Published:Updated:

“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்

“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்

“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்

பிரசாரம் செய்ய வரும் தீபாவின் பேச்சைக் கேட்டு, “அப்டியே ஜெயலலிதா குரல் மாதிரியே இருக்குப்பா” என்கிறார்கள் ஆர்.கே. நகர் வாசிகள்.

அத்தை ஜெயலலிதா இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில், சுயேச்சையாகக் களத்தில் நிற்கிறார் தீபா. ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கியது முதல் பிரசாரம் வரை குழப்பங்களும், சர்ச்சைகளுமே தீபாவைச் சூழ்ந்து நிற்கின்றன. மாலை 6 மணி பிரசாரத்துக்கு 8 மணிக்கு வருவது, பிரசாரத்தின்போது ஏ.சி காரிலிருந்து இறங்க மறுப்பது என்று ஆர்.கே. நகரிலும் அவரைப் பற்றிய செய்திகளுக்குக் குறைச்சல் இல்லை. ‘‘அம்மா, நீங்க காரை விட்டு இறங்கி வந்து பாருங்க. எவ்வளவு கூட்டம் கூடும் தெரியுமா!” என்று கட்சி நிர்வாகிகள் சொன்னபிறகு, ஒரு மினி லோடு வேனை பிரசார வாகனமாக்கி, இப்போது அதில்தான் தெருத்தெருவாக வலம் வருகிறார் தீபா.

“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்

தீபா பிரசாரத்தில் ஒருநாள் வலம் வந்தோம். பிரசாரத்துக்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தீபா வரும்போது, ஜெயலலிதா காரைப் பாதுகாப்பது போலவே சபாரி அணிந்த படையினர், “விலகுப்பா, விலகுப்பா” என்று மக்களைத் தள்ளிவிட்டபடி காரைச் சூழ்ந்துகொள்கின்றனர். கட்சிக்காரர்களைக்கூட நெருங்க விடாமல் பார்த்துக்கொள்கின்றனர். ஜெயலலிதா பாணியில் சேலையைத் தோளைச் சுற்றிப் போட்டு இருக்கிறார் தீபா. காரை விட்டு இறங்கியதும் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்ப, உடனே கர்சீப்பால் துடைத்துக்கொள்கிறார். சபாரி ஆசாமிகள் அவரைப் பாதுகாப்பாக பிரசார வாகனத்தில் ஏற்றி விடுகின்றனர். பிரசார ஊர்வலம் புறப்படத் தயாராகிறது.

பிரசார வேனுக்கு அருகே பள்ளி செல்லும் குழந்தையுடன் நின்றிருந்த தாய் ஒருவர், ‘அம்மா எம் புள்ளைக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுங்கம்மா’ என்று நோட்டை நீட்டுகிறார். அதை வாங்கிய தீபா, அதில் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கிறார்.

இருகரங்களையும் கூப்பி வணங்கியபடி, புன்னகையோடு தீபா நிற்க, வலதுபுறம் நின்றிருக்கும் பெண் நிர்வாகி ஒருவர் மைக்கில், “இளைய புரட்சித் தலைவி ஜெ.தீபாவுக்கு படகு சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று அறிவித்தபடி வந்தார். இடது புறம் இருந்த இன்னொரு பெண் நிர்வாகி, கட்சியின் ‘பாய்மரப்படகு’ சின்னத்தின் மாதிரியைக் கையில் ஏந்தியபடி வந்தார். அது தீபாவின் முகத்தை மறைக்க, “இந்தாமே, கொஞ்சம் அத அப்பால நகத்து, அம்மாவ பாக்கவே முடில” என்று தொண்டர்கள் கத்துகிறார்கள். அந்தப் பெண் நிர்வாகி, “ பின்ன எப்படித்தான் சின்னத்த காட்டுறதாம்” என்று சலித்துக்கொண்டபடி சின்னத்தைத் தாழ்த்திப் பிடிக்கிறார்.

காசிமேடு பகுதியில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கெட் பாரம் ரோடு, செரியன் நகர் எனப் பல தெருக்களைக் கடந்து பிரசார வாகனம் செல்கிறது. கும்பிட்டபடியே வருகிறார் தீபா. பக்கத்தில் இருப்பவர்கள்தான், “அதோ பாருங்கம்மா மாடில நின்னுக்கிறாங்க. அவங்களப் பார்த்துக் கும்புடுங்கம்மா” என்று எடுத்துக் கொடுக்கின்றனர். அதன்பிறகுதான் நிமிர்ந்து பார்த்துக் கும்பிடுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“மாடியைப் பார்த்துக் கும்பிடுங்கம்மா!” - தீபாவை வழிநடத்தும் நிர்வாகிகள்

“அம்மா போல என்னை வளர்த்த அத்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் ஆர்.கே. நகர் தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். அம்மா விட்டுச்சென்ற பணிகளைச் செய்வேன்” என்று உரையைத் தொடங்குகிறார்.  “அம்மாவைத் துன்புறுத்தி, கொடிய செயல்களுக்கு ஆளாக்கி அவரைக் கொன்றவர்களை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். அம்மாவுக்கு அவர்கள் துரோகம் இழைத்திருக்கின்றனர். டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று வந்திருக்கிறார்” என்று குரலில் மட்டும் ஆவேசம் காட்டுகிறார்.

தீபா தனது பிரசாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து எதுவும் பேசவில்லை. சசிகலாவையும், தினகரனையும் தாக்கிப் பேசுகிறார். ‘படகோட்டி’ படத்தில் நடித்து மீனவர்களைக் கவர்ந்த எம்.ஜி.ஆரின் சின்னம் படகு’ என்று மீனவர்களைக் குறிவைத்தும் பிரசாரம் செய்கிறார். ஜெயலலிதா பாணியில் இருப்பதாக ஜெ.தீபா காட்டிக் கொண்டாலும், அவரைப் போல சத்தமாகவும், ஆவேசமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பேசத் தெரியாமல் தடுமாறுகிறார். மிகவும் மெல்லியக் குரலில் தயங்கி தயங்கிதான் பேசுகிறார்.   

நேரம் ஆக ஆக பொதுமக்களில் பலர் அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர். மக்களோடு மக்களாகக் கலக்கிறார். சிலரின் கன்னத்தை வருடிப் பேசுகிறார். மக்களை நெருங்குகிறார். பிரசாரத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த தயக்கம் உடைபடுகிறது. அதற்குள் நேரம் ஆகிவிட, அன்றைய பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாக்காளர்களிடம் இருந்து விடைபெறுகிறார்.

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: வி.ஸ்ரீனிவாசலு