Published:Updated:

சூரியநெல்லி வழக்கில் கேரள கோர்ட் அதிரடி; 40 பேருக்கும் ஜாமீனை ரத்து செய்து உத்தரவு!

எர்ணாகுளம்: கேரளாவில், சூரியநெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், குற்றவாளிகள் 40 பேருக்குமான ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மாணவி கற்பழிப்பு விவகாரம் இந்தியாவையே எப்படி உலுக்கி எடுத்ததோ அதேபோல் சிறுமி சூரியநெல்லி கற்பழிப்பு விவகாரம், கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.

நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்த இந்த வழக்கில், நாற்பது பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் நாற்பது பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் சூரிய நெல்லி வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவின் உயர் நீதிமன்றம் இருக்கும் எர்ணாகுளம் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதனால் கோர்ட் வளாகத்தில் வழக்கத்தை விட பரபரப்பு அதிகம் இருந்தது.
விசாரணையின் போது பேசிய கேரள அரசின் வழக்கறிஞர், நாற்பது பேரின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசினார்.

அதையடுத்து நாற்பது பேரின் ஜாமீனையும் ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்த உத்தரவால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இனி அடுத்தடுத்த விசாரணைகளில் இன்னும் என்னென்ன அதிரடி கிளம்புமோ என மக்கள் ஆர்வத்துடன் இந்த வழக்கு விசாரணையை நோக்குகின்றனர்.