பிரீமியம் ஸ்டோரி

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆர்.கே. நகர் தேர்தல்களம் உஷ்ணம் ஆகிவிட்டதா?


ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டதுமே ஆர்.கே. நகர் உஷ்ணம் அடைந்துவிட்டது. சசிகலா போட்டியிடலாம் என்றபோது வெப்பம் அதிகம் ஆனது. சசிகலா சிறைக்குப் போய் தினகரன் போட்டியிட முடிவெடுத்தபோதும், அந்தச் சூடு குறையாமல் இருக்கிறது. உஷ்ணம் குறையாமல் பார்த்துக்கொண்டது தினகரனின் சாதனைதான்.

கழுகார் பதில்கள்

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் செய்யப்பட்டது எதைக் காட்டுகிறது?


அந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கு அனுசரணையானவராக இருந்துள்ளார் என்ற தகவல், தலைமைத் தேர்தல் ஆணையம் வரைக்கும் தெரிந்துள்ளது. பொதுவாகத் தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்குச் சாதகமாக போலீஸ் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் கொடுக்கும். அப்படிப் பார்த்தால் அனைவரையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று தேர்தல் ஆணையம் புகாரை வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால், ஜார்ஜ் பற்றி புகார் கொடுத்த மறுநாளே மாற்றினார்கள்.  அந்த அளவுக்கு அடையாளம் காணுவது மாதிரி நடந்துகொண்டுள்ளார் ஜார்ஜ்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘இரட்டை விளக்கில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர். இன்னொரு விளக்கு ஜெயலலிதா’ என்று தங்கள் கட்சி சின்னம் பற்றி ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள விளக்கம்?


விளக்கம் சமாளிப்பாக இருக்கலாம். அதைச் சொல்லும் தகுதி அவருக்கு இருக்கிறதா? ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காகப் புதுச் சொக்காய் போட்டு புது மாப்பிள்ளை போல கவர்னர் மாளிகைக்குச் சென்றவர், ஜெயலலிதா பற்றிப் பேசலாமா? ‘ஜானகியா, ஜெயலலிதாவா’ என்ற பிரச்னை வந்தபோது ஜானகி பக்கம் இருந்தவர் பன்னீர் என்பதை அவர் மறந்திருக்கலாம். மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

 இரட்டை இலைக்காக ஜானகி - ஜெயலலிதா மோதிக் கொண்டதற்கும் தினகரன் - பன்னீர் மோதிக் கொள்வதற்கும் என்ன வேறுபாடு?


இரண்டுமே பங்காளிச் சண்டைகள்தான். ஜானகி அதை விரும்பவில்லை. சிலரால் தூண்டப்பட்டார். ஆனால், இப்போது தினகரனும் பன்னீரும் வைராக்கியத்தோடு மோதுகிறார்கள்.

கழுகார் பதில்கள்

பத்ம சிவாஜி, மாரியம்மன்கோவில்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஒப்பிடுக?


எம்.,ஜி.ஆர் தெரியாமல் செய்த தவறு, ஜெயலலிதா வர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

ஜெயலலிதா தெரிந்தே செய்த தவறு, சசிகலா குடும்பம் வர வாய்ப்பாக அமைந்துவிட்டது.

உமரி பொ.கணேசன், மும்பை-37.

  சசிகலா குடும்பத்தினரால் மிரட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற முடியுமா?


  அது சாத்தியமா எனத் தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பிலும் அப்படி எதுவும் இல்லை. அவர்களிடம் அபராதத் தொகை வசூல் செய்யப்படும். அந்தத் தொகையை வைத்தாவது இந்தத் தரப்புக்கு ஏதாவது இழப்பீடு தரப்படுமா என்று தெரியவில்லை. அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று தங்களது கோரிக்கையை வைக்கலாம்.

லட்சுமி காந்தம், வேலூர் (நாமக்கல்).

சமீபத்திய வியப்பு?


ஜெயலலிதா மாதிரியே மேக் அப் போட்டு, அவரை மாதிரியே சேலை கட்டி, அவரை மாதிரியே வேனுக்கு மேல் குடை வைத்தபடி வலம் வந்தால் தன்னை ‘அம்மா’வாக இந்த ஊர் நம்பும் என்று நம்பும் தீபாக்கள் இந்த நாட்டில் இருப்பதைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.

அ.குணசேகரன், புவனகிரி.

கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதா?


ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். முடியவில்லை. வாயை லேசாக அசைத்தாலே இருமல் வந்துவிடுகிறதாம்.

வசந்தன், மதுரை.

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மூவரும் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள்?


ஆர்.கே. நகரில் வென்றால் உடனே முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் தினகரன். அவர் வென்று முதல்வர் ஆகிவிட்டால் தனது ஆதரவாளர்களுடன் தனித்த முடிவை எடுக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தினகரன் வென்றால், அவர்களோடு போய் சேர்ந்துவிட நினைக்கிறார் பன்னீர். இதுதான் அந்தந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

கழுகார் பதில்கள்

 தமிழக அரசியலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்க என்ன செய்ய வேண்டும்?

அரசியலின் சுவையை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சுவை என்று இங்கு குறிப்பிடுவது, அதன் தன்மையைத்தான். சினிமா, இன்றைய இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் கலையாக இருக்கிறது. அதற்குக் காரணம், இளைஞர்களின் மனதை ஏதோ ஒரு விதத்தில் (கவர்ச்சிகரமாக!) அது ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அரசியலைப் பொறுத்தவரை அது உணர்ச்சிமயமானது. எழுச்சிக்குரியது. போராட்டக் குணம் படைத்தது. அர்ப்பணிப்புக்கு உரியது. இந்த உணர்ச்சிகள் இளைஞர்களுக்கு ஊட்டப்படும்போது, அவர்கள் இயல்பாக அரசியல் நாட்டம் உடையவர்களாக மாறுவார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்கள் பார்க்கும் அரசியல் ஊழல் மயமானதாக, லஞ்ச லாவண்யம் கொண்டதாக, வார்த்தை சவடால் கொண்டதாக, சாதிமத பாகுபாடு கொண்டதாக, அனைத்துக்கும் மேலாக வன்முறையானதாக இருக்கிறது. அதனால்தான் இளைஞர்கள் இதிலிருந்து தள்ளி நிற்கிறார்கள். நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறார்கள்.

‘அரசியலைவிட்டு நீங்கள் ஒதுங்கலாம், அரசியல் உங்களை ஒதுக்காது’ என்றார் லெனின். அதனை இன்றைய இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அரசியல் என்பதே ‘வேட்டி கட்ட வேண்டும், கொடி பிடிக்க வேண்டும், பேருந்தை மறிக்க வேண்டும், கல்லெறிய வேண்டும்’ என்பது அல்ல. ‘உனது எண்ணத்தை யாருக்கும் பயமில்லாமல் சொல்’ என்பதை உணர்த்த வேண்டும். சமூக வலைதளங்களில் இன்று பலரும் அப்படிச் சொல்ல வந்துள்ளார்கள். இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இன்னும் ஒரு தேர்தல்தான்... அடுத்த தேர்தல் இளைஞர்களால், புதிய முகங்களால் நிரம்பி இருக்கும் என்ற நம்பிக்கை தெரிகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு