Published:Updated:

ஆர்.கே.நகர் கற்றுத்தரும் அறுவைசிகிச்சை!

ஆர்.கே.நகர் கற்றுத்தரும் அறுவைசிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே.நகர் கற்றுத்தரும் அறுவைசிகிச்சை!

ப.திருமாவேலன்

2,000 ரூபாய் நோட்டு இருக்கும் தைரியத்தில்தான், ‘இரட்டை இலை இல்லாவிட்டாலும் வெற்றிபெறுவோம்’ என டி.டி.வி.தினகரன் சொல்லியிருந்தார்போல. மோடி நடவடிக்கையால் முழு நன்மை அடைந்தது ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்தான்.

ஒரு ஓட்டுக்கு இரண்டு 2,000 ரூபாய் தாள்கள். அதாவது 4,000 ரூபாய். ஐந்து ஓட்டுகள் வைத்திருந்தால் 20,000 ரூபாய் நிச்சயம்.

பொதுவிநியோக அட்டையில் அரிசி, பருப்பு கிடைக்கின்றனவோ இல்லையோ, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் பணம் கிடைத்துவிடும். தேர்தல் ஆணையத்தால் வாக்காளனுக்குக் கிடைக்கும் ஒரே நன்மை இதுதான்.

`உசிலம்பட்டியில் பணம் வாங்கிவிட்டார்கள்', `ஆண்டிபட்டியில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள்' எனக் குற்றம்சாட்டி வந்த சென்னை மாநகரவாசிகள், 4,000 ரூபாய்க்கும், 2,000 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கும் அலைந்த அசிங்கத்தைத்தான் ஆர்.கே.நகரில் பார்க்கிறோமே. வாழ்நாள் எல்லாம் இந்தியத் தத்துவங்களில் மூழ்கிக்கிடந்து ஆராய்ச்சிசெய்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் அமைந்த நகர், நாட்டுக்கு அறிவிக்கிறது...

ஆர்.கே.நகர் கற்றுத்தரும் அறுவைசிகிச்சை!

இனி வெல்லும் தத்துவம் ஒன்றே ஒன்றுதான்... அது ‘பணம்’.

ஆரம்பக் காலத்தில் ஒரு வேட்பாளர் தனக்கு மிகவும் செல்வாக்குக் குறைந்த ‘வீக்’கான பகுதிக்கு மட்டும் பணம் கொடுக்கத் தொடங்கினார். ‘அவங்களுக்கு மட்டுமா, எங்களுக்குக் கிடையாதா?’ என மற்றவர்களும் எதிர்பார்த்தார்கள். பிறகு, அவர்களின் எதிர்பார்ப்பும் பூர்த்திசெய்யப்பட்டது. இந்தப் பணம், கட்சிக்காரர்கள் மூலம் தரப்பட்டது. அவர்கள் அதில் கொஞ்சம் பதுக்கவும் சுருட்டவும் ஆரம்பித்ததால், ‘நோட்’ விநியோகத்துக்கு ‘நோட்’ போடப்பட்டது.

பணம் யார் யாருக்கு எவ்வளவு தரப்பட்டது என கந்துவட்டிக்காரர்கள் எழுதிவைத்திருப்பது போல எழுத ஆரம்பித்தார்கள். கொடுத்துக் கொடுத்து ‘டிக்’ அடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு வீட்டுக்குக் கொடுத்து, இன்னொரு வீட்டுக்குக் கொடுக்காமல் போகமுடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, எல்லா வீடுகளுக்கும் வரிசையாகக் கொடுத்தார்கள். எல்லா பகுதிகளுக்கும் கொடுத்தாக வேண்டியதாயிற்று.

இது இப்படியே வளர்ந்து பூத் ஸ்லிப் போலவே எல்லோருக்கும் ‘ரிசர்வ் பேங்க் ஸ்லிப்’ தருவது கட்டாயம் ஆகிவிட்டது.

மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பவர்கள், ‘எங்களுக்குப் பணம் வேண்டாம்’ என ஆரம்பத்தில் சொன்னார்கள். இப்போது அவர்களும் பெரியமனது பண்ணி வாங்கிக்கொள்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்கு முன்பு பணம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது, ‘அக்கா... நீங்க யாருக்குன்னாலும் ஓட்டு போடுங்க. ஆனா, பணத்தை வாங்கிக்கங்க’ எனப் பங்குபிரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். நேர்மை சார்... நேர்மை!

இதில் தி.மு.க - அ.தி.மு.க வேறுபாடு இல்லை. ‘பணம் கொடுத்தால் ஓட்டு விழும்’ என உறுதியாக நம்புவதால் பணம் கொடுக்கிறார்கள். ‘உன்னிடம் பணம் இருக்கிறது... கொடு’ என வாக்காளன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். ஐந்தாண்டுகள் சம்பாதித்ததைப் பங்குபிரித்துக் கொடுக்கும் பணப் பருவகாலமாகத் தேர்தல் நேரம் மாறிவிட்டது.

ஆர்.கே.நகர் வாக்காளர்களில் 85 சதவிகிதம் பேருக்குப் பணம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனின் கஜானா வாகக் கருதப்படும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை நடத்திய திடீர் சோதனையில், ஒரு காகிதம் சிக்கியிருக்கிறது. அதன்படி 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தரப்பட்டிருக்க வேண்டும். 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 பேருக்கு, தலா 2,000 ரூபாய் தருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மாட்சிமைதாங்கிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மாறாப்பற்றும் உண்மையும் கொண்டிருப்பேன் என்றும்...’ எனப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பெருமக்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சரும் இந்நாள் எம்.பி-யுமான வைத்திலிங்கம் ஆகியோருக்கு வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு பணங்கள் பங்கிடப்பட்டதாக அந்த ஆவணம் சொல்கிறது.

முன்பெல்லாம் திருட்டுத்தனத்தை ரகசியமாகச் செய்வார்கள். இப்போது பட்டவர்த்தனமாகச் செய்கிறார்கள். முன்பு ‘கோட் வேர்டு’ பயன்படுத்து வார்கள். இப்போது இனிஷியலோடு, கே.ஏ.செங்கோட்டையன், கே.பழனிசாமி,

எஸ்.பி.வேலுமணி எனப் போடுகிறார்கள். இத்தனைக்கும் முத்தாய்ப்பாக இது தினகரனுக்கான ஏற்பாடு என அவர் பெயர் மேலே இருக்கிறது. பிள்ளையார்சுழி போடுவதைப்போல ஜெயலலிதா படம் மேலே இருக்கிறது. ‘அம்மா... உங்கள் ஆட்சியைக் காப்பாற்ற சிறப்பாகத்தான் செயல்படுகிறோம் அம்மா’ எனக் காட்டுகிறார்கள்; காட்டிக் கொடுக்கிறார்கள்.

‘இதுபோன்ற சோதனைக் காலத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும் என ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். எனவே, இந்தக் காலத்தை அம்மா கொடுத்த நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம். இது அம்மா கொடுத்த ரத்தம்’ என வருமானவரித் துறையின் 22 மணி நேரச் சோதனைக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதன் மூலமாக, ‘அம்மா பணம்’ என்பதை நேரடியாகவே சொல்கிறார்கள். புது பைக்கில், ‘Amma's gift’ என எழுதி யிருப்பதைப்போல!

ஆர்.கே.நகர் கற்றுத்தரும் அறுவைசிகிச்சை!

‘எனது வீட்டில் இருந்து பணமே கைப்பற்றப்பட வில்லை’ என்கிறார் விஜயபாஸ்கர். ‘இந்த ஆவணமே பொய். இதில் நம்பகத்தன்மை இல்லை’ என்கிறார் டி.டி.வி. தினகரன். ‘8-ம் தேதி காலையில் இந்தச் சோதனை நடந்துள்ளது. ஆனால், உண்மையில் 6-ம் தேதி இரவில் இந்தச் சோதனை நடந்திருக்க வேண்டும். நடந்திருந்தால் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட தற்கான ஆதாரம் மட்டும் அல்ல 89 கோடி ரூபாயும் மாட்டியிருக்கும்' என்கிறார் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 5, 6, 7 ஆகிய தேதிகளில்தான் பணவிநியோகம் நடந்துள்ளது. மொத்தமாகக் கொடுத்து முடித்த பிறகு இந்த ரெய்டு நடந்துள்ளது. பணத்தைக் கொடுத்து முடிக்கட்டும், பிறகு ரெய்டு நடத்துவோம், அதன் பிறகு, தேர்தலையை நிறுத்துவோம்... என மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம்.

வாக்காளர்களுக்குப் பணம் வந்துவிட்டது, தினகரனுக்குப் பணம் செலவாகிவிட்டது, தேர்தலும் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. ஆர்.கே.நகரில் வெல்லலாம்; தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்தவர் டி.டி.வி.தினகரன். அந்தக் கனவில் மண் விழுந்துவிட்டது. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பே வந்துவிடலாம். டி.டி.வி.தினகரனுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அவரது அரசியல் பதவி வாழ்க்கையே அஸ்தமனமாகிவிடும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘எட்டரை’ நடப்பதால், இனி எந்தச் சிக்கலும் இல்லை. இது அ.தி.மு.க-வின் அரசியல்.

ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வெட்கத்தால் தலைகுனியவேண்டிய தேர்தல் இது. தேர்தல் அரசியலை நம்புபவர்கள், `இது ஜனநாயக நாடு' எனப் பெருமைப்படுபவர்கள், இனி அப்படிச் சொல்லிக்கொள்ள எந்தத் தார்மீக நியாயமும் இல்லை. ‘கூட்டுச் சேர்... கொள்ளையடி... பங்கு பிரி...’ என்பதே இப்போது வேதமாகிவிட்டது. அதிகாரத்தில் மக்கள் பங்கு கேட்பதே அரசியலாக அமைய வேண்டும். கொள்ளையடித்ததில் பங்கு கேட்பது அரசியலாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் திரும்பத் திரும்பத் தேர்தல் நடத்துவதால் என்ன பயன்?

ஆர்.கே.நகரில் இப்படி ஓர் அசிங்கம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் டெல்லியில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கர்ஜித்துக்கொண்டிருந்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா பேசும்போது, ‘அதிகாரத்தை விலைகொடுத்து வாங்குவதற்குத் தேர்தல்களில் இடம்கொடுக்கக் கூடாது. அதேபோல் தேர்தலில் போட்டியிடுவதை முதலீடாக வேட்பாளர்கள் நினைக்கக் கூடாது. எந்தவிதக் குற்றச்சாட்டுகளுக்கும் இடம்கொடுக்காமல் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுக்கம், நன்னடத்தை நெறி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்' என்றார்.

அதிகாரம் விலைகொடுத்து வாங்கப்படுகிறது. தேர்தலில் நிற்பதை முதலீடாகவே வேட்பாளர் நினைக்கிறார். வேட்பாளரின் தகுதியை வாக்காளன் பார்ப்பதில்லை. வேட்பாளர் என்ன தருகிறார் என்றே பல வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு பக்கம் மட்டும் அல்ல ஜனநாயகத்தின் அனைத்துப் பக்கங்களும் அழுகிவிட்டன என்பதையே ஆர்.கே.நகர் காட்டுகிறது. சீர்திருத்தம் செய்து திருத்த முடியாது. அறுவைசிகிச்சையே தேவை.

மக்கள் கையில்தான் கத்தி தரப்பட வேண்டும்... அதாவது ‘நேர்மையான’ மக்கள் கையில்!