Published:Updated:

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

படம்: சி.சுரேஷ்பாபு

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

படம்: சி.சுரேஷ்பாபு

Published:Updated:
சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

ங்கள் மகன் ‘அறிவுமதி’ வயிற்றிலிருக்கும்போது ஆரம்பித்த நடுநாட்டுச் சொற்சேகரப் பணி, அவனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது 2007-ம் ஆண்டு டிசம்பரில் முடிந்து அகராதியாக வெளிவந்தது. கிட்டத்தட்ட 3,000 சொற்கள், 400 பழமொழிகள், 200 மரபுத் தொடர்கள் என பெரிய மாக்காணமான வேலை. இயல்புச் சொல்லா, மரபுச் சொல்லா… பெரிய ‘ற’ வருமா சின்ன ‘ர’ வருமா… இந்தச் சொல், வேறெந்த வட்டாரத்திலாவது வந்திருக்கிறதா என அதையும் இதையும் புரட்டிப் பார்த்து, குட்டையைக் குழப்பிக்கொண்டு கிடந்து, அதிலிருந்து வெளியே வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ‘இனிமேல்பட்டு இந்த அகராதி பக்கமே தலை வைச்சுப் படுக்கக் கூடாது” என எரிந்துகொண்டிருக்கிற நிறைவிளக்கை அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக கறாராய் முடிவெடுத்திருந்தேன். காரணம், அகராதி வேலை என்பது கதை, கவிதை, நாவல் படைப்புப் பணிகள்போல ஓர் உற்சாகம் தருகிற வேலை கிடையாது. மிகவும் மனவறட்சி தரும்படியான எழுத்துப் பணி அது. தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள்  அதிலேயே கிடந்ததில் மூஞ்சியில் குத்துகிற மாதிரி அச்சேறி வந்த புத்தகத்தைக்கூடப் பிரித்துப் பார்க்கத் தோணாமல், அப்படியே எறவானத்தில் செருகுகிற மாதிரி தூக்கி பார்வைக்கூட்டில் வைத்துவிட்டேன்.

அதுவரைக்கும் வந்த வட்டாரச் சொல்லகராதிகளிலேயே ‘நடுநாட்டுச் சொல்லகராதி’தான் நல்ல உழைப்பு என்று பார்த்தவர்களும் படித்தவர்களும் சொன்னார்கள். தமிழ், தமிழகராதி வரிசையில் போட்டிக்கு ஏதும் இல்லாத காரணத்தினால், 2007-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசும் அதோடு 20,000 ரூபாயும் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் பரிசு, பாராட்டு எதுவும் அகராதி தயாரிப்பினால் எனக்கு ஏற்பட்ட ஆயாசத்தைத் தணிப்பதாக இல்லை. அதிலிருந்து தப்பிக்கத்தான் ஒரு வேகத்தில் ‘வந்தாரங்குடி’ நாவலை அரிபிரியாய் எழுத ஆரம்பித்திருந்தேன்.

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

ஒரு சாயந்திர நேரத்தில், தோட்டத்தில் குளித்துக்கொண்டிருந்த வூட்டுக்கார அம்மாளிடமிருந்து அதட்டுகிற மாதிரி குரல். “மக்கிட்டி கட்டிக்கிறதுக்குக்கூட இந்தப் பாவாட ஓக்கித இல்ல. நார்நாராக் கிழிஞ்சுபோயிருக்கு. ஒன்ன ஒரு பாவாட எடுத்துகிட்டு வான்னா காதுலயே போட்டுக்க மாட்டங்கற…’’

‘வந்தாரங்குடி’யில் அறிவழகனும் சிகாமணியும் ஒரு வார சாலைமறியல் போராட்டத்தில் தலைமறைவாய் இருக்கிற அத்தியாயத்தை ‘தன்னகடந்து’ எழுதிக்கொண்டிருந்த எனக்கு, மேற்படி குரல் காதில் விழுந்ததும் அதிலிருந்த ‘மக்கிட்டி’ என்ற சொல், பட்டென்று என்னைக் கொக்கிப் போட்டு இழுத்தது. அந்தச் சொல்லை அதற்கு முன்பு கேள்விப்படவில்லை என்றாலும் அது சொல்லப்பட்ட சூழலைவைத்து அதன் பொருளை ஊகித்துக்கொண்டேன்.

பெண்கள் குளிக்கும்போது உள்பாவாடையை, மார்புகளை மறைக்குமாறு உயரே ஏற்றி, இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும் உடையணிமுறை. மார்புகட்டு-மார்கட்டி-மக்கிட்டியாகி இருக்கிறது. ஒரு நல்ல சொல்லைத் தேடிக் கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் அப்படியே எழுதியதைப் போட்டுவிட்டு ஓடி, நடுநாட்டுச் சொல்லகராதியை எடுத்துப் பார்த்தேன். என்னையும் அறியாமல் அந்தச் சொல்லை மேற்படி அகராதியில் சேகரித்திருப்பேனோ என்கிற நப்பாசைதான். ‘ம’ வரிசையில் எடுமுனையிலேயே ‘மக்கிளித்தல்’தான் இருந்தது. மக்கிட்டி இல்லை. என்னவோ, வழியில் கிடந்ததை காலால் இடறிவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விட்ட குற்றஉணர்வு. ஆறு வருடங்கள் உழைத்துத் தொகுத்த அகராதியை அவசரப்பட்டு வெளியிட்டுவிட்ட ஒரு வருத்தம். சரி, வாய்ப்பு கிடைத்தால் மறுபதிப்பில் சேர்ப்போம் என நோட்டில் குறித்துவைத்தேன்.

டுத்து, தண்ணீர் மொள்ள வந்த மாம்பாக்கத்து சின்னம்மாள், தூங்குகிற பிள்ளையைத் தூக்கிவைத்துக்கொண்டு நின்ற மஞ்சுளாவைப் பார்த்துச் சொன்னது,  “கை ஒறக்கம் கண்டுடப்போவுது புள்ளையக் கொண்டுபோயி கீழ கெடத்துடி…”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கை ஒறக்கம்! இடுப்பில், மடியில், கையில் தூக்கிவைத்திருக்கிற நிலையிலேயே தூங்கிப் போய்விடுகிற குழந்தைகளின் உறக்கத்தை  ‘கை ஒறக்கம்’ என்பார்கள். இப்படி தூங்கிப் பழக்கப்பட்டுவிட்டக் குழந்தைகளைப் பாயில், ஏணையில் போட்டால் எளிதில் தூங்காது.

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

இப்படியாக... விடுபட்டது, மறந்தது, புதியது என ‘ஒண்ணுக்கு ரெண்டாச்சி... ஒவுத்திரியத்துக்கு மூணாச்சி’ங்கற மாதிரி எழுதி, மேலும் மேலும் குறித்துவைக்க ஆரம்பித்து பழையபடியே பெரிய அளவில் சொற்சேகரத்தில் கொண்டுபோய் என்னை விட்டுவிட்டது.

எப்போதும்போலவே சொற்சேகரத்தில் ஊர், சொந்த பந்தம், கொல்லைக்காடு என்பதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான இடமாக இன்றளவும் விளங்கிக் கொண்டிருப்பது எங்களது விருத்தாசலம் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக) பணிமனைதான். ஓட்டுநர்களும் நடத்துநர்களுமாய் எல்லாரும் சுத்துப்பட்டு ஊர்க்காரர்கள். குந்திய இடத்திலேயே, எங்கள் ஊரில் உள்ள ஒரு சொல்லுக்கு, அவர்கள் ஊரில் என்ன பொருள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். இப்படித்தான், முதல் பதிப்பில் உள்ள ‘பொதுக்காங்குழி’, ‘பாடத்திருப்பி’, ‘தம்பித்தோழன்’ போன்ற சொற்களைக் கண்டறிந்தேன்.

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்


எலி தப்பித்துச் செல்கிற அவசர கால வழிக்கு எங்கள் ஊரில் (மணக்கொல்லை), ‘விழுக்கான்’ என்று பெயர். (பாத்து நில்லு எலி விழுக்கானால ஓடிடப்போவுது). விசுக்கென்று வழுக்கிக்கொண்டு ஓடுகிறமாதிரி இருப்பதால் மேற்படி பெயர். இதுவே நெய்வேலியை ஒட்டி இருக்கிற எலுமிச்சை மதுரா நடுக்குப்பம் என்கிற கிராமத்தில் அதற்கு ‘பொதுக்காங்குழி’ என்று வழங்கப்படுகிறது. ‘பொதுக்கென்று பொத்துக்கொண்டு ஓடுதல்.’ (சொல் உபயம்: அ.குமார், நடுக்குப்பம்.)

பிணத்தின் வசத்தை மாற்றி எடுத்துச் செல்கின்ற சுடுகாட்டின் நுழைவாயிலுக்கு எங்கள் ஊரில், ‘அரிச்சந்திரன் மொடக்கு’ என்று பெயர். (அரிச்சந்திரன் மொடக்குக்கிட்ட இருக்கிற காட்டாமணி அடம்ப, ஏரிவேல சனங்கள வுட்டு மொதல்ல வெட்டச் சொல்லு). அதற்கு அடுத்து இருக்கிற சுடுகாடு முழுவதும் மயானத்தைக் காவல்காக்கிற அரிச்சந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் மேற்படி வழக்கம். இந்த இடத்தில்தான் அவனுக்குச் சேரவேண்டிய கால்பணத்தைச் செலுத்துவார்கள். உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள செங்குறிச்சியில் இது ‘பாடத்திருப்பி’ என்று வழங்கப்படுகிறது.(உபயம்: செங்குறிச்சி முருகன்).

டிக்கடி தனது குறியைப் பிடித்துக்கொண்டிருக்கும் ஆண் குழந்தைகளின் பழக்கத்தை மாற்ற அரைஞாண் கயிற்றில் கோர்த்துக் கட்டப்படும் மரத்தால், வெள்ளியால், தங்கத்தாலான குறி போன்ற ஒரு அணிகலனுக்கு ‘குஞ்சித்தாயத்து’ என்று பெயர். (புள்ளைக்கி ஒரு குஞ்சித்தாயத்தைக் கட்டிவுடுடி. குஞ்சியப் புடிச்சிக்கிட்டே இருந்தான்னா நோவு வந்துடும்). பக்கத்து ஊர்களில் ‘குஞ்சிமணி’ என்று சொல்வதும் உண்டு. மூத்தத் தொழிலாளியும் முதுபெரும் தொழிற்சங்கவாதியுமான தோழர் மா.முத்துக்குமரன் அவர்கள் அதற்கு குறிஞ்சிப்பாடியில் வழங்கப்படும் ‘தம்பித்தோழன்’ என்று புதிய சொல்லைக் கொடுத்தார். 

மேலும், தற்போதைய பதிப்பில் நிறைய சொற்களைக் கொடுத்த பெருமை ஓட்டுநர் பயிற்சியாளர் இ.எஸ்.சுப்ரமணியன் அவர்களையே சாரும். டீசலை சிக்கனமாகப் பிடிக்க வேண்டும், ஸ்டேஜ் வருவதற்கு முன்னதாகவே ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்துவிட வேண்டும், பேருந்து நிலையத்தில் மூவீங் கியரில் வண்டியை நகர்த்த வேண்டும், இப்படி ஏகப்பட்ட ஆலோசனைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பவர். ஆச்சலாய் ஓர் அந்திப்பொழுதில், ஆயில் சர்வீஸ் முடித்தக் களைப்பில் அவருடன் டீசல் பங்கில் போய்க் குந்தினேன். ஐப்பசி மாதத்தில் அடித்த கடும் வெயிலின் தாக்கத்தை பொழுதிறங்கிய பின்னும் உணர முடிந்தது. போட்டிருந்த வெற்றிலைப் பாக்கை, கொத்தாய் முழிந்துவிட்டு பெருமூச்சு விட்டபடி சொன்னார். “அந்தக் காலத்துலல்லாம் மொத மொழுக்கு, கட மொழுக்குன்னு ஓடி, மார்கழி மாசத்துல மொடவன் மொழுக்குக்குக்கூட ஆத்துல தண்ணி ஓடும். இப்ப என்னடான்னா, புண்ணியமோட்டுப் பள்ளத்துலகூட குருவி குடிக்கத் தண்ணியில்ல…”

‘மொத மொழுக்கு’, ‘கட மொழுக்கு’,  ‘மொடவன் மொழுக்கு’ எனச் சொற்களாய் வந்து விழுந்ததில் நான் உற்சாகமாகிவிட்டேன். விளக்கத்தைக் கேட்டதும், அரிய பொக்கிஷத்தை அவிழ்க்கிற பெருமையில் சொல்ல ஆரம்பித்தார். ஐப்பசி மாதத்தின் முதல் தேதியன்று மூழ்கிக் குளிக்கிறமாதிரி ஓடுகிற மணிமுத்தாற்றின் வெள்ள நீர் மொதமொழுக்கு (முதல் முழுக்கு) ஆகும். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளிலும் மூழ்கிக் குளிக்கும்படியாக ஓடும் ஆற்றின் நீர்ப்பெருக்குக்கு கட மொழுக்கு. (கடை முழுக்கு) எனச் சொல்லிக்கொண்டிருந்தவர், மொடவன் மொழுக்கு குறித்துச் சொன்னபோது அதன் சித்தரிப்பு, என்னை ஆச்சர்யப்படுத்தியது. கடைக்கோடி ஊரில் இருக்கும் ஒரு முடவன், ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஐப்பசி மாதம் முதல் தேதியன்று கிளம்பினான். அவன் ஆற்றை வந்து அடைவதற்குள் ஐப்பசி மாதம் முழுவதும் போய்விட்டது. அந்த முடவனுக்காக மறாவது மாதம், மார்கழியின் முதல் தேதியன்றும் குளிக்கிறமாதிரி தண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்ததாம். அதாவது தாமதமாய் முடவன் வந்து குளிக்கிற அளவுக்கும் ஓடுகிற தண்ணீர் என்பதால் (மார்கழி ஒன்றாம் தேதி) மொடவன் மொழுக்கு (முடவன் முழுக்கு) எனப் பெயர் பெற்றிருக்கிறது.

கிராமத்தில், ஆசாரி சமூகத்தாரிடம்தான் ஏர்க்கலப்பை, வண்டி என விவசாயத் தொழிற்கருவிகள் நிறையக் கோர்க்கப் பட்டதால், ஏராளமான சொற்கள் அவர்களிடம் கொட்டிக்கிடந்தன. மேற்படி தொழிற்கருவிகளின் பயன்பாடுகள் முற்றிலுமாய் குறைந்துவிட்டாலும் ஓர்  ஆவணமாக இருக்கட்டும் என்றுதான் முன்னமேயே சேகரித்துத் தொகுத்திருந்தேன். குறிப்பாய் ‘கொரணாசி’ போன்ற சொல்லுக்குக் கூடுதல் விளக்கம் கிடைத்தது அவர்களிடமிருந்துதான்.

ஓடு வேய்ந்து கட்டப்படும் கல்வீடுகளில் சுவரின் மேல் முனையில் வடியும் தண்ணீரானது சுவரை ஒட்டியல்லாமல் தள்ளி விழுகிற மாதிரி மேல்பக்க விளிம்பை, சற்று வெளிநோக்கி இருக்குமாறு செய்யப்படும் அமைப்புக்குக் ‘கொரணாசி’ என்று பெயர். அதே வடிவத்தையொத்த நிலைப்பேழையின் (பீரோ) மேல் முனையில் சற்று வெளிநோக்கியபடி இருக்கும் அமைப்புக்கும் கொரணாசி என்றுதான் பெயர் என்று கொட்டாரக்குப்பத்தைச் சேர்ந்த முத்து ஆசாரி சொன்னார். (கொரணாசி பலவைக்கி, மொத்தமான சட்டமா இருந்து எழைச்சாதான் நல்லா வரும்).

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

உளி, இழைப்புளி, கைவாள் என எல்லாவற்றையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு வரும் முத்துலிங்க ஆசாரி சொன்னதுதான் ‘அணமுறித்தல்’ என்கிற வார்த்தை. ரொம்பவும் வேகமாய் மேற்கே ‘கடை’க்குப் போய்க்கொண்டிருந்தவர் வண்டியின் குறுக்கே கையைக் காட்டினார். நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். அன்றைய தினம் அவரது சொந்த அண்ணனின் மனைவி இறந்துபோயிருந்தார். கிட்ட இருந்து காரியம் பார்க்க வேண்டியவர், கடைக்குப் பறந்துகொண்டிருக்கிறார். “இது நாயமா?” என்று கேட்டேன். “நீ வேற தம்பி... முந்தாநாத்துக்கூட என்னப் பாத்து, நாந்தான் அவளுக்கு வைப்பன வைச்சிட்டன்னு வாசாங்கா வுட்டுத் தள்னா. அவளுக்கா... நானா கிட்ட இருப்பன்!? உயிர் வுட்டதும்  ‘வழிக் கூட்டி வுட வா… அண முறிக்கறதுக்கு வா’ன்னு ஆளுவோ கூப்புட்டானுவோ. நா ஏம்மொவன மட்டும் தலக்கடையில போயி நில்லுடான்னு சொல்லிட்டு வந்துட்டன்” என்றார். மேற்கொண்டும் ஆரம்பித்த அவரை மடக்கி, வித்தியாசமான சொல்லாகப்பட்ட ‘அணமுறித்தலை’க் கிளறினேன்.

ஆசாரி சமூகத்தில், ஒருவர் இறந்ததும் உடல் விறைத்துப்போவதற்குள் அதை, சுவரில் அணைத்து உட்காரும் நிலையில்  உடலை அமர இருத்தும் ஒரு சடங்கு. பாடையிலும்கூட அமர்ந்த நிலையிலேயேதான் தூக்கிச் செல்வார்கள். இப்படி, உடலைச் சுவரோடு சாய்த்து இருத்தும்போது, உடலை முறிப்பதற்கு இணையாக வளைத்துவைக்கப்படுவதால் ‘அணமுறித்தல்’ என வழங்கப்படுவதாய்ச் சொன்னார்.

அதுபோலவே, ‘அரண்மனை ஆசாரி தலையாட்டுகிற மாதிரி’ என்கிற மரபுத் தொடரை, விருத்தாசலத்துக்கும் கிழக்கே குப்பநத்தம் கிராமத்திலிருந்து நீர் மோட்டார் சீர் பண்ண வந்த வடிவேல் சொன்னார். புது மோட்டார் வாங்கிய மூன்று மாதத்தில் இரண்டு தடவை வேலை வைத்துவிட்டது. டீலரிடம் கேட்டால், “ரெண்டு லைன்ல ஓட்டியிருப்பீங்க, பீஸ் கட்டையில பெரிய கம்பியா போட்ருப்பீங்க” என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருப்பதை அவரிடம் சொன்னபோது, கோபப்பட்டார். “அவுங்க சொல்றதுக்குலாம் அரண்மன ஆசாரி தலயாட்றமாதிரி ஊங்கொட்டி கேட்டுகிட்டு இருந்தா, ஒங்க தலையிலதான் மொளகா அரைப்பானவோ. மோட்ரு சரியில்ல... வேற புது மோட்ரு குடுடான்னு அடிச்சிக் கேளுங்க”னு சொன்னார். வேலை முடிந்து வருகிறபோது ஒழுங்கியில் வைத்து அரண்மனை ஆசாரி பற்றிக் கேட்டேன்.

ஒரு ராசாவின் அரண்மனையில் அங்கிருக்கிற மரவேலைப்பாடுகளைச் செய்வதற்கென்று தனியாக ஓர் ஆசாரி இருந்தார். ஒருநாள் அரசர், பூனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வளர்ப்புக்குப் பூனையும் வந்து சேர்ந்துவிட்டது. அரண்மனையின் கதவுகள் மூடியிருந்தாலும், பூனை புகுந்து போக வர இருக்கிறமாதிரி கதவில் ஓர் ஓட்டை போடச் சொன்னார் அரசர். அவர் சொன்னமாதிரி ஓட்டை போடப்பட்டு பூனை சலாபத்தாய் போய் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்தப் பூனை, குட்டி போட்டது. உடனே அரசர், ஆசாரியைக் கூப்பிட்டு பூனைக்குப் போட்ட ஓட்டைக்குப் பக்கத்தில் குட்டிகள் போக,வர இருக்குமாறு மற்றுமொரு சிறிய ஓட்டையைப் போடச் சொன்னார். தாய்ப்பூனை போய்வருகிற ஓட்டையிலேயே குட்டிகளும் போய்வந்துகொள்ளுமே, எதற்காகத் தனியே ஓட்டைபோட வேண்டும்? என்று கேட்காமல், ராசா சொல்லிவிட்டாரே என்பதற்காக மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஒரு சின்ன ஓட்டையை போட்டானாம் ஆசாரி. அதுபோல மற்றவர்கள் சொல்வதைக் கருத்துணர்ந்து மறுத்துப் பேசாமல், ஒப்புக்கொண்டு போவதை ‘அரண்மனை ஆசாரி தலையாட்டுகிற மாதிரி’ என்று மரபுத் தொடர் வழக்கில் பயன்படுத்தப்படுவதை விலாவாரியாகச் சொல்லிக்கொண்டு போனார் குப்பநத்தத்துக்காரர். 

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்சின்னக் கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நண்பர் மேகராஜன், மின்பணியாளர். ஆடுமாடுகளின் சுழிச் சுத்தமெல்லாம் பார்ப்பார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘‘எங்க வூர்ல ஒருத்தரு முந்தாநாளு பழமொழி ஒண்ணு சொன்னாரு. அப்ப ஒங்க ஞாபகந்தான் வந்துது…” என்பார். “என்னா பழமொழி…” என்றால் “மறந்துட்டன்…” என்பார். அவர் மறக்காமல் கொண்டுவந்து சொன்ன பழமொழியை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது.

மழைக்காலம் ஆரம்பிக்கற ஐப்பசி மாதத் தொடக்கம். அதற்கு அறிகுறியாக வானிலை அறிக்கைகளும் வந்துகொண்டிருந்தன. கிட்டத்தில் மழை பெய்வதற்கு ஆயத்தமாக மரங்களின் உச்சிகளைச் சுழற்றி சுழற்றி கொம்புசுத்திக் காத்து அடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம், கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி நாட்டில் பெரும் பிரச்னையாக அது உருக்கொண்டு நின்றது. முதல்வர் சட்டசபையில் உரையாற்றுகிறார். “எனது தலைமையிலான அரசில் இனி மின்வெட்டு முற்றிலுமாகக் குறைந்து போய்விடும்.” சேதியைக் கேட்டுவிட்டு வந்து நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். “பத்தினின்னாலும் பத்தினி எங்க அம்மா அப்பிடியாப்பட்ட பத்தினி... ஐப்பசி கார்த்திகையில பேயும்னா பேயும். சித்திர வைகாசியில காயும்னா காயுங்கற மாதிரி அறிக்க வுடுறாங்க.”

அதாவது, ஐப்பசி, மார்கழி மாதங்களில் இயல்பாகவே மழைப்பொழிவும் சித்திரை, வைகாசி மாதங்களில் கடும் வெயிலும் இருக்கும். இப்படி இயற்கையாக நிகழ்கிற ஒரு நிகழ்வை, தான் சொன்னதால்தான் நிகழ்ந்தது எனப் பிதற்றிக்கொள்கிற அபத்தத்தைச் சொல்வது அந்தப் பழமொழி.

விருத்தாசலத்தில், ஆலடி ரோட்டின் இலுப்பை மரத்தடிக்கு கூழ் குடிக்கப்போன இடத்தில் கூழ்கார அம்மா சொன்ன பழமொழி. ‘அதிகாரத்துல ஆடு மேஞ்சா, தாவாரத்துலலாம் தடதடங்குதாம்.’

கிராமத்திலிருந்து வந்து தள்ளுவண்டி வாடகைப் பிடித்து கூழ் விற்பவர். உள்ளூர்க்காரர் ஒருவர் வந்து கடனுக்கு அதுவும், அதட்டலாக “ஒரு சொம்பு கூழ் ஊத்து!” எனக் கேட்டதும் அம்மாவுக்குத் தாண்டிவிட்டது. ஆனாலும், ஊற்றிக் கொடுத்து, அவர் சொம்பையே விழுங்கி விடுகிறமாதிரி நெட்டிவிட்டு எட்டப் போனதும் சொன்ன பழமொழிதான் அது. அதிகாரம் மிக்க ஒரு குடும்பத்தாரின் ஆடானது ஏழையின் கொல்லையில் வந்து மேயும்போது ‘அய்யோ வசதியானவர்கள் வீட்டு ஆடு வந்து அழிம்பு பண்ணுகிறது. நம்மையும் அறியாமல் ஓடி ஓட்டிவிட்டால் என்ன ஆகுமோ’ எனப் பயத்தில் வீட்டு தாழ்வாரமெல்லாம் தடதடவென நடுங்குகிறதாம்.

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

இப்படிச் சொற்சேகரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுதான் இந்த நடுநாட்டுக் கதைப்பாடல்களும் குறுக்கில் வந்து கோத்துக்கொண்டன. குறிப்பாக, எதிர்த்த வீட்டு செம்பாயிக்கு வாயைத் திறந்தால் கதைப்பாட்டுதான். செம்பாயி சொல்கிற ஒப்பாரிகளில் மனம் கனத்துவிடும்.

‘தவுடு திருடி மொவன்
தாண்டி தடி எடுத்தான்.
நா(ன்) தாட்சனக்காரம் மொவ
தாங்கி மனம் பொறுத்தன்…’

 ‘உளுந்து திருடி மொவன்
ஓடி தடி எடுத்தான்.
நா(ன்) ஓசனக்காரம் மொவ
ஒதுங்கி மனம் பொறுத்தன்…’


நண்பர் பால்ராசுவின் விடுகதைப் பாடல்களும் என் சேகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். குறிப்பாக, அம்மாவின் களவுக்கு, காதலுக்கு பெற்ற மகளே உடந்தையாக இருந்துச் சொல்லுகிற கதைப்பாடல் வரிகள் நாம் எங்கும் கேட்டிராதவை.

சொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்


‘அவரை கலகலங்க
எங்கள் அய்யா… அம்புவில் மேல் தீட்ட
உன்னை அணைந்துவரும் என்தாயார்
அருங்காடு போயிருக்க…
அங்கு புல் உள்ள காடு என்று
பொழுதனவே மேயாமல்
பொட்டெனவே வந்துவிடு…’


வைக்கோலை இழுத்த வழியாய் நீளும் எனது நடுநாட்டுச் சொற்களுக்கான தேடலின் பயணம். கடும்புடியாய் முடிந்து மீள் உருவாக்கப் பதிப்பாக (‘நடுநாட்டுப் பெருங்கொடை’ கே.கோவிந்தனின் படங்களோடு) சற்றேறக்குறைய 500 பக்கங்களில் வர உள்ளது. முதல் பதிப்பில் சொன்னதுபோலத்தான். எனது இருபது ஆண்டுகளுக்கும் மேலான படைப்பாக்கப் பணியின் உச்சமாக இந்த அகராதிப் பணியைக் கருதுகிறேன். வழக்கம்போலவே இது தமிழின் வளர்ச்சிக்கு உதவும்.

சென்ற ஆண்டு விருத்தாசலம் கலைக் கல்லூரியிலிருந்து பேராசிரியர் உட்பட பலர் போனைப்போட்டு “நடுநாட்டு சொல்லகராதி போட்டிங்களாமே... இருந்தா ஒண்ணு குடுங்க, நாங்க வாங்கிக்கிறம்” என்றார்கள். மாணவர்களும் எள் முனையளவும் குறையாமல் அதே ஆர்வத்தில் புத்தகம் கேட்டார்கள். “அதுலாம் எந்தக் காலத்துல வித்து முடிஞ்சுது. இப்ப வந்து கேக்குறீங்க” என்று போனை வைத்துவிட்டேன். கல்லூரியில் மொழி தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. விழாவுக்கு வந்திருந்த செம்மொழி தமிழாய்வு நிறுவன முன்னாள் பொறுப்பாளர், “இந்த பகுதியில கண்மணி குணசேகரன் வட்டாரச் சொல்லகராதினு ஒண்ணு போட்ருக்கார் தெரியுமா?” எனக் கேட்டிருக்கிறார். அதற்குப் பிறகுதான் இந்த விசாரிப்பு, கரிசனம், அக்கறை எல்லாம். அகராதி வந்த காலத்தில் எத்தனையோ முறை அதுபற்றி அந்தப் பேராசிரியர்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் விட்டுவிட்டு ‘ஆம்படையானைக் கண்டதும் தாலி ஞாபகம் வந்ததுமாதிரி’ கேட்கிறார்கள்.

பக்கத்திலிருக்கும் ஓர் எழுத்தாளனின் படைப்பை, குரலைக் கண்டுகொள்ளாமல் இயங்குகிற மொழிப்புலம், கல்விப்புலம்  வாய்த்த இந்தத் திருநாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கிற சொற்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி வைப்பதை பெரும் பணியாக உணர்கிறேன். மெய்தான். ஓர் எழுத்தாளனைவிடவும் இந்த மொழியின் மீது வேறு எவருக்கு அக்கறை இருந்துவிட முடியும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism