
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
தொடக்கக் கல்வியை முடித்ததும் விளாரில் இருந்து தஞ்சாவூரில் இருக்கும் ‘தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி’க்கு நடந்து போய் படித்துக் கொண்டிருந்தார் நடராசன். ‘உடல்நிலை பாதிக்கக் கூடாது. இடையூறும் இல்லாமல் படிப்பை மகன் தொடர வேண்டும்’ என்பதற்காக தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்தார் நடராசனின் தந்தை மருதப்பா. ஆங்கிலம் தவிர, மற்ற பாடங்களில் முதல் மாணவனாக மதிப்பெண்களைக் குவித்தார் நடராசன்.
சிறு வயதில் நடராசன், கொஞ்சம் ஒல்லியாக சிவப்பு நிறத்தில் இருந்தார். ஒருநாள் வகுப்பாசிரியர், நடராசனைப் பாராட்டுகின்ற முறையில் முதுகைத் தட்டிக்கொடுத்து தடவிப் பார்த்தார். தன்னை ஊக்கப்படுத்த ஆசிரியர் இப்படிச் செய்கிறார் என நடராசன் நினைத்தார். ஆனால், அடுத்து வந்த தேர்வில் நடராசனின் மதிப்பெண்கள் குறைந்து போயின. பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை திலகர் திடலில், ஒரு கூட்டத்தில் பெரியார் பேசியதைக் கேட்டபோதுதான், அந்த ஆசிரியர் முதுகை ஏன் தடவிப்பார்த்தார் என்கிற அர்த்தம் நடராசனுக்குப் புரிந்தது. இந்தச் சம்பவத்தை நடராசனே குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த நடராசன்தான், பிராமணரான ஜெயலலிதாவைச் சுற்றி வந்தார். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்த நேரத்தில் ஆனந்தம் அடைந்தார்கள் பிராமணர்கள். அவரை நெருங்க வேண்டும் எனவும் சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த முயற்சியை நடராசன் தடுத்து நிறுத்தினார்.
ஜெயேந்திரருக்கு எதிராக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா விட்டபோது, ஜெயந்திரரை வலம்புரி ஜான் சந்தித்தார். ‘வாயை மூடுங்கள்’ எனச் சொல்லி ஜெயலலிதா வெளியிட்ட அந்த அறிக்கைக்குப் பின்னணியில் இருந்தவரே நடராசன்தான். ‘‘ஜெயலலிதாவின் அறிக்கை பற்றி ஜெயேந்திரரிடம் கேட்டபோது, அவர் எதுவும் பேசாமல் இருந்தார். ‘அந்த அம்மாவைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சசிகலாதான்’ என நான் சொன்னதும் அவரின் முகம் பிரகாசம் ஆனது’’ என்கிறார் வலம்புரி ஜான். ‘‘ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான இடைவெளியில் ஓர் அங்குலம்கூட குறைந்துவிடாமல் பார்த்துக் கொண்டவர் நடராசன். ஜெயலலிதாவிடம் தன் மனைவியைத் தவிர எவர் நெருங்கினாலும் தனக்கு ஆபத்து என்பதை நடராசன் நன்றாக உணர்ந்திருந்தார்’’ என தனது ‘வணக்கம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் வலம்புரி ஜான். ஆரம்பத்தில் சங்கர மடத்துக்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, பிறகு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரையும் விஜயேந்திரரையும் உள்ளே தள்ளினார். இதற்குப் பின்னணி என்ன என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்டது.
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன் போன்றவர்கள் ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருந்தார்கள். இவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மீடியேட்டராக இருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ஜெயலலிதா சொன்னவற்றையும், அவர் சொன்னதாக நடராசன் சொன்னவற்றையும் இவர்கள் செய்து கொடுத்தனர். ‘தன் உதவியில்லாமல் இவர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடாது’ என்கிற நிலைமையை உண்டாக்கினார் நடராசன்.

இப்படி காரியங்கள் சாதித்துக்கொண்டிருந்த நடராசனின் செல்வாக்கு, அன்றைக்கு செய்தித்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் பலிக்கவில்லை. அப்போது நடராசன், செய்தித்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். ‘தன்னுடைய பதவி உயர்வு பற்றி ஆர்.எம்.வீரப்பனிடம் பேச வேண்டும்’ என நடராசன், வலம்புரி ஜானிடம் கேட்டுக் கொண்டார். ஜானும் பேசினார். ‘‘நடராசனுக்கு உதவி செய்வதும் நாகப்பாம்புவுக்கு பால் வார்ப்பதும் ஒன்றுதான்’’ எனச் சொல்லியிருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன். ஆனால், தனக்குப் புரொமோஷன் வாங்கித் தருவதில் வலம்புரி ஜான்தான் கட்டையைப் போடுவதாக நடராசன் நினைத்துக் கொண்டார். இந்த விஷயத்தைச் சொல்லும் வலம்புரி ஜான், ‘என்னை ஒழித்துவிட வேண்டும் என்பதில் நடராசன் உறுதியாக இருந்தார்’ எனக் குறிப்பிடுகிறார்.
வலம்புரி ஜானுக்கு எதிரான விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தன. முரசொலியில் வந்த கட்டுரையில், ஜெயலலிதாவின் கார் கதவை போலீஸ் அதிகாரிகள் திறந்து விடுகிறார்கள் எனச் சொல்லி, ‘ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என எழுதியிருந்தார்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில், ஜெயலலிதா அமெரிக்கா செல்ல முயன்றதை கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். இதுபற்றி விரிவாக முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.
‘சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன்’ என வருமானவரித் துறையிடம் ஜெயலலிதா கடிதம் அளித்திருந்தார். அந்தக் கடிதத்தை அப்புறப்படுத்தி, முரசொலியின் செய்தியை பொய்யாக்கும் முயற்சி நடைபெற்றது. ஃபைலில் இருந்த அந்தக் கடிதத்தை, வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அந்த அதிகாரி தன்னிச்சையாக கடிதத்தை எடுத்து ஜெயலலிதாவிடம் அளித்திருக்க முடியாது. பின்னணியில் யாராவது இருக்க வேண்டும் என நினைத்தார் எம்.ஜி.ஆர்.
விசாரணையை முடுக்கி விட்டபோது, கடைசியில் அது நடராசன் என்று தெரிந்தது.
(தொடரும்)