மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

ரசின் மக்கள் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ) பதவிகளுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. டிகிரி படித்திருந்தால் போதும். முதல்வரின் நேரடி சிபாரிசு மூலம் இந்தப் பதவிகள் நிரப்பப்படுவதால், அரசியல்வாதிகளின் உறவினர்கள்தான் இதில் அமர்த்தப்படுவார்கள். அதனாலேயே, அரசியல் சாயம் பூசப்பட்டவர்களாக பி.ஆர்.ஓ-க்கள் இருப்பார்கள். அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் தொடர்பை உண்டாக்கும் பணி இது. அரசின் சாதனைகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை ஊடகங்களில் வரவைப்பது, பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்வது, அரசு நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வது என மீடியாவோடு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள், பி.ஆர்.ஓ-க்கள். அரசியல் பின்புலத்தோடு ஆட்சியாளர்களிடம் நெருங்கி வேலை பார்க்கும் பதவி என்பதால், இந்தப் பதவிக்கு ‘பவர்’ அதிகம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல்வாதிகள் தொடர்பு, முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் என இத்தனை அடையாளங்களைத் தாங்கி நின்ற நடராசன், பி.ஆர்.ஓ பதவியில் சும்மாவா இருந்திருப்பார்?

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

மாவட்டங்களில் பணியாற்றியபோது கலெக்டர்களுடனும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடனும் நடராசன் நெருக்கம் ஆனார். கடலூரில் அவர் வேலை பார்த்தபோது, அங்கே கலெக்டராக பணியாற்றிய சந்திரலேகாவுடன் இருந்த நட்புதான், ஜெயலலிதாவோடு நடராசன் நெருக்கம் ஆக அடித்தளமாக அமைந்தது. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். முதல் கூட்டம், கடலூரில் நடைபெற்றது. அங்கே இருந்த கலெக்டர் சந்திரலேகாவிடம், ‘‘அம்முவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர். ‘வினோத் வீடியோ விஷன்’ நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கும் பணிகளை நடராசன் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தார். ‘ஜெயலலிதாவின் கவரேஜ் ஆர்டர்’ கிடைப்பதற்காக சந்திரலேகாவை அணுகினார் நடராசன். பி.ஆர்.ஓ-வான நடராசன், ஜெயலலிதாவுக்கு நல்ல கவரேஜ் தருவார் என நினைத்த சந்திரலேகா, நடராசனுக்கு உதவினார். அப்போதுதான் ஜெயலலிதாவை முதன்முறையாக சந்தித்தார் சசிகலா. அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் சுக்கிர தசை. கொஞ்ச நாளிலேயே ஜெயலலிதா, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழு உறுப்பினர் எனப் பதவிகளில் அடுத்தடுத்து அமர, டூர் புரோகிராம்கள் அதிகமாகின. சசிகலாவுக்கும் ஆர்டர்கள் குவிந்தன. நெருக்கமும் கூடியது.

ஜெயலலிதாவோடு நெருக்கமாகிவிட்ட சசிகலா, நடராசனைப் பற்றி ஜெயலலிதாவிடம் சிலாகித்து பேசினார். ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய ரோல் வகித்தவர், அண்ணா, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களோடு பழகியவர்’ என நடராசனைப் பற்றி சொல்ல... சசிகலாவைப் போலவே நடராசனும் ஜெயலலிதாவோடு நெருங்கினார். ஜெயலலிதாவோடு நெருக்கமாகி, எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதாவையே உளவு பார்த்து, உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தார் சசிகலா. எல்லா நிலைகளிலும் நடராசன் பின்புலத்தில் இருந்தார். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கும் சகஜமாக போய் வந்து கொண்டிருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ‘‘அம்மு பற்றிய தகவல்களை எந்த நேரத்திலும் என்னிடம் சேர்க்கலாம்’’ என அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் சொன்னதால், சசிகலாவின் தலை ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி தென்பட்டது. ‘‘எம்ஜி.ஆரை சந்திக்க ராமாவரம் போன சமயங்களில் நடராசன், சசிகலா ஆகியோரை பார்த்திருக்கிறேன்’’ என எழுதியிருக்கிறார் வலம்புரி ஜான்.

சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்!

அந்த நேரத்தில் நடராசன், அரசியல் கணக்கு ஒன்றைப் போட்டார். ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியல் வாழ்வு இனி ஜெயலலிதாவுக்குதான்’ என கணித்தார். கட்சியில், ஜெயலலிதாவின் கிராஃப் உயர்ந்து கொண்டிருந்தது. இதை எம்.ஜி.ஆர் அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆர் மீது மனவருத்தம் கொண்டார் ஜெயலலிதா. அதை நடராசன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்குப் ‘பலம்’ சேர்க்கும் காரியங்களில் ‘கணக்காக’ இறங்கினார் நடராசன்.

எம்.ஜி.ஆருக்காக உளவு வேலைகளைப் பார்த்தபோதும், ஜெயலலிதாவின் விசுவாசிகளாகவே இருந்தார்கள் நடராசன் - சசிகலா தம்பதியர். அதற்குக் காரணம், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு. ஜெயலலிதாவின் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களை நேரில் பார்த்ததாலும், அந்தக் கூட்டங்களை வீடியோ கவரேஜ் செய்ததாலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த வாரிசாக ஜெயலலிதா வருவார் என நடராசன் நினைத்தார். அது பலித்தது. எதிர்கால ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரம் செலுத்த, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரையே சமாளிக்க ஆரம்பித்தார் நடராசன். அதுவரை ஜெயலலிதாவைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், ஒவ்வொரு காலகட்டத்தில் நடராசனால் வீழ்த்தப்பட்டனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் நிலையைக் கச்சிதமாகக் கட்டமைத்தார் நடராசன்.

(தொடரும்)