அலசல்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!

சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜெயலலிதாவின் சாயலில் இருந்தது... அவரைப் போல இமிடேட் செய்தது... விழாக்களில் முன்னிலைப்படுத்திக்கொண்டது... போன்றவற்றையெல்லாம் தீபாவைத் துரத்தியடிக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம் வீழ்ந்தது. ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன், கஞ்சா வழக்கில் கைதானதும் ஜெயலலிதாவின் அண்ணியே நீதிமன்றப் படியேறினார். ‘முதல்வருடன் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த முயன்ற மேகநாதனை சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் மேகநாதன் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது’ என அதிரடி கிளப்பியிருந்தார் அண்ணி விஜயலட்சுமி. இதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமாருக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!

இப்படியான சூழலில்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே திடீரெனக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கான காரணம் ஹைதராபாத்தில் விதைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு சென்னையில் நடந்த விபத்தைப் பார்ப்போம். தீபாவுக்கு அவருடைய அப்பா ஜெயக்குமார் கைனடிக் ஹோண்டா ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். அதில்தான் பள்ளிக்கும் மற்ற இடங்களுக்கும் தீபா போய்வந்துகொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கும் ஜெயக்குமார் குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்ட நிலையில், ஒரு நாள் தி.நகரில் கைனடிக் ஹோண்டாவில் போய்க் கொண்டிருந்த தீபா திடீரென விபத்துக்குள்ளானார். வேகத்தோடு வந்த மூன்று சக்கர வேன் ஒன்று கைனடிக் ஹோண்டாவை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் பறந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபாவை தனியார்        மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்து ஒருவழியாக அவரைத் தேற்றினார்கள். தீபாவை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்ற டெம்போ வேனின் பதிவு எண்ணை சிலர் குறித்து வைத்திருந்தனர். போலீஸாரிடம் அந்த எண்ணை கொடுத்துப் புகார் கொடுத்தார் தீபா. ஆனால் போலீஸ் அந்த வழக்கைப் பதிவு செய்யவில்லை. அப்போதுதான் நடந்தது ‘விபத்தா... இல்லை சதிவேலையா?’ என்கிற சந்தேகம் ஜெயக்குமார் குடும்பத்துக்கு ஏற்பட்டது. ‘விபத்து என்றால் போலீஸ் ஏன் வழக்குப் பதிவுசெய்ய மறுக்கிறது’ என்கிற கேள்வியை எழுப்பினார்கள்.

இந்த விபத்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, தீபாவை மட்டும் அழைத்து ஜெயலலிதா பேசியதாக ஒரு தகவல் உண்டு. அண்ணன் ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், அவருடைய மகள் தீபாவை மட்டும் அழைத்து முதல்வர் பேசியது ஏன் என்ற கேள்வி போயஸ் கார்டனில் இருந்தவர்கள் மனதைக் குடைந்திருக்கிறது. ‘இந்தச் சந்திப்புக்கு பிறகுதான் தீபா விபத்துக்குள்ளாகி இருக்கிறார்’ என ஜெயக்குமார் குடும்பத்தினர் புலம்ப ஆரம்பித்தார்கள். அந்த விபத்தை போலீஸ் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது, அதை உண்மை ஆக்குவது போல இருந்தது. தீபா விபத்தை போலீஸ் பதிவு செய்யாமல் மறுப்பது சக்தி வாய்ந்த உத்தரவினால்தான் என போலீஸ் வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பியிருந்தன. தீபா விபத்துக்குள்ளான செய்தியை வழக்கம் போல கடிதம் மூலம் எழுதி கார்டனுக்கு ஃபேக்ஸ் செய்திருந்தார் ஜெயக்குமார். ஆனால், அது ஜெயலலிதாவின் கைக்குப் போய் சேரவில்லை. அதன் பிறகு கார்டனில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் செய்தியை அனுப்பினார். அவர், கார்டனுக்குள்ளேயே காலடி எடுத்துவைக்க முடியவில்லை.

சசிகலா ஜாதகம் - 31 - விபத்தால் சேர்ந்த உறவுகள்!

ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் சொத்துகள் இருப்பது பலரும் அறிந்தது. அங்கே ஜெயலட்சுமி என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கு சித்தி ஒருவர் இருந்தார். பிறகு அவர் பெங்களூரில் வசித்து வந்தார். ஜெயலட்சுமியிடம் நடந்த விஷயங்களையெல்லாம் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். ஜெயலட்சுமி, ஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்ததால் விஷயம் ஜெயலலிதாவின் காதுக்குப் போய் சேர்ந்தது. அதுவரையில் தீபா விபத்துக்குள்ளான விஷயம் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்பதுதான் ஆச்சர்யம். ‘‘சின்னப் பெண் தீபா யாருக்கு என்ன தீங்கு செய்தாள். அவளைத் துன்புறுத்த நினைத்திருக்கிறார்கள். இதை நீ தெரிந்தும் தெரியாது போல எப்படி இருக்கலாம்’’ என ஜெயலலிதாவிடம் சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார் சித்தி ஜெயலட்சுமி. விபத்தின் முழுக் கதையையும் ஜெயலலிதாவிடம் சொன்னார். அதன் பிறகு சசிகலாவை அழைத்து ஜெயலலிதா கண்டித்திருக்கிறார். ‘‘என் குடும்ப விஷயங்களில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. அரசு நிர்வாகத்திலும் தலையிடாதே’’ என சசிகலாவை எச்சரித்திருக்கிறார் ஜெயலலிதா. இதன் பிறகு ஜெயலலிதாவின்  நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதே நேரம் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. தீபா விபத்தின் காரணமாக மேகநாதன் விவகாரம் எல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருக்கிறது.

ஜெயக்குமார் குடும்பத்தினருடன் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். உறவுகள் மீண்டும் தொடர ஆரம்பித்தது. ஆனால், அது இரண்டு ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. பெரிய சதித் திட்டத்துக்குச் சூழ்ச்சி வலைகளைப் பின்னிக்கொண்டிருந்தார் சசிகலா. அது என்ன?

(தொடரும்)