Published:Updated:

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

‘வெப்பக்காற்று அதிகரிக்கும், வெளியில் போக வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த செவ்வாய்க்கிழமை.  காலையிலேயே சூரியன் தகித்துக் கொண்டிருக்க, கழுகார் உள்ளே நுழைந்தார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடித்தவர், ‘‘இந்த வெப்பக் காற்றைவிட பயங்கரமான பாலைவனப்புயல் சசிகலா குடும்பத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. 1996-2001 காலகட்டத்தில் அனுபவித்ததைவிட பல மடங்கு சிக்கல்களை அந்தக் குடும்பம் இப்போது சந்திக்கிறது. திடீர் திருப்பங்கள் தினம்தோறும் அரங்கேற்றமாகின்றன. ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை வைத்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராக சென்னையில் போர் வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்றார்.

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

‘‘இந்தத் திருப்பங்களின் மையப்புள்ளியாக தினகரன்தானே இருக்கிறார்?” என்று கேட்டோம்.

‘‘ஆம்! டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. சசிகலா குடும்பம் மொத்தமும் அங்கே அணிவகுத்து நின்றது. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த பிரதமர் நரேந்திர மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தார். அப்போது தொடங்கியது சசிகலாவின் சரிவு. அ.தி.மு.க என்ற கட்சியும், அதன் தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள ஆட்சியும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்று மோடி அரசாங்கம் ஒவ்வொரு காயாக நகர்த்தியது. சசிகலாவும் அவருடைய குடும்பமும் இதை கவனமாகவே எதிர்கொண்டாலும், கடந்த காலங்களில் அந்தக் குடும்பம் செய்த தவறுகள் அவர்களைவிடாமல் துரத்தின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

பன்னீர்செல்வத்தை வைத்து கட்சி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றதால், சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது. அதன்பிறகு டி.டி.வி.தினகரன் வந்தார். தினகரனை எளிதாகச் சமாளித்து ஓடவிடலாம் என பி.ஜே.பி ஆரம்பத்தில் நினைத்தது. ஆனால், தினகரன் அவ்வளவு லேசுப்பட்ட ஆளாக இல்லை. ஏற்கெனவே காத்திருக்கும் ஃபெரா வழக்குகளோடு, ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பாயவிட்ட பணமும், அதை மையமாகவைத்து நிகழ்ந்த ரெய்டும், அவர் தலைக்கு மேலே புதிய கத்திகளாக இப்போது தொங்குகின்றன.”

‘‘போதாக்குறைக்கு டெல்லியில் புதிதாக ஒரு லஞ்ச வழக்கு பாய்ந்திருக்கிறதே?”

‘‘கடந்த வாரத்தில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்தார். தமிழக விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து, பிரதமர் மோடியிடம் பேசுபவர் நாயுடுதான். அவர் தம்பிதுரையிடம் இந்தச் சந்திப்பில் தெளிவாக சில விஷயங்களைச் சொல்லி அனுப்பியதாகத் தெரிகிறது. ‘சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல், அ.தி.மு.க ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவதை பி.ஜே.பி விரும்புகிறது’ என்று சொன்ன வெங்கய்ய நாயுடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி விளக்கினாராம். ரெய்டுக்கு முன்பும் ரெய்டின்போதும் கிடைத்த தகவல்கள் பற்றியும் நிறைய சொன்னாராம். இதன் பின்விளைவுகள் பற்றி வெங்கய்ய நாயுடு சொன்னதை, தம்பிதுரை அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டாராம். இதுபோன்ற தகவல்களை போனில் பேசுவது சிக்கல் என்பதால், திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.’’

‘‘ஓஹோ!”

‘‘இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் வந்துவிட்டது. ரூ.1.30 கோடி பணத்துடன் சுகேஷை கைதுசெய்தது டெல்லி போலீஸ். இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. தினகரனும் சுகேஷும் போனில் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறது டெல்லி போலீஸ். ஆனால், தினகரன்  அதை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரா ஏற்கெனவே பல மோசடி வழக்குகளில் கைதானவர். கருணாநிதியின் பேரன் என்று சொகுசு கார்களை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று மோசடி செய்த வழக்கு ஒன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுகேஷ் சந்திரா மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் ஏமாற்றுப்பேர்வழியை நம்பி பேரம் பேசுவதற்கு தினகரன் ஏமாளி அல்ல. அதனால், இந்த விவகாரங்கள் எல்லாமே நம்ப முடியாதவை என்கின்றனர் தினகரன் தரப்பில்.’’

‘‘இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?”

‘‘பெயரைக் கெடுப்பது, தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது, சில நாள்கள் சிறையில் அடைத்து பல வருடங்களுக்கு வழக்கை இழுத்து தினகரனை முடக்குவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை வைத்து ஆட்சியையும் பன்னீர்செல்வத்தை வைத்து கட்சியையும் நடத்துவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அதற்கான பேச்சுவார்த்தைகள்தான் இப்போது நடந்துவருகின்றன.’’

‘‘அதாவது தினகரனை நீக்கிவிடுவார்கள் என்கிறீரா?”

‘‘அப்படித்தான் நிலைமைகள் போகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி தினகரன் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து உமது நிருபர் எழுதி இருப்பதைப் படித்தேன். பன்னீர் அணியையும் எடப்பாடி அணியையும் சேர்த்துவைக்க பலரும் முயற்சிசெய்கிறார்கள். ஆனால், அதில் சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக்கொள்கிறார்களா என்பதுதான் இரண்டு தரப்பும் முடிவுக்கு வர முடியாத விஷயமாக இருக்கிறது!”

‘‘யார் யார் என்ன சொல்கிறார்கள்?”

‘‘தினகரனை முழுமையாக நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தரப்பு சொல்கிறதாம். இந்த ஆபரேஷனே கொங்கு மண்டல சீனியர் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியின் ‘வேட்டையாடு விளையாடு’தான். ‘சசிகலாவையும் தள்ளி வைத்துவிட்டு வாருங்கள்’ என்று பன்னீர் தரப்பு சொல்கிறதாம். இதுதான் இன்றைய சிக்கலுக்குக் காரணம். முதலமைச்சராக இருப்பதால், எடப்பாடியால் பல விஷயங்களில் நேரடியாக இறங்க முடியவில்லை. அதனால், அனைத்துக் காரியங்களையும் பார்க்கும் வேலையை வேலுமணி, தங்கமணியிடம் ஒப்படைத்துள்ளாராம். திங்கள்கிழமை இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் பெரும்பாலான அமைச்சர்கள் கூடிவிட்டார்கள். இவர்கள் அனைவருமே பன்னீர் அணியுடன் சேருவதுதான் நல்லது என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

‘‘இதனை தினகரன் ஏற்க மாட்டாரே?”

‘‘ஆமாம்! ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் தினகரனை வைத்துக்கொள்வது, இல்லாவிட்டால் தினகரனை நீக்கிவிடுவதுதான் இவர்களின் திட்டமாம். சசிகலாவைப் பார்க்க பெங்களூருக்கு தினகரன் சென்ற நேரமாகப் பார்த்து இப்படி ஒரு நடவடிக்கையில் அமைச்சர்கள் இறங்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்ற ரீதியில் அமைச்சர்கள் செயல்படத் தொடங்க விட்டார்கள் என்றுதானே அர்த்தம்!”

‘‘அதற்காக சசிகலாவை தள்ளிவைத்து விடுவார்களா?”

‘‘பன்னீர் தரப்பு சசிகலாவையும் நீக்கிவிட வேண்டும் என்கிறதாம். ஆனால் சீனியர் அமைச்சர்கள் சிலர், ‘தினகரன் வேண்டாம், சசிகலா இருக்கட்டும்’ என்கிறார்களாம். ‘அம்மா இடத்தில் சின்னம்மா பொதுச்செயலாளராக இருக்கட்டும். இத்தனை வருஷம் நமக்காகப் பாடுபட்டவர் அவர். சிறைக்குப் போய்விட்டார் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று வந்துவிடக்கூடாது’ என்று ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சொன்னார்களாம். ஆனால், இதை பன்னீர் ஏற்கவில்லை என்கிறார்கள்!”

‘‘இந்த இணைப்பு பன்னீருக்கு முழு சம்மதமா?”

‘‘ஆமாம்! திங்கள்கிழமை பெரியகுளம் சென்றார் பன்னீர். ‘இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது’ என்று சென்னை விமான நிலையத்தில் வைத்து பன்னீர் சொன்னார். அதே நாளில்தான் தினகரனிடம் பணம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் கைதானதும் நடந்தது. இது சம்பந்தமாக மதுரை விமானநிலையத்தில் பன்னீரிடம் கேட்டபோது, ‘எதையும் பணத்தைக் கொடுத்து வாங்கிவிட சசிகலா குடும்பத்தினர் நினைக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் மீதான கோபம் அவருக்கு அடங்கவில்லை என்று இதன் மூலமாகத் தெரிகிறது!”

‘‘அடுத்து என்ன நடக்கும்?”

‘‘விரைவில் தினகரனை கட்சியில் இருந்து நீக்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அ.இ.அ.தி.மு.க அம்மா அணி-அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்படலாம்.”

‘‘தினகரன் சும்மா இருப்பாரா?”

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

‘‘அது எப்படி இருப்பார்? அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு இந்த ஆட்சியைக் கலைத்துவிடுவார் என்று சொல்கிறார்கள். மகாதேவன் இறப்புக்கு மன்னார்குடி சென்ற தினகரன், ‘முதலமைச்சர் பதவி நம் குடும்பத்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆட்சியே நமக்குத் தேவையில்லை’ என்ற ரீதியில் சொன்னாராம்.”

‘‘தினகரன் பக்கம் எத்தனை பேர் வருவார்கள்?”

‘‘சுமார் 42 எம்.எல்.ஏ-க்கள் தன்னை முழுமை யாக ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறாராம். இது உண்மையானால் பன்னீர், எடப்பாடி சேர்ந்தாலும் ஆட்சி நிலைக்காது. ஆனால், ‘பதவி போனாலும் பரவாயில்லை என தினகரன் பின்னால் போகிற அளவுக்கு இங்கு விசுவாசிகள் யாருமில்லை’ என்கிறார்களாம் வேலுமணியும் தங்கமணியும்.”

‘‘சசிகலா ரியாக்‌ஷன் என்ன?”

‘‘அவருக்கு இது எதுவுமே பிடிக்கவில்லையாம். தினகரனை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னவர் சசிகலா. அதனை மீறி அவர் போட்டியிட்டார். ‘கொஞ்ச காலம் காத்திரு’ என்று சசிகலா சொன்னார். தினகரன் கேட்கவில்லை. இந்த நிலையில் என்னென்னவோ நடந்துவிட்டன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக சசிகலா முடிவெடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். தனக்கு இனி அரசியல் வேண்டாம் என்றும் நினைக்கிறாராம். தேர்தல் கமிஷன் தனது பதவியைப் பறிப்பதற்கு முன்னதாக தானே விலகிவிடுவது நல்லது என்றும் அவர் நினைக்கிறாராம்!”

‘‘ஓஹோ!”

‘‘சசிகலா சிறைக்குப் போன பிறகு தினகரன் மட்டும் தனி ஆளாக ஆவர்த்தனம் செய்து கொண்டி ருக்கிறார். அவரது குடும்பத்தில் மற்றவர்கள் இதனை ரசிக்கவில்லை. நடராசனே ஒதுங்கி விட்டார். பிறகு என்ன மற்றவர்கள்? திவாகரன்தான் அடிபட்ட புலியாக உறுமிக்கொண்டிருக்கிறார். பன்னீர், எடப்பாடி அணியினருடன் தொடர்ந்து திவாகரன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். ‘எனக்குக் கட்சி உடையக்கூடாது... ஆட்சி நிலைக்க வேண்டும். அவ்வளவுதான். தினகரன் இருக்கணும்னோ, நான் வரணும்னோ எந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என்று சொல்லி வருகிறாராம் திவாகரன். இதை சசிகலாவிடமும் அவர் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

‘‘சிறையில் சசிகலாவை தினகரன் ஏன் சந்திக்க முடியவில்லை?”

‘‘17-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரன் சென்றார். ஆனால், சசிகலா தினகரனைச் சந்திக்கவில்லை. அவர் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. அவர், மிகவும் நொந்து போய் இருக்கிறார். தினகரன்தான் குடும்பத்துக்குள்ளும் பிரச்னைகளை ஏற்படுத்தி, கட்சிக்குள்ளும் மேலும் மேலும் சிக்கல்களை உண்டாக்குகிறார் என்று சசிகலா கருதுகிறார். அதனால், அவர் தினகரனைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், ‘பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டதால்தான் சின்னம்மா அண்ணனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட தினங்களில்தான் சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க முடியும் என விதி இருக்கிறது. அண்ணன் மீண்டும் வந்து சந்திப்பார்’ என்று தினகரன் தரப்பில் சொன்னார்கள். தினகரன் அனைவராலும் தனிமைப்படுத்தப்படுவது தெரிகிறது!” என்றபடி எழுந்த கழுகாரிடம், அமித்ஷா வருகை குறித்து கேட்டோம்.

‘‘மே 10-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். விரைவில், தேர்தல் வரப்போகும் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென அதில் தமிழகமும் கேரளாவும் சேர்க்கப்பட்டு உள்ளன. பி.ஜே.பி தனது ஆபரேஷன்களை வெளிப் படையாக இனிதான் நடத்தப்போகிறது” என்றபடி பறந்தார்.

படம்: மீ.நிவேதன்

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி

‘முழு முயற்சி எடுக்கிறார் கலெக்டர்’

‘சிவகங்கை சீமை... கருவேல சர்ச்சை!’ எனும் தலைப்பில் கடந்த 2.4.17 இதழில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர் விழிக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்து எழுதியிருந் தோம். இது தொடர்பாக,  சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவைக் கண்காணிக்கும் சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் ஆணையர்களில் ஒருவரான எஸ்.காமேஸ்வரன், நமக்குக் கடிதம்  ஒன்றை அனுப்பியிருந்தார்.

 அதில், “படமாத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி நீதியரசர்கள் வந்தபோது, நல்லா குளம் அருகே வேம்பத்தூரைச் சேர்ந்த பசும்பொன் ராஜா என்பவர் நீதியரசர்களின் காரை மறித்து, தான் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்துள்ளதாகவும், கிராமத்தில் சிலர் இந்தப் பணிகளைச் செய்ய விடாமல் தடுப்பதாகவும் முறையிட்டார். அதற்கு நீதியரசர்கள் ‘கலெக்டரிடம் முறையிடுங்கள்’ என்றார்கள். இதுதான் நடந்தது. பசும்பொன் ராஜாவைக் கைது செய்யுமாறு கலெக்டர் சொன்னதாகவும், இதைக் கேட்ட நீதியரசர்கள் அவரைக் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானது. கலெக்டர் மலர்விழி, சீமைக் கருவேல மரங்களை அழிக்க, முழு முயற்சி எடுத்து வருவதற்காக நீதியரசர்கள் அவரைப் பாராட்டினார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.