Published:Updated:

முதல்வர்கள் பலவிதம்!

முதல்வர்கள் பலவிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதல்வர்கள் பலவிதம்!

பா.பிரவீன்குமார்

ரு நாள் முதல்வர், நிரந்தர முதல்வர், திடீர் முதல்வர், மக்கள் முதல்வர் எனப் பல முதல்வர்களைக்கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வருமே ஒவ்வொரு விதம். ஒருவர் ஆடம்பரப் பிரியர் என்றால், மற்றொருவர் வீதியில் நடந்துபோய் காய்கறி வாங்கும் அளவுக்கு எளிமையானவர். அதில் சிலரின் அப்டேட்ஸ் இங்கே!

ஜம்மு மற்றும் காஷ்மீர்

மெஹபூபா முஃப்தி  (ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி)


இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி. அப்பா முஃப்தி முகமது சையதுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்னர், தந்தை தனிக்கட்சி துவங்க, அதன் முக்கியப் பொறுப்பாளரானவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு, பா.ஜ.க-வின் துணையுடன் தற்போது முதலமைச்சராகியிருக்கிறார்.

முதல்வர்கள் பலவிதம்!

மெகபூபாவுக்கு இதிஜா, இர்திகா என இரண்டு மகள்கள். முதல் மகள் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்ற, இரண்டாவது மகள் சினிமாக் கனவுகளுடன் பாலிவுட்டில் இருக்கிறார். மெகபூபாவின் முன்னாள் கணவர் ஜாவித், தற்போது எதிர்க்கட்சியான ஒமர் ஃபாரூக்கின் தேசிய மாநாட்டுக் கட்சியில் இருக்கிறார்.

அருணாசலப்பிரதேசம்

பெமா காண்டு (பா.ஜ.க)


இந்தியாவின் இளம் முதல்வர் பெமா காண்டுவின் வயது 37.  தமிழகம் ஒரு வருடத்தில் மூன்று முதல்வர்களை ஒரே கட்சியில் இருந்துதான் பார்த்திருக்கிறது. ஆனால், பெமா காண்டு  மூன்று கட்சிகளில் மாறி, அருணாசலப் பிரதேசத்தின் முதல்வராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

முதல்வர்கள் பலவிதம்!

இவரின் அப்பா டோர்ஜி காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோர்ஜி 2011-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழக்க, திடீரென அரசியலுக்குள் வந்தார் பெமா. அரசியலுக்கு வந்தது முதலே சர்ச்சை மன்னனாக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்து, நீக்கப்பட்டு, பிறகு பெமாவின் தலைமையேற்ற கலிக்கோ புல்லின் தற்கொலை பெமாவை மிகப்பெரிய சர்ச்சையில் தள்ளியது. ஆனால் கட்சிகளை மாற்றி, காட்சிகளை மாற்றி முதல்வராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இந்த யங்மேன்!

அசாம்

சர்பானந்தா சோனாவால் (பா.ஜ.க)


53 வயதாகும் சோனாவால், மாணவர் அமைப்பிலிருந்து அரசியலுக்குள் வந்தவர். அசாம் கன பரிஷத் கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பி-யாக இருந்தவர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகக் களம் இறங்கி மீண்டும் எம்.பி ஆனார்.

முதல்வர்கள் பலவிதம்!

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சோனாவாலை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது பா.ஜ.க.

2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த தருண் கோகோயின் ஆட்சியை வீழ்த்தி,  அசாமில் முதல் பா.ஜ.க அரசுக்குத் தலைமையேற்றார் சர்பானந்தா.

சோனாவால் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிவேக கார், பைக்குகளின்மீது ஆர்வம் அதிகம். ஆனால், அதற்காக அவற்றை வாங்கி வீட்டில் நிறுத்தி வைப்பது இல்லை. வீடு முழுக்க சூப்பர் கார், பைக்குகளின் புகைப்படங்களும் போஸ்டர்களும் மட்டுமே இருக்கும்.

கோவா

மனோகர் பாரிக்கர் (பா.ஜ.க)


`கோவா என் கோட்டைடா...' எனக் கெத்துகாட்டும் இந்தியாவின் முதல் `ஐஐடி' முதல்வர். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரசங்கியான மனோகர் பாரிக்கர் 1994-ம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறார். 2000-ம் ஆண்டில் முதல்முறையாக கோவாவில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்தியவர் பாரிக்கர். இதற்கு முன்பு மூன்று முறை கோவாவின் முதலமைச்சராக ஆகியிருக்கும் பாரிக்கர் ஒருபோதும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியதில்லை. 2014-ம் ஆண்டில் பா.ஜ.க மத்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ராணுவ அமைச்சரான மனோகர் பாரிக்கர், 2017-ம் ஆண்டில் மீண்டும் மாநில அரசியலுக்குள் திரும்பிவிட்டார். அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியைவிடக் குறைந்த இடங்கள் பிடித்த பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஒரே காரணம் மனோகர் பாரிக்கர். சின்னச் சின்ன கட்சிகளை மட்டும் அல்ல, காங்கிரஸ் எம்.எல்.ஏ-வைக்கூடத் தன் பக்கம் இழுத்து மீண்டும் முதல்வராகியிருக்கிறார் பாரிக்கர்.

முதல்வர்கள் பலவிதம்!

முதன்முறையாக கோவா முதல்வரானபோது, தன்னுடைய பழைய சைக்கிளில் தலைமைச்  செயலகம் வந்து அசத்தியவர். இப்போதும், உள்ளூர் பஸ் பயணம், சைக்கிளில் சுற்றுவது, மோட்டார் சைக்கிளில் பயணிப்பது, சாதாரண உணவகங்களில் மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிடுவது என பாரிக்கரை கோவாவின் வீதிகளில் பார்க்கலாம்.

ஜார்கண்ட்

ரகுபர் தாஸ் (பா.ஜ.க)

பீகாரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகின்றன.

முதல்வர்கள் பலவிதம்!

இதுவரை அங்கு 13 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட்டின் ஆறாவது முதல்வராக தற்போது பொறுப்பில் இருக்கிறார் ரகுபர் தாஸ். பழங்குடியினத்தைச் சேராத, ஜார்க்கண்ட்டின் முதல் முதல்வர். இவர், தன்னுடைய ஆரம்பக்காலத்தில், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் கிரேட் 4 ஊழியராகப் பணியாற்றியவர். மோடி, அமித்ஷாவின் குட்புக்கில் தொடர்ந்து இருப்பவர். அதனால்தான் ஜார்கண்டில் நடந்த ஒன்பது அரசியல் பேரணிகளில் மோடியே நேரில் பங்கேற்றார். இவர் மீது எட்டு சீரியஸ் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பழங்குடியினர் இடங்களைக் கையகப்படுத்த இவர் கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தங்கள், மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி காலணிகள் வீசப்படும் முதல்வராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரகுபர் தாஸ்.

இமாச்சலப்பிரதேசம்

வீரபத்ர சிங் (காங்கிரஸ்)

முதல்வர்கள் பலவிதம்!

இந்தியாவின் முதுமையான முதல்வர். 82 வயதாகிறது. அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜா பதாம் சிங்கின் மகன். முதன்முறையாக 1962-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1983-ம் ஆண்டில் முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு, மத்திய அமைச்சர், இமாச்சலப் பிரதேச முதல்வர் என்று மாறி மாறிப் பதவியிலேயே இருக்கிறார் வீர்பத்ர சிங். பல ஊழல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தாலும், வாக்கு அரசியலில் இவர் வீழவில்லை. தனக்கு உள்ள அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க, 82 வயதிலும் அடிக்கடி டெல்லிக்கும் சிம்லாவுக்கும் இடையே பறந்துகொண்டிருக்கிறார்.

கர்நாடகம்

சித்தராமையா (காங்கிரஸ்)


காகம் உட்கார்ந்தற்கெல்லாம் காரை மாற்றக்கூடிய அளவுக்கு ஜோதிடம், சாஸ்திரத்தில் நம்பிக்கைக்கொண்டவர் சித்தராமையா. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்து அது வெற்றிபெறாமல், பின்னர் சோனியா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்து, மூத்த தலைவர்கள் பலரை ஓரம்கட்டி கர்நாடக முதல்வராகவும் ஆகிவிட்டார். இரண்டு முறை துணை முதல்வராக இருந்தவர், `இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்' என்று சொல்லி 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

முதல்வர்கள் பலவிதம்!

சொகுசுப் பிரியர். கடந்த ஆண்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு, யாரிடமும் பரிசுகள் வாங்குவதில்லை. தற்போது பெறப்படும் அன்பளிப்புகளுக்குச் சட்டபூர்வ ஒப்புதல்களைப் பெற்றுவிடுகிறார் சித்தராமையா.

சிக்கிம்

பவன் குமார் சாம்லிங் (சிக்கிம் ஜனநாயக முன்னணி)

முதல்வர்கள் பலவிதம்!

தொடர்ந்து ஐந்தாவது முறையாக, 22 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான் சிக்கிம் முதல்வர். இன்னும் ஓராண்டு ஆட்சியில் இருந்தால், மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்துவிடுவார். மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பவன்குமார். ஆரம்பத்தில், போலீஸில் எழுத்தராக வேலை பார்த்தார். 1982-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவரானார். அதன் பிறகு, 1985-ம் ஆண்டில் எம்.எல்.ஏ ஆனார். 1993-ம் ஆண்டில் `சிக்கிம் மக்கள் முன்னணி' என்று தனிக்கட்சி ஆரம்பித்துத் தேர்தலைச் சந்தித்து 1994-ம் ஆண்டில் முதல்வரானார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு எல்லாம் முன்னோடியாக 2003-ம் ஆண்டிலேயே `சிக்கிமில் தூய்மை சிக்கிம்' திட்டத்தைக் கொண்டுவந்து சாதித்துக் காட்டியவர். இந்த மாநிலத்தில் விளைவது எல்லாம் ஆர்கானிக். இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர். இவரின் குடும்பம் சற்றே பெரியது. இவருக்கு நான்கு மகன், நான்கு மகள்கள் உள்ளனர்.

திரிபுரா

மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

முதல்வர்கள் பலவிதம்!

அரசு அளிக்கும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி அளிக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்துகிறார் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார். இந்தியாவில் சொந்த வீடு, கார், வங்கியில் மிகப்பெரிய தொகை இருப்பு எதுவும் இல்லாத முதல்வர். இவரின் மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். இவர் இப்போதும் அகர்தலாவில், ரிக்‌ஷா வண்டியில் பயணித்து, காய்கறி, மீன் வாங்குவதைக் காணலாம். 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக மாணிக் சார்க்கார்தான் திரிபுராவின் முதல்வர்.