மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!

சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

டராசனின் மூளை வியர்க்கத் தொடங்கியிருந்தது. ஜெயலலிதாவின் அரசியல் லிப்ஃட்டுக்குப் பக்கபலமாக உதவிக் கொண்டிருந்த நடராசன், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களை அப்புறப்படுத்தும் காரியங்களையும் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார் வலம்புரி ஜான். அந்த நெருக்கத்தை உடைக்க ‘எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக வலம்புரி ஜான் இல்லை’ என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன. எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் கவிதைகளை உலகம் முழுவதும் இருக்கிற கவிஞர்களிடம் இருந்து திரட்டி, ஆர்.எம்.வீரப்பனிடம் கொடுத்தார் கிருஷ்ணா சீனிவாஸ் என்கிற கவிஞர். அந்தக் கவிதைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதைச் சரிபார்க்கும் பணி வலம்புரி ஜானிடம் தரப்பட்டது. ‘‘அர்த்தமில்லாத புகழாஞ்சலிகளோடு கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை எழுதியவர்கள், அந்தந்த நாடுகளில் அங்கீகாரம் பெற்ற கவிஞர்கள் அல்ல’’ என வலம்புரி ஜான் சொல்ல... கவிதை அச்சுக்குப் போகவில்லை. ‘எம்.ஜி.ஆரின் புகழை வலம்புரி ஜான் மறைக்கிறார்’ என நடராசன் சொல்ல ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ‘தாய்’ பத்திரிகையில் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ என்ற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருந்தார் சிவாஜி. ‘எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சிவாஜி எப்படி எழுதலாம்?’ என சிண்டு முடிந்தார்கள். இப்படி வலம்புரி ஜானுக்கு எதிராகப் பல முயற்சிகள். அவை ஒவ்வொன்றும் முறியடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!

எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். கருணாநிதியின் பிரசாரம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. ‘‘ஏழு ஆண்டுகள் என்னைத் தண்டித்தீர்களே... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தால், ஆட்சியை அவரிடம் திரும்ப ஒப்படைப்பேன்’’ என்று கருணாநிதி பேசினார். அதற்கு கவுன்ட்டர் கொடுக்க வேண்டிய நிலையில்  ஜெயலலிதாவுக்கு காரசாரமாக உரை எழுதிக் கொடுத்தார் வலம்புரி ஜான். ஆனால், ஜெயலலிதா பேசும்போது அந்த உரை நிறைய மாறிப்போனது. உரையில் பாதி ‘எடிட்’ ஆனது. காரணம், ‘எடிட்டர்’ நடராசன். ‘‘நான் எழுதுவதை நடராசன் திருத்துவது என்றால், அதைவிட அவமானம் எனக்கு வேறு இருக்க முடியாது’’ எனச் சொல்லி, ஜெயலலிதாவுக்கு எழுதிக்கொடுப்பதையே நிறுத்தினார் வலம்புரி ஜான். அத்துடன், வலம்புரி ஜானும் ஒரு பக்கம் பிரசாரத்துக்குப் போய்க்கொண்டிருந்தார். அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயலலிதா. ‘‘என்னை அரசியலில் அங்கீகரிப்பது ஆபத்தாக முடியும் என ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லி, என்னைப் பார்த்தாலே பிரச்னை எனச் சொல்லும் அளவுக்கு ஜெயலலிதாவின் மனதை மாற்றிவிட்டார் நடராசன்’’ என்கிறார் வலம்புரி ஜான்.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது தமிழகத்தில் அவருக்குத் தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருந்தன. வேட்பாளர் பட்டியல் தொடங்கி, அடுத்த முதல்வர் யார் என்பது வரையிலும் பல தகிடுதத்தங்கள் அரங்கேறின. தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் அமெரிக்காவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். தேர்தல் பணிகள் அனைத்தும் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்துகொண்டிருந்ததால், அவரும் தன் பங்குக்கு தகவல்களை எம்.ஜி.ஆருக்குக் கடத்திக் கொண்டிருந்தார். இப்படி வந்த இரண்டு தகவல்களும் முரண்பட்டன. ‘எம்.ஜி.ஆர் தேற மாட்டார். அப்படியே தேறிவந்தாலும் ஆட்சி புரியும் அளவுக்கு அவர் உடல்நிலை இருக்காது’ என அமெரிக்காவில் இருந்து குழப்பமான தகவல்கள் வர... முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதாவை அமரவைக்கத் துடித்தார் நடராசன். ‘ஜெயலலிதா வந்தால் ஆபத்து’ என நினைத்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர்தான் முதல்வராக வர வேண்டும் என உறுதியாக இருந்தார்.

சசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்!

இப்படி தமிழகத்தில் அரசியல் சதிகள் அரங்கேறிக்கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர் சத்தமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். நன்கு தேறிய நிலையிலும், உடல்நலம் குன்றியவர் போலவே நடித்தார். அவரைப் பார்க்க வந்த சிவாஜி போன்றவர்கள் கூட அதை நம்பினார்கள். நடராசனும் அமெரிக்காவில் நடப்பதை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார். ‘எம்.ஜி.ஆர் திரும்பி வர மாட்டார்’ என்கிற மாதிரி தகவல் கிடைக்க... அதை ஜெயலலிதாவிடம் சொன்னார் நடராசன். இதனால் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார் ஜெயலலிதா. திருப்பதி கோயிலுக்குப் போய் வேண்டுதல்கள் நிரைவேற்றினார். இதனை எல்லாம் உயரமான போலீஸ் அதிகாரி ஒருவர் உளவுபார்க்க ஆரம்பித்தார். அவரின் ரிப்போர்ட் அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தது. தனக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் சதியை முறியடிக்கும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

அது என்ன?

(தொடரும்)