Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

நல்லவர்களை விட கெட்டவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே?


கெட்டவர்கள் நினைப்பது உடனே நிறைவேறிவிடுகிறது. நல்லவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான்.

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

பி.ஜே.பி-யின் ஜனாதிபதி வேட்பாளராமே ரஜினிகாந்த்?

டெல்லிக்குப் பக்கத்தில் இமயமலை இருக்கிறது என்பதற்காக இப்படி ஒரு யோசனையைச் சொல்கிறார்கள் போல!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில், பி.ஜே.பி மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதே?


பி.ஜே.பி தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதைவிட முக்கியமாக, இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளால் இன்னமும் மீட்க முடியவில்லை. அதைத்தான் டெல்லி தேர்தல் காட்டுகிறது.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

‘தி.மு.க. அலுவலகங்கள் அனைத்திலும் நூலகம் அமைக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாரே?


இப்போதுதான் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

பி.ஜே.பி-யால் எந்த நேரத்தில் தமிழகத்தில் காலூன்ற முடியும்?


சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா, கல்யாணராமன், கருப்பு முருகானந்தம் ஆகிய நான்கு பேர் நினைத்தால் தமிழகத்தில் பி.ஜே.பி எளிதில் காலூன்றலாம்!

கே.ஆர்.ஜி.கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

‘ஆட்சி தொடர வேண்டும்’ என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு ஆசை. ‘பதவி தொடர வேண்டும்’ என்று அமைச்சர்களுக்கு ஆசை. ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட வேண்டும்’ என்று பி.ஜே.பி-க்கு ஆசை. ‘இந்த ஆட்சி போக வேண்டும்’ என்பது தி.மு.க-வுக்கு ஆசை. மக்களுக்கு என்ன ஆசை..?


‘அக்னி நட்சத்திரம் சீக்கிரம் முடியவேண்டும்’ என்பது மக்களின் ஆசை!

தீ.அசோகன், திருவொற்றியூர்.

 ‘தனிப்பட்ட காரணங்களால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களே தவிர வறட்சி காரணமாக அல்ல’ என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது பற்றி..?


‘தற்கொலையே செய்துகொள்ளவில்லை, அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்’ என்று சொல்லவில்லையே என நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். தமிழகத்தின் முதலமைச்சர் சாவில் மட்டுமல்ல, விவசாயிகள் சாவிலும் மர்மம்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு மர்மப் பிரதேசமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது.

கழுகார் பதில்கள்!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

நல்ல அறிவுஜீவியான மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பதவி கொடுத்து, அவரது திறமையை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளுமா?


ஏன்? அந்த நல்ல அறிவுஜீவி, தான் ஆண்ட காலத்தில் என்ன செய்தார்? மன்மோகன் சிங்கை அமைதியாக இருக்க விடுவதே நல்லது. நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது செய்யும்போது தட்டிக்கேட்கும் மனிதர்களாக தலைவர்கள் இருக்க வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்து ஆண்டு காலத்தில் நிகழ்ந்த எல்லாத் தவறுகளுக்கும், அவருடைய மெளனமும் முக்கியக் காரணம். தனது பதவி நிலைத்தால் போதும் என்று அனைத்துக்கும் தலையாட்டியவர் அவர்.

ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப்தான். ஆனாலும், இந்த தேய்ந்த ரப்பர் வேண்டவே வேண்டாம்!

கழுகார் பதில்கள்!

ஏ.சங்கர், பெங்களூரு.

சசிகலாவைத் தொடர்ந்து தினகரன். அவரைத் தொடர்ந்து..?

இதோ பாஸ்கரன் நீதிமன்றத்துக்கு வர ஆரம்பித்து விட்டாரே?!

கழுகார் பதில்கள்!

சோ.பூவேந்த அரசன், சின்னதாராபுரம்.

‘ஊழலை வெறுக்கும் அ.தி.மு.க-வினரும் மாற்றுக் கட்சித் தொண்டர்களும் பா.ம.க-வுக்கு வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளாரே ராமதாஸ்?


சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு வழியனுப்பவும் வரவேற்கவுமா? அன்புமணி ராமதாஸ் இன்னமும் பா.ம.க-வில்தானே இருக்கிறார். ‘மருத்துவக்கல்லூரிகளை அனுமதிப்பதில் முறைகேடு செய்தார்’ என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ போட்ட வழக்கு இன்னமும் உயிரோடு இருப்பதால்தான் கேட்கிறேன்.

தி.வேல்முருகன் 
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

கழுகார் பதில்கள்!

தமிழக இளைஞர்கள் தங்களுக்கான மாற்றுத் தலைவர்களைத் திரையரங்க இருட்டிலேயே தேடுவது ஏன்?

தா
ங்கள் விரும்பும்படி எல்லாம் இந்த ஹீரோக்கள் இருப்பதால்தான், அவர்களையே தலைவர்களாகத் தேர்வு செய்கிறார்கள். இளைஞர்களுக்குச் சண்டை பிடிக்கும்; சாகசம் பிடிக்கும்; காதல் பிடிக்கும்; ரொமான்ஸ் பிடிக்கும். இவை அனைத்தையும் ஹீரோக்கள் செய்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதை... தங்களால் செய்ய முடியாததை ஹீரோக்கள் செய்வதால், அவர்களையே தலைவர்களாகவும் நினைக்கிறார்கள்.

நிழலில் நல்லது செய்த எம்.ஜி.ஆர்., நிஜத்திலும் நல்லது செய்வார் என்று நினைத்ததும் - நிழலில் கிருஷ்ணராகவே காட்சி தந்த என்.டி.ஆர்., நிஜத்திலும் கிருஷ்ணராகவே காட்சி தந்ததும்தான் - இன்றும் தொடர்கிறது. இரண்டு பேருமே நிஜத்தில் ஏமாற்றினார்கள். ஆனாலும், ஹீரோக்களும், ரசிகர்களும் மாறிக்கொண்டே இருப்பதால் பரஸ்பர ஏமாற்றம் தொடர்கிறது.

தமிழக இளைஞர்கள், தங்கள் தலைவர்களைத் திரையில் தேடாத மாதிரி தமிழக அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும். தியாகராஜ பாகவதர் காலத்தில் பெரியார், தன் பிரசாரத்தால் தமிழகத்தை விழிக்க வைத்தார். பல ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், காமராஜரின் அரசாட்சி கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் கவர்ச்சியை மீறியதாக இருந்தது அண்ணாவின் தமிழ்.

போராட்டமும், நேர்மையும், உண்மையும் கொண்டவர்களாக அரசியல் தலைவர்கள் இருந்தால், திரையில் தலைவர்களைத் தேடமாட்டான் இளைஞன்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism