பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?


 இப்போதைக்கு  இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டால் சிரிக்க மாட்டார்களா? தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இணக்கமான ஒரு தலைவரைத்தான் காங்கிரஸ் இப்போதைக்கு வைத்திருக்கும். அதற்குச் சரியான ஆள் திருநாவுக்கரசர்தான். சிதம்பரம் இறங்கிவந்து அரசியல் செய்ய மாட்டார். அவரைவிடச் சின்னவர்களோடு (உதாரணத்துக்கு ஸ்டாலினு டன்கூட!) அரசியல் செய்ய மாட்டார் சிதம்பரம். அதனால் தலைமை மாற்றம் இப்போதைக்கு இருக்காது.

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வைகோ கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன?


தி.மு.க-வுக்கு எதிராக எதையாவது செய்துகொண்டு இருக்க வேண்டும். மற்றபடி வேறு என்னவாக இருக்கும்?

கழுகார் பதில்கள்

தீ.அசோகன், திருவொற்றியூர்.

‘விவசாயிகளின் தற்கொலைக்குத் தமிழக அரசே காரணம்’ என்று பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சொல்லி இருக்கிறாரே?


ஆந்திராவில், குஜராத்தில், மகாராஷ்டிராவில் விவசாயி தற்கொலை செய்துகொண்டாலும் தமிழக அரசுதான் காரணமா? எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு உண்மையான தீர்வு என்ன, எதன் மூலமாக அதைத் தடுக்க முடியும் என்று யோசிக்காமல், எல்லாவற்றுக்கும் அரசியல் காரணமே சொல்லிக்கொண்டிருக்கும் அபத்தம் தொடரும் வரை, விவசாயிகளின் பிரச்னையை மட்டுமல்ல... எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது.

கழுகார் பதில்கள்

பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகளைத் ‘தேசத்துரோகிகள்’ என்று குற்றம்சாட்டுகிறார் ராஜா. ஆட்சியை எதிர்த்தாலே தேசத்துரோகி என்றால் எந்த ஆட்சியையும் யாரும் எதிர்க்க முடியாது.

‘நாட்டுக்கு ஒரு ராஜா போதும்’ என்பார்கள். தமிழக பி.ஜே.பி வளராமல் பார்த்துக்கொள்ளவும் இந்த ஒரு ராஜா போதும்!

கழுகார் பதில்கள்

எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

‘தமிழகத்தில் மறதி தேசிய வியாதியாக இருக்கிறது’ என்று கமல் கொந்தளித்துள்ளது குறித்து?


ஆமாம்! அதுவே மறந்து போய்விட்டது. மறதி இல்லாவிட்டால், சசிகலா குடும்பத்துக்குக் கடைசி வரை அடிமைச் சேவகம் செய்துவிட்டு பன்னீர்செல்வம், ‘உத்தமபுத்திரனாக’ பேச முடியுமா? அவர்கள் குடும்பத்தின் அத்தனை கிளைகளுக்கும் மிகச் சரியாகக் கப்பம் கட்டியவர் அவர்தான். சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும், அவர் காலில் விழுந்தபோது பன்னீர்செல்வம் முதலமைச்சர். அதனாலோ என்னவோ அதை தடுக்க முயற்சி செய்தார் சசிகலா. இந்தக் கேவலம் எல்லாம் மறக்கப்பட்டு விட்டது. இதுபோன்று ஒவ்வொரு தலைவருக்கும் சொல்லலாம்.

மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் முதலீடு.

கழுகார் பதில்கள்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழகக் காட்டு யானைகள் உணவு, நீரின்றி பரிதாபமாக இறக்கும் நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி என்ன?


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே... என எல்லா உயிரினங்களும் வாழத்தகுதி இல்லாத இடமாக தமிழகம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதைத்தான் யானைகள் இறப்பும், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதும் காட்டுகிறது. ‘காக்கைக்குக்கூட ஒரு பருக்கை இல்லாததுதான் வறுமையின் உச்சம்’ என்பார் திரு.வி.க. அனைத்து உயிரினங்களும் ஒரு சொட்டுத் தண்ணீருக்காகப் பல மைல் தூரம் நடக்க, பறக்க ஆரம்பித்துவிட்டன.

நிலத்திலும், மனித மனத்திலும் தண்ணீர் வற்றிப் போய்விட்ட காலத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், சென்னை-110.

அரசியலுக்கு ரஜினி வர வேண்டிய நேரம் இதுதான் என்று அவருடைய ரசிகர்கள் நினைக்கிறார்களே?


ரசிகர்கள் அவர்களது ஆசையைச் சொல்கிறார்கள். ரசிகர்களுக்கும் வயது ஆகிக்கொண்டு இருக்கிறது அல்லவா?!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

எந்த முன்னணி நடிகரும் பி.ஜே.பி-யைக் காப்பாற்ற வராத பட்சத்தில் தமிழகத்தில் காலூன்ற என்ன வியூகம் வகுப்பார்கள்?


எப்படியாவது யாராவது ஒரு முன்னணி நடிகரைக் கட்டாயப்படுத்தியாவது அழைத்துவருவதுதான் பி.ஜே.பி-க்கு தெரிந்த ஒரே வியூகம். காத்திருந்து பாருங்கள்!

கழுகார் பதில்கள்

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

‘தி.மு.க-தான் எங்களின் பிரதான எதிரி’ என்று ஜெ.தீபாவும் சொல்கிறாரே?


யானையின் காதை ஒரு எறும்பு கடித்துவிட்டது. அதே சமயம், மரத்திலிருந்து யானையின் தலையில் ஒரு தேங்காயும் விழுந்தது. யானை ‘ஆ’ என்று கத்தியது. எறும்பு, ‘வலிக்கிறதா?’ என்று கேட்டது.

கழுகார் பதில்கள்

‘‘ஆளும்கட்சி மீதான கோபங்களைப் பணம் தடுக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் தேர்தல் நடைமுறைகள் இல்லையே?”

தன்கையில் இருக்கும் வாக்குச் சீட்டின் மகிமையை உணராதவர்களாக மக்கள் இருக்கும்போது என்ன செய்ய முடியும்?

இந்தியர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று விவாதம் வந்தபோது, ‘அவர்களுக்கு இந்த வாக்குச்சீட்டின் அருமை தெரியுமா?’ என்று பிரிட்டிஷ் பிரபுக்கள் சபையில் கேட்டதாகச் சொல்வார்கள். அத்தகைய அருமை தெரியாதவர்களாக இன்னும் மக்கள் இருப்பதால்தான் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடிகிறது.

இதனை தேர்தல் கமிஷன்  தடுக்க வேண்டும். தேர்தல் தேதியை அறிவிப்பதும் யார் வெற்றி பெற்றார் எனச் சொல்வதும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை என்று நினைக்கிறார்கள். தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும், வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களிக்க வேண்டும். இவை இரண்டையும் உறுதி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. அதை தேர்தல் ஆணையம் கறாராக எப்போது கடைப்பிடிக்கிறதோ அப்போதுதான் நியாயமான தேர்தல் சாத்தியம்.
நம்முடைய தேர்தல் முறையே, பண மயமானதாக இருக்கிறது. அதனை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்துத் தடுத்தாக வேண்டும்.

படங்கள்: ரா.ராம்குமார்,  வி.ஸ்ரீனிவாசுலு

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு