மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஞ்சா வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் உதவி யாளர் மேகநாதன் வளைக்கப்பட்ட பிறகு, ஜெயக்குமார் குடும்பத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே புயல் வீச ஆரம்பித்தது. மேகநாதன் கைதானதும் அவருடைய மனைவி ரேணுகாதேவி ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டார். அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் அண்ணி விஜயலட்சுமி சார்பு மனு ஒன்றை அளித்தார். ‘முதல்வருடன் என் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த மேகநாதன் போராடினார். இது பிடிக்காத சசிகலா, எங்கள் குடும்பத்தில் இருந்து மேகநாதனை வெளியேற்ற முயற்சிசெய்து வந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான், அப்பாவியான மேகநாதன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது’ என அந்த மனுவில் சொல்லியிருந்தார் விஜயலட்சுமி.

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

ஜெயலலிதாவின் அண்ணியே இப்படி சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பியது, திடீரென எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும் ஜெயலலிதாவை தொடர்புகொள்ளப் போராடி ஒரு பலனும் ஏற்படாத நிலையில்தான், மேகநாதனை மீட்க நீதிமன்றத்தை நாடினார்கள். அதே நேரம் மேகநாதனும் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். ‘வழக்கின் புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. மேகநாதனை ஜாமீனில் விட்டால் விசாரணை பாதிக்கும்’ என அரசு தரப்பு சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

தனக்கு எதிராக ஜெயக்குமார் குடும்பத்தினர் போட்ட வழக்கை சசிகலா நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி மேகநாதன் கைது செய்யப்பட்டார். விஜயலட்சுமி நீதிமன்றத்தில் மனு செய்தது மார்ச் 17-ம் தேதி. அதன்பிறகு ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமாருக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. எவ்வளவோ போராடியும் ஜெயலலிதாவை ஜெயக்குமாரால் சந்திக்க முடியவில்லை.

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது அண்ணன் மகள் தீபா போராடியதுபோலவே, அவருடைய அப்பாவும் அன்றைக்குப் போராடிக்கொண்டிருந்தார். கோட்டையில்... கட்சி அலுவலகத்தில்... விழாக்களில்... எனக் காத்திருந்தும் ஜெயலலிதாவை அவரால் பார்க்க முடியவில்லை. அப்படியான சந்திப்புகள் நடந்துவிடக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருந்தார்.

அந்த நேரத்தில்தான் காவிரிக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூலை 18-ம் தேதி சென்னை கடற்கரையில் ஜெயலலிதா தொடங்கினார். மக்கள் சந்திக்கும் இடம் என்பதால், அங்கே எப்படியாவது தங்கையைப் பார்த்துவிடத் துடித்தார் ஜெயக்குமார். மகன் தீபக்கை அழைத்துக்கொண்டு போனார்.

எம்.ஜி.ஆர் சமாதி அருகே உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார் அன்றைய முதல்வரான ஜெயலலிதா. கடற்கரையைச் சுற்றிலும் போலீஸ் குவிக்கப் பட்டிருந்தது. இது திட்டமிடப் படாத உண்ணாவிரதம். கடைசி நிமிடம் வரையில் அதிகாரி களுக்கே விஷயம் தெரியாது. அதனால் அத்தியாவசிய ஏற்பாடுகளைச் செய்து முடிக்காமல் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் சமாதிக்கும் அண்ணா சமாதிக்கும் இடையே இருந்த புல்வெளியில் அவசரமாக மேடை தயாரானது. அங்கே தனது பிரத்யேக சோபாவில் அமர்ந்து, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. சுற்றிலும் அதிகாரிகள் இருந்தார்கள். மக்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டுக் கொண்டி ருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா பக்கத்திலேயே இருந்தார். ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு சொல்லிக் கொண்டே இருந்தார் சசிகலா. அவர் வந்து செல்லும்போதெல்லாம் அதிகாரிகள் விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

சசிகலா ஜாதகம் - 30 - எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர்!

ஜெயலலிதா அருகே தற்காலிக டெலிபோன் இணைப்பு, ஃபேக்ஸ் மிஷின் ஆகியவை அமைக்கப் பட்டிருந்தன. மத்திய அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. வந்த கடிதங்களை முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் பிரித்து ஜெயலலிதாவிடம் தர முயன்றபோது, அருகிலிருந்த சசிகலா அதையெல்லாம் வாங்கிக் கொண்டார். பிரித்துப் பார்த்துவிட்டுத்தான் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அவருடன் சுதாகரனும் தினகரனும் இருந்தார்கள். முதல்வரை சந்திக்க வருபவர்களில் யார் யாரை உள்ளே விடலாம் என்று அதிகாரிகள் சசிகலாவிடம் ஆலோசனை செய்துவிட்டே அனுமதித்தார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அங்கே வந்தார் ஜெயக்குமார். உண்ணாவிரத மேடைக்குப் பின்புறம் தனது மகன் தீபக்குடன் வந்து நின்றபோது தடுக்கப்பட்டார். உடல்நலமில்லாத நிலையில் வந்திருந்த ஜெயக்குமாரை போலீஸார் அலைக்கழித்தனர். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியிடம் ஓடிய சிறுவன் தீபக், “சீஃப் மினிஸ்டர் என் ஆன்ட்டி. அவங்கள பார்க்கணும்... ஹெல்ப் பண்ணுங்க சார்” என கெஞ்சினான். நோ ரெஸ்பான்ஸ். ஒரு கட்டத்தில் தூரத்தில் இருந்த ஜெயலலிதாவைப் பார்த்து ‘‘ஆன்ட்டி... ஆன்ட்டி...’’ என தீபக் கத்தியபோது அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். அந்த நேரத்தில் சசிகலா அங்கே இல்லை. கொஞ்ச நேரத்தில் தன் உறவினர்களோடு சசிகலா அங்கே வர... வேறுவழியில்லாமல் ஜெயக்குமார் பரிதாபமாகத் திரும்பிச் சென்றார். அங்கே கதறிய தீபக்தான் பிற்காலத்தில் சசிகலாவின் ஆதரவாளராக மாறிப்போனார். ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கை சசிகலாவோடு சேர்ந்து நடத்தி னார். இப்போது ‘‘சசி அத்தை’’ என உருகுகிறார். எதிரிகளை வளைப்பதிலும் வல்லவர் சசிகலா. அது தீபாவின் கணவர் மாதவன் வரையில் தொடர்கிறது.

(தொடரும்)