Published:Updated:

`ஒரு முறைக்கு எட்டு முறை யோசியுங்கள்'- மோடியை விமர்சிக்கும் தா.பாண்டியன்

`ஒரு முறைக்கு எட்டு முறை யோசியுங்கள்'- மோடியை விமர்சிக்கும் தா.பாண்டியன்
`ஒரு முறைக்கு எட்டு முறை யோசியுங்கள்'- மோடியை விமர்சிக்கும் தா.பாண்டியன்

ஒரே தேசம், ஒரே தேர்தல் என சிக்கனம் பற்றிச் சொல்பவர், முதலில் ஊர் சுற்றும் செலவைக் குறைக்க வேண்டும்” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோடியையும், மத்திய அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய தா.பாண்டியன், “தமிழகத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் இன்னும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்க முடியாதபோது, எட்டுவழிச் சாலையும் புல்லட் ரயிலும் தேவை தானா? என்பதை அரசு ஒருமுறைக்கு எட்டுமுறை யோசிக்க வேண்டும். எந்தத் திட்டத்தையும் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், எதற்கு முன்னுரிமை, எது அவசியம், எது அவசரம், உடனடியாக மக்களுக்கு எது தேவை என்று பார்க்க வேண்டுமே ஒழிய, கோழியே தன் குஞ்சுகளைத் தன் காலால் மிதித்துக் கொல்வது போல கொல்லக் கூடாது.

எனவே, எட்டு வழிச் சாலை திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களுடைய இந்த துயரத்துக்கும் சந்தேகத்துக்கும்  கோபத்துக்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். மாறாக அவர்களை அடக்கி, ஒரு திட்டத்தை நிறைவேற்ற முயலக் கூடாது. பயண காலம் குறையும், பெட்ரோல் செலவு குறையும் என எட்டு வழிச் சாலைக்கான காரணம் கூறுகின்றனர். பெட்ரோலை இப்போது டாலரில் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, ஆண்மையும் துணிச்சலும் இருந்து ஈரானிடமிருந்து வாங்கினால், நாளைக்கே விலை குறையும். ஏன் அந்தக் காரியத்தைச் செய்ய முடியவில்லை? எனவே, இதெல்லாம் மக்களைக் காப்பதற்காகப் போடுகிற ஒரு திட்டமாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு கார்ப்பரேட் போட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடிமைகள் செய்கிற வேலையாகத் தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “மத்திய அரசு கல்வித்துறையில் தலையிட்டு, வருங்கால சந்ததிகளோடு விளையாடக் கூடாது. கல்வியைப் பற்றி கல்வியாளர்களை வைத்து ஆழமாகச் சிந்தித்து, திட்டங்களை அறிவிக்க வேண்டும். கேள்வி கேட்கிறவனே தவறு செய்கிறான். பிறகு, பதில் எழுதத் தவறிவிட்டான் என மாணவனைத் தண்டித்தால் என்ன அர்த்தம். தனிமனிதன் நினைப்பதை எல்லாம் கல்வித் திட்டமாகக் கொண்டுவந்து, இளம் சந்ததியோடு விளையாடுவது என்பது முழுக்க முழுக்கத் தவறு. இந்தியா முழுமையிலும் ஒரே மாதிரியான கல்வி என்பது தேவையில்லை. அந்தந்த மாநிலத்தினுடைய கலாசாரம், பண்பாடு வளர்ச்சிக்கேற்ப கல்வித் திட்டங்களை வகுக்கிற முழு உரிமை மாநில அரசிடம் இருக்க வேண்டும். எனவே, அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது.

அதேபோல, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால், இந்த நாடு ஒரே வளர்ச்சி முறையிலே வளரவில்லை. இதை யாருமே விரும்பவில்லை. சிக்கனம் எனச் சொல்கிறவர், முதலில் ஊர் சுற்றுகிற செலவைக் குறைக்கட்டும். ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம் என அமித்ஷா சொல்லியிருக்கிறார். அவர், கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தே சொல்லிக்கொள்ளட்டும். அவர் பங்கெடுக்கிற வங்கியிலேயே என்ன நடந்தது என்பதும், அவருடைய மகன் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்பதும் தெரியும். இரண்டே வருடங்களில் 16,000 மடங்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள். இந்தியா முழுமையிலும் ஊழல் இருக்கிறது. ஊழல் என்பது சர்வ துறைகளிலும் இருக்கிறது. மனிதனை உயிரோடு வேட்டையாடிக்கொண்டிருக்கிற உத்தரப்பிரதேசத்தைவிட, இந்த தமிழ்நாடு ரொம்ப முன்னேறியதுதான். சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரையிலும், உத்தரப்பிரதேசத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சொர்க்கம்தான். பா.ஜ.க ஆளும் அத்தனை மாநிலங்களிலும் நரவேட்டை நடக்கிறது” என மத்திய பா.ஜ.க அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.