Published:Updated:

ராகுல் காந்தியின் தமிழக வருகை... வி.சி.கவை முந்திக்கொண்ட தி.மு.க!

ராகுல் காந்தியின் தமிழக வருகை... வி.சி.கவை முந்திக்கொண்ட தி.மு.க!
ராகுல் காந்தியின் தமிழக வருகை... வி.சி.கவை முந்திக்கொண்ட தி.மு.க!

ராகுல் காந்தியின் தமிழக வருகை... வி.சி.கவை முந்திக்கொண்ட தி.மு.க!

ந்திய ஒன்றியத்தில் மாநில சுயாட்சியின் அடையாளமாக அறியப்பட்ட திமுக, அதன் வரலாற்றுப் பொக்கிஷ முழக்கத்தை மீண்டும் ஒரு முறை தூசுதட்டி எடுக்கிறது; இந்த முறை, மத்தியில் ஆளும் பாஜகவின் ஒற்றைத்துவத்தை எதிர்த்து!

அடுத்த மாதம் 30-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள திமுக, அதில் பங்கேற்கவருமாறு அனைத்திந்தியக் கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும் அழைப்புவிடுத்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, திமுகவின் மூத்த எம்.பி.யான திருச்சி சிவா சந்தித்து, மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முறைப்படி அழைப்புவிடுத்தார். 

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டியைச் சந்தித்து அழைப்பைக் கொடுத்த திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியைச் சந்திக்கவுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரையும் அடுத்து சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

மாநாடு குறித்து கேட்டதற்கு, ``நாடு முழுவதும் மாநில சுயாட்சிக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. மத்தியில் இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கிவருகிறார்கள். ஆளுநர்களின் செயல்பாடுகள் மாநில உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாக இருக்கின்றன. திமுகவானது தொடக்கம் முதலே மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுத்துவரும் கட்சி என்பதால், இதையொட்டி ஒரு மாநாட்டை நடத்த கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளது. மாநாட்டின் நிகழ்வுகள் குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்து அறிவிக்கும்” என்று திருச்சி சிவா கூறினார். 

மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலங்களுக்கான பட்டியலில் உள்ள கல்வித் துறையில் தன்னிச்சையாக நீட் போன்ற பெரிய கொள்கைமாற்றங்களைக் கொண்டுவந்தது, மாநிலங்களின் தனித்தன்மையுடைய வரி வருவாய் அமைப்பைக் காலியாக்கும் புதிய ஒற்றைவரி முறையைச் செயல்படுத்தியது, மாநில போலீஸ் அமைப்பு இருக்கும்நிலையில் தேசியப் புலனாய்வு முகமையை அமைத்தது, அகில இந்திய வானொலியின் செய்திகளில் மாநில மொழிகளின் அளவைக் குறைத்தது - நீக்கியது, அனைத்திந்தியத் திட்டங்களின் பெயரை சம்ஸ்கிருதம், இந்தியில் பெயரிடுவது எனப் பல்வேறு முறைகளில், ஒற்றைமயம் ஆக்கும் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது என்பது மாநில உரிமைச் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. 

இப்படியான சூழலில் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் தேசப் பாதுகாப்பு மாநாடு நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. அதில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டார். அதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தமிழகத்துக்கான பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கையும் திருமாவளவன் கடந்த மாதம் 18-ம் தேதி சந்தித்துப் பேசினார்.

அப்போது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``அகில இந்திய அளவில் பாஜகவுக்கு மாற்றான ஓர் அணி அமைக்கப்படவேண்டும்; மூன்றாவது அணி முயற்சியானது பாஜகவுக்கு எதிரான சக்திகளின் பலத்தைச் சிதறடிக்கவே செய்யும் என்பதால், காங்கிரஸ் தலைமையில் பிற அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணையவேண்டும். இதையொட்டி, அகில இந்திய அளவில் ராகுல்காந்தியை விசிகவின் மாநாட்டுக்கு அழைத்துள்ளோம்” என்றார். 

கடந்த ஆண்டு செப்டம்பரிலும் விசிகவின் சார்பில், `மாநில உரிமைகள் பறிப்பைத் தடுப்போம்; மத்திய அதிகாரக் குவிப்பைத் தகர்ப்போம்’ எனும் முழக்கத்துடன், சென்னை ராயப்பேட்டையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, மதவாத சக்திகளுக்கு எதிராக `இந்திய தேசப் பாதுகாப்பு மாநாட்டை’ சென்ற மாதமே நடத்துவதென விசிக அறிவித்திருந்தது. ஆனால், ராகுல் காந்தியின் பங்கேற்பு வாய்ப்பையொட்டி அது தள்ளிப்போனது. செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மாநாட்டை நடத்தவுள்ளதாக டெல்லியில் தெரிவித்த திருமாவளவன், அதில் திமுக, இடதுசாரிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்கவுள்ளோம் என்றும் கூறினார். 

இந்நிலையில் திமுகவின் சார்பில் மாநில சுயாட்சி மாநாட்டு அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அகில இந்தியத் தலைவர்களை அழைக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்துக்குப் பயணம்செல்லவுள்ள நிலையில், இரு நாள்களுக்கு முன்பே காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் தொலைபேசியில் பேசி, மாநாட்டுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். 

திமுக மாநாட்டில் ராகுல் கலந்துகொள்வது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். அதையடுத்து விசிக மாநாட்டிலும் அவர் கலந்துகொள்கிறார் என்கின்றனர் விசிக தரப்பில். 

கூட்டணியில் பெரிய கட்சியான திமுகவானது, விசிகவை முந்திக்கொண்டாலும், ராகுலின் பங்கேற்பால் திமுக+காங்கிரஸ் கூட்டணியில் உற்சாகம் பீறிடத் தொடங்கியுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு