Published:Updated:

2014 இல் 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை!

2014 இல் 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை!
2014 இல் 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை!

சென்னை: 2012-2013 ஆம் ஆண்டில் பிப்ரவரி வரை 1.2 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 2013-2014 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

2014 இல் 2 லட்சம் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் உரையில் அறிவித்தவாறு, அனைத்துத் துறைகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பைக் கொண்ட, மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையத்தை  இந்த அரசு ஏற்படுத்தும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், திருமண உதவித் தொகைகள், கல்வி உதவித் தொகைகள், பொதுவிநியோகத் திட்டத்தில் அளிக்கப்படும் பயன்கள், மாணவர்களைப் பதிவு செய்யும்முறை, முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விலையில்லா இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவிகளையும், மாநில குடியிருப்போர் தகவல் மையத்தின் மூலமாக, ஆதார் அடிப்படையில் வழங்குவதற்கான சோதனைத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இச்செயல்முறை விரிவுபடுத்தப்படும்.

இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பலதுறைகளிலும் அதிக அளவிலான காலிப் பணியிடங்களால் மாநில நிர்வாகமே செயலிழந்து இருந்தது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்பத் தேவையான விரைவு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்தது. இதுவரை, பல்வேறு துறைகளில் இருந்த 1,61,142 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்களிலும் மற்றும் வங்கிகளிலும் 9,914 பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்றே, பொதுத் துறை நிறுவனங்களில் 22,452 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, மொத்தம் 1,93,508 நபர்களைப் பணியமர்த்தி, நிர்வாகத்தை இந்த அரசு சீரமைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், நில நிர்வாகம், சிறப்பான மக்கள் குறைகளைத் தீர்க்கும் முறை ஆகியவற்றை வருவாய் நிர்வாகம் உறுதி செய்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் ஒன்பது புதிய வட்டங்களும் ஒரு புதிய வருவாய் கோட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பட்டா மாறுதல் முறை 26 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய உதவி புரிந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது 1,46,067 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலை மாறி, தற்போது இது 33,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதம் வரை 1.2 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-2014 ஆம் ஆண்டிலும் மேலும் இரண்டு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

படம்: குமரேசன்