மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 32 - சித்தியா... சக்தியா?

சசிகலா ஜாதகம் - 32 - சித்தியா... சக்தியா?
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 32 - சித்தியா... சக்தியா?

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருடைய குடும்பத்தை விரட்டியடித்த மகிழ்ச்சி, சசிகலாவுக்குக் கொஞ்ச காலம்கூட நீடிக்கவில்லை. ஜெயலட்சுமி பெயரில் புதிய தலைவலி உருவெடுத்தது.

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் தங்கைதான் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவின் சித்தி. ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால், பல வருடங்களாகப் பேசாமல் இருந்தார் ஜெயலட்சுமி. பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த ஜெயலட்சுமி, ஜெயலலிதாவுடன் ரொம்ப நெருக்கம் காட்டாமல்தான் இருந்து வந்தார். தன் கணவரின் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை அப்போலோ வந்தார் ஜெயலட்சுமி. அந்த நேரத்தில்தான், ஜெயலலிதாவிடமிருந்து ஜெயக்குமார் குடும்பம் பிரிக்கப்பட்ட விஷயம் அவருக்கு வந்து சேர்ந்தது.

இந்த நிலையில்தான் பிணக்கு மறைந்து ஜெயலலிதாவும் ஜெயலட்சுமியும் இணைந்தனர். ‘‘முதலமைச்சர் என்ற உயர்ந்த நிலைக்கு நீ வந்திருப்பதைப் பார்க்க உன் அம்மா இல்லையே!’’ எனக் கதறியபடி ஜெயலலிதாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவும் நெகிழ்ந்து போனார். இந்தக் காட்சிக்குப் பிறகு உறவு பலமானது.

சசிகலா ஜாதகம் - 32 - சித்தியா... சக்தியா?

உறவுக்கும் நட்புக்கும் இடையே போராட்டம் தொடங்கியது. சசிகலாவின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது. ‘ஜெயலலிதாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ஜெயலட்சுமி எப்படி உறவைப் புதுப்பித்துக்கொண்டார்... எப்படி கார்டனுக்குள் கால் பதித்தார்?’ எனத் தோட்டத்துக்குள் செல்வாக்கு செலுத்திய சக்திகள், மண்டை குழம்பிப் போயிருந்தன. ‘பிரிந்து கிடக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தை, ஜெயலலிதாவுடன் திரும்பச் சேர்த்து வைக்கும் தூதராகத்தான் ஜெயலட்சுமி வந்திருக்கிறார்’ எனச் சந்தேகப்பட்டார் சசிகலா. உறவுகள் மலர்ந்தால், நட்பு இரண்டாம் பட்சமாகும்; காலப்போக்கில் நட்பு முறிக்கப்பட்டுவிடும். ‘சித்தி’யா, ‘சக்தி’யா... இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் எனச் சசிகலா களமிறங்கினார்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலமான 1991-96-ல் சென்னை தரமணியில் ‘ஜெயலலிதா திரைப்பட நகர்’ உருவாக்கப்பட்டது. ‘ஜெ ஜெ ஃபிலிம் சிட்டி’ என அழைக்கப்பட்ட இந்தத் திரைப்பட நகரத்தை 1994-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தபோது, அவர்களுடன் வயதான பெண்மணி ஒருவரும், தன் கணவருடன் வந்தார். அவர் வேறு யாருமல்ல, ஜெயலட்சுமிதான்! இப்படித்தான் ஜெயலலிதாவோடு நிகழ்ச்சிகளில் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பமும் பங்கேற்றது. அவர்களுக்குத் தரப்பட்ட மரியாதையைப் பார்த்து அந்தக் குடும்பத்தை விரட்டியடித்தார்கள். இப்போது சித்தி ஜெயலட்சுமி  மீண்டும் வந்திருக்கிறார். குழம்பிப் போனார் சசிகலா.

மாலையில் திரைப்பட நகர் திறப்பு விழா நடைபெற்றது, அன்றைய தினம் காலையில்தான் ஜெயக்குமார் மகன் தீபக்குக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் ஒன்றில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலட்சுமி போனார். முக்கியமானவர்கள் மட்டுமே பயன்படுத்தும் 7077 என்ற பதிவு எண் கொண்ட காரில், கார்டனிலிருந்து மண்டபத்துக்கு ஜெயலட்சுமி புறப்பட்டபோது, வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது சசிகலா குடும்பம். பூணூல் நிகழ்ச்சிக்கு ஜெயலலிதாவும் வருவார் என நினைத்தார் ஜெயலட்சுமி. ஆனால், வரவில்லை. பூணூல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார்டனுக்குத் திரும்பிய ஜெயலட்சுமி, ஜெயலலிதா வுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

‘‘தீபக்குக்கு நீ அத்தை. அவனுடைய பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார் அண்ணன். நான்கைந்து ஃபேக்ஸும் செய்திருக்கிறார். முதல்வராக உனக்கு நிறையப் பணிகள் இருக்கலாம். எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீ, ரத்த உறவான அண்ணன் வீட்டு விழாவில் தலையைக் காட்டிவிட்டு வந்திருக்கலாம்’’ என ஜெயலட்சுமி சொன்னபோது, ‘‘அப்படி எந்த அழைப்பிதழும் எனக்கு வரவில்லையே” என்று ஆச்சர்யத்தோடு சொன்னார் ஜெயலலிதா. அண்ணன் ஜெயக்குமார் அனுப்பிய அழைப்பிதழ் எதுவுமே ஜெயலலிதாவின் பார்வைக்குப் போய்ச்சேரவில்லை. பூணூல் நிகழ்ச்சிக்குச் சித்தி போய் வந்ததுகூட, அவர் திரும்பி வந்து சொன்னபோதுதான் ஜெயலலிதாவுக்கே தெரிந்தது. உடனே சசிகலாவை அழைத்துக் கேட்டபோது, ‘‘அப்படியா... எனக்கு எதுவுமே தெரியாதே’’ எனத் திகைத்தபடியே பதில் சொன்னார் சசிகலா. காரசார விவாதம், கண்ணீர்க் காட்சிகள் அரங்கேறின. நட்பை மீறி உறவை ஜெயலலிதா மதிக்க ஆரம்பித்தது, பலரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

இந்த உணர்ச்சிக் காட்சிகளுக்குப் பிறகுதான் ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவுக்கு ஜெயலலிதா போனார். விழாவில் ஜெயலலிதா கொஞ்சம் கடுகடு என இருந்தார். மொத்தத் திரையுலகமும்  திரண்டிருந்த அந்த விழாவில், விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த விருந்தில்கூடக் கலந்துகொள்ளாமல் முதல்வர் கிளம்பிப்போனார்.

அடுத்தடுத்து இன்னும் பல விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சித்தி கொண்டு போக, நட்பு வட்டாரத்தின் அதிகாரம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. சித்தி ஜெயலட்சுமி பெங்களூரு சென்றுவிட்ட பிறகும், ஜெயலலிதாவுடன் தொடர்பில்தான் இருந்தார். அப்படி இருந்தபோதுதான், தீபாவுக்கு நடந்த விபத்தும் அதை போலீஸ் பதிவுசெய்யாமல் போனதும் அவர் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வந்து சேர்ந்தது.

‘சித்தியின் ஆதிக்கம், அண்ணன் குடும்பத்தின் பாசம் ஆகியவற்றை முற்றிலும் துடைத்தெறிய என்ன செய்யலாம்’ எனச் சசிகலா யோசனை செய்து கொண்டிருந்தபோதுதான் உதித்தது அந்த ஐடியா!

(தொடரும்)