Published:Updated:

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...
பிரீமியம் ஸ்டோரி
News
ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

நித்திஷ், ஓவியங்கள்: நெடுமாறன்

`அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை...' - போன வாரம் வரை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் இந்தப் பாடலைத்தான் லவுட் ஸ்பீக்கர் கட்டி ஒளிபரப்பினார்கள். ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழ்.

`டூ' விட்டுப் பிரிந்த ரத்தத்தின் ரத்தங்கள் ஒன்றுசேர துடிக்கின்றன. இதுபோல காய் விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் பழம் விட்டால் என்ன ஆகும்?  ஏங்க அதெப்படிங்க லாஜிக்கே இல்லாம சேருவாங்க?' ஆமா அப்படியே கடந்த ஆறு மாசமா தமிழ்நாட்டுல நடக்குறது எல்லாத்துக்கும் லாஜிக் இருந்துச்சாக்கும்!

ஸ்டாலின் - அழகிரி

சிந்துபாத் லைலாவைத் தேடிக் கிளம்பிய `கன்னித்தீவு' காலத்தில் தொடங்கிய பஞ்சாயத்து இது. இன்னமும் எண்ட் கார்டு போடாமல் என்டர்டெயின் செய்கிறார்கள். `ஆளுங்கட்சியில் ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்கள். குட்டிக் கட்சிகள் காட்சியிலேயே இல்லை. இப்போது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என கண்டிஷன்ஸ் அப்ளைடு கேட்டகிரியில் கண்கள் பணிக்க, இதயம் உருக இருவரும் ஒன்று சேர வாய்ப்பிருக்கிறது. அப்படி சேர்ந்தால்..?

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

முதல் வேலையாக மதுரையில் மேம்பாலங் களையே மறைக்கும் அளவுக்கு பேனர்கள் முளைக்கும். `ரிட்டர்ன் வந்த விவியன் ரிச்சர்ட்ஸே', `மீண்டு வந்த மீட்பரே' எனக் கொலைவெறி வசனங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கும். சினிமாவை வளர்க்கிறோம் என ரெட் ஜெயன்ட்டும், க்ளவுட் நைனும் கமர்ஷியல் ஃபார்முலா படங்களைத் தூசி தட்டி ரவுண்ட்ஸ் விடுவார்கள். தூங்கி வழியும் அறிவாலயம் பஞ்சாயத்துகளை டீல் செய்வதற்காகவே பரபரப்பாக மாறிவிடும். இணைப்புக் காரணம், அஞ்சாநெஞ்ச அண்ணனா? தகத்தகாய தம்பியா? என லியோனி தன் ட்ரேட்மார்க் `ஹெஹெஹெ' சிரிப்போடு பட்டிமன்றம் நடத்துவார்.

பட்டிமன்றத்துக்கு முடிவு சொன்னால் `பட்டாசு' கொளுத்திக் கொண்டாடுவார்கள் என்பதால், இணைப்புக்குக் காரணம் கி.வீரமணியே என முடிப்பார் லியோனி.

ஓ.பி.எஸ் - சசிகலா

கொஞ்ச காலம் முன்புவரை விசுவாச கட்டப்பாவாக இருந்த ஓ.பி.எஸ் பிப்ரவரி தொடக்கத்தில்... `அமரேந்திர பாகுபலியாகிய நான்' ஆனார். கூட்டமும் வழக்கம்போல சிலிர்த்துப்போனது. சின்ன மாதா சபதமெடுத்து விட்டு பெங்களூர் சென்றது, அவர் நம்பி பொறுப்புக் கொடுத்த டி.டி.வி பல்வாள்தேவன் சொதப்பித் தள்ளியது, மகிழ்மதி ர.ர-க்கள் கைகோக்க முடிவெடுத்தது என நிஜத்திலேயே படம் காட்டி தமிழ்நாட்டு மானத்தைப் பப்படம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

சின்ன மாதாவும் ஓ.பி.எஸ்ஸும் திரும்ப சேர்ந்தால்? முதல் வேலையாக மெரினாவில் சபதம் எடுக்கவோ தியானம் செய்யவோ கூடாது என போர்டு வைப்பார்கள். `நார்த் மெட்ராஸ் எனக்கு, சவுத் சென்னை உனக்கு', `திருச்சி எனக்கு, திருநெல்வேலி உனக்கு' என சசி குடும்பமும் ஓ.பி.எஸ் குடும்பமும் பங்கம் வராமல் பங்கு போட்டுக்கொள்ளும். ஜென் நிலையில் இருக்கும் ஜெயா டிவி பாபா ராம்தேவ்போலக் குட்டிக்கரணமடித்து செய்திகளை அள்ளித் தெளிக்கும். `உங்ககூட டூ' என எடப்பாடி அண்ட் கோ கோவித்துக்கொண்டு தனியாகச் செல்வார்கள். `அந்த மனுஷனை நீங்களே கூட்டிட்டு வந்து இப்ப நீங்களே
விரட்டி விடுறீங்களா?' எனப் பொருமும் பொதுஜனம் `மகேந்திர பாகுபலி பழனிசாமி வாழ்க' என மீண்டும் சிலிர்க்கும். `அவர் முதல்வராக இருந்தபோது, அன்புமணியைப் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்' எனச் சின்ன மாதா புகார் வாசிப்பார்.

வைகோ - விஜயகாந்த்

விஜயகாந்த் பேசுவது புரியாது, வைகோ புரியும்படி பேசுவதே கிடையாது. இருவருமே சட்டென   கண்ணில்  தண்ணி வைத்துக்கொள்ளும் குழந்தை மனசுக்காரர்கள். மீம் க்ரியேட்டர்களின் குலசாமிகள். இப்படி வைகோ, விஜயகாந்துக்கு இடையே எக்கச்சக்க ஒற்றுமைகள். எனவே, இந்த தென் தமிழகத்து சண்டைக்கோழிகள் திரும்ப இணைவதில் பிரச்னையே இருக்காது. அவங்களுக்கு இருக்காதுதான்... நமக்கு?

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

ஒருவர், தேர்தல் என வந்துவிட்டால் டெல்லி, அமெரிக்கா எல்லாம் பார்ப்பதில்லை. இன்னொருவர் தேர்தல் என வந்துவிட்டால் உள்ளூரிலேயே போட்டி போடுவதில்லை. இருவரும் ஒன்று சேர்ந்தால் தேர்தல் கமிஷன் தன்னைத்தானே கலைத்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்துக்கொண்டு, ஏதாவது ஹில் ஸ்டேஷனில் போய்ப் பதுங்கிக்கொள்ளும். ஒருவர் மைக் வொயர் துருப்பிடித்துத் தொங்கும்வரை பேசுவார். மற்றவர் தூவெனத் துப்புவார். எனவே, பத்து நிமிடங்களுக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் கியாரண்டி. நெட்டிசன்கள், தங்கள் சொந்த வேலையை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு சோஷியல் மீடியாக்களிலேயே பழியாய்க் கிடக்குமளவுக்கு கன்டென்ட்டை வாரி வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.

அப்ப இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா தமிழக மக்களுக்கு எதுவுமே நடக்காதா?

இதுக்கு முன்னால என்ன நடந்துச்சு?

எதுவுமே இல்ல.

அதான் இப்பவும்!

ஜி.கே வாசன் - காங்கிரஸ்

காங்கிரஸில் இருந்தவரையாவது வேட்டி கிழிப்பு, மைக் உடைப்பு எனக் கொஞ்சம் லைம்லைட்டிலில் இருந்தார் ஜி.கே.வாசன். தனிக்கட்சித் தொடங்கியபின்... ம்ஹூம்! இத்தனைக்கும் கட்சித் தொடங்கிய பின் நிறைய தேர்தல்களும் வந்துபோய்விட்டன. ஆனாலும், கிழக்கே போகும் ரயில் ராதிகா ரேஞ்சுக்கு சிங்கிள் வெற்றிக்காகக் கா......த்துக்கொண்டே இருக்கிறார். இப்படியே இருந்தால், கட்சி கரைந்து காணாமல் போய்விடும் என்பதால் சீக்கிரமே அன்னை கழகத்துக்கு அவர் திரும்பி வரலாம்.

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

அப்படி வந்தால்...? ஏற்கெனவே, சத்தியமூர்த்தி பவன் கேட் அருகே ஒரு கோஷ்டி, வாசற்படியில் ஒரு கோஷ்டி, பார்க்கிங்கில் ஒரு கோஷ்டி என கேங் வார் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே துண்டு போட்டு உட்கார வேண்டும். அப்படியே உட்கார்ந்தாலும் தங்கபாலுவோ திருநாவுக்கரசரோ பின்னால் இருந்து கிச்சுகிச்சு மூட்டி உட்காரவிடாமல் இம்சிப்பார்கள். ஓப்பனிங்கில் வாய் மலர அழைத்து உட்கார வைக்கும் சக தலைவர்கள் போகப்போக வாய் ஓயாமல் கழுவி ஊற்றுவார்கள். சீக்கிரமே உள்ளாட்சித் தேர்தல் வேறு வர இருப்பதால் 2.0, பாகுபலி படங்களை எல்லாம் மிஞ்சிய ஆக்‌ஷன் காட்சிகளை சத்தியமூர்த்தி பவனில் கண்டு களிக்கலாம். கெட் ரெடி ஃபோக்ஸ்!

 தீபா - மாதவன்

ஒண்ணுகூடிட்டாங்கப்பா... ஒண்ணுகூடிட்டாங்கப்பா...

நியாயப்படி இந்த கொடுமைகள் எல்லாம் `சொல்வதெல்லாம் உண்மை' பஞ்சாயத்து ஷோக்களில் வர வேண்டும். நியூஸ் சேனல்களில் வருகிறது. இவர்கள் இருவரையும் தலைவர்கள் லிஸ்ட்டில் வைத்ததற்கே இந்நேரம் நிஜ தலைவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பேன். உலகிலேயே வீட்டுக்குள் நடந்த சண்டை காரணமாக ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்த ஒரே கரகாட்ட கோஷ்டி தீ-மா கோஷ்டிதான். இவர்களின் கொள்கை என்ன? இவர்களுக்குள் என்ன பஞ்சாயத்து? இவர்களுக்கு எத்தனை தொண்டர்கள்? இதற்கெல்லாம் பதில்?

``அவர்கள்தான் சொல்லவேண்டும்.''