Published:Updated:

ஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்... மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

ஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்... மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?
ஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்... மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

முதல்வர் எடப்பாடிக்கு கல்தா... தமிழக அரசு சஸ்பெண்டு... ஊழல் அமைச்சர்கள் ஆறு பேருக்குச் சிக்கல்... ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்... இதெல்லாம் அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியலில் நடக்கப்போகிறது.

... இந்தப் பாயின்டுகளைப் படித்துவிட்டு, ஜூலை 9-ம் தேதியன்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை ஈஞ்சம்பாக்கம் மேடையில் பேசிய சில பாயின்டுகளுடன் ஒப்பீட்டுப் பாருங்கள்! `யானை வரும் பின்னே... மணி ஓசை வரும் முன்னே' என்பதுபோல, அமித் ஷா விசிட் வருவதற்கு முன்பே, வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்த ஆரம்பித்தார்கள். நாமக்கல் தொழில் அதிபர் குமாரசாமி தொடர்புடைய நிறுவனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பென் டிரைவ்களைப் பறிமுதல் செய்தனர். அதில், பல அமைச்சர்களின் மாமூல் விவரங்கள் சிக்கியுள்ளதாகப் பேச்சு உள்ளது. இந்த நிலையில், ஊழல் பற்றிய ஒரு ஷாக் டிரீட்மென்ட்டைக் கொடுத்துவிட்டுதான், விமானம் ஏறினார் அமித் ஷா.  

* இந்தியாவில் தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில், `ஓட்டுக்கு நோட்டு' என்ற நிலையை மாற்ற வேண்டும்.

* தமிழகத்தில், ஊழல் இல்லாத கட்சியுடன் பி.ஜே.பி. கூட்டணி வைப்போம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசவுள்ளோம். 

* தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி பேச்சு உள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச்சுக்குள் அது எங்கே இருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சி அமையப் பாடுபடுவோம்.

ஜெகத் ஷா விசிட் மர்மம்! 

அமித் ஷா உச்சரித்த வார்த்தைகளில் நிறைய அரசியல் சஸ்பென்ஸ் நிகழ்வுகள் புதைந்துகிடக்கின்றன. அமித் ஷா சென்னை வரும் முன், இரண்டு நாள் முன்பே அவரின் நெருங்கிய உறவினரும் பிரதமர் மோடியுடன் வலம் வரும் ஆலோசகர்களில் ஒருவருமான ஜெகத் ஷா சென்னை வந்துவிட்டார். அரசியலுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை என்று வெளியில் கூறிக்கொண்டாலும், முழுக்க முழுக்கத் தொழில் சார்ந்த அரசியலைத் தமிழகத்தில் செயல்படுத்தத்தான் அவர் வந்தார். இதே ஜெகத் ஷா... இதற்கு முன்பு, பிரதமர் மோடி விசிட் வந்தபோதும், இரண்டு நாள் முன்பே தமிழகம் வந்தார். மதுரை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு விசிட் போனார். குஜராத்தில் மோடி, முதல்வராக இருந்தபோது ஜெகத் ஷா-வின் ஆலோசனைப்படி பல்வேறு தொழில் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அகில உலக வர்த்தகம், முதலீட்டுத் தொழிட்நுட்பம் ஆகிவற்றில் நிபுணராக இருப்பவர் ஜெகத் ஷா. அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகள்... உள்ளிட்ட 50 நாடுகளில் வர்த்தகரீதியான தொடர்புகள் வைத்திருப்பவர் ஜெகத் ஷா. இவர் தமிழகம் வந்திருப்பது கட்சியின் முக்கியஸ்தர்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு சீக்ரெட்டாக ஆபரேஷன் நடத்திமுடித்துவிட்டு நகர்ந்துவிடுவார். இவரைப்போலவே, மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோவில் பணிபுரியும் பி.ஜே.பி. ஆதரவு அதிகாரிகள் சிலரும் தமிழகத்துக்கு விசிட் வந்துள்ளனர். 

அமித் ஷா-வை டென்ஷன் ஆக்கியது எது? 

பிரதமர் மோடி கடந்த முறை சென்னை வந்தபோது, `மோடியே... திரும்பிப்போ' என்று ட்விட்டரில் சர்வதேச அளவில் டிரண்டிங் ஆனது. அதேபோல், அமித் ஷா இந்த முறை வந்தபோது, அவருக்கு எதிராக ட்விட்டரில் பதிவாகி இந்திய அளவில் டிரண்டிங் ஆனது. இந்த அளவுக்கு இந்தியாவில் எந்த மாநில விசிட்டின்போதும் மோடிக்கோ, அமித் ஷா-வுக்கோ எதிர்ப்பு கிளம்பியதில்லை. இதற்குக் காரணம், என்ன என்று சென்னை வந்த அமித் ஷா இங்கிருக்கும் பி.ஜே.பி. தலைவர்கள் சிலரிடம் கேட்டபோது, ``வேறு ஒன்றுமில்லை. எடப்பாடி தலைமையிலான அரசுடன் கூட்டுவைத்திருப்பதைத் தமிழக மக்கள் ரசிக்கவில்லை. அதனால்தான், எதிர்ப்பை இப்படிக் காட்டுகிறார்கள்'' என்று சொல்ல... முகம் சிவந்ததாம். படிப்படியாக எதிர்ப்பைப் பதிவுசெய்ய நினைத்திருந்த அமித் ஷா, மேடையில் எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் ஊழல் பற்றிப் பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அவரின் இந்த அட்டாக் குறித்து எடப்பாடி தரப்பினர் மிரண்டுகிடக்கிறார்கள்.

எடப்பாடிக்கு கல்தா?

ஜூலை 8-ம் தேதியன்று கோவையில் டி.டி.வி.தினகரன் மேடையில் எடப்பாடி பழனிச்சாமியை அதிகம் தாக்கிப்பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்களைப் பற்றித்தான். இதைத்தான் பி.ஜே.பி-யினர் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். சமீபகாலமாக, குறிப்பிட்ட சில அமைச்சர்களைப் பற்றி விமர்சிக்கும் தினகரன், ஏன் எடப்பாடியைத் தாக்குவதில்லை? இருவரும் ஏதோ அரசியல் ஒப்பந்தத்தில் இருப்பதாகச் சந்தேகப்படுகின்றனர். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, சசிகலா அண்டு கோ-வை அறவே வெறுக்கிறார்கள். அவர்களுடன் ரகசியமாக எடப்பாடி ஒப்பந்தம் போட்டிருப்பாரோ என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அதனால், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு எப்படி வந்தாலும், எடப்பாடி ஆட்சி நடத்த முடியாது; ஆட்சி போகாது. முதல்வர் மாற்றம் உறுதி. யதேச்சையாக நடந்ததுபோல், அப்போது, எடப்பாடிக்கு கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளது பி.ஜே.பி. அரசு. `எடப்பாடி அரசு, செப்டம்பர் 20-ம் தேதியைத் தாண்டாது' என்று டெல்லியில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருத்துச் சொல்கிறார்கள். 

தமிழக அரசு சஸ்பெண்டு !

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம் விசாரித்தபோது, ``தமிழக மக்கள் மத்தியில் ஓ.பி.எஸ்ஸுக்குத் தனி இமேஜ் இருக்கிறது. அமைதியானவர். நிதானப்போக்கைக் கடைப்பிடிப்பவர். எடப்பாடியின் சசிகலா பாசத்துக்கு எதிரான கொள்கையுடையவர் ஓ.பி.எஸ். இதைத்தான் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு விரும்புகிறது. அவரை முன்னிறுத்தி தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடக்கத் திட்டமிட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழக அரசை சஸ்பெண்டு செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுப்பார். அந்தக் காலகட்டத்தில் குட்கா ஊழலில் சிக்கிய விஜயபாஸ்கர், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜி, முட்டை ஊழலில் சரோஜா, பருப்பு ஊழலில் காமராஜ், உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனிக்கும் வேலுமணி மற்றும் தங்கமணி... ஆகியோருக்கும் சிக்கல் வரும். அவர்களையும் நீக்கவேண்டிவரும். இதெல்லாம் கவர்னர் ஆட்சிக்காலத்தில் நடக்கும். அதையடுத்து, ஜனவரி 14-ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்த நாள் வருகிறது. அன்று அவருடைய பிறந்த நாள் பரிசாக, முதல்வர் பதவியில் உட்காரவைக்கப்படுவார். பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார். 

அவரிடம் நாம், ``தினகரன் என்ன ஆவார்'' என்றோம்.  அதற்கு அவர், ``தினகரனை பி.ஜே.பி. தலைவர்கள் நம்பவில்லை. அவருடன் இருப்பவர்களில் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓ.பி.எஸ்ஸை விட்டுப் பேசச் சொல்லி அமைச்சர் பதவி தர வாய்ப்புகள் உண்டு. அதுமாதிரி சூழ்நிலையில், தினகரன் கூடாரம் கலகலத்துவிடும். அவர் மீதுள்ள வழக்குகளைக் கவனிக்கவே நேரம் போதாதே'' என்றார். ஆக, தினகரன் மீதான வழக்குகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

பி.ஜே.பி-யின் திட்டம் பலிக்குமா? 

தமிழகத்தில் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு 24 சீட்டுகள், பி.ஜே.பி-க்கு 8 சீட்டுகள்... என்று முதல்கட்ட ஆலோசனையில் பேசி வைத்திருக்கிறாராம் அமித் ஷா. மீதி சீட்டுகளைக் கூட்டணியில் இடம்பெறுகிறவர்களுக்குத் தரலாம் என்று சொல்லியிருக்கிறாராம். அதன்படி, தென் சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் சேலம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தெடுத்து வைத்திருக்கிறது பி.ஜே.பி. இதைத்தவிர, தென்காசி போன்ற சில தொகுதிகளில் கடந்த தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்கியிருப்பதையும் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது ஜெயிக்கவேண்டும் என்று அமித் ஷா கணக்குப் போடுகிறார். அதற்குத் தகுந்தாற்போல, அரசியல் ரேஸில் இறங்கிவிட்டார். 

இதற்கிடையில், அமித் ஷா பேசியதைத் தவறாக மொழிபெயர்த்துவிட்டார் ஹெச்.ராசா. அவர், தமிழக அரசைப் பற்றி ஏதும் குற்றஞ்சாட்டவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்ததுபோல அமைச்சர் ஜெயக்குமார் கருத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், `லைவ்' ஆக டி.வி-யில் அமித் ஷா பேசியதைத் தமிழக மக்கள் பார்த்தனர். இந்த அளவுக்கு ஆன பிறகுகூட, அமித் ஷா கருத்துக்கு எதிராக எடப்பாடி அரசு பேச முடியாமல் தவிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

அடுத்த கட்டுரைக்கு