Published:Updated:

மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்

மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: மனோஜ்குமார்

 அலிகர்: தமிழகத்தை போல் உ.பி.யிலும் இது பொதுத் தேர்வுகள் பரபரக்கும் நேரம். ஆனால், பொதுத் தேர்வுகள் நடத்துகிறோம் என்கிற பெயரில் உ.பி.யில் கேலிக் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே, காப்பி அடிப்பவர்களுக்கு உதவும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானது அராஜகத்தின் உச்சம்!
 
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
உ.பி.யில் ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 12 தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கின்றன. இதில் அலிகர் மாவட்டத்தில் மட்டும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து 1,57,000 மாணவர்கள் 266 தேர்வு மையங்களில் பரீட்சை எழுதி வருகின்றனர். இவர்கள் தேர்வு எழுதும் முறையை கேள்விப்பட்ட போது முதலில் நம்மால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. அந்த அலங்கோலங்களை நேரில் சென்று பார்த்த போது அதிர்ந்தே போனோம்.
 
அத்ரோலியின் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களை காப்பி அடிக்காமல் கண்காணிக்கும் ஆசிரியர் கையில் கேள்விகளின் தெளிவான பதில்களுடன் கொட்டை எழுத்துக்களில் ஒரு சார்ட். அதை அனைத்து மாணவர்களும் சீரியஸாக பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு தூரத்திலிருந்து அந்தச் சார்ட் தெரியவில்லை என்பதால் தங்கள் வசதிக்கேற்ப பெஞ்சுகளை இழுத்துப் போட்டு கரிசனமாக காப்பி அடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
 
இன்னொரு பள்ளியில், கேள்வித்தாள் வெளியான சில நிமிடங்களில் அது வெளியே வந்து அதற்கான‌ பதில்கள் அவசர கதியில் தயாராகிக் கொண்டிருந்தன. பள்ளிக்கு அருகிலேயே அமர்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட கார்பன் பேப்பர்க‌ளை வைத்து சிலர் எழுதிக் கொண்டிருந்தனர். கார்பன் காப்பிகள் உடனுடக்குடன் தேர்வு அறைகளில் சப்ளையாக அதை வசதியாக பார்த்து எழுதினர் மாணவர்கள். இவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய ஆசிரியர்கள், வெளியில் ஸ்குவார்டு அதிகாரிகள் யாராவது வருகிறார்களா என்பதை கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
மற்றொரு பள்ளியில் ஒருவர், பதில்களை பார்த்து படிக்க மாணவர்கள் நிதானமாக கேட்டு எழுதிக் கொள்கிறார்கள்.  'டவுட்' கேட்பவர்களுக்காக மீண்டும் படிக்கப்படுகிறது. இன்னும் சில பள்ளிகளின் வகுப்பறைகளில் இண்டு இடுக்குகள் வழியாக தாராளமாக 'பிட்' சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல், பல்வேறு முறைகளில் மாணவர்கள் தங்கள் 'திறமைகளை' காட்டி பாவம் கஷ்டப்பட்டு பரீட்சை எழுதுகிறார்கள். பல பள்ளிகளில் தேர்வு முடியும் நேரம் சிலசமயம் ஒரு மணி நேரம் கூட நீட்டிக்கப்படுகிறது. இது குறித்து அத்ரோலிவாசிகளிடம் கேட்டால் திடுக்கிடும் தகவல்களை தருகிறார்கள்.
 
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
 
'இங்கு மாணவர்கள் காப்பி அடித்து பாஸ் பண்ண வைப்பதற்காக‌ அலிகரில் மாஃபியாக்கள் செயல்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் மற்ற கிரிமினல்(!) வேலைகளுக்கு லீவு போட்டுவிட்டு பிட் கொடுக்கும் புண்ணிய காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் டீல் பேசி கணிசமான ஒரு தொகையை கல்லாக்கட்டிக் கொள்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி நல்ல‌ வருமானம்!  கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்து கொடுப்பதிலிருந்து ஸ்குவார்டுகளிடமிருந்து காப்பாற்றுவது வரை அனைத்தும் மாஃபியாக்களின் பொறுப்பு. 
 
இதற்காக பத்தாம் வகுப்பிற்கு 6000, ப்ளஸ் டூவிற்கு 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச கட்டணம் (?) வைத்திருக்கிறார்கள். அத்ரோலி தாலுக்காவில் மட்டும் மாணவர்கள் காப்பி அடிக்க உதவுவதற்காக இந்த ஆண்டு ரூபாய் 50 கோடி வரை மாஃபியாக்களுக்கு கைமாறியதாக உள்ளூர் தினசரிகள் செய்தி சொல்கின்றன‌. இந்த விஷயத்தில் குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு மையங்களாக அனுமதி பெற கீழிருந்து மேல் வரை அனைவருக்கும் லஞ்சம் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுவதால் இந்த அவலத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.
 
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
 
எனவே, இங்குள்ள பள்ளிகளில் பெயருக்கு அட்மிஷன் பெற்று, காப்பி அடித்து பாஸ் செய்யலாம் என்பதால் கோவா, மகராஷ்டிரம், குஜராத், மபி, ராஜஸ்தான், காஷ்மீர் மற்றும் கர்நாடக‌ மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் உபிக்கு ப‌டை எடுக்கின்றனர். கணக்கு மற்றும் அறிவியல் பாடங்கள் மட்டுமில்லாமல் மொழிப் பாடமான‌ இந்தியை கூட அவர் கள் விட்டு வைப்பதில்லை" என்று வேதனைப்படுகிறார்கள் அத்ரோலிவாசிகள்.
 
இக்லாஸ் தாலுக்காவின் கோண்டாவில் லக் ஷமா வித்தியா நிகேதன் இண்டர் காலேஜுக்கு வெளியே காப்பி அடிக்க உதவிய இரண்டு கும்பல்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட‌து. இருதரப்பும் கள்ளத் துப்பாக்கிகளுடன் மோதிக் கொண்டனர். தேஜ்வீர்சிங் என்ற‌ ராணுவ வீரர் இரண்டு கும்பலையும் சமாதானப்படுத்த முயன்றார். இந்த களேபரத்தில் அவரையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பிட் சப்ளை கும்பல். இந்தச் சம்பவம் தொடர்பாக‌ ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைதும் செய்திருக்கிறது போலீஸ்.
 
உ.பி.யில் காப்பி அடிப்பதற்கு அலிகர் மாவட்டத்தின் அத்ரோலி தாலுக்கா மிகவும் பெயர் பெற்றது. ஐந்து தாலுக்காக்கள் உள்ள அலிகர் மாவட்டத்தின் மொத்த தேர்வு மையங்கள் 266. இதில் அத்ரோலியில் மட்டும்  143 மையங்கள். இங்குள்ள சுமார் 300 கிராமங்களுக்கு 400 உயர்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன. அலிகர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பதவிகளையும் ஒதுக்கி  வைத்து விட்டு, காப்பி அடிப்பவர்களை பிடிக்கும் வேலையில் முழுவீச்சில் இறங்கியும் எந்தப் பலனும் இல்லை. இதுபற்றி அவர்கள் தரப்பில் அதிகாரபூர்வமாக யாரும் நம்மிடம் முகம்காட்டி பேசவும் முன்வரவில்லை.
 
மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் மாஃபியாக்கள்: இது உ.பி. ஸ்டைல்
''அத்ரோலியில் இதுவரை ஒரு டஜன் மையங்கள் காப்பி அடிக்கப்பட்டதாக கேன்சல் செய்யப்பட்டுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவர்கள் லக்னோ வரை சென்று பெரிய இடத்து சிபாரிசுகள் மூலம் தப்பித்துவிடுகிறார்கள். இவர்களை பிடிப்பதற்காக எட்டு குழுக்கள் அமைத்தும் காப்பி அடிப்பதை முழுமையாக தடுக்க முடியவில்லை. தேர்வு மையங்களுக்கு ஒன்றைரை கி.மீ தூரத்தில் உளவாளிகளை நிறுத்தி எங்களின் திடீர் வருகையை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றபடி தயாராகி விடுகிறார்கள். 
 
அதேசமயம். அத்ரோலியில் அரசு மற்றும் ஒருசில தனியார் பள்ளிகளில் மட்டும் காப்பி அடிக்கப்படுவதில்லை. இத னால், அப் பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டிய சுமார் 5000 மாணவர்கள் ஹால்டிக்கெட் வாங்கக் கூட வரவில்லை. இதன் காரணமாக இந்த பள்ளிகளின் பல வகுப்பறைகளில் ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்து தேர்வு எழுதுவதை பார்க்க முடிகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களை தடுத்தால் ஓட்டு வங்கியே பாதிக்கப்படும் என்பதால் அரசியல் கட்சிகளும் இதை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என கைவிரிக்கின்றனர் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள்..
 
காப்பி அடிக்கும் பிரச்னையின் சமூக தாக்கம் குறித்து அலிகர் பல்கலைகழக வரலாற்று துறையின் உதவி பேராசிரியரும், அதன் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினரும் தமிழருமான‌ முனைவர்.எஸ்.சாந்தினி பீயிடம் கேட்டபோது, '' காப்பி அடித்து வாங்கும் மார்க்குகள் அந்த மாணவர்களின் வாழ்க்கையில் எந்த இடத்திலும் உதவாது. இப்படி முதல் படி யிலேயே சட்ட விரோதமாக செயல்படுவது தான் பின்னாளில் அவர்களை சமூக குற்றவாளிகளாகவும் மாற்றிவி டுகிறது. ராணுவத்தில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு பாஸாகணும் என்பதாலும் ப்ளஸ் டூ பாஸ் செய்திருந்தால் திருமணத்திற்கு வரன் தேட வசதியாக இருக்கும் என்பதாலும்லும் இப்படி காப்பி அடிப்பதாக சொல்கிறார்கள். 
 
இப்படி காப்பி அடித்து பாஸ் செய்தவர்கள் உயர்கல்வி பெற கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுக்கு வரும் போது ரொம்பவே சிரமப்படுகிறார்கள்.  இதனால், அம் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் கிரிமினல்களாக அவதாரமெடுத்து விடுகிறார்கள். இந்த நிலையை தடுக்கும் பொருட்டு அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் உட்பட பல கல்லூரிகளில் அடுத்த வருடம் முதல் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டது" என்றார் சாந்தினி பீ
 
உ.பி.யை போல் மபி மற்றும் பீகார் மாநிலங்களிலும் மஃபியாக்கள் தயவில் காப்பி அடிக்கும் அவலம் தொடர்கிறது. மபியில் பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பீகாரில் காப்பி அடித்ததற்காக 1600 மாணவர்கள் மீதும் அவர்களுக்கு உதவியதாக பெற்றோர்கள் 100 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.