Published:Updated:

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

படங்கள் : ப.சரவணகுமார்

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்
உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

மொத்தம் ஏழு குடித்தனங்கள். அம்மையும் அண்ணியும்தான் குடித்தனங்களின் பிரதான தலைகள். அண்ணி என்றால், எனது அண்ணி அல்ல. எல்லோருக்குமான அண்ணி. அண்ணி எனும் பெயரில் அன்னபூரணி. சனிக்கிழமைகளில் குடித்தன வாசலைப் பார்க்க வேண்டும். ஞாயிறுகளின் விருந்துக்கான வாசலில் பெண்கள் பரபரத்துக்கொண்டிருப்பார்கள். ஏழு வீட்டு அரிசியும் உளுந்தும் தண்ணீரில் குளிர்ந்து ஒரு பதத்துக்கு வந்திருக்கும். வாசலில் ஒரே ஆட்டுஉரல்தான். வெயில் தாழ, அம்மையும் அண்ணியும் அத்தைகளும் ‘ருப்பு’க் கல்லின் அருகே சுற்றிலும் அமர்ந்துகொள்வார்கள். ‘ருப்பு’க் கல்லை கழுவுகிறபோதே, மறுநாளுக்கான தோசையின் வாசம் நாசியில் வந்துபோகும். பேட்டையின் கதைகளோடு பலரது வண்டவாளங்கள் மாவோடுமாவாக அரைபட்டுக் கொண்டிருக்கும்.

ஞாயிறுகளில் இட்லிச் சட்டியை வைக்கோலால் தேய்த்துக் கழுவிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். எனக்குப் பிடிக்குமே என்று வேர்க்கடலைச் சட்னியை அம்மியில் மையாக அரைத்துக் கொண்டிருப்பாள் அம்மா. அப்போதுதான் வாசலே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பையோடு உள்ளே நுழைவார் கங்காதர மாமா. அப்புறம் ஏது உறக்கம்? ஜோட்டுப் பயல்களோடு மாமாவை முற்றுகை இடுவோம். மறக்காமல் தேன்மிட்டாய்களைக் கொடுத்துவிட்டு, அண்ணிக்குத் தெரியாமல் குதிரை படம் போட்ட பிராந்திப் புட்டியைப் பதுக்கிவிடுவார். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, வெற்றுடம்போடு கையில் அரிவாளுடன் தயாராவார் மாமா. அண்ணி, பெரிய சட்டியைக் கொண்டுவந்து வைக்கும். பையைச் சுருக்கு முடியிலிருந்து அவிழ்த்து சட்டியில் பொத்தெனப் போடுவார் மாமா. நன்றாகச் சிவந்து கனிந்து களிகூர்ந்து காத்துக்கொண்டிருக்கும் ‘பெருசை’ (மாட்டுக்கறியைப் பேட்டையில் பெருசு என்றுதான் சொல்வார்கள்) ஒரு குழந்தையைப்போல குளிப்பாட்டிக் கொண்டிருப்பாள் அண்ணி.

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுவிப் பதம்பார்த்தத் துண்டங்களைச் சல்லிசாக நறுக்கி, சட்டியில் வைப்பார் மாமா. மற்றொருபுறம்,  வால் சூப்புக்கான மசாலாவையும், கறித்தொக்குக்கான மசாலாவையும் தனித்தனியாக பத்மா அத்தை அரைப்பாள். மிளகா, தனியா, மல்லி, மிளகு, சீரகம், போன்றவற்றை அம்மியில் குழைத்து அரைத்து வெளியேறும் வாசம், பக்கத்துக் குடித்தன வாசலின் கதவுகளைத் தட்டி ‘வா... வா...’ எனச் சொல்லும். ஓர் அடுப்பில் சூப்பும், மற்றோர் அடுப்பில் தொக்கும் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதே வாழ்வின்

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

வரமெனக்கொண்டிருப்போம். பத்மா அத்தை பெரிய உருண்டையாக மசாலாவை உள்ளங்கைகளில் ஏந்தி வந்து சூப்பில் போடுவாள். ஏற்கெனவே பெருசின் வால், பொதக்பொதக் எனக் கொப்பளித்துக் கொண்டிருக்க, இந்த மசாலாவின் சேர்க்கையும் சேர்த்து ஒரு ரசவாத வாசத்தைக் கிளப்ப, எங்கள் வயிறுகள் கதகளி ஆடும். எங்களின் தீரா வேட்கையை மாமா புரிந்துகொள்வார். “ஏண்டி மல்லி... கொழந்தைங்களுக்கு ஊத்திக் குடேன்... எம்மா நேரமா நின்னுக்கினு இருக்குதுங்க...” என்று கொஞ்சம் அதட்டும் தோரணையில் சொல்வார். இப்படி அண்ணியை அதட்டிப் பேசினால், ‘குதிரைப் படம்’ பாதியைத் தாண்டிவிட்டது என்று பொருள். “கொதிக்கவேணாங்... பச்சையாக் குடுத்துப் பேதி ஆவணுமா புள்ளிங்களுக்கு... அதுசரி, கங்காதரா காத்தாலயே ஒரு ரவுண்டு ஊத்திக்கினியா” என்று அண்ணி குதிரை மேட்டரைக் கேட்க, மாமா பதுவிசாகக் கழண்டுகொள்வார். பொன்னிறத்தில் கறித்தொக்கும், செந்நிறத்தில் வால் சூப்பும் சமைக்கும் சூட்சுமம் அண்ணிக்கு மட்டுமே தெரியும். சமையலின் சுவையே சமயத்தில்  அடுப்பிலிருந்து இறக்கிவைப்பதுதான் என்பதை அண்ணி அறிவாள். காம்பவுண்டில் வட்டமாக அமர்ந்தபடி ஊதி ஊதிக் குடிக்கும் மாட்டுவால் சூப்பின் மணமும் காரமும் கண்ணில் வழிந்துகொண்டிருக்க, எங்களின் தட்டுகளில் ஒரு கரண்டி கறித்தொக்கை வைத்துவிட்டுப் போவாள் அண்ணி எனும் அன்னபூரணி.

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

பேட்டையின் பிரதான உணவுகளில் ஒன்று ‘பெருசு’ என்கிற மாட்டுக்கறி நண்பர்களே. எங்களின் பேரிச்சம் பழங்களும் ஆப்பிள்களும் மாட்டுக்கறியாகத்தான் இருந்தது/இருக்கிறது. ‘உழைக்கிறவனுக்கு ஊறுகாயைவைத்து ஒப்பேற்ற முடியாது’ என்பது சொல். எளியவர்களின் உணவாக மாட்டுக்கறி இருப்பதால்தான் என்னவோ, அதிகாரத்தின் கரம் தன் சூழ்ச்சிகளைக் கொண்டு அதைத் தடுக்கப்பார்க்கிறது. காலங்காலமாகப் பறையடித்து, மாடுபிடித்து, மாடடித்து உண்டு செழித்த பரம்பரையின் வழித்தோன்றல்களுக்கு எல்லா கறிகளும் கறிதான். கறிகளுக்கும் உண்டோ வர்ணமும் பேதமும்.

பேட்டையில் உணவை உண்டு திளைப்பது மட்டுமல்ல, உணவை வைத்தே திருஷ்டி கழிப்பதும் உண்டு. அதற்கு பெயர்தான் ‘தேசம்மாச் சோறு’. வடசென்னை, வங்காள விரிகுடா கடலின் மடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நகரம். எங்களின் கடல் தாய்தான் தேசம்மா. ஆகவேதான், பேட்டையில் தேசப்பன்களும் தேசம்மாக்களும் பெயர்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். சரி, தேசம்மா சோறுக்கு வருவோம். குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் இருந்தால், உடல் மெலிந்து சோகையாக இருந்தால், கண்திருஷ்டி பட்டுவிட்டது என தேசம்மா சோறு போடுவதென நேர்ந்துகொள்வார்கள். குழந்தையைக் கடலின் மடியில்வைத்து தேசம்மாவிடம் வேண்டிக்கொள்வார்கள். ஒரு சொம்பில் கடல் தண்ணீரை எடுத்துவந்து, வீட்டில் தெளித்துச் சுத்தபத்தமாக மூன்று நாள்கள் இருந்து, அக்கம்பக்கத்துக் குடித்தன வாசலுக்குச் சொல்லிவிடுவார்கள். கல்லடிபட்டாலும் கண்ணடிபடக் கூடாது என்பதுதான் பேட்டையின் நம்பிக்கை. கண்ணடியைக் கழிப்பதே தேசம்மா சோறின் தத்துவம். எல்லா பெண்களும் தூக்குச்
சட்டியுடன் வந்துவிடுவார்கள். தேசம்மாவுக்கு முன்னால் ஒரு பெரிய இலையைப் போட்டு, ஓர்அண்டா சோற்றை அதில் கொட்டி, சமைத்துவைத்திருந்த மீன்குழம்பு, கருவாட்டுக் குழம்பு, கறிக்குழம்பு, காரக் குழம்பு என நான்கு குழம்புகளையும் சோற்றில் ஊற்றி மொத்தமாகப் பிசைந்துவைப்பார்கள். பேட்டையின் மூதாட்டி ஒருவர், கற்பூரத்தைக் காட்டி, குழந்தைக்குத் திருநீறு இடுவாள். அப்படியே தேசம்மா சோற்றை ஒரு பிடி எடுத்துக் குழந்தைக்கு ஊட்டி விடுவாள். தேசம்மாவே வந்து ஊட்டி விட்டதாக அதற்குப் பொருள். பிறகு, ஒவ்வொருவராகக் குழந்தைக்குச் சும்மனாங்காட்டியும் ஊட்டுவதாகப் பாவனைசெய்வார்கள். பெண்கள் கொண்டுவந்த தூக்குச்சட்டியில் இரண்டு கைகள் தாங்கும் அளவுக்குப் பெரிய உருண்டையாகப் பிடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து அனுப்புவார்கள். இப்படி எல்லோர் வயிறும் குளிரும்படிக் கொடுத்து அனுப்பினால், பிறகு பிள்ளைக்கு எவர் முன்னிலையிலும் என்ன சோறு ஊட்டினாலும் கண்ணடிபடாது என்பது பேட்டையின் பாரம்பர்யங்களில் ஒன்று. நால்வகைக் குழம்போடு தேனாகக் குழைந்து உள்ளோடும் தேசம்மா சோறை நினைத்தாலே, நர்த்தனமாடுகிறது சுவை நரம்புகள் அத்தனையும்.

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

தேசம்மா சோறிலிருந்துதான் ஆடி மாதங்களில் பாளையத்தம்மனுக்குப் படைக்கப்படும் கும்பச்சோறும் வந்திருக்கக்கூடும். இதிலிருந்துதான், ‘அச்சுச் சோற்றை’ உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். மாட்டுக்கறியை நன்கு சுக்காவாக்கிக்கொள்ள வேண்டும். கறி, பொன்னிறத்தில் சிவந்து களிகூர வேண்டும். நல்ல சுடுசோற்றில் கறி சுக்காவைப் போட்டுச் சூட்டோடுசூடாகப் பிசைய வேண்டும். 

பிசைந்துகொண்டிருக்கும் போதே, ஏற்கெனவே வறுத்துவைத்திருந்த மீன் துண்டங்களை அதில் போட வேண்டும். மீண்டும் நன்றாகப் பிசைந்து, சிறு நெருப்பில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையிட்டு தாளித்து, அதில் கொட்டி ஒவ்வோர் உருண்டையாகப் பிடித்துச் சிறையில் கொடுப்பதுபோல ‘அச்சு’செய்து தையல் இலையில் வைத்துக் கொடுப்பார்கள். பேட்டையில் மாலை வேளைகளில் வண்டியில் வரும் இந்த அச்சுச் சோற்றுக்கு ஏக கிராக்கி. பொடிசில் இருந்து பெருசுகள் வரை ‘ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’போல ஒரு கை பார்த்துவிடுவார்கள். நாக்கை நம்பி வாழ்பவர்களுக்கு இந்த அச்சுச் சோறு, அசலான சோறு.

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்


இதே மாதிரியான மாலை வேளைகளில், பக்ருதீன் பாயின் பாயாசக் கடை வருவதற்கு முன்பே அவரது டேப் ரெக்கார்டரில், ‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்... என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்’ என்ற பாடல் எங்களுக்கு வந்து சேரும். ஜெய்சங்கரின் தீவிர விசிறி பக்ரூதீன் பாய். அவர் ஒருவரால்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் வெள்ளந்தியான மனிதர். ஜெய்சங்கரைப்போலவே சட்டைக் கைகளை மடித்துவிட்டிருப்பார். முடியைக்கூட சுருள்சுருளாக மடித்து வாரியிருப்பார். தள்ளுவண்டியின் முகப்பில் கௌபாய் வேஷத்தில் ஜெய்சங்கர் யாரையோ நோக்கிச் சுட்டுக்கொண்டிருப்பார். ஒரு கொட்றாவில் ஜவ்வரிசிப் பாயசம் வைத்திருப்பார். முந்திரிகளோடு பாயசத்தை வாங்குவதற்காகவே ஜெய்சங்கரைப் புகழ்ந்துவைப்போம். மனம் குளிர்ந்துபோகும் பாய், கரண்டியை உள்ளே விட்டு ஒரு திருடனைப்போல முந்திரியைப் பிடித்து எங்கள் லோட்டாவுக்குக் கொண்டுவந்து சேர்ப்பார். ‘அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்...’ என்று கொஞ்சம் தமிழும் உருதுவும் சேர்த்து அவர் பாடும்போது அவ்வளவு அழகாக இருக்கும். நாங்கள் முந்திரியை வாயின் ஓரத்தில்வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து, அதற்குத் தோதாகப் பாயாசத்தை உள்ளே தள்ளுவோம். இரண்டும் சேர்ந்தால்... அட போங்கங்க!

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

மீன் பொதுவான உணவாகிப் போனாலும், பேட்டையைப் பொறுத்தவரை  ‘மீன் இல்லாப் பண்டம் குப்பையிலே’தான். விருந்து உபசரிப்பில் மீன் இல்லாமல் ஒப்பேறாது. காற்றில் மிதந்தலையும் கவிச்ச வாசத்தில்தான் கறுப்பர் நகரம் உழன்றுகொண்டிருக்கும். பேட்டையில் ஒரு பழக்கம் இருக்கிறது. வயதுப் பிள்ளைகள் எதையாவது சாப்பிட மறுத்து ஒதுக்கினால், பெருசுகள் ஒரு  உத்தியைக் கையாண்டார்கள்.   ‘டேய் குல்பி ஐஸை.. நைட்டு சாப்புட்டுப் பாரு... சமாசாரத்துல நாலு பல்டி அடிக்கலாம்’ என்று ஒரு குண்டைப் போட்டுவிடுவார்கள். அதிலிருந்து கல்யாணமான கனவான்கள் குல்பியோடு

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

ஒழுகிக்கொண்டிருப்பார்கள். இப்படியாகத்தான் எங்களுக்குள் சமாசார கில்லி என ‘ஆலி’யைச் சொல்லிவிட்டார்கள். ஆலி என்பது நத்தை வகையைச் சேர்ந்தது. கடலின் பாறை இடுக்குகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இதைப் பிடிப்பது சாதாரணக் காரியம் இல்லை. ஆலியைப் பிடிப்பதில் மாறன் கெட்டிக்காரன். பெருசுகளின் பிரசாரத்தால் ஆலி பிடிப்பதில் மாறனின் தலைமையின் கீழ் அணிவகுத்தோம். தலையின் முடியை உச்சிக்குடுமி போட்டுக்கொண்டான் மாறன். ஒரு பிளாஸ்டிக் கவரைத் தலைக்கு உடனடியாக மாட்டிக்கொண்டான். ஏனென்றால், பாறையினுள்ளே இருக்கும் ஆலிகள், தனது ஓட்டை அவ்வப்போது திறந்து பின் மூடிக்கொள்ளும். விஷயம் தெரியாமல் பரட்டைத் தலையுடன் மூழ்கினால், ஓட்டைத் திறக்கும் ஆலியின் வாயில் தலைமுடி சிக்கிக்கொள்ள நேரும். சிக்கிக்கொண்டால், சிறிது நேரம் என்ன நடக்கிறதென்றே புரியாமல் போகும். மூச்சைப் பிடித்துக்கொண்டு ஆலியை முற்றாகப் பாறையிலிருந்து பிடுங்கினால்தான் உயிர் தப்பிக்க முடியும். இல்லையெனில் அவ்வளவுதான்.

பாறையினுள்ளே மூழ்கிப் போக ‘தம்’ இருக்க வேண்டும். ஒருவழியாக சிரத்தையோடு மூழ்கிப் பிடித்த ஆலிகளைக் குண்டானில் போட்டு எடுத்துவந்து சமைப்பதில் இறங்கிவிடுவோம். ஆலியைப் பிடிப்பதில் மட்டுமல்ல, சமைப்பதிலும் மாறன் சமர்த்தன். முதலில் அடுப்பில் இட்லி குண்டாவை வைத்தான். முட்டையைப்போல வேகவைத்தான். பச்சையாக ஆலியை உடைத்தால் முட்டையைப்போலவே சிதைந்த கருதான் நமக்குக் கிடைக்கும். நன்றாக வெந்தவுடன் ஆலியை உடைத்தான். கெட்டியாக வெந்திருந்தது. பின்பு, பதமாக ஆய்ந்து, அறுத்துவைத்தான். ஆலியைத் தொக்கு வைத்தான். ஆறுமுகம் இந்த வறுவலுக்கு ஏற்றாற்போல மாடர்ன் பிரட்டை வாங்கிவந்தான். ‘ஆலி பிரட் சாண்ட்விட்ச்’ சாப்பிட்டு உடல் முறுக்கேறியதைப்போல நாங்கள் நினைத்துக் கொண்டோம். ஆனால், பெருசுகளின் சமாச்சாரக் கதைகள் எல்லாம் எங்களைச் சாப்பிடவைப்பதற்காகத்தான் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டோம். ஆலியைச் சாப்பிட்டால் இளைப்பு (மூச்சுப் பிரச்னை) நீங்கும் என்ற உண்மையையும் பெருசுகள் பின்பாகத்தான் சொன்னார்கள்.

உப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்

இப்படியாக... ஆலி, எலிப்பூச்சி, நத்தை, பச்சைத் தவளை என நாங்களே நேரடியாக வேட்டையாடி சமைத்துச் சாப்பிடும் உணவுகளும், வடசென்னையின் உணவு வகைகளில் ஒன்றுதான். வேட்டை என்றதும் முருகேசண்ணனோடு பச்சைத்தவளை பிடிக்கப்போவதுதான் நினைவுக்கு வருகிறது. குளம் குட்டையென ஒன்றுவிடாமல் தூண்டிலோடு தியானத்தில் இருப்பார்.  தவளை மாட்டியதும் முள்ளிலிருந்து லாகவமாகத் தவளையை விடுவித்து அதன் தோலை உரித்துப்போட்டுவிடுவார். வெளீரெனக் காட்சியளிக்கும் தவளையை, ஆய்ந்து பதம்பார்த்து, மசால் தடவிப் பொரித்து ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேடிப்போய்க் கொடுத்துவிட்டுவருவார் முருகேசண்ணன்.  “என்னா மாரி எளப்புக்கும் அதுதான்பா மருந்து” என்பார். உணவை மருந்தாகப் பயன்படுத்துவதில் பேட்டையில் பெருசுகளும் மருத்துவர்கள்தான். பிள்ளைகளுக்குச் சளி என்றால், மாட்டுவாலை உரலில் நன்கு இடித்து எடுத்த சாறில் சூப் வைத்து ரெண்டு சங்கு ஊற்றிவிடுவார்கள்.

மாட்டுகறியைத் துண்டங்களாக்கி மஞ்சள் தடவி, கல்லு உப்பில் நன்கு ஊறவைத்து, வீட்டுக் கூரையின் மேல் மூன்று நாள்கள் காயவைத்துவிடுவார்கள். கறி கருத்துக் கருவாடு கணக்காக ஒரு பதத்துக்கு வரும். மறுவீட்டுக்காக வரும் புதுமாப்பிள்ளைக்குத் தயாராகும் பிரத்யேக உப்புக்கண்டம் இது. ஒரு குடித்தன வாசலில் உப்புக்கண்டம் குழம்பாகிறது என்றால், ஊரே வாசத்தில் மணந்து பேசும். உப்புக்கண்டக் குழம்புக்கு நெய்ச்சோறு வைப்பார்கள். ஆன்ம விருத்திக்கு உப்புக்கண்டம் சிறந்த மருந்து என பெருசுகள் கண்ணடித்துக் கதை சொல்வார்கள். இந்த வாழ்வின் பேரமுதுகளில் ஒன்றென  உப்புகண்டம் நெய்ச்சோறை நான் சொல்வேன்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை’ பேட்டைவாழ் மக்கள் படித்தார்களோ இல்லையோ, அந்தக் கூற்றின்படி வாழ்கிறார்கள். ஏழு குடித்தனச் சோறும் கறியும் தின்று வளர்ந்தவர்கள் நாங்கள். ‘யாவார்க்குமாம் ஒரு பிடி அன்னம்’ என எங்கள் மூதாதையர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எங்களின் உணவும் வாழும் முறையும் தொன்மங்கள் தொட்டு இப்போது வரை அப்படியே தொடர்பவை. அவையே எங்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism