Published:Updated:

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

ரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், மத்திய அரசின் மனதை மாற்றாவிட்டாலும், தமிழகத்தில் பல கட்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போராட்டம்தான், தமிழ்நாட்டில் ஆளும்கட்சியைத் தவிர்த்து, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் இணைத்துள்ளது. விவசாயிகளுக்காக தி.மு.க-வால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டம், தமிழக அரசியல் அரங்கில் அடுத்த திருப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கான தி.மு.க-வின் அழைப்பை ஏற்று, 23 கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் புதிய முகங்களைப் பார்க்க முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என, கடந்த முறை தி.மு.க-வால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டங்களில் பங்கேற்காதவர்கள்கூட இந்த முறை பங்கேற்று இருப்பது, எதிர்கால அரசியல் கூட்டணிக்கான அச்சாரம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

பின்னணி என்ன?

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான அச்சாரம் போடப்பட்டதன் பின்னணி குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். “சமீபத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, எங்கள்
எம்.எல்.ஏ-க்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. ஆளும்கட்சியினர் அவ்வளவு அராஜகங்கள் செய்தபோதிலும், மற்ற கட்சிகளிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்குக் கண்டனங்கள் வரவில்லை. எனவே, ‘மாற்றுக் கட்சிகளோடு நாம் கூடுதல் உறவைப் பேணவேண்டும். எந்தளவுக்கு அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்கிறோமோ, அதுவே நம்முடைய பலம்’ என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்னார்கள். தற்போதைய சூழலில், விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுப்பது நமக்கு நல்லது. அது, நமக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமையும்’ என்றும் அவர்கள் விளக்கினார்கள். அதையடுத்து, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் தவிர்த்து, சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., பா.ம.க உட்பட முக்கியக் கட்சிகளை அழைப்பதற்கான முன்னெடுப்புகளை ஸ்டாலின் தொடங்கினார்” என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

சி.பி.ஐ - சி.பி.எம் பங்கேற்றது ஏன்?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், மக்கள்நலக் கூட்டணியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. சி.பி.எம் தனியாக அங்கு வேட்பாளரை நிறுத்தியபோதும், அந்த வேட்பாளரை சி.பி.ஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்திலேயே சி.பி.ஐ மட்டும் தி.மு.க பக்கம் சாயும் நிலையை எடுக்க முயன்றது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு தினகரன் தரப்பில் தூதுவிட்டுப் பார்த்தார்கள். இப்படி தி.மு.க மற்றும் அ.தி.மு.க இல்லாத மாற்று அணிக்கான முயற்சி கானல் நீராக ஆனபிறகு, எல்லோருக்குமே புதிய அரசியல் பாதையைத் தேடிப் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது.

இதில் சி.பி.ஐ, தங்கள் சின்னம் பறிபோய்விடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. ‘‘சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டணி மூலம் சில இடங்களை வெல்ல வேண்டும். அதுவே, நம்முடைய கட்சியின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்’’ என்று கட்சியின் தேசியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சி.பி.எம்., ‘விவசாயிகளின் பிரச்னை உள்ளிட்ட பொதுப் பிரச்னைகளில் பிரதான எதிர்க்கட்சியோடு இணைந்து பயணிப்பது தவறல்ல என்ற புள்ளியில் ஒன்றிணைகிறோம்’ என்கின்றது. 

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

பா.ம.க பங்கேற்காதது ஏன்?

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கான அழைப்பு கடிதத்தை ஆர்.எஸ்.பாரதியும், பூச்சி முருகனும் பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் கொடுத்தனர். துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்கள் மூலமாகக் கடிதத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பது பா.ம.க-வின் வருத்தம். மேலும், இந்தக் கூட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகளை அழைத்ததை பா.ம.க ரசிக்கவில்லை. திருமாவளவன் பங்கேற்பது உறுதியான நிலையில், ‘‘அவரையும் அழைச்சுட்டு என்னையும் ஏங்க அழைக்கிறீங்க?’’ என வெளிப்படையாகவே ராமதாஸ் கோபப்பட்டாராம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

திருநாவுக்கரசர் ஐடியா!

அகில இந்திய அளவில் பி.ஜே.பி-யின் செல்வாக்கு சரியவில்லை என்பதைக் காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்பதையும், எனவே தமிழ்நாட்டில் கூட்டணி பலம் அவசியம் என்பதையும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில், ஸ்டாலினிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘‘அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது நல்ல விஷயம். விவசாயிகளுக்கான பொதுக்கூட்டம் நடத்தும் பொறுப்பை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் கொடுத்தால், அது  ஒரு  நல்ல அணுகுமுறை யாக இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இது, விவசாயிகளுக்கான கூட்டம் என்றபோதிலும் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வுக்கு விதிவிலக்கு என தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய மற்ற பிரச்னைகள் குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது, ஒரு நீண்டகால அரசியல் பயணத்துக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

- சே.த.இளங்கோவன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

அறிவாலயத்துக்குள் நடந்தது என்ன?

ப்ரல் 16-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்குத் தலைவர்கள் உற்சாகமாக வந்தனர். பல தலைவர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டதால், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். திருமாவளவன் வந்தவுடன் எழுந்து நின்று வரவேற்ற ஸ்டாலின், கைகுலுக்கியவாறு, ‘‘எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு. நலமா?’’ என்று கேட்க, ‘‘நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா நலமா?’’ என்றார் திருமாவளவன்.

‘‘நம்முடைய ஒன்றுகூடல், தேர்தல் அரசியலோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கப்படலாம்’’ எனப் புன்னகைத்தபடியே பேச்சைத் தொடங்கிய ஸ்டாலின், ‘‘நாம், இங்கு விவசாயிகளின் பிரச்னை, அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை குறித்தே கருத்துக்களைப் பகிர உள்ளோம். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை என்பதால்தான், உண்மையான அக்கறையுள்ள நாமெல்லாம் ஒன்று கூடியுள்ளோம்” என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் - அரசியல் மாற்றத்துக்கு அச்சாரம்!

‘‘வறட்சி மற்றும் வர்தா புயல் நிதியாக 62 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் வெறும் 2,014.45 கோடி ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளனர். யானை பசிக்கு சோளப்பொரியா?
தமிழ்நாட்டையும் தேசிய பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும்’’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார் ஜி.ராமகிருஷ்ணன். ‘‘பூரண மதுவிலக்கு வேண்டும். அதோடு டாஸ்மாக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி குறித்தும் நாம் அணுக வேண்டும்’’ என்றார் இரா.முத்தரசன். தோழர்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றைத் தீர்மானத்தில் இணைத்துக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

‘‘பி.ஜே.பி-யின் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. நமக்கு உரிமையான தண்ணீரை தடுப்பணைகள் போட்டு அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன’’ என்று திருமாவளவன் கூறினார்.

‘‘விவசாயிகள் வாங்கிய கடனுக்காகத் தனியார் வங்கிகள் ஜப்தியில் ஈடுபட்டு மோசமாக நடந்துகொள்கின்றன. தற்போது, விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பொதுவாக யாரும் கவனிப்பதில்லை. ஆனால், நாம் அப்படியே கடந்து போய்விட முடியாது’’ என்றார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சண்முகம். அதன் பிறகே ‘மாநில அரசு, விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கவேண்டும்’ என்ற தீர்மானம் இணைக்கப்பட்டது.

‘விவசாயிகள் பிரச்னைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்யலாம்’ என்று கருத்து வெளிப்பட, 22-ம் தேதியை மற்ற கட்சிகள் தேர்வு செய்தனர். ஏறக்குறைய அந்த நாள் முடிவாகும் தருணத்தில், திடீரென ஸ்டாலின், “அது சனிக்கிழமை. நம் எதிர்ப்பை வேலை நாட்களில் அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்” என்றார். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, 24-ம் தேதியை முடிவு செய்தனர். “முகூர்த்த நாள் அது. திருமண நிகழ்வுகளுக்குச் செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும்” என்ற மு.க.ஸ்டாலின், 25-ம் தேதி செவ்வாய்க்கிழமையைக் கூற, இதை அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர்.

பொதுவேலை நிறுத்தம் குறித்து ஒரு விளக்கப் பொதுக்கூட்டம் போடலாம் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன் வைக்க, அது ஏற்கப்பட்டு, 22-ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் உறுதியானது. 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட, இறுதியாக இரண்டு மணி நேரக் கூட்டம் முடிவுக்கு வந்தது. 

‘‘விவசாயப் பிரச்னைகள் தொட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளையும் அலசியது, தீர்வை நோக்கிய பயணத்துக்கான தொடக்கமாக உள்ளது’’ என்றனர், வெளியே குழுமியிருந்த பல கட்சிகளின் தொண்டர்கள்.