Published:Updated:

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

ஓவியம்: ஹாசிப்கான்

நாஞ்சில் சம்பத்தின் அடையாளமே வக்கனையான வைரல் வசனங்கள்தான்! `அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்', `துடைச்சு போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்' மாதிரியான அவருடைய வசனங்கள் எல்லாமே தஞ்சாவூர் கல்வெட்டு மெட்டீரியல்ஸ்.

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

அப்படிப்பட்டவரிடம் சில பெயர் களைக் கொடுத்து பஞ்ச்சா பேசுங்க என்றோம். கரகரவென தன் பேனாவால் ருத்ரதாண்டவம் ஆடிக்கொடுத்தார்.  அந்த அபார பஞ்ச்களின் தொகுப்பு இங்கே...

கருணாநிதி

அரை நுாற்றாண்டு காலம் தலைப்புச் செய்தியாகவே இருந்தவர். இப்போது அவரைப்பற்றி செய்தியே இல்லை. `நினைவாற்றலில் நிகரில்லாதவராக' இருந்தவருக்கு நினைவே இல்லை என்பதை நினைத்தாலே வலிக்கிறது.

ஜெயலலிதா

`தள்ளிப்போட முடியாத தாகமாக' மறைவுக்குப் பின்னாலும் இருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் ஆராதனைக்குரிய தெய்வம். அவரில்லை என்பதால் கால் இல்லாதவர்கள் எல்லாம் காலூன்ற ஆசைப்படுகிறார்கள்.

மோடி 

`ஓரே தேசம், ஒரே  மொழி, ஒரே சித்தாந்தம், ஒரே நாள் தேர்தல்' என்ற ஆபத்தான வழியில் பயணிக்கின்ற அபூர்வ மனிதர். பிளாட்பாரம் டிக்கெட்டை ஐந்து ரூபாயிலிருந்து பத்தாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கு வழிகாணுகிறார். பா.ஜ.க-வின் விலாசமாக இருக்கிற மோடி, நாளை தோல்விக்கும் முகமாக இருப்பார்.

எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பதவி எதிர்பாராத முத்தம். எதிர் நீச்சலுக்குப் பழகுகிறார். `முற்றுகையிடுகிற நெருக்கடிகளுக்கும், மூண்டு வருகிற சோதனைகளுக்கும் ஆயத்தமாகிவருகிறார்.'

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...
பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

ஸ்டாலின்

குறிபார்த்து அடிக்காமல், குழி பறிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.

 ஓ.பன்னீர்செல்வம்

`புஷ்யமித்திரனும், புரூட்டஸும், யூதாசும்' தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்குச் சமகாலச் சாட்சி. `நேற்று அம்மாவின் காலில், இன்று ஆதிக்கத்தின் காலில்.' மேலே செல்ல காலே பிரதானம்!

வைகோ

கறுப்புச் சட்டங்களின் கழுத்தை நெறித்தவன். சிறைச்சாலைகளில் நிலாச்சோறு உண்டவன். நாடாண்ட ஒன்பது பிரதமர்களைக் கேள்விகளால் நடுங்க வைத்தவன். தேர்தலின் போதெல்லாம் நிற்காமல் தோற்ற வைகோவைக் காலம் கைவிட்டு விட்டது.

சசிகலா

சுகங்களுக்கு அடிமையுறாத சூரியப் பருந்து. வரலாற்றில் பழிசுமந்து நிற்கிற பாத்திரம். சிறைக்குச் சென்ற பிறகும் தண்டிக்கப்படுகிறார். 

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

தினகரன்

அடக்குமுறை, ஆபத்து, அறைகூவல், அவதூறு இவற்றைத் தாண்டி வருகிற தனித்துவமிக்க தலைவன் டி.டி.வி.தினகரன். பூவுக்கும் புன்னகையைக் கற்றுக்கொடுக்கிற அவனே ஆளப்பிறந்தவன்.

ரஜினி

 ஒப்பனைகளை விரும்பாத நடிகர். பலரின் கற்பனைக்குள் சிக்காதவர். புரியாத புதிராக அவரை பலபேர் புரிந்து கொண்டாலும், எல்லாவற்றையும் புரிந்தவராக இருக்கிறார்.

கமல்ஹாசன்

கலையுலக மார்க்கண்டேயன். கந்தர்வ பேரழகன். அக்ரஹாரத்து அதிசய மனிதன். பகுத்தறிவும், பட்டைதீட்டிய ஞானமும், கல்வெட்டு கவிதையும், நட்சத் திரத்துக்கும் வரும் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்கின்ற வெளிச்சம் கமல்ஹாசன்.

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் கடைசி நம்பிக்கை. நேரு குடும்பத்தின் மிச்சமாக இருக்கின்ற தீப ஸ்தம்பம். வெற்றியை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தாலும், காங்கிரஸ் கட்சிக்குக் கவியும் விதியும் அவர்தான்.

விஜயகாந்த்

 காலம் தந்த வாய்ப்பைக் கைநழுவ விட்டவர். மொழிபெயர்க்க வேண்டிய அளவுக்குப் பேசுகிறார். ஆனால், மொழிபெயர்க்கத்தான் ஆள் இல்லை.

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

திருநாவுக்கரசர்

 அரசியலில் தனிமனித செல்வாக்குக்கு அடையாளமாக இருந்தவர். நன்றி உணர்ச்சிக்கும் திருநாவுக்கரசருக்கும் வெகுதுாரம். பெயரை மாற்றினால் யோகம் வரும் என்பதைப் பொய்யாக்கியவர்.

அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே நம்பிக்கை. குடும்ப அரசியலில் அதிக மதிப்பெண் பெற்றவர். வெற்றிபெற்ற நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் தோற்ற பெருமைக் குரியவர். சாதிக்க ஆசையிருக்கிறது, `சாதி'தான் அதைத் தடுக்கிறது.

சீமான்

 உணர்ச்சி மிகுந்த பொழிவாளர். `தமிழ் தேசியமும், திராவிட தேசியமும், வேறு வேறென்று சாதிப்பவர்.' தனித்தமிழில் பேசுகின்ற ஒரே தலைவர்!

தமிழிசை சௌந்தரராஜன்

பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை தமிழிசையை நம்பிச் சொல்லலாம்.

பஞ்ச் பஞ்ச்சா பேசுவோம்...

அழகிரி

பெற்ற தகப்பனாலே, `பிள்ளை இல்லை' என்று சொல்லப்பட்டவர். `அதிகாரம் இருந்தால் அஞ்சா நெஞ்சன், அதிகாரம் இல்லா விட்டால் அடையாளம் தெரியாத பேர்வழி.'

குஷ்பு

 பன்முகத்தன்மைகளின் முகவரி. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர். எப்போதும் யாராவது போட்டிக்கு வந்துவிடு கிறார்கள். இப்போது நக்மா!

- சந்திப்பு: அ.சையது அபுதாஹிர்