Published:Updated:

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!
News
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!

ச.ஸ்ரீராம்

மார்க் சக்கர்பெர்க் - உலக இளைஞர்களின் இதயங்களில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெயர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலான சமூகவலை தளங்களின் ஒரே முதலாளி. இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னன். அப்பேர்ப்பட்ட தலைவர், அடுத்து அரசியலுக்கும் வருகிறார்!

மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்., நாஞ்சில் சம்பத், சீமான் முதலானோர் அஞ்சத் தேவையில்லை. அமெரிக்க அரசியலில்தான் மார்க் ஆர்வமாக இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆனால், அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ட்ரம்ப்புக்கு பரவலாக எதிர்ப்பு அலையே இப்போதும் நிலவுகிறது. `இந்த பேட்பாய் ட்ரம்ப்பால் உலக அரங்கில் மானம்போகுது பாஸ்...' எனச் சமூக வலை தளங்களில் ஆளாளுக்குப் புலம்பித்தள்ள...

அமெரிக்காவின் கெத்துத் தலைவருக்கான தேடல் தொடங்க, முன்னணியில் இருப்பது மார்க். `என்னது... அந்தத் தம்ப்பியா?!' எனப் பேரைக் கேட்டதும் ஆளாளுக்கு அதிர்ர்ர்ர, அரசியல் ஆர்வலர்களோ, “ப்ரோ... தண்ணியைக் குடிங்க. இதெல்லாம் புதுசு இல்ல. மூணு வருஷங்களாவே மார்க் இதுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு்தான் இருக்கார்” என்கின்றனர்.

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!

மார்க்கின் கணக்கு

32 வயதான மார்க் சக்கர்பெர்க் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர். கல்லூரிக் காலத்தில் விளையாட்டாக மார்க்கும், அவர் நண்பரும் உருவாக்கிய ஃபேஸ்மேஷ்தான் பிற்காலத்தில் ஃபேஸ்புக்காக விஸ்வரூபம் எடுத்தது. சீனாவில் பிறந்த பிரிசில்லா சான் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் மார்க்.

`2014-ம் ஆண்டுதான் மார்க் தனது அரசியல் கனவுக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்க வேண்டும்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கூகுளில் தேடினால் எல்லாமே கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருந்த நெட்டிசன்களை, `ஃபேஸ்புக்கில் எல்லாமே இருக்கு’ என மாற்றி நினைக்கவைத்தார் மார்க். இதற்காகத்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்பட 54 நிறுவனங்களை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கினார். இவை எல்லாம் தனக்கு ஆதரவாகச் செயல்பட உதவுமோ இல்லையோ... எதிராகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அதைத் தன்வசமே வைத்திருப்பதுதான் சிறந்த ராஜதந்திரம் என்பது மார்க் போட்ட கணக்கு.

திட்டமிட்டுத் தாக்கு

அரசியல் ஆசை மட்டுமே வெற்றிக்கு உதவாது என்பதை மார்க் நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆனால், தடாலடியாக நுழைந்து பிரசாரத்தில் இறங்குவதைவிட தன்னார்வலனாகவும் அறிவுஜீவியாகவும் தொண்டுகள் செய்யும் ரட்சகனாகவும் தன்னை முதலில் பிராண்ட் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

2015-ம் ஆண்டின் தொடக்க நாள் அன்று, தனது அடுத்த கட்டத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தார் மார்க். `இயர் ஆஃப் புக்ஸ்' என்ற புத்தாண்டு உறுதிமொழியைக் கையில் எடுத்தவர், வாசிப்பில் ஆர்வமுள்ள மனிதர்களை ஒன்றிணைத்து, பிரமாண்டமான ஒரு குழுவை உருவாக்கினார்.  இது புத்திசாலித்தனமான தோற்றத்தை மட்டும் அல்ல, உலகில் எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விரும்பப் படுகின்றன என்ற `பிக் டேட்டா' அவரது வர்த்தகத்துக்கும் உதவியது.

2015-ம் ஆண்டு இறுதியில் மார்க் தந்தை ஆனார். ஒரு தந்தையாகத் தான் ஆற்றும் ஒவ்வொரு கடமையையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால், அதற்குப் பின்னாலும் விளம்பர உத்தி இருந்தது. நல்ல அரசியல்வாதிக்கான முதல் தகுதியே அதுதானே.

சான் - சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் முதல் மகளோடு பிறந்தது.

தன் குழந்தை பெயரில் உலகக் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றுக்குப் பெரிய உதவிகளைச் செய்தும் வருகிறார். எதிர்கால உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவது கல்வியும் ஆரோக்கியமும்தான் என மார்க் தொடர்ந்து பரப்புரை செய்கிறார். 

2016-ம் ஆண்டு மார்க்குக்குச் சுக்கிரன் உச்சத்தில் எனச் சொல்லலாம்.  கல்விக்கு `இயர் ஆஃப் புக்ஸ்'  என்றால், ஆரோக்கியத்துக்கு `இயர் ஆஃப் ரன்னிங்'கை கையில் எடுத்தார் மார்க்.

`ஒரு வருடத்தில் 365 மைல் ஓடுவேன்' எனச் சபதம் எடுத்து ஓடி முடித்தார். அவர் ஓடியது வெறும் அமெரிக்க வீதிகளில் மட்டும் அல்ல, உலகம் எங்கும் ஓடினார். இந்தியா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் எனத் தொழில்நுட்பரீதியாக வளர்ந்த நாடுகளில் மார்க் கால்கள் பதிந்தன. சிரியா போன்ற மக்கள் ஆதரவின்றித் தவிக்கும் நாடுகளிலும் ஓடினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மார்க்கின் பிம்பத்தை  ஓர் அக்கறையான நல்ல இளைஞனாகப் பதிவுசெய்தது. நல்ல மனிதனுடைய சொற்கள் எல்லாமே வேதங்கள் ஆகுமே... அதற்குப் பிறகு, மார்க் சொன்ன வார்த்தைகள் எல்லாம் வேதவாக்குகள் ஆகின.

திட்டமிட்டபடி அரசியல் கருத்துகளை உதிர்க்கக் காத்திருந்த மார்க், அந்தச் சூழலில்தான் முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை வெளிப்படையாக விமர்சித்தார்.

`அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு வேலை இல்லை' என ட்ரம்ப் அறிவிக்க, கொதித்து எழுந்தார் மார்க். சிலிக்கான் வேலியிலிருந்து எழுந்த முதல் குரல் அவருடையதுதான். தொடர்ந்து பல நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மார்க் சொன்னதையே திரும்பச் சொன்னார்கள். அதுவரை நல்ல இளைஞனாக இருந்த மார்க்... கோபக்கார இளைஞனாகப் பரிணமித்தார். அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் மார்க்கை அரியணையில் ஏற்றிப்பார்க்கிற ஆசையைத் தூண்டியது அந்தக் கோபம்தான்.

கனெக்ட்டும் மார்க்கும்

உலகத் தலைவர்கள் பலரின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒற்றை வார்த்தைக்குப் பெரிய இடம் இருக்கும். ஒபாமாவுக்கு `ஹோப்’, மோடிக்கு `அச்சே தின்' அப்துல் கலாமுக்கு  `கனவு காணுங்கள்' என நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மார்க்கும் இந்த வித்தையை அறிந்தே இருந்தார். இதற்காக அவர் டிக் அடித்த சொல் `கனெக்ட்'.

அதன் பின் என்ன பேசினாலும் எழுதினாலும், செய்தாலும் `கனெக்ட்' என்ற விஷயத்தோடு மார்க் தன்னை கனெக்ட் செய்துகொள்கிறார்.

மனிதர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். தங்களின் உணர்ச்சிகளை இந்த உலகுக்கு தெரிவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்கு மார்க், தனது ஃபேஸ்புக்கில் தளம் அமைத்துத் தந்தார். சிரியாவுக்காகக் கண்ணீர் சிந்துவது, ட்ரம்ப் மீதான கோபத்தை வெளிக்காட்டுவது என நெட்டிசன்களுக்கு எமொஜிக்களால் ஒரு பாதையை ஃபேஸ்புக்கில் போட்டுத் தந்தார் மார்க். கூடவே தேவையான விஷயங்களைப் பற்றி அவரது கருத்துகளை ஸ்டேட்டஸ்ஸாகப் போட்டு, அது உலகின் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் வால்களில் முதன்மை யானதாகக் காட்டினார். மார்க்கின் கருத்துகளை உலகம் படித்தே ஆக வேண்டியிருக்கிறது.

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி?!

அமெரிக்காவில் `நமக்கு நாமே'

2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு அமெரிக்க மாகாணமாகத் தேடித்தேடிப் போகிறார் மார்க். மக்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்துக் கேட்கிறார்; உதவுகிறார். தங்கள் நாட்டு அதிபர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அவற்றை எல்லாம் லிஸ்ட் போட்டுச் செய்துவருகிறார்.

ஃபேஸ்புக்கில் டவுன்ஹால் எனப் புதிய வசதியை உருவாக்கித் தந்திருக்கிறார். அது, மக்கள் தங்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாட உதவுகிறது. அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை மக்கள் உடனடியாக, அந்த அரசியல்வாதியின் பார்வைக்கே கொண்டு செல்லும் வேலையை டவுன்ஹால் செய்கிறது. தன்னை மட்டுமின்றி, தனது ஃபேஸ்புக்கையும் இப்படி அரசியல் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.

ஒருபக்கம் மார்க்குக்கு அமெரிக்கா முழுக்க ஆதரவு பெருகினாலும், அவர் ஒரு முதலாளி; வியாபாரி. மீண்டும் அப்படி ஒருவர் நமக்கு வேண்டாம் என்ற குரல்களும் சேர்ந்தே ஒலிக்கின்றன.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமானால், 35 வயது நிரம்பி யிருக்க வேண்டும். வயதுக்கான தகுதியைத்தொட மார்க்குக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. அரசை விமர்சிக்க அவர் கையில் இன்னமும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் அவர் மக்களுடன் இன்னும் அதிகம் நெருங்கலாம். ட்ரம்ப் மீது உள்ள வெறுப்பும், மார்க் செய்யும் அக்கறையான விஷயங்களும் மக்களை அவர் பக்கம் திரும்ப வைக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் 2020-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் மார்க்குக்குப் புதிய கதவுகளைத் திறக்கும். ட்ரம்ப்பை எதிர்க்கிறார் என்பதால், குடியரசுக் கட்சியின் ஆதரவு மார்க்குக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மார்க்கை அதிபர் வேட்பாளராகக் களம் இறக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், அந்த அதிபர் களத்தில் மார்க் நிச்சயம் இருப்பார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.