென்ற ரமணாவின் முகத்தில் ஈயாடவில்லை. 

  மதுசூதனனின் வீடு கோதண்டராமர் தெருவில் உள்ளது. அந்தப் பகுதியின் பொறுப்பாளர்களாக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ‘தொப்பி’க்கு வாக்குக் கேட்டு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் பதற்றமான சூழல் ஏற்படுகிறது.

 “சாயந்திரம் பிரசாரத்துக்கு வேட்பாளர்கூட யார் யார் வர்றீங்க? தலப்பாகட்டி பிரியாணி, தலைக்கு நானூறு ரூபா. ரெண்டு மணி நேரம் நடந்து வந்தா போதும்” என்று பொதுமக்களை வெளியூர் ஆசாமிகள் அழைக்கிறார்கள். இவ்வாறு திரட்டப்படுபவர்கள், பிரசாரத்தில் நடந்து செல்லும்போதே பணப்பரிமாற்றம் நடக்கிறது. அதை போலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றிப் போலீஸாரிடம் கேட்டதற்கு, “இவங்க மட்டுமா செய்யறாங்க. பல கட்சியினரும் இதைத்தான் செய்யறாங்க. அதிகாரம் முழுக்க எலெக்‌ஷன் கமிஷன்கிட்ட இருக்கு. நாங்க என்ன பண்றது? வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தப்போ, கையும் களவுமா சிக்கினால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பணம் கொடுத்தார்... நாங்க கையும் களவுமா பிடிச்சோம். அவங்க ஓடிட்டாங்க’னு தி.மு.க வழக்கறிஞர்கள் மறியல் செஞ்சாங்க. ஆளை விட்டுட்டா மறியல் செய்வாங்க?” என்றனர்.

  திருமங்கலம் உட்பட கடந்த காலங் களில் நடந்த இடைத்தேர்தல்களில், தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியெல் லாம் ஆளும்கட்சி விளையாடியதோ, அதேபோன்ற விளையாட்டு இப்போது ஆர்.கே. நகரில் நடந்துகொண்டிருக் கிறது. தடுத்தால் மக்கள் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமோ என மற்றவர்கள் தவிக்கிறார்கள்.

- ந.பா.சேதுராமன்

படங்கள்: ப.சரவணகுமார், சீனிவாசலு

தீபாவுக்கு 34-வது இடம்!

வாக்குப்பதிவு இயந்திரத்தில், அங்கீகரிக் கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் முதலிடத்தில் இருக்கும். அதன்பின் சுயேச்சைகள் அகர வரிசைப்படி இடம் பிடிப்பார்கள். அ.தி.மு.க இரண்டாக உடைந்து, தினகரன், மதுசூதனன் இருவருக்குமே இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்கள் சுயேச்சைகள் வரிசைக்குப் போய்விடுவார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநிலக் கட்சியின் இரண்டு பிரிவுகள் என கருதப்பட்டு, இருவருக்குமே முன் வரிசையில் இடம் தரப்பட்டுள்ளது. தினகரன் இரண்டாவதாகவும், மதுசூதனன் நான்காவதாகவும் இடம் பிடித்துள்ளார்கள். தீபாதான் பாவம். சுயேச்சைகள் வரிசையில் 34-வது இடத்தில் இருக்கிறார்.