Published:Updated:

எக்கனாமி பயணம், `கட்டிப்பிடி' வைத்தியம்... கலக்கும் குரோஷியா அதிபர் கொலிண்டா

எக்கனாமி பயணம், `கட்டிப்பிடி' வைத்தியம்... கலக்கும் குரோஷியா அதிபர் கொலிண்டா
எக்கனாமி பயணம், `கட்டிப்பிடி' வைத்தியம்... கலக்கும் குரோஷியா அதிபர் கொலிண்டா

சமானிய மக்களுடன் பயணித்து அவர்களுடனே போட்டியை ரசித்து உலகக் கோப்பை மைதானத்தில் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் குரோஷி நாட்டின் பெண் அதிபர்.

குட்டி நாடு குரோஷியா,1998-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மாஸ்கோவில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் குரோஷியா மோதுகிறது. கால் இறுதியில் குரோஷிய அணி, தொடரை நடத்தும் ரஷ்ய அணியுடன் மோதியது. சோச்சி நகரில் நடந்த இந்த ஆட்டத்தைக் காண, குரோஷிய அதிபர் கொலிண்டா கிராஃபர் கிரடோவிக் வந்திருந்தார். நாட்டுக்கே அதிபதியானாலும் கொலிண்டா எளிமையான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவர். மக்கள் பணத்தில் உல்லாசச் சுற்றுப்பயணங்களை விரும்பாதவர். வி.ஐ.பி கல்ச்சர், கொலிண்டாவுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஒன்று. 

உலகக் கோப்பையைக் காண குரோஷிய தலைநகர் ஸக்ரப்பிலிருந்து சோச்சிக்கு தனி விமானத்தில் எல்லாம் கொலிண்டா பறக்கவில்லை. சாமானிய மக்களுடன் சமானியாக அதுவும் `எக்கனாமி க்ளாஸ்' இருக்கையில் அமர்ந்துதான் ரஷ்யாவுக்குப் பயணித்தார். லஸ்கினி அரங்கில் வி.ஐ.பி இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் சில நிமிடம் தன் நாட்டு ரசிகர்களுடன் சாதாரண கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார் கொலிண்டா. இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டரில் வேண்டுமானால் `ஒவ்வோர் இந்தியரும் வி.ஐ.பி-தான்' என்று பதிவிடுவார். உண்மையில் வி.ஐ.பி கல்ச்சரைக் கொண்டாடி அனுபவிப்பார். 

மோடிக்கு முற்றிலும் எதிரானவர் கொலிண்டா. சோச்சி மைதானத்தில் தன் நாட்டு ரசிகர்களுடன் அமர்ந்தே போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஃபிஃபா அதிகாரிகள்தான் அவரை வற்புறுத்தி வி.ஐ.பி-கள் அமரும் இடத்துக்கு அழைத்துவந்தனர். ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ, ரஷ்யப் பிரதமர் டிமித்ரே மெட்வெடவ் ஆகியோருடன் போட்டியை ரசித்தார் கொலிண்டா. ரஷ்யாவுக்கு எதிராக குரோஷியா இரண்டாவது கோலை அடித்ததும் உற்சாகப்பெருக்கில் சிறிய நடனமும் ஆடி அசத்தினார் கொலிண்டா. குரோஷிய அதிபரின் அழகு நிறைந்த இந்தச் சாமானிய முகம், உலக மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை கொலிண்டா பற்றி அறிந்துகொள்ளதவர்கள்கூட அவரை இணையத்தில் அதிகமாகத் தேடிவருகின்றனர். 

ரஷ்ய அணியை குரோஷியா வீழ்த்தியதும் வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்ற கொலிண்டா ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் அனைத்து வீரர்களையும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் குரோஷிய அதிபரின் `கட்டிப்பிடி' வைத்தியம் பலிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், உலகின் கவர்ச்சியான பெண் அதிபர் யார் என்றால், கொலிண்டாவை நோக்கி தாராளமாகக் கைக் காட்டலாம்.

தற்போது 46 வயதான கொலிண்டா, 2015-ம் ஆண்டு குரோஷிய அதிபர் ஆனார். குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபரும்கூட. எளிமையான பின்னணியிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த கொலிண்டா, மிகச்சிறந்த படிப்பாளி. ஹார்வேர்டு பல்கலையில் படித்தவரும்கூட. 2003-ம் ஆண்டு குரோஷிய அமைச்சராகப் பதவியேற்ற கொலிண்டா, படிப்படியாக உயர்ந்தார். கணவரின் பெயர் ஜகோவிக் கிடரோவிக். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இதுவரை 8 நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, உருகுவே, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் வரிசையில் குரோஷியா இணையுமா எனத் தெரியவில்லை. ஒருவேளை, உலகக் கோப்பையை வென்ற 9-வது நாடு என்ற பெருமையைக் குரோஷியா பெறலாம். சென்னையில் பாதிதான் இந்த நாட்டு மக்கள்தொகை!

அடுத்த கட்டுரைக்கு