Published:Updated:

``மக்களின் கோபம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?” விசாரித்த அமித்ஷா

``மக்களின் கோபம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?” விசாரித்த அமித்ஷா
``மக்களின் கோபம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?” விசாரித்த அமித்ஷா

2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை 'பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியே' என்கிற ஒற்றை இலக்குடன் பயணித்து வருகிறது அந்த கட்சி. 2016ல் ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த செயற்குழுக் கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திட்டம் வகுத்த பாரதிய ஜனதா, இருபது மாநிலங்களில் சுற்றுப்பயணம் என்கிற திட்டவரைவைத் தயாரித்தது. முக்கியமாக 2014 தேர்தலில் அக்கட்சி தோல்வியடைந்த மேற்கு வங்காளம், தெலங்கானா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான இலக்காகக் கொண்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க பெரும்பான்மையாக 38 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் பாரதிய ஜனதா வெற்றிபெற்றதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தப் படுதோல்வியை சரிகட்டும் வகையில்தான் அதற்கடுத்துவந்த காலகட்டங்களில் அமித் ஷாவின் திட்டத்தின்படி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூத்வாரியாக தங்களது கட்சியை வலுப்படுத்தும் வேலையைத் தொடங்கியது. தமிழகத்தில் இருக்கும் மொத்தம் 65,616 பூத்களில் ஒவ்வொரு பூத்களுக்கும் தலா 15 உறுப்பினர்கள். அவர்களில் 5 பேர் பெண்கள். ஐந்து பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் என மொத்தம் 13,056 பொறுப்பாளர்கள். இவர்கள் 'சக்திகேந்திரா' என அழைக்கப்படுகிறார்கள். ஐந்து 'சக்திகேந்திரா'வுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் மொத்தம் 2,750 பொறுப்பாளர்கள். இவர்கள் 'மகா சக்திகேந்திரா' என அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பூத்களிலும் வாராந்திரக் கட்சி மீட்டிங் என தனது திட்டங்களைச் சந்தடியில்லாமல் செயல்படுத்திவருகிறது பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக காரியகர்த்தாக்கள் என்று அழைக்கப்படும் இவர்களை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சந்திக்க வருவதாக கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கி சொல்லப்பட்டுவந்தது. 

'இதோ வந்துவிடுவார்' என்று பா.ஜ.க தமிழகத் தலைமை நீண்டநாள் எதிர்பார்த்துக் காத்திருந்து அந்த இருமுறையும் தமிழகத்தில் நிலவிய பல்வேறு அரசியல் சூழல்களால் அவரின் வருகை ரத்தான நிலையில், தற்போது தமிழகத்துக்கு வருகை தந்திருக்கிறார் அமித் ஷா. 

கட்சியின் மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ், கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை விமானநிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றனர். அதற்கடுத்து கட்சி அலுவலகத்துக்கு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே மாநில நிர்வாகிகள் 15 பேருடன் அவர் நேர்காணல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதுபற்றி நமக்குத் தகவல் அளித்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர், ``அமித் ஷா எங்கள் 15 பேருடனும் நேருக்கு நேராக அமர்ந்து பேசினார். அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் 78 பேரைச் சந்தித்தார். மத்திய அரசின் சாதனைகள் என்னவென்று அவர்களிடம் பட்டியலிடச் சொன்னார். தமிழகத்தில் ஸ்டெர்லைட், நெடுவாசல், உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் நடைபெற்ற பின்பு கட்சியினர் அந்த இடத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தார்களா?, குறிப்பாக மீனவர்களுக்கு படகுகளுக்கான மானியம் தருவதாக அரசு அறிவித்ததை அடுத்து கட்சியினர் மீனவப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்களா? உள்ளிட்டவற்றை அவர் விவாதித்தார்.  

அதன்பிறகு கட்சியின் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக 'தமிழக மக்கள் ஏன் பாரதிய ஜனதா கட்சியின் மீது இத்தனை கோபத்தில் இருக்கிறார்கள். அந்தக் கோபத்தைத் தணிக்க என்ன செய்ய வேண்டும்' உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தார். எய்ம்ஸ் போன்று சிறந்த பல திட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும், மதுரவாயல் பறக்கும் சாலை, இனயம் துறைமுகக் கட்டுமானம் என அரசால் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும், தற்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கொண்டுவரப்பட இருப்பதை அடுத்து அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அது கட்சியின் மிகப்பெரும் வெற்றிவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் நிர்வாகிகள் தரப்பிலிருந்து அதற்கான பதில் தரப்பட்டது” என்றார்.

இதையடுத்து மாலை தனியார் ரிசார்ட் ஒன்றில் நடக்கும் நிகழ்வில் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்களைச் சந்தித்தார் அமித் ஷா. ஒவ்வொரு மாநிலங்களிலும் பொறுப்பாளர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் பெர்சனலாக உருக்கமாகப் பேசுவது அமித் ஷாவின் பாணி. அந்த வகையில், தமிழகப் பொறுப்பாளர்கள் 16,000 பேரைச் சந்தித்த அமித்ஷா, `` நான் பூத் கமிட்டி உறுப்பினராகத்தான் தொடக்கத்தில் இந்தக் கட்சியில் இணைந்தேன். ஆனால், இப்போது அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர். கட்சிக்காக உழைக்கும் யாரும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்பதற்கு நான் சிறந்த உதாரணம். பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். தேர்தல் சமயத்தில் மட்டும் இயங்காது வருடத்தில் 365 நாள்களும் கட்சிக்காக உழைத்திடுங்கள். மற்ற கட்சியின் அதிருப்தியாளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் இவர்களை நமது கட்சியில் இணைப்பதை முக்கியப் பணியாகக் கொண்டிருங்கள்” என்று மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.  

மனம்விட்டுப் பேசியது எடுபட்டதா என்பது 2019 தேர்தலில் தெரியவரும்.