Published:Updated:

ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!

ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!

தலைவர்களின் கேம் பிளான்எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

மேய்ப்பர் இல்லாத மந்தைபோல பிரிவதா சேர்வதா... எனத் திக்குத்திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

தி.மு.க முழுக்கவும் கிட்டத்தட்ட ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், அவருடைய ஜென்டில்மேன் அப்ரோச் தி.மு.க.வினருக்கே பிடிப்பதில்லை.

உடல்நலமில்லாத விஜயகாந்தைப்போலவே தே.மு.தி.க-வும் பலவீனமாகிவிட்டது. வைகோ சிறையில் இருக்கிறார். மக்கள் நலக் கூட்டணிக் கனவுகளை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் அறிவாலயத்துக்கே திரும்பிவிடும் மனநிலையில் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலை சிறுத்தைகளும்!

இந்தக் குழப்பங்களுக்குள் முத்துக்குளிக்க முனைகிறது பா.ஜ.க.  தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கிடைத்த அற்புதமான சூழலை அறுவடை பண்ணத் தெரியாமல் உட்கட்சி கோஷ்டிகளோடு மல்லுக்கட்டுகிறது காங்கிரஸ்...

இந்த நிலையற்ற அரசியல் சூழலில் தமிழகக் கட்சிகளின் அடுத்த மூவ் என்ன? கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்.

ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!

அணிகள் ஒன்றாகுமா?

``எந்த நோக்கத்துக்காக அ.தி.மு.க-வில் அணிதிரட்டினாரோ,  அந்த  நோக்கம் நிறைவேறாமல் திணறுகிறார் பன்னீர்செல்வம்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எதிர்பார்த்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்கள் அவர் பக்கம் வராததால் அவர் நினைத்தபடி முதல்வராகவும் முடியவில்லை.

``சசிகலா தரப்பினை கட்சியை விட்டு வெளியேற்றினால் இணைப்புக்குத் தயார்” என்று பன்னீர் தரப்பில் ரெடியானார்கள். ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்தேறின. ஆனால், சில எதிர்கருத்து அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துகளை பகிரத் துவங்கியதால் பேச்சுவார்த்தைக்குத் தடை விழுந்தது. குறிப்பாக சசிகலா குடும்பத்தை முற்றிலும் கட்சியிலிருந்து துடைத்தெறியக்கூடாது என்று அமைச்சர்கள் சிலரே மல்லுக்கட்ட, இந்தப் பேச்சுவார்த்தை எல்லாம் நாடகமோ என்று ஓ.பி.எஸ் அணி உஷாரானது. 

உண்மையில், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி தந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியமாகும் என்பதை அம்மா அணியினர் அறிந்துள்ளார்கள். ``ஆனால், எல்லா சிக்கலுக்கும் அவர்தான் காரணம். அவருக்கு அமைச்சர் பதவியே அதிகம் தான்” என்கிறார்கள் அம்மா அணியினர்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் வரிசையில் இப்போது அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ-க் களுக்கு தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆட்சியை எப்படியாவது இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஓட்டி விட வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆனாலும், உறுதியான தலைமை இல்லாததால் அம்மா அணி தடுமாறுகிறது. 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு பங்கம் இல்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற அச்சத்தோடுதான் நாற்காலிகளில் அமைச்சர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

கட்சிக்குள் குழப்பம், மத்திய அரசின் குடைச்சல் என்று ஒவ்வொரு நாளும் ஒரு யுகத்தைப்போல கடத்திக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அம்மா அணி. இதனால், எப்போது என்ன நடக்குமோ என்று அலறிக்கொண்டே இருக்கிறார்கள். 

மிஸ்டர் க்ளீன் தி.மு.க

இதே சூழலை கருணாநிதி இன்னும்கூட சிறப்பாக பயன்படுத்தி இருப்பார் என்பதே தி.மு.க-வுக்குள் எழும் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது. ஆளும்கட்சிக்குள் மோதல் எழுந்து இரண்டு அணிகளாக அவர்கள் பிரிந்து நின்றதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் ஸ்டாலின். ஓ.பி.எஸ் அணிக்குப் பின்னால் தி.மு.க இருக்கிறது என சசிகலா தரப்பு குற்றம்சாட்டியபோதும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை ஸ்டாலின்.
``ஆட்சி அதுவாக கலைந்தால் ஓ.கே.

இல்லையென்றால், அதை கலைப்பதற்கான முயற்சியில் நாம் இறங்க வேண்டும்” என  ஸ்டாலினிடம் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர் தி.மு.க மாவட்ட செயலாளர்கள். எத்தனை காலம்தான் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு செலவழிக்க முடியும் என்ற புலம்பல் அவர்களிடம் எழுகிறது.

`மிஸ்டர் க்ளீன்' என்ற இமேஜோடு  மக்களை சந்தித்து ஆட்சியில் அமர வேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டம். ``2-ஜி விவகாரத்தால் தி.மு.க-வின் இமேஜ் கெட்டுப்போய் அதை சரிசெய்யவே நான் படாதபாடுபட்டு வருகிறேன். இதில், ஆட்சி கவிழ்ப்புக்கு நாம் காரணமாக இருந்தால் மக்களிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டு கேட்க முடியும்” என்பதே  ஸ்டாலினுடைய நிலைப்பாடு.

அ.தி.மு.க-வில் பிளவு வந்தபோதே பா.ஜ.க  தரப்பில் தி.மு.க-வை தொடர்புகொண்டு பேசியுள்ளார்கள். ஆனால், பா.ஜ.க-வுக்கு ஸ்டாலின் பிடி கொடுக்கவில்லை.
 
`கிச்சன் கேபின்ட்' நிலையில்தான் தி.மு.க உள்ளது. தி.மு.க-வின் பொதுக்குழுவும் செயற்குழுவும் முக்கிய முடிவுகள் எடுத்த காலம் மாறி ஸ்டாலின் வீட்டில்தான் இப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. விவசாயிகள் பிரச்னைக்காக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தின் வெற்றியையே ஸ்டாலினுடைய வெற்றியாகத்தான் பார்க்கிறார்கள் ஸ்டாலின் தரப்பினர். முன்பு, காவேரி பிரச்னைக்காக இதே போல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். அப்போது தி.மு.க-வுடன் கூட்டணியி்ல் இருந்த கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டன. ஆனால், இந்த முறை விடுதலை சிறுத்தைகளையும் கம்யூனிஸ்ட்களையும் உள்ளே கொண்டுவந்தன் காரணமே ஸ்டாலின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் என்கிறார்கள்.

தி.மு.க-வுக்கு இப்போதைய நெருக்கடியே ஜூலை மாதம் 2ஜி வழக்கின் தீர்ப்பு வர இருப்பதுதான். காரணம், அ.தி.மு.க.வை சூறையாடும் பாஜக புயல் தங்களை மட்டும் சும்மாவிடுமா என்ற அச்சம்தான்!

பாயுமா பா.ஜ.க

``பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தேசம் முழுவதும் நமது ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின்  பொற்காலம்'' என்று  ஒடிசாவில் நடந்த தேசிய செயற்குழுவில் அறைகூவல் விடுத்தார் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா. அதற்கான திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின்படிதான் தமிழகத்தில் அரசியல் செய்கிறது பா.ஜ.க.

கால் ஊன்றுவதே கடினம் என்ற நிலைதான் சென்ற ஆண்டு செப்டம்பர் வரைக்குமே தமிழக பா.ஜ.க வின் நிலை. ஆனால், ஜெயலலிதாவின் மரணம், அவர்களுக்கு ஆட்சியையே அமைக்கலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, பொதுக் கூட்டம், மாநாடு என்று பரபரப்பாக செயல்பட்ட தமிழக பா.ஜ.க, மத்திய ஆட்சியில் அமர்ந்த பிறகு, அமைதியாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு அக்கட்சியினரிடையே இருக்கிறது. கட்சியின் முக்கிய தலைவர்களான தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படாமல் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று கொண்டு அறிக்கை அரசியல்தான் இப்போதும் நடத்துகின்றனர் என்றும் பேசுகிறார்கள்.

 தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் மந்திரக்கோலை அமித் ஷா கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு எல்லா அணிகளுமே காத்திருக்கின்றன. அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைத்து அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் திட்டதில் பா.ஜ.க உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றிபெற்றாலே கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்தி விடலாம் என்று கணக்குபோடுகிறது அமித் ஷா தரப்பு.

இல்லையென்றால், 2018-ம் ஆண்டு ஜனவரியில் நடக்க இருக்கும் குஜராத், இமாச்சலபிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தல்களோடு தமிழகத்துக்கும் தேர்தல் வரும் என்ற உள்தகவல்தான் இப்போது, தமிழக பா.ஜ.க  வட்டாரம் சொல்லும் செய்தி.

காத்திருக்கும் காங்கிரஸ்!

``காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பு சரியில்லாமல் போனதுதான் தொடர் தோல்விகளுக்குக் காரணம்” என்று உ.பி தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராகுல் காந்தி சொன்னார். தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியின் நிலை அப்படித்தான் இருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இப்போது இருந்தாலும், எதிர்காலத்தில் தி.மு.க தங்களை கழற்றிவிடுவார்கள் என்று திடமாக காங்கிரஸ் கட்சியினர் நம்புகிறார்கள். அ.தி.மு.க பலமாக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் தயவு தி.மு.க-வுக்குத் தேவைப்பட்டது. இப்போது அ.தி.மு.க-வே அல்லோலப்பட்டு வரும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் நமக்கு எதுக்கு உறவு எனத் தி.மு.க நினைப்பதாக புலம்புகின்றனர் தமிழக காங்கிரஸார்.

அதே நேரம் தி.மு.க-கூட்டணியில் இருந்து கொண்டே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக  திருநாவுக்கரசர் கருத்து சொல்ல தி.மு.க. தரப்பில் ஏக டென்ஷன். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசருக்கு எதிராக கோஷ்டிகள் அணிதிரண்டு நிற்பதால் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருக்கிறார். மேலும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினாலும், அதற்கு அங்கு இருக்கும் கோஷ்டி தலைவர்கள் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். 

``தமிழகத்தில்  காங்கிரஸ் கட்சியை எப்படியும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை” என்று ராகுல் நினைக்கிறார். அதற்காக `பஞ்சாப் பாலிசி'யை இங்கு கையில் எடுக்கும் முடிவில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம், அப்போது தனியாகவே களத்தில் காங்கிரஸ் கட்சி நிற்க வேண்டும் என்ற விருப்பமும் ராகுல் காந்திக்கு இருக்கிறது. பலமான ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி அவர் கையில் தமிழக காங்கிரஸ் கட்சியை ஒப்படைத்துவிடலாம் என்று டெல்லி காங்கிரஸ் திட்டமிடுகிறது. முதல்வர் வேட்பாளராக ப.சிதம்பரம் பெயர் தான் இப்போது அடிபடுகிறது.

ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!

கேப்டன் இல்லாத கப்பல்

தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக உருவாக வேண்டிய தே.மு.தி.க இப்போது லென்ஸ் வைத்து  தேடும் நிலைக்குப் போய் விட்டது.

தே.மு.தி.க வலுவாக இருந்திருந்தால் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை அவர்களுக்கு பொற்காலமாகவே இருந்திருக்கும். விஜயகாந்தின் உடல்நி்லைதான் கட்சியை வாட்டிவதைக்கிறது. அவரின் உடல் நிலை, கட்சி பணிக்கு ஒத்துழைக் காததால் வீட்டில் ஓய்விலேயே இருக்கிறார் விஜயகாந்த்.

இருந்தும் தே.மு.தி.க-வின் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற உள்ளது. எல்லாம் முடிந்த பிறகு, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு பிரேமலதாவை முன்மொழியும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்.

பரபரப்பில் பா.ம.க!

தி.மு.க அணியோடு இணக்கமான சூழலில் இருப்பதுபோல இருந்தாலும் ஸ்டாலினை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் ராமதாஸுக்கு வரவில்லை. தமிழகத்தை ஆளும் அத்தனை தகுதிகளும் தன் மகன் அண்புமணிக்கு மட்டுமே உள்ளது என்று அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வருகிறார். இருந்தாலும், தி.மு.க-வை கடுமையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அந்தக் கட்சியில் இருக்கும் முன்னணி தலைவர்கள்  ராமதாஸிடம் சொல்லி வருகிறார்கள்.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. நாடாளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டுதான் வர இருக்கிறது. ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தல் எந்நேரத்திலும் வரலாம். அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் தைலாபுரத்திலிருந்து பா.ம.க தொண்டர்களுக்கு வந்திருக்கும் உத்தரவு. அதனால், எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறது தைலாபுரம். பயிற்சி முகாம், உறுப்பினர் சேர்க்கை என பிஸியாக இருக்கிறது. தங்கள் கட்சியின் அடிநாதமாகிய வன்னிய சங்கத்தின் பொறுப்பாளர்களையும் அழைத்து சங்கத்தின் செயல்பாடுகளைக் கிராமப்புறங்களில் வேகப்படுத்துங்கள் என்று ஆலோசனை சொல்லியுள்ளார் ராமதாஸ். மற்ற கட்சிகளைக்காட்டிலும் அடுத்த தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறது பா.ம.க. 

ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ!

வைகோ உள்ளே... ம.தி.மு.க வெளியே!

``இப்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி கட்சியை வலுப்படுத்த வேண்டியவர் ஜெயிலுக்குள் முடங்கி கிடக்கிறாரே” என்று ம.தி.மு.க-வினர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

``சரியான நேரத்தில் தவறான அரசியல் முடிவுகளை எடுப்பவர் வைகோ” என்று சொல்வார்கள். அது இப்போது உண்மை ஆகி இருக்கிறது. தமிழக அரசியல் களம் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் நிலையில் தானே போய் புழல் ஜெயிலுக்குள் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார் வைகோ. எந்த ஸ்டாலினை வீழ்த்த வேண்டும் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை முன்னெடுத்து சென்றாரோ அந்தக் கூட்டணி தலைவர்கள் இப்போது ஸ்டாலினுடன் கைகோத்து களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயிலுக்குள் வாக்கிங் போவது, கடிதம் எழுதுவது, புத்தகம் படிப்பது என பிஸியாக இருக்கிறார். ஆனால், பிஸியாக இருக்க வேண்டியது சிறையில் அல்ல, வெளியில்.

ஆன்லைனில் அள்ளுறோம்!

ஆன்லைனில் வளர்ந்துகொண்டிருக்கும் கட்சியாக லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கிறது நாம் தமிழர். ஆனால், களத்தில் சீமானுக்குக் கொடிபிடிக்கும் கூட்டம் குறைவே.

``ஒரே மாதத்தில் 32,000 இளைஞர்கள் எங்கள் கட்சியில் இணைந்திருப்பதே எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று நெகிழ்கிறார்கள் நாம் தமிழர்கள். ஆன்லைனில் கட்சியை வளர்ப்பது எப்படி என்று தமிழகத்தில் கோர்ஸ் நடத்த நாம் தமிழர் கட்சித் தலைமையை அணுகலாம்!