
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே நடராசனின் வளர்ச்சியை ‘வீக்கம்’ எனச் சொன்னார், ஆர்.எம்.வீரப்பன். தன்னுடைய புரொமோஷனுக்கு உதவி கேட்டு உதவாத வலம்புரி ஜானும், செய்தித் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனும் நடராசனின் பரம வைரிகள் ஆனார்கள். ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் வலம்புரி ஜானுக்கு ஜெயலலிதா மூலம் குடைச்சல்கள் ஆரம்பமாகின. ஜெயலலிதாவை அம்பாக வைத்து, வில் பூட்டி வந்தார் நடராசன்.
ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுப்பது வலம்புரி ஜான்தான் என மோப்பம் பிடித்த ஒரு பத்திரிகையாளர், அதைச் செய்தி ஆக்கிவிட்டார். ‘‘வலம்புரி ஜானே இப்படி வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுதான் செய்தி ஆனது’’ என கார்டனில் பற்ற வைத்தார்கள். விளைவு... அறிக்கை எழுதிக் கொடுப்பதில் கட் விழுந்தது. அதன்பிறகு சோலை, அடியார் ஆகியோர் எழுதித் தர ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவையும் வலம்புரி ஜானையும் ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். இதில் வலம்புரி ஜான் எம்.பி ஆகிவிடக் கூடாது என முயற்சிகள் நடந்தன. ‘‘வலம்புரி ஜான், ‘தாய்’ பத்திரிகையை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார். அவரே ‘அண்ணா’ பத்திரிகையையும் பார்த்துக்கொள்ளலாம்’’ எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டார்கள். ‘அண்ணா’வையும் பார்த்துக்கொண்டால் நாடாளுமன்றத்துக்கு அவரால் போக முடியாது என்பதுதான் திட்டம். ஆனால், எம்.ஜி.ஆரிடம் அது பலிக்கவில்லை.

டெல்லியில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும்’ என வேலைகளில் நடராசன் இறங்கினார். அண்ணா அமர்ந்த இருக்கை ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது தற்செயலாக நடந்த நிகழ்வு. ஆனால், அதை மீடியாவில் ஊதிப் பெரிதாக்கியவர் நடராசன். நாடாளுமன்றத்தில் யார் யார், என்ன பேச வேண்டும் எனத் தீர்மானிக்கிற அதிகாரம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதை வைத்து வலம்புரி ஜானுக்கு வாய்ப் பூட்டு போடப்பட்டது. உப்பு பெறாத விஷயங்களில் மட்டுமே அவர் பேச அனுமதிக்கப்பட்டார்.
நாடாளுமன்றம் சென்ற ஜெயலலிதா, அங்கே தனக்கான அரசியல் அடித்தளத்தைப் போட ஆரம்பித்தார். அதற்கு நடராசன் உதவிகள் செய்துகொண்டிருந்தார். ஜெயலலிதாவை டெல்லி அனுப்பியதற்காக எம்.ஜி.ஆர் வருத்தப்படும் அளவுக்கு அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறின. பிரதமர் இந்திரா காந்தியைப் போய்ப் பார்த்து, தன் செல்வாக்கை அதிகரிக்க நினைத்தார் ஜெயலலிதா. ‘‘எனது வளர்ச்சியைக் கண்டு எம்.ஜி.ஆர் பொறமைப்படுகிறார். என் வளர்ச்சிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என இந்திராவிடம் கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. இத்தனைக்கும் இந்திராவின் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க-வோடு கூட்டணியில் இருந்தது. இதையும் மீறி ஜெயலலிதா தனி ரூட் போட்டார். இந்திரா மறைவுக்குப் பிறகு, அது ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ‘அ.தி.மு.க-வுக்கு, தான் தலைமை ஏற்க உதவ வேண்டும்’ என ஜெயலலிதா அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதியதாக சர்ச்சைகள் எழுந்தன.
இப்படியான சூழலில்தான் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்தச் சமயத்தில்தான் 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி பல வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தன. அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதைத் தடுக்க ஆர்.எம்.வீரப்பன் முயன்றார். ஆனால் முடியவில்லை.

‘எம்.ஜி.ஆர் தேறிவிட்டார்’ என்பதை அறிவிப்பதற்காக மருத்துவமனையில் அவர் இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகின. இந்த ஏற்பாட்டைச் செய்தவர், ஆர்.எம்.வீரப்பன். தேர்தலில் வீடியோவைப் பயன்படுத்த நினைத்தார்கள். வீடியோவைத் தயாரிக்கும் பொறுப்பு ஏ.வி.எம்.சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நடந்து வருவது, பேப்பர் படிப்பது, சாப்பிடுவது, நர்ஸ்களுடன் உரையாடுவது போன்ற காட்சிகளுடன் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோவுக்குப் பின்னணி பேசியவர் வலம்புரி ஜான். இந்த வீடியோ விஷயம் தெரிய வந்ததும், வலம்புரி ஜானிடம் பேசினார் ஜெயலலிதா. தான் பேசுகிற காட்சிகளை அந்த வீடியோவில் சேர்க்க வேண்டும் என்றார். ஆர்.எம்.வீரப்பன் இருந்ததால் அது முடியவில்லை. எனவே, எம்.ஜி.ஆரும் தானும் நடித்த சினிமாக் காட்சிகளைத் தொகுத்துக் காட்ட நினைத்தார் ஜெயலலிதா. இதற்கான முயற்சிகளை நடராசன் செய்தார். ‘‘சினிமா நடிகை என்கிற வளையத்தில் இருந்து மீண்டு, அரசியல் தலைவர் ஆகி வருகிறீர்கள். மீண்டும் சினிமா வாழ்க்கையை மக்களுக்கு நினைவுபடுத்துவது போல் ஆகிவிடும்’’ என வலம்புரி ஜான் சொன்னார். இதனால் அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார்.
நடராசனின் மூளை வியர்க்கத் தொடங்கியிருந்தது.
(தொடரும்)