Published:Updated:

கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’

கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’
பிரீமியம் ஸ்டோரி
News
கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’

தொப்பிக்காரரு வர்றாருடோய்!

மேஜிக் கலைஞர்கள் அழகான தொப்பி வைத்திருப்பார்கள். அதிலிருந்து எது எதையோ எடுத்துக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் ஆட்களின் தொப்பியிலிருந்து பணம் மட்டுமில்லை... இன்னும் எது எதுவோ வந்து கொட்டுகின்றன. தொகுதி மக்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். 

எந்த மாநிலத்தையும்விட  தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா வும் இங்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏற்கெனவே பின்பற்றும் டெக்னிக்குகள் மட்டுமின்றி, ஜெயலலிதா இறந்துவிட்டதால் இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஆர்.கே.நகரிலும் பணப்பட்டுவாடா செய்வதில் விதம்விதமான பாணிகளைக் கடைப்பிடிக்கின்றனர். வெளியூர் ஆட்களையும் பெண்களையும் வைத்து கச்சிதமாக இதைச் செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் முந்தா நாள் வரை மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் அத்தனை மாடல் கார்களும் ஆர்.கே. நகர் தொகுதியில் வலம் வருகின்றன. கார்களின் பதிவு எண்களைப் பார்த்தால், ‘தமிழ்நாடே இங்குதான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எல்லா கார்களிலும் அ.தி.மு.க கரை வேட்டி கட்டியவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். சட்டைப் பாக்கெட்களில் ஜெயலலிதாவும் தினகரனும் இருக்கும் படம் இருந்தால், அ.தி.மு.க அம்மா கட்சி என்றும்; ஜெயலலிதாவும், ஓ.பி.எஸ்-ஸும் இருக்கும் படத்தை பாக்கெட்களில் வைத்திருந்தால் அ.தி.மு.க புரட்சித் தலைவி அணி என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது.  முக்கிய சாலைகளில் மட்டுமின்றி, ஆர்.கே. நகரின் சின்னச்சின்ன தெருக்களிலும்கூட கார்களை நிறுத்திவிட்டு, வெளியே பிளாஸ்டிக் சேர்களைப் போட்டு உட்கார்ந்து ஆலோசனை செய்கிறார்கள்.

இவர்களின் கைகளில் வாக்காளர் பட்டியலும், ஒரு நோட்டும் இருக்கிறது. யார், யார் எந்தெந்த தெருவுக்குச் செல்ல வேண்டும் என்று ஏரியாவும் பிரித்துக்கொண்டு நடமாடுகிறார்கள். வீடுகளின் முன்புறம் உள்ள பகுதி, கார் பார்க்கிங் என கிடைக்கிற இடங்களில் தங்கிக்கொள்கின்றனர். இதற்குக்கூட, அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு கணிசமாக வாடகை கொடுக்கின்றனர். இதனால் இவர்களை யாரும் எதுவும் சொல்வதில்லை.

கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’

வயிறு நிறைய சாப்பாடு!

வாக்காளர்களைக் கவர டி.டி.வி ஆட்கள் புதுவிதமான டெக்னிக்கைக் கையாளுகிறார்கள். தங்களின் பொறுப்பில் இருக்கும் தெருக்களில் உள்ள வாக்காளர்களுக்குத் தினமும், மட்டன், சிக்கன், மீன் என ஏதாவது அசைவ அயிட்டங்கள் வாங்கிக்கொடுத்து, மளிகைப் பொருள்களும் கூடவே சேர்த்துக் கொடுத்து, ‘‘நல்லா சமைச்சு சாப்பிடுங்கம்மா’’ என்று பரிவோடு சொல்கிறார்கள். தொடர்ந்து வாக்குப்பதிவு வரை இதேபோன்று கவனிப்பதுதான் அவர்களின் திட்டம். இப்படிச் செய்வதால், அவர்களை வேறு கட்சிக்காரர்கள் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர். ‘‘வாங்க பழகலாம் பாணியில் இது வித்தியாசமாகத்தான் இருக்கிறது” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

போஸ்டரைக் கிழித்தவருக்கு பணம்!


இது ஓர் உண்மைச் சம்பவம். அ.தி.மு.க அம்மா அணியின் அலுவலகம் அருகே ஒரு சுவரில் சசிகலா படம் போட்ட போஸ்டர் ஒட்டியிருக்கிறது. அதைப் பார்க்கச் சகிக்காத ஒருவர், அந்த போஸ்டரைக் கிழித்து எறிகிறார். இதைக் கண்ட தினகரன் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்தார்கள். மிரண்டு நின்ற அவரை அவர்கள் தாக்கவில்லை, மிரட்டவில்லை. அவரே தலை சுற்றிக் கீழே விழுமளவுக்கு நான்கைந்து ஐந்நூறு ரூபாய் தாள்களை அவர் பாக்கெட்டில் செருகி அனுப்பி வைக்கின்றனர். அவர்களைக் கும்பிட்டுவிட்டு, போஸ்டரில் மிச்சமிருக்கும் சசிகலாவைப் பணிவோடு பார்த்துவிட்டு அவர் திரும்பிப் போகிறார். எதிர்ப்புகளையும், தங்களுக்கான ஆதரவாக இந்த யுக்தியின் மூலமே செய்கிறார்கள் தொப்பி அணியினர்.

சுவரில் மார்க் செய்கின்றனர்!


வீடு வீடாக எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு டி.டி.வி-யின் ஆட்கள் கணக்கெடுக்கின்றனர். ஒரு வீட்டில் எத்தனை ஓட்டு இருக்கிறது என்று வீட்டுக்கு வெளியே சுவரில் குறித்து வைக்கின்றனர். இப்படி குறிக்கப்பட்ட வீடுகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக தகவல் பரவுகிறது. இப்படி குறியிடப்பட்ட வீடுகளில் விசாரித்தால், ‘‘டி.டி.வி ஆட்கள் வந்தார்கள். கணக்கு எடுத்துக் குறித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், பணம் கொடுப்பதற்குத்தானா என்பது எங்களுக்குத் தெரியாது” என்கிறார்கள் உஷாராக. ஆனால், ‘ஓர் ஓட்டுக்கு மூவாயிரம் ரூபாய் உத்தரவாதம் கொடுத்து, முதற்கட்டமாக முந்நூறு ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை கொடுத்து விட்டார்கள். சில இடங்களில் பொருள்களுக்கான டோக்கன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மளிகைக் கடைகளில் நின்று பறக்கும் படையினர் சோதனை செய்தால், சாதாரண ஆட்கள்கூட 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவதைப் பார்க்கலாம். தேர்தல் நெருங்க நெருங்க, இங்கே 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு, சில்லறை கிடைக்காமல் பலரும் திண்டாடுவார்கள் போலிருக்கிறது’’ என ‘எதிர்பார்ப்போடு’ சொல்கிறார்கள் சிலர்.

நுணுக்கமான கணக்கெடுப்பு!

கும்மிடிப்பூண்டி முதல் கடைசியாக நடந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்கள் வரை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்தான் வாக்காளர்களை வளைப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவார்கள். இப்போது இந்த டீம், இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து மோதுகிறது. ஒரே ஃபார்முலாவை வைத்துக்கொண்டு இரண்டு பிரிவினர் மருந்து தயாரிப்பது மாதிரி ஆகிவிட்டது ஆர்.கே. நகரில்.

பன்னீர் தரப்பினர் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்புகின்றனர். வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் என கணக்கு எடுக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சளைக்காமல் நுழைந்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத் தலைவரின் மொபைல் நம்பரை வாங்கி தனி நோட்டில் குறித்து வைத்துக்கொள்கிறார்கள். ‘எப்போது பணம் தரப்படும் என்று போனில் தகவல் கொடுக்கப்படும்’ என்று நம்பிக்கை கொடுக்கின்றனர்.

பணம் தருவதற்காக இவர்கள் தரப்பில் அனைத்து தெருக்களிலும் நம்பிக்கையான சில பெண்களை நியமித்திருப்பதாகச் சொல்கிறார்கள். பன்னீர் அணியைச் சேர்ந்த வெளியூர்க்காரர் ஒருவரிடம் பேசினோம். “செங்கல்பட்டு பகுதியிலிருந்து 150 பேர் தேர்தல் வேலைகளுக்காக வந்திருக்கிறோம். வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று கணக்கெடுக்கிறோம்” என்றார். அதற்குமேல் தகவல் சொல்ல மறுத்தார்.

ஐந்து வகை டீம்!


டி.டி.வி.தினகரனின் பிரசார வாகனத்தின் பின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தொப்பியோடு வலம் வருகின்றனர். ஒரு ஏரியாவில் பிரசாரம் முடிந்ததும் இவர்கள் திரும்ப, புது டீம் பிரசாரத்தில் இணைகிறது. இவர்களுக்கு இருநூறு ரூபாயும், ஒரு டோக்கனும் வழங்கப்படுகிறது. இவர்கள் மூலமாகத்தான் பணப்பட்டுவாடா நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

‘‘மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட பெண்கள் டீம், சுய உதவிக்குழு பெண்கள் டீம், இவர்களை கண்காணிக்கக் கட்சி பிரமுகர் கொண்ட டீம், வாக்காளர்களையே உள்ளடக்கிய ஒரு ஃபைனல் டீம்... இந்த நான்கு அணிகளையும் கண்காணிக்கும் மாஜி ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ வெற்றிவேல் மேற்பார்வையின் கீழுள்ள வெளிமாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் டீம். இந்த ஐந்து டீம்களையும் கொண்டு வைட்டமின் ப விநியோக நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் டீமின் வேலை, தொகுதிக்குள் சென்று வாக்காளர்களிடம் தொடர்ந்து நட்போடு பேசுவது. தினகரன் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லி, அவர்கள் மனதில் பதிய வைப்பது. ஐந்து முதல் பதினைந்து வாக்காளர்களுக்கு ஒரு டீம் இன்சார்ஜ். ஒரு அபார்ட்மென்ட்டில் நான்கு வீடுகளுக்கு மேல்  இருந்தால் அவர்களுக்கு ஒரு டீம் போட்டுவிடுவார்கள். தினம் இரண்டு முறை வாக்காளர்களை இந்த டீம் சந்திக்கும்.

கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’

இதற்கடுத்து சுய உதவிக்குழு டீம் சென்று வாக்காளர்களிடம் - குறிப்பாக பெண்களிடம் பிரசாரம் செய்யும். வீட்டுக்கு என்னென்ன தேவை என்று குறிப்பெடுக்கும். சில பெண்கள், ‘‘எங்ககிட்ட செல்போன்கூட இல்லை’’ என புலம்ப, இரண்டே நாள்களில் புத்தம்புது செல்போன் வீடு தேடி பார்சலில் வந்திருக்கிறது. இந்தத் தேவைகளை டெலிவரி செய்யும் பொறுப்பு, கண்காணிப்பு டீமிடம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நேரடியாகத் தருவதில்லை. சுய உதவிக்குழு டீம் பிரசாரத்தின்போது, தங்களுக்குச் சாதகமாகப் பேசிய வாக்காளர்களின் பட்டியலை இந்தக் கண்காணிப்பு டீமிடம் கொடுக்கிறது. இதை வைத்து வாக்காளர் டீம் அமைக்கிறார்கள். இந்த டீம் மூலமே தேவையான பட்டுவாடா நடக்கிறது. கட்சி ஆட்கள் மூலம் பட்டுவாடா நடந்தால் சிக்கிக்கொள்வார்கள் என்பதால், வாக்காளர்களையே தமக்கான டீமாக உருவாக்கி, அவர்கள் மூலமே செய்கிறார்கள்.

இதுதவிர, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி, நகைக் கடைகளின் பெயர் போட்டு, ஒரு நம்பர் போட்டு டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனைக் கொண்டு சென்று கொடுத்து சேலை மற்றும் ஒரு தங்கக் காசு பெற்றுக்கொள்ளலாம். இப்போதைக்கு சேலை மட்டும் போய்ச் சேர்ந்திருக்கிறது. தங்கக் காசு, க்ளைமாக்ஸ் ஸ்பெஷல். ‘மிஷன் ஆர்.கே. நகர்’ என்ற இந்த இடைத்தேர்தல் பிளான் பட்ஜெட், நூறு கோடி ரூபாய். இந்தத் தேர்தல் வெற்றிதான் ‘அ.தி.மு.க யார் கையில் இருக்கப் போகிறது’ என்பதைத் தீர்மானிக்கும். எனவே, பன்னீர் அணியும் சளைக்காமல் பிளான் போடுகிறது.

பதுங்கிப் பாய்கிறார்கள்!

இவை அனைத்தையும் தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் புகாராகத் தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறார்கள். துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, ஆர்.கே. நகர் தொகுதி குறித்து டெல்லிக்கு அறிக்கை அனுப்பினாராம். இதையடுத்துத்தான் ஆர்.கே. நகர் களத்தில் இருந்த அத்தனை அதிகாரிகளையும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்து இப்போதைக்கு தினகரன் அணியும், பன்னீர் அணியும் அரண்டு போய் பதுங்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முன்பாக தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். 

ஆனால், தொப்பி போட்டுக்கொண்டு யார் வந்தாலும், பணம் கொடுக்க வருவதாக வாக்காளர்கள் நினைக்கிறார்கள். ‘தொப்பிக்காரங்க வர்றாங்க’ என்பது கோட் வேர்டு ஆகிவிட்டது. ‘கணக்கெடு... காசு கொடு...’ என்பதுதான் இப்போது ஆர்.கே. நகர் பார்முலா!

- கே.பாலசுப்பிரமணி, சே.த.இளங்கோவன்
படங்கள்: ப.சரவணகுமார்,  வி.ஸ்ரீனிவாசுலு

‘‘தினகரனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்!”

தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளிப்பதற்காக ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வந்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியில் வந்தவர், ‘‘ஆர்.கே. நகரில் டி.டி.வி.தினகரன் ஆட்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இதைத் தேர்தல் அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இங்கிருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. மத்திய அரசு அதிகாரிகளை நேரடியாகத் தேர்தல் பணியில் அமர்த்தி, தொகுதியை மத்தியப் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்” என்றார்.

இதே குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சொல்கிறது. இந்தக் கட்சியின் வேட்பாளர் லோகநாதன், ‘‘டி.டி.வி.தினகரன் அணியினர், தேர்தல் ஆணையத்தின் எந்த விதிமுறையையும் கடைபிடிக்கவில்லை. பல இடங்களில் காவல்துறையினர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையிலேயே பணப் பட்டுவாடா நடக்கிறது. நேற்று தினகரன் அணி சார்பில் காமாட்சியம்மன் விளக்கு கொடுத்ததாக 3 பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடுத்து என்ன பயன்? அவர்கள் எந்த வேட்பாளருக்காக இதைச் செய்தார்களோ, அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான சட்ட நடைமுறையாக இருக்கும். அதிக முறைகேடு நடந்ததால் கடந்த பொதுத்தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலையே நிறுத்திவைத்தது போல் இங்கும் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால், தேர்தலை நிறுத்தி வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட தினகரனை தகுதி நீக்கம் செய்யவேண்டும். இதைச் செய்து தேர்தல் ஆணையம் தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

- எஸ்.கிருபாகரன்