Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?
மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

‘பேச்சுவார்த்தைக்குத் தயார். அலுவலகத்தில் இருக்கிறீர்களா?’ என கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. கொஞ்ச நேரத்திலேயே, கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘என்ன இது புதுப்பழக்கம்?” என்றோம்.

‘‘அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பித்தானே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அம்மா அணியின் குழுத் தலைவர் வைத்திலிங்கம், புரட்சித்தலைவி அம்மா அணியின் குழுத் தலைவர் கே.பி.முனுசாமிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொல்லி இருந்தாரே!”

‘‘பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது?’’

‘‘இரண்டு அணிகளும் இணையுமா என்பது சந்தேகம் தான். ‘இரண்டு நிபந்தனைகள்’ என்று வெளியே சொன்னாலும், வெளியே சொல்லாத சில நிபந்தனைகளை எடப்பாடி தரப்பிடம் ஓ.பி.எஸ் தரப்பு வைத்துள்ளனர். அதற்கெல்லாம் அங்கிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லையாம். அதுதான் பேச்சுவார்த்தையின் துவக்கத்திற்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் தற்போது 31 பேர் உள்ளார்கள். இன்னும் நான்கு பேரை அமைச்சரவையில் சேர்க்கலாம். அந்த நான்கு பேரும் தன்னுடைய ஆளாக இருக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ் கணக்கு போட்டார் அதற்கு எடப்பாடி தரப்பு ஒத்துவராததுதான் சிக்கலுக்குக் காரணமாம்.”

‘‘ஓ!”

‘‘கடந்த வாரம்வரை, ‘நான் அமைச்சராக இருந்துகொள்கிறேன், முதல்வர் பதவி வேண்டாம்’ என்று சொல்லிவந்தார் எடப்பாடி. அதனால் கொஞ்சம் குஷி மூடில் இருந்தது ஓ.பி.எஸ் தரப்பு. ஆனால் கடந்த வார இறுதியில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அதன் தொடர்ச்சியாக உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் முக்கிய அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். ‘பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம், அவர் அணியில் பாண்டியராஜனுக்கோ, செம்மலைக்கோ கொடுக்கக்கூடாது. வேண்டு மானால் ஆறுக்குட்டிக்கு அமைச்சர் பதவி தரலாம்’ என்று அந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளார்கள். அதேபோல் கே.பி.முனுசாமிக்கு வாரியப் பதவி தரவும் மறுத்து விட்டார்கள். செம்மலைக்கு பதவி தருவது, சொந்த மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம். பொதுச் செயலாளர் பதவியையும் பன்னீருக்கு விட்டுத்தரும் மனநிலையில் இல்லையாம்.  இந்த தகவல் தெரிந்து, ஓ.பி.எஸ் தரப்பு டென்ஷனாகிவிட்டது.’’

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அப்படியா?”

‘‘இதன்பிறகுதான், ‘சசிகலா குடும்பத்தினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையில் உறுதியானது பன்னீர் அணி. ‘தினகரன் அவராகவே ஒதுங்கிவிட்டார். சசிகலா சிறையில் இருக்கிறார். டாக்டர் வெங்கடேஷ், நாம் கேட்டாலே கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதிக்கொடுத்துவிடுவார். அதுவே போதுமானது. யாரும் கட்சியில் தலையிடமாட்டார்கள்’ என எடப்பாடி அணி சொல்கிறது. ஆனால், ‘இளவரசியின் மகன் விவேக்கும், திவாகரன் மகன் ஜெயானந்தும் கடந்த 2011 மே மாதம் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள். அவர்களையும் நீக்க வேண்டும்’ எனப் பிடிவாதம் பிடிக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால் எடப்பாடி தரப்பு திங்கள்கிழமை கொஞ்சம் இறங்கிவந்து, ‘பாண்டிய ராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்’ என்ற முடிவை எடுத்துள்ளார்கள். அந்தத்  தகவலை,  அங்கிருந்தே பன்னீர் வீட்டுக்கும் சொன்னார்கள்.’’

‘‘தினகரன் இதில் என்ன முடிவில் இருக்கிறார்?”

‘‘தினகரன் தரப்பில் ஏற்கனவே ஒரு டிமாண்ட் வைக்கப்பட்டிருந்ததாம். ‘என்னுடைய விசுவாசிகள் 15 பேர் எம்.எல்.ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருந்தால்தான் கட்சியில் இருந்து ஒதுங்குவேன்’ என்று சொல்லி இருந்தாராம். இதனால் அவரது ஆதரவாளர்களும் தெம்பாக உள்ளார்களாம். ‘ஒதுங்கிவிட்டேன்’ என தினகரன் சொன்னாலும், அவரின் பிடி கட்சிக்குள் இருக்கிறதாம். அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-க்களும் நிர்வாகிகளும் பேசுவதையும், கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ இன்னமும் தினகரனை ஆதரிப்பதையும் வைத்து இதற்கு வலு சேர்க்கிறார்கள். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் கடந்த 24-ம் தேதி வந்த தலைப்புச் செய்தி, ‘தீயசக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மா வகுத்த வழியில் கழகத்தையும் ஆட்சியையும் காத்திட சின்னம்மா - டி.டி.வி.தினகரனுக்குத் தோளோடு தோள் நிற்போம்’ என்பதுதான். ‘தீயசக்தி’ என யாரைச் சொல்கிறார்கள்? பன்னீரையா...எடப்பாடியையா? இந்தச் செய்திக்குக் கீழேயே எடப்பாடி பழனிசாமி பற்றிய செய்திகள் அதிகம் இருக்கின்றன. ‘நான் ஒதுங்கிவிட்டேன்’ என்று தினகரன் சொல்கிறார். ஆனால், அவருக்குத் தோள் கொடுப்போம் என்று சொல்கிறது நமது எம்.ஜி.ஆர். அதனால் இணைப்பு, பேச்சுவார்த்தை எல்லாம் சில நாட்களுக்குச் சம்பிரதாயமாகத்தான் இருக்கப்போகின்றன என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

‘‘இதில் டெல்லி என்ன நினைக்கிறது என்பதும் முக்கியம் அல்லவா?”

‘‘ஆம்... ‘கறாராக இருக்காமல், கொஞ்சம் இறங்கிவந்து பேசலாம்’ என பன்னீர் அணியில் ஒரு தரப்பினர் அட்வைஸ் செய்கிறார்களாம். ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்துவிட்டு, பன்னீர் அணியில் இருக்கும் சிலரின் மனதை அசைத்துப்பார்க்கும் வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. இதுதான் பன்னீரைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேசமயம், பன்னீருக்கு திங்கள்கிழமை முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி இருப்பதையும் கவனியும்.’’

‘‘ஆமாம். இன்னொரு பக்கம் டெல்லியில் வைத்து தினகரனுக்கும் விசாரணை வளையம் இறுகுவது போல் தெரிகிறதே?”  

‘‘ஆமாம். இதுவரை வருமானவரித் துறை ரெய்டு, ஃபெரா வழக்கு விசாரணை என சென்னையில்தான் இதுவரை டெல்லியின் ‘மூவ்’கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. இப்போது தினகரனை டெல்லிக்கே அழைத்து விசாரணை நடத்துவது புது ஸ்டைல். சசிகலா சிறைக்குப் போன அன்றுதான், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார் தினகரன். சசிகலாவை முதல்வர் ஆகவிடாமல் தடுக்க முடிந்தவர்களால், தினகரன் அ.தி.மு.க-வில் கோலோச்சுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக அறிவித்த அந்த நாளில்தான் அவரின் வீழ்ச்சி தொடங்கியது. இரட்டை இலை  முடக்கத்துக்குப் பிறகும் தினகரன் முடங்காமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த நிலையில்தான் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி நடந்த எல்லா அதிரடிகளும் சொல்லும் ஒரு செய்தி, சசிகலா குடும்பத்தைச் சுத்தமாக மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை என்பதுதான். ‘தினகரனை அ.தி.மு.க-வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்கிற கோரிக்கையைப் பன்னீர் அணியினர் வைத்தாலும், அதே மனநிலையில்தான் பி.ஜே.பி-யும் இருந்தது.

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் தினகரன் இறங்கியது முதலே அவர் மீது கண்வைத்துவிட்டார்கள். தமிழகத்தில் இருந்தபடி இதுவரை எல்லாவற்றையும் எதிர்கொண்ட தினகரனை டெல்லிக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே இரட்டை இலைச் சின்ன பேர வழக்கு, டெல்லியில் போடப் பட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறது’’

‘‘இந்த வழக்கு இவ்வளவு சீரியஸ் ஆக என்ன காரணம்?”

‘‘ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு ஸ்டேட்மென்ட்தான் காரணம் என்கிறார்கள் டெல்லியில். ‘கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்ய இவ்வளவு நடவடிக்கை எடுத்ததாக  சொல்கிறீர்கள்? ஒரு இடைத் தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டு அறிவிப்பு வெளியிடுகிறது. அப்படியானால், ஆர்.கே. நகரில் வழங்கப்பட்டது வெள்ளைப் பணமா?’ என்று சிதம்பரம் நக்கல் செய்திருந்தார். இது பிரதமர் மோடியை முகம் சிவக்க வைத்துவிட்டதாம். ‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என பல அதிகாரிகளைக் கூப்பிட்டு காய்ச்சி எடுத்தாராம். இதைத் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரமானது. அதில்தான் சுகேஷ் சந்திராவிடம் தினகரன் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் சிக்கியிருக்கின்றன. உடனே சுகேஷை கஸ்டடியில் எடுத்துவிட்டார்கள்.’’

‘‘ஆனால், தினகரன் இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்து மறுத்து வருகிறாரே?”

‘‘டெல்லியில் மூன்றாவது நாள் விசாரணைக்குப் பிறகு, தனது பிடிவாதம் தளர்ந்து அவர் உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்ததாக தகவல்’’ என்ற கழுகாரிடம், நமது டெல்லி நிருபர் அனுப்பிய கட்டுரையை படிக்கக் கொடுத்தோம். ஒரே மூச்சில் படித்து முடித்தவர், ‘‘டெல்லி போலீஸ் வலையில் தினகரன் சிக்கியதற்கு பின்னணி என இரண்டு பேரைக் கைகாட்டு கிறார்கள். ஒருவர், டெல்லியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இன்னொருவர், டெல்லிக்கு என தினகரன் சமீபத்தில் நியமனம் செய்த கட்சி பிரமுகர்.’’

‘‘இவர்கள் என்ன செய்தார்கள்?”

‘‘இரட்டை இலையை மீட்டுவிட தினகரன் காட்டிய வேகம்தான் அவரை சிக்க வைத்து விட்டது. பல தரப்பிடம் பேசிய நிலையில்தான் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். வெளி மாநிலத்தைச் சேர்ந்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். தேர்தல் தொடர்பான பணியை கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் செய்துகொண்டிருந்தார். அப்போது நடந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். தமிழகத்தில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் உதவினார் என அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிறகு டெல்லி சென்றுவிட்டார். இப்போதும் தேர்தல் தொடர்பான டியூட்டிதான் பார்க்கிறார். அந்த அதிகாரிதான், ‘மத்திய அரசு உங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது. அரசியல் ரீதியாக இந்தப் பிரச்னையைச் சரி செய்ய முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் பேசி சரி செய்யுங்கள்’ என ஐடியா கொடுத்திருக்கிறார்.’’

‘‘அதன்பின் என்ன ஆனது?”

‘‘டெல்லி அதிகார மட்டத்தில் பல வேலைகளை எளிதாக முடித்துக்கொடுக்கும் தரகர்கள் உண்டு. சுகேஷ் அப்படிப்பட்ட ஒருவர்தான். இவரிடம் பேசி காரியத்தை முடிக்கலாம் என வழிகாட்டியவர், தினகரன் இப்போது முழுமையாக நம்பி டெல்லி பதவியைக் கொடுத்திருக்கும் பிரமுகர்தான். ஒரு வழக்கறிஞரும் உதவியதாகச் சொல்கிறார்கள். இவர்கள் வழிகாட்டலில்தான் தினகரன் தரப்பு சுகேஷ் சந்திராவை தொடர்புகொண்டு டீலிங் பேசியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சரிகட்ட வேண்டும் என பணம் கேட்டிருக்கிறார் சுகேஷ். தினகரன் நடவடிக்கைகளை ஏற்கெனவே வாட்ச் செய்து கொண்டிருந்தது மத்திய உளவுத்துறை. டெல்லியில் டீலிங்கை ஆரம்பித்தபோதே, டெல்லி போலீஸின் ‘மாநிலங்களுக்கு இடையிலான குற்றப்பிரிவு’ களத்தில் இறங்கிவிட்டது. அந்த தொடர்பில் இருந்தவர்களின் அத்தனை போன்களும் டேப் ஆக ஆரம்பித்தன. பணப்பரிமாற்றம் நடைபெறும் வரை அமைதியாக இருந்த போலீஸ், அட்வான்ஸ் தொகை கைமாறியபிறகு கச்சிதமாக நடவடிக்கை யில் இறங்கியது.”

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

‘‘ஓஹோ.”

‘‘இந்த நிர்வாகரீதியான நடவடிக்கை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தபோதே, அரசியல்ரீதியாக நடவடிக்கைகள் இன்னொரு பக்கம் தொடர்ந்தன. கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் - அதாவது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக வழக்குப் பதிவானபோதுதான் தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவை அமைச்சர்கள் எடுத்தார்கள். தினகரனும் ‘நேற்றே ஒதுங்கிவிட்டேன்’ என அதிரடி கிளப்பினார். ஆனால், மத்திய அரசு ஒதுங்கவில்லை. தினகரனுக்கு சம்மனை நேரில் வந்து கொடுத்தது டெல்லி போலீஸ். தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இருவரையும் அவரோடு விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த இருவரும்தான் தினகரன் சார்பாக சுகேஷிடம் டீல் பேசியவர்களாம். முதல் நாள் விசாரணையிலேயே ஜனார்த்தனன் மிரண்டு போய் பல உண்மைகளைச் சொல்லிவிட்டாராம்.”

‘‘என்ன சொன்னாராம்?”

‘‘ஆரம்பத்தில் ஜனார்த்தனன், ‘சுகேஷ் யார் என்றே தெரியாது’ என மழுப்பியுள்ளார். ஆனால், விசாரணை அதிகாரிகள் சில படங்களை அவரிடம் காட்டி இருக்கிறார்கள். அவை, சுகேஷை ஜனார்த்தனன் சந்தித்துப் பேசியபோது எடுத்த படங்கள். அதையெல்லாம் பார்த்து திகைத்துப் போன ஜனார்த்தனன், ‘நெருக்கமான பழக்கம் எல்லாம் இல்லை. அவரைத் தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததால், சும்மா பேசிக்கொண்டிருந்தோம். பணம் ஏதும் கொடுக்கவில்லை. நட்பின் அடிப்படையில்தான் பேசினோம்’ என்றாராம். அப்போது அவரைப் பார்த்து மர்மப்புன்னகை புரிந்த டெல்லி போலீஸார், ஒரு ஆடியோ டேப்பை ஓடவிட்டார் களாம். அது, ஜனார்த்தனன் போனிலிருந்து சுகேஷோடு நடத்தப்பட்ட முழு உரையாடல். எல்லாவற்றையும் கேட்டு முகம் வெளிறிப் போன ஜனார்த்தனன், தலையைக் குனிந்துகொண்டாராம். அதன்பிறகு அவர் வாயில் இருந்து வந்ததெல்லாம் உண்மைகள்தான். கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் அவர் ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘இதில் மல்லிகார்ஜுனா யார்?”

‘‘அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். சுகேஷின் பல காரியங்கள் கர்நாடகாவை மையமாகக் கொண் டவை. இந்த மல்லிகார்ஜுனாவை தினகரனுக்கு முன்பே தெரியுமாம். பணம் கைமாறியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்கிறார்கள். இரண்டாம் நாள் விசாரணையின் போது ஒரே அறையில் தினகரன், ஜனார்த்தனன், மல்லிகார்ஜுனா ஆகிய மூன்று பேரும் இருந்திருக் கிறார்கள். வழக்கமாக இப்படியான விசாரணைகள் சில மணி நேரங்களில் முடிந்து விடும். ஆனால், தினகரனிடம் திணறத் திணற விசாரணை நடத்தியிருப்பதுதான் பலரின் கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறது. டெல்லி தனி மாநிலம் என்றாலும், டெல்லி போலீஸ் முழுக்க மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், பல மாநில கிரிமினல்களை விசாரித்து அனுபவம் பெற்றவர்கள். கிட்டத்தட்ட களைத்துப் போகும் அளவுக்கு ஒரே மாதிரியான கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு, பதில்களை வாங்குவதில் சாமர்த்திய சாலிகள். தினகரனை அப்படித்தான் கரைத்தார்கள். ‘சுகேஷ் ஒரு நீதிபதி என என்னிடம் அறிமுகம் செய்தார்கள். அதனால்தான் சந்தித்தேன்’ என தினகரன் ஒப்புக்கொண்டதாகத் தகவல். மூன்றாவது நாள் விசாரணை முடிந்தபிறகு, ‘டெல்லியிலேயே தங்கியிருங்கள். நாங்கள் லீகல் ஒபீனியன் வாங்க வேண்டி இருக்கிறது’ என்று சொல்லி அனுப்பினார்களாம்.’’

‘‘கைது நடவடிக்கை இருக்கும் என பேச்சுகள் கிளம்புகிறதே..?’’

‘‘விசாரணையில் எங்காவது ஒரு பிடி கிடைக்குமா என டெல்லி போலீஸ் சிண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிடி கிடைத்த அடுத்த நிமிடமே கைது நடவடிக்கை பாயும் என்கிறார்கள். அவருடைய துணைப் பொதுச் செயலாளர் பதவி ராஜினாமா அறிவிப்பை வைத்து அவர் மீது கைது நடவடிக்கை இருக்கலாம் என்பதுதான் டெல்லியில் இப்போது பேச்சு” என்றவர், டேபிளில் வைத்த மோரை ஒரே மூச்சில் குடித்து, காலி செய்தார்.

மிஸ்டர் கழுகு: ஓடியது டேப்... ஒப்புக்கொண்டார்... கைதாகிறார்?

தமிழகம் முழுக்க முழு அடைப்பு நடக்கும் செய்திகளும், தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியினர் கைது செய்திகளும் டி.வி-யில் வந்துகொண்டிருக்க, ‘‘தி.மு.க தரப்பு எப்படி இருக்கிறது?” என்று கழுகாரிடம் கேட்டோம்.

‘‘விவசாயிகளை முன்வைத்து நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம், அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டம், பந்த் என எல்லாவற்றையுமே தேர்தல் கூட்டணியாக மாற்ற நினைக்கிறது தி.மு.க. சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை பொதுக்கூட்டம் அதையே உறுதிப்படுத்தியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற அந்த மேடை பி.ஜே.பி-யை பிய்த்து எடுத்தது. திருமாவளவன், தி.மு.க-வின் தலைமைக் கழக பேச்சாளர் போலவே மாறிப் பேசினார். ‘மோடி கையில் உள்ள கண்ணாடிப் பாத்திரம் போல அ.தி.மு.க உள்ளது. அ.தி,மு.க-வைச் சிதறடிக்கும் மோடியால் தி.மு.க-வை ஒன்றும் செய்ய இயலவில்லை’ என திருமாவளவன் பேசியபோது, கி.வீரமணி அதை வழிமொழிந்தார். ‘தேர்தல் கூட்டணியா என சிலர் பேசுகிறார்கள். அப்படி இருந்தால் என்ன தப்பு?’ என வெளிப்படையாகவே அறிவித்தார் வீரமணி. ‘திருமணத்துக்கு முன் நிச்சயதார்த்தம் போல, கூட்டணிக்கு முன்பு இதை  ஒருங்கிணைவாக பார்க்கிறேன்’ எனச் சொன்னார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘அ.தி.மு.க-வை சசிகலாவின் பினாமி ஆட்சி என்பார் ஸ்டாலின். இனி அதை பி.ஜே.பி-யின் பினாமி ஆட்சி என அழையுங்கள்’ என கோரிக்கை வைத்தார். ‘இனி நான் அவ்வாறே அழைக்கிறேன்’ என உறுதி கொடுத்த ஸ்டாலின், ‘இவர்கள் தமிழ்நாட்டை மோடியிடம் அடகு வைத்துவிட்டனர். விவசாயப் பிரச்னைகளைக் கடந்து மக்களுக்கான பொதுப் பிரச்னைகளிலும் இணைந்து போராடுவோம்’ என்றார். உள்ளாட்சித் தேர்தல்வரை இந்த வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின்’’ என்று சொன்ன கழுகார், சிறகை விரித்தார்.

படங்கள்: கே.ஜெரோம்
அட்டை கிராஃபிக்ஸ்: பிரேம் டாவின்ஸி

டாஸ்மாக்கை திறக்க பைபாஸ் ரூட்!

ச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க இன்னொரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்திருக்கிறது தமிழக அரசு. மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்குள் வரும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் டெக்னிக்கே அது.

குடிநீர், சாக்கடை போன்ற வசதிகளைச் செய்ய நினைக்கும்போது, நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி வாங்குவது கஷ்டமாக இருக்கிறதாம். இதற்காக, சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக தமிழக அரசு சொல்கிறது. இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறை, எல்லா மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ‘நீங்களே இதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றி 25-ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கும் வழியாக, கடந்த 2016 நவம்பர் 11-ம் தேதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒரு கதை சொல்கிறார்கள். இதைச் செய்தால், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் மூடிய டாஸ்மாக் கடைகளை, அதே இடத்தில் திறந்துவிடுவது சாத்தியம்.

‘உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளே இல்லாதபோது எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும்’ என தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி இந்த விவகாரத்தில் கோர்ட் படியேறி இருக்கிறார்.

டாஸ்மாக்கை திறப்பதற்கு பைபாஸ் வழிகளைக் கண்டுபிடிப்பதில்தான் தமிழக அரசு தனது ஒட்டுமொத்த ஆர்வத்தையும் காட்டிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism