Published:Updated:

அவமானம்... அவலம்... அசிங்கம்!

அவமானம்... அவலம்... அசிங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அவமானம்... அவலம்... அசிங்கம்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

அவமானம்... அவலம்... அசிங்கம்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Published:Updated:
அவமானம்... அவலம்... அசிங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அவமானம்... அவலம்... அசிங்கம்!

ரண்டாவது இன்னிங்ஸில் முதல் 12 ஓவர்களை ஆடி முடித்துவிட்டது அ.தி.மு.க அரசு.  மூன்று கேப்டன்கள் மாறி, ஏகப்பட்ட விக்கெட்டுகளை இழந்து, பலர் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே பிடுங்கப்பட்டு என மிகமிக மோசமான ஆட்டம்! 

மே 23-ம் தேதியோடு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடையப்போகிறது. ஜெயலலிதாவின் மர்ம மரணம், நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை பதவியேற்பு, ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி சசிகலா குடும்பத்தினர் அரண், சசிகலா பொதுச் செயலாளராக நியமனம், பன்னீர்செல்வத்தைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா, முதல்வர் பதவிக்கு சசிகலா தேர்வு, பன்னீர்செல்வத்தின் எழுச்சி, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குச் சிறை, தினகரன் என்ட்ரி, கூவத்தூர் கூத்து, எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை பதவியேற்பு, இரட்டை இலை முடக்கம், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அடுத்தடுத்து ரெய்டுகள், தினகரன் கைது என இந்த ஓராண்டு முழுவதுமே பிரேக்கிங் நியூஸ்தான்.

அவமானம்... அவலம்... அசிங்கம்!

ஆந்திராவில் வரவேற்பு... தமிழகத்தில் வழிப்பறி!

தானாகத் தேடிவரும் முதலீடுகளைக்கூட தக்கவைத்துக்கொள்ளாமல் துரத்தியடிக்கிறது அ.தி.மு.க அரசு. தொழில் நடத்த சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இப்போது 18-வது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
ஆந்திராவுக்குப் போன  `கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் சென்னையில் அமைந்திருந்தால் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் 72 சிறு தொழிற்சாலைகளும் பத்தாயிரம் பேருக்கு வேலையும் கிடைத்திருக்கும். ஆனால் ஆட்சியாளர்களின் கரன்சிப் பசிக்கு இளைஞர்களின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்கள்.

இப்படித்தான் திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் அமையவிருந்த அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சின்டெல், தனது திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறது. அறிவுசார் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கிவரும் சின்டெலுக்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு முதலில் 25 ஏக்கரில் இரண்டரை லட்சம் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கத் துவங்கியது. ஆனால் லஞ்சப் புகார் காரணமாக, அனுமதி கிடைக்காததால் புதிய வளாகத்தைத் திறக்கும் முடிவைக் கைவிட்டு வெளியேறத் தீர்மானித்துவிட்டது இப்போது.

2015-ம் ஆண்டு ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகத் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், அந்த ஆண்டு முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட தொகையே ரூ.19,811 கோடி மட்டும்தான். கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ.10.54 லட்சம் கோடி முதலீடு செய்ய நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன. ஆந்திராவோ வரவேற்புக் கம்பளம் விரிக்கிறது; தமிழகமோ வழிப்பறிக் கொள்ளை நடத்துகிறது.

ஆர்ப்பாட்டத்தோடு ஆடம்பரமாக அறிவிக்கப்பட்ட ‘விஷன் 2023’ ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த முன்னேற்றம் இல்லாமல் முடங்கிப்போயிருக்கிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த இந்தத் திட்டத்தில் ஐந்து சதவிகிதம்கூட வளர்ச்சி இல்லை.

அவமானம்... அவலம்... அசிங்கம்!

2023-ம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் ஆண்டு வருவாய் 6.50 லட்சம் ரூபாயாக இருக்கும் என விஷன் 2013-ல் அறிவித்திருந்தார்கள். அந்த இலக்கை எட்ட வேண்டுமெனில், நடப்பு ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 3.63 லட்சம் ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தனிநபர் வருமானம் இன்னமும் ரூ.1.58 லட்சம்தான்.

கறைகள்... கரன்சிகள்... ஊழல்!

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட், துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி, தொழில் தொடங்க உரிமம் என எல்லா வகையிலும் வாரிச் சுருட்டும் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய’த்துக்குக் கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் 11 புதிய உறுப்பினர்களை நியமனம்செய்தார் ஜெயலலிதா. இந்த நியமனம் முறைகேடாகச் செய்யப்பட்டிருக்கிறது எனச் சொல்லி ரத்துசெய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் கடந்தமுறை நியமிக்கப்பட்டு நீதிமன்றங்களால் நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேரை, மீண்டும் உறுப்பினர்களாக நியமித்திருக்கிறார்கள். ‘நியமனத்துக்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை... விண்ணப்பங்கள் கோரப்படவில்லை... தகுதிகள் ஒப்பீடு செய்யப்படவில்லை’ என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. இப்போது நியமிக்கப்பட்டவர்களிலும் வெளிப்படையான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. தகுதிக்கு மதிப்பளிக்கப்படாமல் முறைகேடுகளுக்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் நிர்வாகத்துக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தேர்வாணையத்தின் நியமனமே வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டால், எப்படியான ஊழியர்கள் தேர்வு ஆவார்கள்? துதி பாடுவோருக்கும் துட்டு கொடுப்பவர்களுக்கும் பதவி வழங்குவதற்கான அமைப்பாகத் தேர்வாணையத்தை மாற்றிவிட்டார்கள்.

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குடிமராமத்துத் திட்டத்திலும் தில்லுமுல்லு. குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் ஏரிகளில் உள்ள சவுடு மண் உழவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லிவிட்டு, செங்கல் ஆலை அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த அதிபர்களே மண்ணை வெட்டி எடுத்துச்செல்வதால், அதையே தூர் வாரியதாகக் கணக்குக் காட்டி அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் ஆளும் கட்சியினரால் சுருட்டப்படுகிறது எனப் புகார் வாசிக்கப்படுகிறது.

அவமானம்... அவலம்... அசிங்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களையும், அதன் உறுப்புக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதில் துணைவேந்தர், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோரின் ஏஜென்ட்கள் பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பணியாளர் நியமனத்திலும் ஊழல் புரையோடிப்போனது. பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் போஸ்ட்டிங் போடப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. துணைவேந்தர்கள் துணையோடு இப்படியான முறைகேடுகளை ஆளும் கட்சியினர் நடத்திக்கொண்டிருந்தார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் 40 கோடி ரூபாய், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 64 பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் என ஊழல்மயமானது தமிழகப் பல்கலைக்கழகங்கள்.

சென்னையில் மிகப்பெரிய தலைமை அலுவலகம் இருந்தும் ‘மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படும்' என அறிவித்தபோதே ஊழல் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் நடத்துவதற்குப் பதிலாக ஸ்டார் ஹோட்டலில் நடத்தத் திட்டமிட்டதற்கு நோக்கம் என்ன? அங்கே தரகர்களை வைத்துப் பேரம் பேசலாம் என்பதைத் தவிர, வேறு என்ன இருக்க முடியும்?

இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளுக்கோ எனக் கணக்குப் போட்டு கரன்சிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் சரோஜா. கறைபடியாத கரங்களைக் கேபினெட்டுக்குள் தேட வேண்டியிருக்கிறது.

‘30 லட்சம் ரூபாய் மோசடிசெய்த அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்கு பதிவுசெய்யவில்லை’ என உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் இரண்டு முறை குட்டிய பிறகுதான் அவர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். அமைச்சர் மீது மோசடி வழக்குப் பதிவுசெய்யும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டபோது ஏற்காத தமிழக அரசு, காமராஜைக் காப்பாற்ற நினைத்தது. கிரிமினல் பின்னணி கொண்டவர்களை கேபினெட்டுக்குள் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சேகர் ரெட்டி,  அமைச்சர்கள், அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் பணம் வழங்கியதற்கான டைரி சிக்கியது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வருமான வரித் துறை, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை.

அமைச்சர் வீட்டிலேயே வருமானவரிச் சோதனை நடக்கும் அளவுக்கு ஊழல் மலிந்துபோனது. அமைச்சர் மட்டுமா... தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி, நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி என இந்த ஓர் ஆண்டில் நடந்த ரெய்டுகளே ஊழல் கறை படிந்த ஆட்சிக்கு சாட்சி.

விவசாயிகள் தற்கொலை!

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. நெற்பயிர்கள் கருகி, பல உழவர்கள் வயலிலேயே மயங்கி விழுந்து இறந்தனர். கடன் வாங்கிய விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். நூற்றுக்கணக்கில் விவசாயிகள் இறந்தபோது விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் எனச் சொன்னது அரசு. விவசாயிகள் தற்கொலையால் அரசுக்குக் கெட்டபெயர் வந்துவிடக் கூடாது என இறப்பைக் குறைத்தவர்கள், ஊழல், ரெய்டு ஆகியவற்றால் ஏற்பட்ட அவப்பெயரை எங்கே போய்த் துடைப்பார்கள்?

காவிரி, பாலாற்றுத் தடுப்பணை, முல்லை பெரியாறு, மீனவர் என உயிர்நாடிப் பிரச்னைகளில் தமிழக அரசு இன்னமும் மெத்தனமாகத்தான் இருக்கிறது.

சட்டம் - ஒழுங்கு தட்டுப்பாடு!

ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருந்தபோது, கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. இப்போது யாருக்கும் கட்டுப்படாததால்,  சட்டம் - ஒழுங்குக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது!

உளவுத்துறை இயக்குநர், உளவுத்துறை ஐ.ஜி ஆகியோர் அரசியல் பணிகளின் மீது மட்டுமே அக்கறை கொண்டிருந்தால், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கத்தான் செய்யும். அவர்களையும் முழுமையாக ஒரே இடத்தில் உட்காரவிட்டார்களா? கடந்த இரு ஆண்டுகளில் உளவுத்துறை ஐ.ஜி-க்கள் ஆறு முறை மாற்றப்பட்டிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு இறுதியில் நியமிக்கப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் நீக்கப்பட்டு, சத்தியமூர்த்தியைக் கொண்டுவந்தார்கள். 2016 சட்டசபைத் தேர்தலில் கரண் சின்ஹா, அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். பிறகு மீண்டும் சத்தியமூர்த்தி, மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம். 10 நாள்களில் டேவிட்சனை நீக்கினார்கள். இப்படிக் காக்கிகளைப் பந்தாடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் கலெக்டர் மற்றும் காவல் துறை மாநாடு, முதல்வர் தலைமையில் நடத்தப்படும். இதில் குற்றங்கள் பற்றி அலசி மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் எல்லாம் விவாதிக்கப்படும். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவே இல்லை.

ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டத்தை வன்முறையாக்கிய பெருமை காக்கிகளுக்கே சேரும். வாகனங்களுக்கும் குடிசைகளுக்கும் மீன் மார்க்கெட்டுக்கும் தீவைத்து காவல் துறை நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் போலீஸ் வரலாற்றின் புதிய தியரி. வாகனங்களுக்குக் காவலர்களே தீவைக்கும் வீடியோ காட்சிகள் வன்முறையின் சாட்சி. இந்தக் கறையைக் கழுவ மெரினாவின் கடல் நீர் போதாது.
மது... சூது!

‘நெடுஞ்சாலைகளில் இருக்கிற மதுக்கடைகளை மூட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகம் முழுவதும் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், மற்ற இடங்களில் அந்த மதுக்கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் திறக்கப் போர்க்கால நடவடிக்கையைத்தான் மேற்கொள்கிறார்கள். விளைவு, டாஸ்மாக் கடைகள் நொறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. திருப்பூர் சாமளாபுரம் தொடங்கி தருமபுரி வரையில் மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஓயவில்லை. போராடிய பெண்களைக் கொடூரமான முறையில் தாக்கியது போலீஸ். ‘‘மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றமா... மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக்கூடக் காவல் துறை கைதுசெய்யுமா’’ எனக் கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம்.

அவமானம்... அவலம்... அசிங்கம்!

நெடுஞ்சாலைகளை எல்லாம் மாநகரச் சாலைகளாகவும் மாவட்டச் சாலைகளாகவும் மாற்றும் பணியை கையில் எடுத்தது அரசு. மது விற்பனைக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வதோடு ஸ்டார் ஹோட்டல்கள், விடுதிகள், பார்கள், கிளப்புகள் ஆகியவற்றிலும் கல்லா கட்ட நினைத்தார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசோ, மது ஆலைகளின் நலனில்தான் அக்கறை காட்டியது. மக்கள் நலனைவிட மது விற்பனைதான் முக்கியம் எனச் சாலைகளை வகைமாற்றம் செய்வதில் களமிறங்கியிருக்கிறது.

ஊழல்களும், அவமானங்களும், அவலங்களும், அழுகுரல்களும் மட்டுமே கடந்த ஓர் ஆண்டின் சாதனை!