Published:Updated:

`தமிழ்நாட்டில் ஊழல் அதிகம்..!’ யாரைக் குறிவைக்கிறார் அமித் ஷா?

`தமிழ்நாட்டில் ஊழல் அதிகம்..!’ யாரைக் குறிவைக்கிறார் அமித் ஷா?
`தமிழ்நாட்டில் ஊழல் அதிகம்..!’ யாரைக் குறிவைக்கிறார் அமித் ஷா?

``தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது'' என்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருப்பது, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் முன் தயாரிப்பு வேலைகளில் பி.ஜே.பி ஈடுபட்டுள்ளது. `பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம்' வரை பி.ஜே.பி ஆட்சி என்பதை கொள்கை முழக்கமாக முன்வைத்து தேர்தல் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டாக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வி.ஜி.பி தங்க கடற்கரையில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள், பூத் அளவில் அமைக்கப்பட்டுள்ள சக்தி கேந்திரா, மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுடன் அமித் ஷா அலோசனை நடத்தினார். திறந்த வெளிக் கூட்டத்தில் பேசவந்த அவருக்கு, தில்லை நடராஜர் சிலையைத் தமிழக பி.ஜே.பி சார்பில் நினைவுப் பரிசாக மாநிலப் பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை வழங்கினார்.

கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ``பி.ஜே.பி எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழலுக்கு முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பற்றி நினைக்கும்போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கிருக்கிறது. அந்த உறுதியை நாம் ஏற்க வேண்டும். தாலுக்காவாகவோ சட்டமன்றத் தொகுதியாகவோ மாவட்டமாகவோ இருக்கட்டும். எல்லா இடங்களிலும் ஊழலை நாம் வெளியேற்றும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தமிழகத்தில் நம்முடைய நிர்வாகிகள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் போராட வேண்டும்'' என்று முழங்கினார்.

இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம்...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு கழகப் பேச்சாளர் ஏ.பி.முருகானந்தம், ``சென்னைக்கு வருகை தந்த பி.ஜே.பி-யின் தலைவர் அமித் ஷா, `இந்தியாவில் தமிழ்நாடுதான் ஊழல் செய்வதில் முதன்மை மாநிலமாக உள்ளது' என்று பேசியுள்ளார். இது முற்றிலும் 100 சதவிகிதம் உண்மை. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்தில் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, `குட்கா ஊழல், பருப்பு ஊழல், முட்டை ஊழல், பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் நியமன ஊழல், சாலைப் பணியில் ஊழல், நிலக்கரி கொள்முதலில் ஊழல்...' எனப் பட்டியல் போட்டால் முதல்வர் முதல் மூத்த ஆட்சிப் பணி அதிகாரிகள் வரை சிக்குவார்கள். சேகர் ரெட்டி டைரியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வி.வி.ஐ-பி-க்களின் பெயர்கள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக எடப்பாடி அரசு உள்ளது. அமித் ஷா சென்னை வந்தபோதுகூட, தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முட்டை வழங்கும் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடந்தது. அமெரிக்க டாலர்கள், வங்கியில் கணக்கில் வராத 250 கோடி ரூபாய் என்று அந்த ரெய்டில் ஏராளமானவை சிக்கியுள்ளன. இதெல்லாம் மறைக்கப்பட்டு வந்த நிலையில், அமித் ஷா வெளிப்படையாகச் சொல்லியிருப்பது, ஓர் எச்சரிக்கையாகவே பார்க்கிறோம். இதற்குரிய நடவடிக்கையை உரிய இலாக்கா எடுக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் ஊழல் ஒழிப்பு பற்றி பி.ஜே.பி பேசுவதை மக்கள் நம்புவார்கள்'' என்றார்.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ``தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்க்க இந்தக் கூட்டத்தை அமித் ஷா கூட்டினார். அவர் அரசியல் பேசி இருக்கிறார். அது, அவருடைய கட்சி விருப்பம். அதில் தவறில்லை. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வலுப்படுத்த கூட்டம் போடுவார்கள். அதைப்போலத்தான் அமித் ஷா கூட்டத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பது பற்றிப் பேசினார். தமிழக அரசை அவர் குறை சொல்லவில்லை. மேலும், அந்தக் கூட்டத்தில் அமித் ஷா, `மைக்ரோ இர்ரிகேஷன்' என்று ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தையை மொழிபெயர்த்த அக்கட்சியைச் சேர்ந்த ஹெச்.ராஜா, `நுண்ணுயிர்ப் பாசனம்' என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, `சிறுநீர்ப் பாசனம்' என்று தவறுதலாக மொழிபெயர்த்துச் சொன்னார். அதுபோல, அமித் ஷா தமிழகத்தைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னதை எல்லாம் ஹெச்.ராஜா தவறுதலாக மொழிபெயர்த்து கூறியுள்ளார்'' என்று பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ``ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பதே பி.ஜே.பி-தான். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை போட்ட அவலமெல்லாம் தமிழகத்தில்தான் அரங்கேறியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழக அரசுக்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவலை மத்திய ரிசர்வ் வங்கி மூடி மறைத்தது. இதுபோல பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பலருக்குப் புறவழியாக உதவியது. தமிழகத்தில் ஊழல் என்று அவர் சொல்வது உண்மைதான். அப்படிச் சொல்வதால் மட்டும் அவர்கள் நல்லவர்களாகிவிட மாட்டார்கள்'' என்றார் மிகத் தெளிவாக.

`ஊழல்' என்று குரல் கொடுப்பவர்கள், ஊழலை எப்போது ஒழிப்பார்கள்?