Published:Updated:

நிறைவேறி இருப்பது துரோகத் தீர்மானம் - வெடிக்கிறார் செல்வகணபதி

நிறைவேறி இருப்பது துரோகத் தீர்மானம் - வெடிக்கிறார் செல்வகணபதி
நிறைவேறி இருப்பது துரோகத் தீர்மானம் - வெடிக்கிறார் செல்வகணபதி
நிறைவேறி இருப்பது துரோகத் தீர்மானம் - வெடிக்கிறார் செல்வகணபதி

புதுடெல்லி: ஐ.நா. மன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உப்புச் சப்பில்லாதது அது ஒரு வெற்றுத் தீர்மானம், துரோகத் தீர்மானம் என்று வெடிக்கிறார்  திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி.
 
இதுகுறித்து விகடன் டாட் காமிடம் பேசிய செல்வகணபதி, ''ஒரு வெற்று தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது பெரும் வியப்பல்ல. இந்த தீர்மானத்தில் காலவரையறையுடன் கூடிய சர்வதேச பன்னாட்டு அமைப்பின் புலனாய்வு அமைப்பு, இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. ஆனால், இவைகள் எல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம்பெறவில்லை.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பின்னரும் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் ஈழம் அழிந்து கொண்டு இருக்கிறது. இதை. திமுக,  சட்டத்தின் மூலமாகவும் தீர்மானத்தின் மூலமாகவும் பல்வேறு போராட்டங்கள் மூலமாக சொல்லிவந்தது. இது மட்டுமல்ல, எங்கள் கட்சி நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பியது. பிரதமரையும் தனிப்பட்ட முறையில் பல்வேறுமுறை சந்தித்து நிவாரணம் தேடினோம். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு அந்த அரசை பொறுப்பேற்றகச் சொல்லி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்தியது காங்கிரஸ் அரசின் காதுகளில் விழ வில்லை.

##~~##
இனிமேலும் இந்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்ற காரணத்தால் தான் அரசுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றோம். அதிகாரத்தை மட்டும் தக்க வைத்துக்கொள்ள துடிக்கும் ஒரே குறிக் கோளோடு இருக்கின்ற இந்திய அரசாங்கம், ‘நாங்கள் இலங்கையோடு பேசிக்கொண்டு இருக்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே வந்தது.இறுதியாக, 'திமுக எதிர்பார்க்கும் தீர்மானத்தை கொண்டுவருவோம்' என்று கூட சொல்லி எங்களை நம்ப வைத்தார்கள்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த நாட்டு மக்களை குழப்பி கடைசியில் ஒன்றும் நடந்தேறாமல் தமிழர்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துள்ளது மத்திய அரசு. இந்த தீர்மானம் இலங்கை தமிழர்களின் ரணங்களை ஆற்ற எள் அளவும் பயன்படப்போவதில்லை. 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலை. அதை இந்தியா கண்டிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இந்த இனப்படுகொலைக்கு காரணவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் அளவிற்கு தீர்மானம் கொண்டுவர‌ இந்தியா தீர்க்கமாக வலியுறுத்த வேண்டும் என்றும் எங்கள் தலைவர் கேட்டுக்கொண்டார்.

அப்படிப்பட்ட தீர்மானம் வந்திருந்தால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு தீர்வாக இருந்திருக்கும். தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு நீர்த்துப்போன தீர்மானம். இதனால் யாருக்கும் எந்த நன்மையும் எட்டிவிடப் போவதில்லை" என்று படபடத்தார்.

-சரோஜ் கண்பத்