Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்
மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

பிரீமியம் ஸ்டோரி

‘‘வருமானவரித் துறை ரெய்டுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடக்க ஆரம்பித்திருக்கும் களேபரங்களு டன் வரவும்” என்று கழுகாருக்கு மெசேஜ் அனுப்பினோம். அடுத்த சில நிமிடங்களில் கழுகார் வந்துவிட்டார்.

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மையம் கொண்டுதான் அ.தி.மு.க அரசியல் நடக்கிறது. அவருக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் எதிராக ஒரு கோஷ்டியும் கிளம்பி இருக்கிறது. இந்தச் சூழ்நிலை,  அ.தி.மு.க-வின் அடுத்த பிளவுக்குக்கூட அடித்தளம் அமைக்கலாம்’’ என்றார்.

‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டோம்.

‘‘சசிகலா முதல்வர் ஆக வசதியாக ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவிவிலக முதலில் சொன்னதே விஜயபாஸ்கர் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திவாகரன் உத்தரவுப்படி ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை முன்னிலைப்படுத்தப் பேசி வந்தவர் அவர்தான். ஒரு காலத்தில் பன்னீர்செல்வத்தின் சிஷ்யர் அவர். பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர். ஆனாலும், சசிகலா குடும்பம் விரும்பிய விஷயங்களைச் சரியாகச் செய்துகொடுத்தவர் விஜயபாஸ்கர். அதனால், விஜயபாஸ்கரை வைத்துக் காய்களை நகர்த்தினார் சசிகலா. இதனை பன்னீர் விரும்பவில்லை. மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, அனைத்து விதமான தொடர்புகளையும் செய்தவர் விஜயபாஸ்கர்தான். முதல்வரின் துறைகளைக் கவனிக்கும் முக்கிய அமைச்சராகப் பன்னீர் இருந்தபோதும், அப்போதே அவர் இந்த மையத்தில் இருந்து தூர ஒதுக்கப்பட்டார். இதுவும் பன்னீரை எரிச்சல் அடையவைத்தது. இந்தச் சூழ்நிலையில், பன்னீர் பிரிந்தார். கூவாத்தூரில் வைத்து எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாத்தவர், விஜயபாஸ்கர். அப்போது முதல்வராக இருந்த பன்னீரின் உத்தரவுப்படி போலீஸ் உள்ளே நுழைந்தபோது, கடுமையாக எதிர்த்தவரும் விஜயபாஸ்கர்தான். பணப்பட்டுவாடா ஆரம்பித்து பாதுகாப்பு வரை விஜயபாஸ்கரின் ஆட்கள் அனைத்தையும் செய்தார்கள். அதாவது, ஆட்சியைக் காப்பாற்றியதே விஜய பாஸ்கர்தான் என்று பன்னீர் நினைக்கிறார்.”

‘‘உண்மைதான்.”

‘‘அதனால்தான் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து காய்ச்சி எடுத்தார் பன்னீர். ‘ஜெயலலிதாவின் மரணம் பற்றி விஜயபாஸ்கருக்குத்தான் தெரியும்’, ‘மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைத்தால் விஜயபாஸ்கரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்’ என்றார். ‘ஆல்ரவுண்டர்’ என்றும், ‘ஆல் இன் ஆல்’ என்றும் விஜயபாஸ்கருக்குப் பட்டம் கொடுத்தார் பன்னீர். இந்தச் சூழ்நிலையில், விஜயபாஸ்கரைத் தட்டிவைக்க பன்னீர் ஆட்கள் தொடர்ந்து, தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் போட்டுக்கொடுத்து வந்தார்கள். அதன் விளைவாகத்தான் விஜயபாஸ்கர் சிக்கினார். இது, கடந்த வார நிலவரம். ஆனால், இப்போது அ.தி.மு.க அம்மா கட்சியில் பல மோதல்கள் விஜயபாஸ்கரை அடித்தளமாக வைத்து நடக்க ஆரம்பித்து உள்ளன.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

‘‘அது என்ன?”

‘‘தினகரன் முதல்வரானால் விஜயபாஸ்கரும் உடுமலை ராதாகிருஷ்ணனும் துணை முதல்வர்கள் ஆகலாம் என்று ஒரு வதந்தியை யார் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. அ.தி.மு.க அதிகார மையத்தில், இந்த இரண்டு தலைகளுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி... உள்ளிட்டவர்கள் அந்த இருவருக்கும் எதிராகக் காய்நகர்த்தி வருகிறார்கள். வருமான வரித் துறை ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறதாம். ஆனால், அதற்கு தினகரன் சம்மதிக்கவில்லையாம். ‘தினகரனுக்கு இப்போது வலதுகரமாக இருப்பதே விஜயபாஸ்கர்தான். அவரை நீக்க தினகரன் சம்மதிக்க மாட்டார். எனவே விஜயபாஸ்கர் விஷயத்தில் கேபினெட்டுக்குள் மோதல் தொடங்கும்’ என்று சொல்கிறார்கள்.’’

‘‘அப்படியானால் அ.தி.மு.க-வுக்கு இப்போதைய சூழ்நிலையில் வில்லன் விஜயபாஸ்கர்தானா?”

‘‘ஆமாம். கடந்த 12-ம் தேதி அன்று, தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சர்களை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதிக்காக யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று ஓர் ஆவணம் ரிலீஸ் ஆனது அல்லவா? அந்தப் பட்டியலில் இருந்தவர்கள்தான் அந்த மீட்டிங்கில் கலந்துகொண்டார்களாம். விஜயபாஸ்கரும் இருந்தார். விரைவில் வருமானவரித் துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகச் சொல்லி அழைப்பு வரலாம். அப்போது, அங்கே என்ன பேசவேண்டும், எப்படி பேச வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டதாம்.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

‘‘ஓஹோ!”

‘‘பெரும்பாலான அமைச்சர்களுக்கு மத்திய அரசுடனும், பி.ஜே.பி மேலிடத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில் உடன்பாடு இல்லையாம். மத்திய அரசின் திட்டங்களுக்கு நாம் அனுசரணையாகப் போகவேண்டும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாகவும் இருக்கிறதாம். ஆனால், தினகரன் கோஷ்டியினர், பி.ஜே.பி-யை எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பி.ஜே.பி தங்களைப் பழிவாங்குவதாக நினைக்கிறார்கள். இதனை எடப்பாடி உள்ளிட்ட கொங்கு கோஷ்டியினர் விரும்பவில்லையாம்.

‘நடராசனும் திவாகரனும் தேவையில்லாமல் பேசித் தூண்டிவிட்டார்கள். அதனால்தான் பி.ஜே.பி  இந்த அளவுக்குக் கோபம் ஆனது’ என்று நினைக்கிறார்களாம் இவர்கள். இப்போது நடராசன், திவாகரன் போன்றவர்களுக்கும் தினகரனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், தினகரனின் பல்வேறு முடிவுகளுக்கு விஜயபாஸ்கர்தான் பின்னணியாக இருக்கிறார் என்று இந்த கொங்கு கோஷ்டி நினைக்கிறது. அதனால், எப்படியாவது விஜயபாஸ்கரை நகர்த்த நினைக்கிறது. இதுவே தினகரன் - எடப்பாடி மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமையப் போகிறது என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

‘‘விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது அவ்வளவு சாதாரணமான விஷயமா?”

“இல்லை! இந்தத் தகவல் விஜயபாஸ்கருக்குப் போனதும் கொந்தளித்துவிட்டாராம். ‘என்னைப் பதவி விலகச் சொல்வதற்கு இவர்கள் யார்? இது என்னுடைய ஆட்சி. நான்தான் இந்த ஆட்சியைக் காப்பாற்றி வைத்துள்ளேன். கூவாத்தூரில்             எம்.எல்.ஏ-க்களை வைத்துக் காப்பாற்றியது நான்தான். எனக்கு ஏதாவது நடந்தால் என் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சும்மா இருக்க மாட்டார்கள். 16 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றாராம் விஜயபாஸ்கர். அதாவது ‘ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன்’ என்ற ரீதியில் போனதாம் அவரது மிரட்டல்கள். இதற்கு இடையில் மத்திய அரசும் தன்னுடைய அஸ்திரத்தை அனுப்பிவிட்டது!”

‘‘அது என்ன?”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

‘‘எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் கைதுசெய்யப் படலாம் என்று மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அதற்கு முன்னதாக நீங்களாகவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுங்கள் என்றும் சொல்லப் பட்டதாம். ஆடிப் போய் கிடக்கிறார் தினகரன். ‘அமைச்சர் கைது என்று செய்தி வெளியானால் ஆட்சிக்குத்தான் அசிங்கம் ஏற்படும், அதனால், முன்கூட்டியே அவரை நீக்கிவிடுங்கள்’ என்று கிடுக்கிப்பிடி போடுகிறார்களாம் மத்தியில் இருந்து!”
‘‘அப்படி நடந்தால்?”

‘‘விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், அவரின் ஆதரவாளர்கள் சிலர் கோபமாகி,  ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வாபஸ் வாங்கலாம். அதற்காக கைது செய்யாமலும் இருக்க முடியாது. இப்படி விஜயபாஸ்கரை வைத்து சிக்கலோ சிக்கல்!”

‘‘ம்!”

‘‘இதற்கிடையில் தளவாய் சுந்தரத்தை வைத்தும் ஒரு மோதல் நடந்துள்ளது. தளவாய் சுந்தரத்தை கோட்டை பக்கமே வரக்கூடாது என்று எடப்பாடி சொல்லிவிட்டாராம். ‘நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம்’ என்று எடப்பாடியைக் கேட்டாராம் தினகரன். ‘அமைச்சர்களிடம் தளவாய் சுந்தரம் பேசும் முறை சரியல்ல. செலவு பண்ண மாட்டீங்களா? ஆர்.கே. நகர் தேர்தலில் ஜெயித்து முதல்வர் ஆனதும், புதிதாகப் பதவி ஏற்கப்போகும் அமைச்சரவை பட்டியல் வெளியாகப்போகிறது. அதில் உங்கள் பெயர் இருக்காது என்றெல்லாம் அவர் பேசுவதாகத் தகவல் வருகிறது. இதையெல்லாம் கண்டித்து வையுங்கள்’ என்று எடப்பாடி தரப்பில் பதிலடி தரப்பட்டதாம். அதேபோல், உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்பில் அனுப்பிய ஒரு ஃபைலில் கையெழுத்துப் போடாமல் எடப்பாடியார் இழுத்தடித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்களாம். ‘அந்த ஃபைல் தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்தான் ஏதோ யோசிக்கிறார். அவர் சொன்னதால்தான், நான் இன்னும் கையெழுத்துப் போடவில்லை’ என்றாராம் எடப்பாடி. இதை தினகரன் தரப்பில் ஏற்றுக்கொள்ள வில்லையாம். ‘வேண்டுமானால், நான் முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிடுகிறேன்’ என்று எடப்பாடி அவசரப்பட... ‘போதும்... இந்த மிரட்டல் டயலாக்’ என்று கத்தினாராம் தினகரன்.”

“எடப்பாடியாருக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி Vs தினகரன்... வில்லன் விஜயபாஸ்கர்

“தன் ஆதரவாளர்கள் அதிகமாகி வருவது அவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ-வான குணசேகரன், தனது தொகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தர ஒத்துழைக்காத அதிகாரிகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதாக திடீரெனப் பேட்டி கொடுத்துள்ளார். ஏற்கெனவே சூலூர் எம்.எல்.ஏ-வான கனகராஜ் இதேபோன்று ‘மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி அணி மாறுவேன்’ என்று ஆவேசமாகப் பேசிவிட்டு பிறகு பல்டி அடித்தார். கொங்கு ஏரியாவில் குழப்பமான சூழ்நிலை. அங்கிருந்துதான், சசிகலா, தினகரன் தரப்பினருக்குச் சரியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது. இப்படி எம்.எல்.ஏ-க்கள் மூலமாக தினகரனை மிரட்ட நினைக்கிறார்களாம்.’’

“தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் யார் யார்?”

“விஜயபாஸ்கர், உடுமலைப் பேட்டை ராதா கிருஷ்ணன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு... என ஏழு பேர் இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியின் தலைவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். இந்த கோஷ்டியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், கரூர் விஜயபாஸ்கர், வீரமணி, பெஞ்சமின் ஆகிய ஏழு பேர் இருக்கிறார்கள். ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி... இவர்களுடன், சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், ராஜேந்திர பாலாஜி ஆகிய ஏழு பேர் திவாகரனுடன் ரெகுலர் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்கள் மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். இதுவே கட்சியைக் கலகலக்க வைத்துள்ளது.”

 ‘‘அ.தி.மு.க அம்மா கட்சியில் திடீரென கையெழுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்களே... ஏன்?”

“தேர்தல் கமிஷனிடம் பக்காவான ஆதாரங் களைக் காட்ட நினைக்கிறாராம் தினகரன்.        அ.தி.மு.க-வின் மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆதரவு கையெழுத்துப் போட்டு அதையெல்லாம் காட்டவேண்டும். இதை வைத்துதான், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லுமா என்று தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கும். அதற்கான கையெழுத்து வாங்கும் படலத்தை, தற்போது தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகிகள் மத்தியில் தினகரன் கோஷ்டியினர் நடத்தி வருகிறார்கள். இங்குதான் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஒரு சில இடங்களில், கையெழுத்துப்போட அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்களாம். அது வரும்வரை இழுத்தடிக்கிறார்களாம்.”

“ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு நடந்த பணப் பட்டுவாடாவைப் பார்த்து ‘அதுபோல் எங்களுக்கு இல்லையா?’ என்று கட்சி நிர்வாகிகள் கேட்கிறார்கள் போலிருக்கிறது?”

“ஆமாம். இதனால் குழப்பமடைந்த தினகரன் தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் ‘எட்டு வார கால அவகாசம் வேண்டும்’ என மனு செய்திருக்கிறது. விஷயத்தைத் தயங்கித் தயங்கி தினகரனிடம் சொன்னபோது, அவர் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாராம். அமைச்சர்கள் தரப்பில் கான்ட்ராக்ட், சிபாரிசுகள்... இப்படி அன்பளிப்பை வாரி வழங்க ஆரம்பித்து விட்டார்கள். நிர்வாகிகள் ஏக குஷியில் இருக்கிறார்கள்” என்றபடி எழுந்த கழுகார், ‘‘விரைவில் தமிழக அமைச்சர் ஒருவர் கைதாகப் போகிறார். இவர் விஜயபாஸ்கர் அல்ல! இன்னொருவர். கொங்கு மண்டலத்துக்காரர். மத்திய அரசு விஷயத்தில் ஏதோ ஒரு விவகாரத்தில் இந்த அமைச்சர் அடித்த காரசாரமான கமென்ட்டை உடும்புப் பிடியாக பிடித்த மத்திய உளவுத்துறையினர், டெல்லி மேலிடத்திடம் போட்டுக்கொடுத்துவிட்டார்களாம். கோபமான டெல்லி மேலிடம், அந்த அமைச்சரைக் கைதுசெய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாம். அதற்காக சில வில்லங்கமான கோப்புகளைத் தோண்டி எடுத்து, வலுவான வழக்கும் தயார் ஆகி வருகிறதாம்” என்றபடி பறந்தார் கழுகார்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு