மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...

சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது! எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டு புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க... அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என்ற வாசகத்துடன் படத்தின் கதைச் சுருக்கம்,பாட்டுபுத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். அப்பா மருதப்பா மண்ணையாரிடமும், தாய் மாரியம்மாளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே... படிச்சு கிழிச்சது போதும், படுடா!’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்கு பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்கு பணம் தருவார்களா? ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது. எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில்     எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே!’ என்று பாடி வருவார். திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய... பிரிந்திருந்த இருவரும் இணைவார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச... படம் முடியும். ‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்து கொண்டார்.

சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...

‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறுவயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதாவால் பிரிந்திருந்தார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக்கொண்டாக பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்படி சந்திப்பு நடந்தற்கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப்பட்டார். அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதிமன்றத்தில்  சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார்.அங்கே இருவரும் பேச முடியவில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங்கேறியது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சசிகலாவும் நடராசனும் பிரிந்திருந்தபோதிலும், இருவரும் தங்களின் ‘கடமை’களைக் கச்சிதமாக நடத்த ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவோடு நெருக்கமான ஆரம்ப காலகட்டத்தில், கார்டனில் சசிகலாவும் கட்சியில் நடராசனும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். கார்டனில் அதுவரை வேலைப் பார்த்தவர்களை எல்லாம், சசிகலா விரட்டியடித்துக் கொண்டிருந்தார். அதே வேலையை நடராசன் கட்சியில் செய்து கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அரசியலுக்குக் கொண்டு வந்ததை, ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள் ரசிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்குக் கூட்டம் சேர்வதைப் பார்த்து, அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் அ.தி.மு.க-வுக்குள் ஜெயலலிதா ஆதரவாளர்கள், ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் என இரண்டு பிரிவினர் இருந்தனர். அன்றைய அமைச்சர்களில் கே.ஏ.கிருஷ்ணசாமி (கே.ஏ.கே.), திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தனர். அதனால் அவர்கள் பக்கம் ஒதுங்கினார் நடராசன். ஜெயலலிதாவின் ஆதரவு வட்டாரத்தை கட்டமைக்கும் வேலையோடு, கட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களையும் கழற்றிவிடவும் காய்கள் நகர்த்தி வந்தார்.

சசிகலா ஜாதகம் - 36 - பிரிந்தவர் கூடினால்...

தி.மு.க-வுக்கு ஆதரவாக ‘குங்குமம்’ பத்திரிகை வந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்குப் போட்டியாக ‘தாய்’ பத்திரிகை வந்தது. அது, தரமாக இருக்கவேண்டும் என நினைத்த         எம்.ஜி.ஆர், அதன் ஆசிரியராக வலம்புரி ஜானைக் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆரின் உறவினர் அப்புவின் மேற்பார்வையில்தான் ‘தாய்’ வெளியானது. ஜெயலலிதாவையும் வலம்புரி ஜானையும் ராஜ்யசபா எம்.பி ஆக்கி, டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். ‘‘அம்முவை அரசியல் களத்தில் இறக்கியிருப்பதற்கு ஆழ்ந்த காரணம் உண்டு. அம்மு எழுதவும், பேசவும் நீங்கள் உதவ வேண்டும்’’ என வலம்புரி ஜானிடம் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப் புத்தகங்களைத் திரட்டித் தருவது, அறிக்கை எழுதிக் கொடுப்பது, நாடாளுமன்ற உரையைத் தயாரித்து வழங்குவது என வலம்புரி ஜான் உதவினார். ஒரு கட்டத்தில் ‘தாய்’ பத்திரிகையிலும் ஜெயலலிதாவின் தலையீடு ஆரம்பித்தது. அதற்குப் பின்னால் இருந்தது நடராசன். காரணம், வலம்புரி ஜான் மீது இருந்த வெறுப்பு!

(தொடரும்)