Published:Updated:

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!
பிரீமியம் ஸ்டோரி
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

பா.பிரவீன்குமார்

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

பா.பிரவீன்குமார்

Published:Updated:
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!
பிரீமியம் ஸ்டோரி
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்று கருதப்பட்ட காலத்தில் கட்சித் தலைவரானவர் சோனியா காந்தி. எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி பி.ஜே.பி-யை எதிர்த்து, காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்தார். நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக யாரும் பிரதமரானது இல்லை என்ற நிலையை மாற்றி மன்மோகன் சிங்கை இரண்டாவது முறையாக அரியணையில் அமர வைத்தார்.

தற்போது, மீண்டும் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  சோனியா காந்தியால் மட்டுமே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பி.ஜே.பி-யின் வெற்றிக்குத் தடை போட முடியும் என்கிற குரல்கள் எதிரொலிக்கின்றன. ஆனால் களத்துக்கு வரவேண்டிய சோனியா காந்தி உடல் நலக்குறைவால் துவண்டுபோயிருக்கிறார்.

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்துள்ளது. வாழ்வா, சாவா என்று எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் சோனியா காந்தி பிரசாரத்துக்கு வரவில்லை. ஆனால், உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட மீண்டும் சுறுசுறுப்பானது காங்கிரஸ்.

ஜனாதிபதி தேர்தல்!

 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும் ஜூலையுடன் முடிகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மற்றும் வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும்கூட, பி.ஜே.பி-க்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை பெற நூலிழை இடைவெளி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், பி.ஜே.பி-யின் குடியரசுத் தலைவர் கனவு தவிடுபொடியாகிவிடும். இதற்கான காய் நகர்த்தலில் மிகத் தீவிரமாக இறங்கிய சோனியா, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், உமர் அப்துல்லா உள்ளிட்ட பி.ஜே.பி-க்கு எதிரணியில் உள்ள தலைவர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்தார்.

இந்நிலையில்தான், சோனியாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மே 7-ம் தேதி இரவு, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு ‘ஃபுட் பாய்சன்’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார் சோனியா. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெறுவது இது முதல்முறை அல்ல... கடந்த 8 மாதத்தில் இது நான்காவது முறை.

புற்றுநோயா?

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக சோனியா காந்தி சென்றிருந்தார். அங்கு அவருக்கு அமெரிக்கவாழ் இந்திய மருத்துவர் தத்தாத்ரேயடு நோரி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தத்தாத்ரேயடு, புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவர். சோனியாவுக்கு என்ன நேர்ந்தது, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது எல்லாம் ரகசியமாகவே இருந்தன. ஆனாலும், சோனியாவுக்குக் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருந்ததாகவும், இதற்குச் சிகிச்சை பெறவே அமெரிக்கா சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவில் சோனியாவுக்கு கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையும் கீமோ, ரேடியேஷன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு  அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. 

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

அதில் இருந்து தொடர் மருத்துவக் கண்காணிப்பு, சிகிச்சையிலேயே சோனியா காந்தி இருந்து வருகிறார். இதுதவிர, சோனியா காந்திக்கு ஆஸ்துமா, எலும்பு தொடர்பான பிரச்னைகளும் உள்ளன. இதனால், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருவதாகக் கட்சியினர் சொல்கின்றனர். 

அரசியல் எதிர்காலம்!

 வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டுமல்ல... 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-யின் வெற்றிக்குத்  தடைபோட சோனியா காந்தியால் மட்டுமே முடியும் என்பது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டும் அல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்து. சோனியா சொன்னால் எல்லோரும் ஓர் அணியில் திரள்வார்கள் என்பதுதான் மம்தா உள்பட பல கட்சித் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் தொடர் உடல்நலக்குறைவு அவரை ஆட்டிப்படைக்கிறது.

சோனியாகாந்தி மீண்டும் அரசியல் களத்துக்கு வருவாரா என்பதற்கான கேள்விக்குப் பதில் சோனியாகூட இப்போதைக்கு சொல்ல முடியாது என்பதே உண்மை!