அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு

‘வருமான வரி ரெய்டு தகவல்களைச் சேகரிப்பதில் பிஸியாக இருக்கிறேன். செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறேன்’ எனத் திரையில் கழுகாரின் மெசேஜ் ஒளிர்ந்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் வரிசையாகக் கொட்டின தகவல்கள்...

ஆர்.கே. நகர் தொகுதியில், 2015 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தேர்தல் வேலைக்காக வந்த கட்சியினர் முகாமிட்ட கல்யாண மண்டபங்கள்தான், இப்போது டி.டி.வி.தினகரன் தரப்பின் தேர்தல் முகாம்களாக உள்ளன. இப்படி, 13 கல்யாண மண்டபங்கள்  செயல்படுகின்றன. ஒரு மண்டபத்தில் 500 பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தினமும் கல்யாண மண்டபங்களிலேயே பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இதற்காக வேலூர், ஆம்பூர் போன்ற ஊர்களில் இருந்து பிரியாணி மாஸ்டர்களை அந்த ஊர்களைச் சேர்ந்த கட்சியினர் அனுப்பி வைத்துள்ளனர். மாஸ்டர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 1000 ரூபாய் வரை தருகிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கிறதே என்று, சென்னையில் சின்னச்சின்ன கடைகளில் பிரியாணி மாஸ்டர்களாக இருந்த பலரும் இப்போது ஆர்.கே. நகருக்கு வந்துவிட்டார்கள். 

மிஸ்டர் கழுகு

ஒவ்வொரு மண்டபத்திலும் தினமும் பத்து ஆடுகளாவது கதறுகின்றன. பிரியாணி,  மீன் வறுவல், இறால், நண்டு, நெத்திலி தொக்கு, சுறாப்புட்டு என வெரைட்டியாக ருசிக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாள் ஆர்.கே. நகரில் கறிக்குழம்பு சோறும், கடல் உணவு பந்தியும் வைத்துவிடுகிறார்கள்.

ணப்பட்டுவாடாவை தினகரன் அணி ஏறத்தாழ முடித்துவிட்டது. கடைசி நேரத்தில் அதிரடிச் சோதனைகள், பறக்கும் படை என்று டென்ஷன் ஏறிவிட்டால் வம்பு என அவசரஅவசரமாக பணப் பட்டுவாடாவை முடித்துவிட்டனர். வேகமாகச் செய்தாலும், விவேகமாக, மிக நிதானமாக, அந்த வேலைகள் நடந்துள்ளன.

ணம் கொடுக்கப்படும் வீடுகளுக்கு, முதல்நாள் இரவே ‘இலை’மறை காயாகத் தகவல் சொல்லப்படுகின்றன. ‘‘நாளை காலை நம் கட்சிக்காரர்கள் உங்கள் வீட்டுக்குக் கணக்கெடுக்க வருவார்கள். அவர்களுக்கு உரிய தகவலைத் தாருங்கள்’’ என்று லோக்கல் புள்ளிகள் மூலம் மிகப் பணிவான முறையில் சொல்லிவிடுகிறார்கள். மறுநாள் காலை பணத்தோடு குறிப்பிட்ட நபர் ஆஜராகிவிடுகிறார்.

கூட்டம், கும்பல் எல்லாம் இல்லை; கொடிகள் கிடையாது; கையில் நோட்டீஸ்கள் கிடையாது. மொத்தமே இரண்டு பேர்தான் ஒரு தெருவைப் பார்த்துக்கொள்கின்றனர். மொத்தமாகப் பணம் வைத்துக்கொண்டு வீடு வீடாகப் போவது கிடையாது. ஒருவர் தனியாகப் போய் ஒரு வீட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளிச் சென்றுவிடுகிறார். அதன்பிறகு, மீண்டும் அவரிடம் ஒரு சிறிய தொகை சேர்க்கப்படுகிறது. அவரைப்பின் தொடர்ந்து கட்சிக்காரர் ஒருவர் போகிறார். அவ்வளவுதான். இப்படித்தான் பண விநியோகம் நடந்துள்ளது. மொத்தமாகப் பணம் வைத்திருந்து பிடிபடுவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

ழக்கமாக, தேர்தல் நேரத்தில் பணம் கொடுக்கும் வேலைக்கு அந்தப் பகுதியில் இருக்கும் கட்சிக்காரர்கள்தான் செல்வார்கள். இந்தமுறை, தினகரன் அதைத் தவிர்த்துவிட்டார். ஆர்.கே. நகரில் பெரும்பாலான கட்சிக்காரர்கள் பன்னீர் அணிக்குப் போய்விட்டது ஒரு காரணம். தஞ்சாவூர் பகுதியிலிருந்து வந்திருக்கும் தன் ஆட்கள்தான் விசுவாசமாக இருப்பார்கள் என தினகரன் நம்புவது இன்னொரு காரணம். எல்லா இடங்களிலும் இவர்களே கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் வரை தரப்பட்டிருக்கிறது. நம்பிக் கொடுத்தனுப்பும் நபர், இடையில் கொஞ்சம் லவட்டினால் என்ன செய்வது? பிடிபட்டால் சிறைக்குப் போகும் ரிஸ்க்கும் அவருக்கு இருக்கிறதே! அதனால், ஒரு ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், கொடுப்பவருக்கு 1000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இப்படி ஒரே இரவில் பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள் பலர்.

தேர்தல் பார்வையாளர்கள், நுண்பார்வையாளர்கள் என ஆர்.கே. நகரில் தெருவுக்குத் தெரு கண்காணிப்பு இருப்பதால், பணம் கொடுக்க வேறு ஒரு டெக்னிக்கையும் கையாண்டு இருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஐந்து ஓட்டுகள், ஆறு ஓட்டுகள் என இருக்கும் பெரிய குடும்பங்களிலிருந்து யாராவது ஒருவரை மட்டும் தொகுதிக்கு வெளியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச்சொல்லி, அங்கு வைத்து எல்லோருக்குமான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கட்சி அலுவலகங்கள், கட்சி பிரமுகர்கள் வீடுகளில் வைத்து இப்படி டெலிவரி நடந்தது. ஆர்.கே. நகரில் சில தெருக்களிலிருந்து இப்படிக் கும்பல் கும்பலாக 100, 150 பேர் சென்று மொத்தமாக பணம் வாங்கும் வைபவம் நடந்தது.

மிஸ்டர் கழுகு

‘ஓர் இடைத் தேர்தலை ஆளுங்கட்சி எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை தினகரனிடமிருந்து இந்தியாவே கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு டெக்னிக்குகளில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். முன்பு, ஜெயலலிதா இந்தத் தொகுதியில் இரண்டு முறை ஜெயித்து முதல்வராக இருந்தபோதும், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் தேடி எடுத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து முகவரிகளையும், செல்போன் எண்களையும் எடுத்து, கட்சிக்காரர்கள் அவர்களோடு பேசி வருகிறார்கள். இப்படி சுமார்  60 ஆயிரம் பேரைத் தொடர்புகொள்ள முடிந்திருப்பதாகச் சொல்கிறார்கள், தினகரன் தரப்பினர்.

உதாரணமாக, சுய உதவிக்குழு மூலம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவிப்பதாக ஒரு பெண்மணி மனு கொடுத்திருந்தார். அவருக்குக் குறிப்பிட்ட வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ‘‘உங்கள் கடன் அடைக்கப்பட்டு விட்டது. உங்கள் வீட்டில் இருக்கும் நான்கு பேரின் ஓட்டும் தொப்பி சின்னத்துக்குப் போய்விட வேண்டும்’’ என்று சொல்லப்பட்டதாம்.

வீடு வேண்டும், பட்டா வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்த பலரிடம் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகங்களிலிருந்து அதிகாரிகளை விட்டுப் பேச வைக்கும் வேலையும் நடக்கிறது. ‘‘தினகரன் ஜெயித்தால் உங்களுக்கு வீடு நிச்சயம்’’ என வாக்குறுதி தரப்படுகிறதாம்.

தினகரன் பெயரை வாக்காளர்கள் மனதில் பதியவைப்பதற்காக, தினகரன் நாளிதழில் பணத்தை வைத்துக் கொடுத்திருக்கிறார்களாம்.

‘உள்ளாட்சித் தேர்தலில் யாரோடு கூட்டணி வைக்கலாம்’ என்று பல மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார் ஜி.கே.வாசன். ‘அ.தி.மு.க பலவீனமாக இருப்பதால் தி.மு.க தனித்து நிற்கவே திட்டம் போடுவார்கள்’ என்று யதார்த்தத்தை அவர்கள் சொன்னார்களாம். ஆர்.கே. நகரில் ஓ.பி.எஸ் அணிக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, ‘முதலில் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்துப் பார்க்கலாம்’ என முடிவெடுத்தார். அந்த அணியின் கை ஓங்கினால் உள்ளாட்சித் தேர்தலிலும் இணைந்து செயல்படலாம் என்று எதிர்பார்ப்பு அவருக்கு. இதை வாசனே போன் செய்து பன்னீரிடம் சொன்னாராம். உடனே பன்னீர் கிளம்பி வாசன் வீட்டுக்கு வந்து, அவரிடம் முறைப்படி ஆதரவு கேட்டார்.

டி
ஜிட்டல் பிரசாரம், சோஷியல் மீடியா பிரசாரம் என ஆரம்பித்த ஓ.பி.எஸ் அணியினர், ‘அம்மா’வின் பிணத்தைக் களத்தில் இறக்கி ஓட்டு கேட்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்ததைப்போல, ஓர் உருவப் பொம்மையைச் செய்து வாகனத்தில் ஏற்றிப் பிரசாரம் செய்தது, பெருமளவு அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஐடியாவுக்குக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜனை பலரும் வறுத்தெடுக்கிறார்கள். ‘தங்களுக்கு மிகப் பெரிய மக்கள் ஆதரவு இருக்கிறது. அவை அத்தனையும் ஓட்டுகளாக மாறும்’ என்று நம்பிக்கொண்டிருந்த ஓ.பி.எஸ் அணி, தினகரன் ஆட்கள் பணம் கொடுக்கும் வேகத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது. ‘க்ளைமாக்ஸில் பணம் இறக்கினால்தான் ஞாபகத்தில் இருக்கும்’ என அவர்கள் காத்திருக்கிறார்களாம்.