Published:Updated:

'மோடியா...எடப்பாடியா என மாறிவிடக் கூடாது!'  - ஸ்டாலின் கணக்கும் அமித் ஷாவின் எதிர் கணக்கும்

'மோடியா...எடப்பாடியா என மாறிவிடக் கூடாது!'  - ஸ்டாலின் கணக்கும் அமித் ஷாவின் எதிர் கணக்கும்
'மோடியா...எடப்பாடியா என மாறிவிடக் கூடாது!'  - ஸ்டாலின் கணக்கும் அமித் ஷாவின் எதிர் கணக்கும்

'சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருவது சரியான விஷயம் அல்ல' என நினைக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், எடப்பாடி பழனிசாமி அரசைக் கவிழ்ப்பதற்கு அவர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

டப்பாடி பழனிசாமிக்கு எதிராக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா நடத்தி வரும் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது தி.மு.க. ' தற்போதைய சூழலில் எடப்பாடி அரசு  தொடர்வதே நல்லது. இந்த அரசு கவிழ்ந்தால் அது ரஜினிக்குச் சாதகமாகப் போய்விடும் என நினைக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 
    
நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 100 பென் டிரைவ்கள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் வரவு செலவுகள் என அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலியான நிறுவனங்களைத் தொடங்கியும் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தும் 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் கிறிஸ்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளர்களை வளைக்க இருக்கிறது வருமான வரித்துறை. இந்தச் சோதனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே சென்னையில் பேசிய அமித் ஷா, 'பா.ஜ.க எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழலுக்கு முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பற்றி நினைக்கும்போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும்' என ஆதங்கப்பட்டார்.

அமித் ஷாவின் இந்தப் பேச்சு, கோட்டை வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. 96-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில்தான் கிறிஸ்டி நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. எனவே, இந்த விவகாரத்தில் தி.மு.கவையும் வளைக்கத் திட்டமிட்டுள்ளனர் என பா.ஜ.க. நிர்வாகிகள் பேசி வந்தனர். தமிழக அரசுக்கு எதிராக அமித் ஷா நடத்தும் அரசியல் விளையாட்டைக் கவனித்து வரும் ஸ்டாலின், இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், "தமிழக அரசைக் கவிழ்ப்பதற்கு இதுவரையில் இரண்டு வாய்ப்புகள் ஸ்டாலினுக்கு கிடைத்தது. கூவத்தூர் அரசியலை சசிகலா நடத்தியபோது, பன்னீர்செல்வம் பக்கம் சில எம்.எல்.ஏக்கள் சென்றனர். அப்போது ஆளும்கட்சி தரப்பில் இருந்து சில எம்.எல்.ஏக்களை வளைப்பதற்கு தி.மு.க முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு தினகரனை நோக்கிச் சில எம்.எல்.ஏக்கள் சென்றபோதும், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களை வளைப்பதற்கு ஸ்டாலின் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறிகொடுத்த பிறகு, ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து நிர்வாகிகள் பேசியபோதும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதை அறிந்த பிறகு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'ஸ்டாலின் நினைத்தால்தான் இந்த ஆட்சிக்குச் சிக்கல் வரும். அப்படி ஒருபோதும் அவர் நினைக்கப் போவதில்லை. தினகரன் கனவு பலிக்காது' என வெளிப்படையாகப் பேசினார். இந்நிலையில், தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி வழங்கப்போகும் தீர்ப்பு அடிப்படையில் மீண்டும் இந்த ஆட்சிக்கு சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள செயல் தலைவர் விரும்பவில்லை" என்றவர்,  

"எடப்பாடி பழனிசாமி தொடர்வதே நமக்கு நல்லது' என்ற மனநிலையில் இருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ரஜினி கட்சி இல்லாமல் இருந்தால், நாம் வெற்றி பெற்றுவிட முடியும் என நினைக்கிறார். அதன்மூலம், சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார். தற்போது நடந்து முடிந்த நாமக்கல் ரெய்டு உள்பட சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இந்த அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்குத் விரைவில் தேர்தல் கொண்டு வருவது குறித்தும் தீவிர ஆலோசனையில் இருக்கிறது பா.ஜ.க. 'சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருவது சரியான விஷயம் அல்ல' என நினைக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், எடப்பாடி பழனிசாமி அரசைக் கவிழ்ப்பதற்கு அவர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு கவிழ்ந்தால், மோடியா...எடப்பாடி பழனிசாமியா என அரசியல் களம் மாறிவிடும். வலிமையான தலைவராகவும் எடப்பாடி உருவெடுத்துவிடுவார். மாறாக, இதே கெட்ட பெயருடன் ஐந்தாண்டுகள் இந்த அரசு நீடித்தால்தான் அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வருவதற்குச் சரியாக இருக்கும். இடையில் இந்த ஆட்சி கவிழ்ந்து, ரஜினியும் அரசியலுக்கு வந்துவிட்டால் களநிலவரம் வேறு மாதிரியாகிவிடும். எனவே, எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கட்டும்' என்பதுதான் ஸ்டாலினின் நிலைப்பாடு" என்றார் விரிவாக. 

இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் கணக்கு வேறாக இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், "அரசியல்ரீதியாக ஸ்டாலின் போட்ட கணக்கு எதுவும் பலிக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறிகொடுத்ததும், ' மூன்று மாதத்தில் தினகரன் சிறைக்குப் போவார்' என செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் தினகரனை நோக்கி வரும் வாக்குகள் அனைத்தும் முக்குலத்தோர் மற்றும் சிறுபான்மையின சமூக வாக்குகள்தான். சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் வீழ்த்தியதால்தான் இந்த வாக்குகள் அவர் பக்கம் செல்கின்றன என்பதையும் பா.ஜ.க அறிந்து வைத்துள்ளது.

பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பது என்பது தி.மு.கவுக்குத்தான் இழப்பைக் கொடுக்கும். தினகரனால் பா.ஜ.கவின் எதிரிகள்தான் நஷ்டப்படுவார்கள். அதனால்தான், தினகரன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். இது அமித் ஷாவின் முக்கியமான அரசியல் மூவ். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரெய்டுகளை நடத்துவதன் மூலம், அவரையும் பா.ஜ.கவுக்கு எதிரானவராகக் காட்ட முற்படுகின்றனர். மறுபுறம் சீமானும் அன்புமணியும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஓரளவுக்குப் பிரிப்பார்கள். 'பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் பலமுனைகளாகப் பிரியும்போது, ரஜினி- மோடி கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்' என்பதுதான் அமித் ஷாவின் திட்டம். அதை நோக்கித்தான் வேகமாகச்  செயல்படத் தொடங்கியிருக்கிறார். வரக் கூடிய நாள்களில் நடக்கும் காட்சிகள், அமித் ஷாவின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்" என்கிறார் நிதானமாக.
 

அடுத்த கட்டுரைக்கு