Published:Updated:

“அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

 “அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ஜெரோம்

“அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ஜெரோம்

Published:Updated:
 “அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற கேள்விக்குக் கால் நூற்றாண்டுகள் ஆகியும் இன்னமும் பதில் மட்டும் கிடைக்கவில்லை.
 
ரஜினி அரசியலுக்குப் பயப்படுகிறார், தேர்தலின்போது மட்டும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிக்கை விடுகிறார், அவரது படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் அரசியல் பேச்சை எடுத்து அதற்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்கிறார், அரசியலுக்கு வந்தால் அவருடைய ரசிகர்களுக்குப் பொறுப்பு வழங்குவாரா போன்ற பல கேள்விகள் ரஜினியை வட்டமடித்துக்கொண்டே இருந்தன. இந்தக் கேள்விகளுக்கான பதிலை ரஜினியே சொல்லிவிட்டார். ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட துவக்க நிகழ்ச்சியில்தான் இதுகுறித்து பேசினார் ரஜினி. 

மே 15-ம் தேதி ரசிகர் சந்திப்புக்கான துவக்கவிழா நடந்தது. மொத்தம் 600 பேர் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஐ.டி கார்டுகள் வழங்கப்பட்டு இருந்தன. அவர்கள் மட்டுமே மண்டபத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். மண்டபம் முழுவதிலும் பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்கள்தான் ரசிகர்களை ஒழுங்குபடுத்தினார்கள்.

 “அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

மேடையில் பாபா முத்திரை பதித்த பெரிய படம் மாட்டப்பட்டிருந்தது. இரண்டே நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருந்தன. இன்னொரு நாற்காலி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு.

முதலில் பேசிய எஸ்.பி.முத்துராமன், ``நான் ரஜினியைச் சந்திக்கும்போது எல்லாம் உன் ரசிகர்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அவரோடு நான் 25 படங்களை இயக்கினேன். என் 25 படங்களில் நடிச்சு இருக்கிறார்னா... எந்த அளவுக்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்னு பார்த்துக்கோங்க. அவர் எப்போதும் சொல்வார், எனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்க. ஒருத்தர் பெங்களூரில் இருக்கிறார்.

இன்னொருவர் சென்னையில் இருக்கும் முத்துராமன் அண்ணானு சொல்வார். எங்க நட்பு பல ஆண்டுகள் ஆகியும் வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.” என்றார் சுருக்கமாக.

அடுத்து மைக் பிடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் முத்துராமனுடன் வேலை செய்த அனுபவங்களை முதலில் பகிர்ந்துகொண்டவர், அடுத்து அரசியல் டாபிக்கைக் கையில் எடுத்தார்.

 ``கொஞ்ச நாட்களுக்கு முன்னாடியே உங்களைச் சந்திக்கிற ஐடியா இருந்தது. சில வேலைகளால்  அது கேன்சல் ஆனது. அடுத்து நான் ஸ்ரீலங்கா போற மாதிரி இருந்தது. அதையும் கேன்சல் பண்ணுற மாதிரி ஆகிடுச்சு. உடனே சில ஊடகங்கள் அவர் எதிலும் ஸ்டெடியா நிக்கமாட்டாரு. அவர் மைண்ட் சேஞ்ச் பண்ணிட்டே இருப்பாரு. தயங்குறாரு. பயப்படுறாரு... இப்படி எல்லாம் பேசினாங்க. எழுதினாங்க. நான் ஒரு விஷயம் செய்யறேன்னு சொன்னா... நிறைய யோசிப்பேன். சிந்தனை பண்ணித்தான் முடிவு எடுப்பேன். இப்ப தண்ணியில கால் வைக்கிறோம். கால் வெச்ச பின்னாடிதான் தெரியுது. அதுக்குள்ள நிறைய முதலைகள் இருக்குனு. சரி, எடுத்து வைத்த காலை பின்னாடி எடுக்க மாட்டேன்னு சொன்னால் என்ன ஆகும்? (சிரிக்கிறார்). எப்பவும் முரட்டு தைரியம் எல்லாம் இருக்கவே கூடாது. பேசுறவங்க பேசிட்டேதான் இருப்பாங்க.

அப்புறம் ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும், அவர் ஏதாவது ஸ்டன்ட் பண்ணுவாரு. படம் ஓடுறதுக்கு ஏதாவது யுக்திகளைச் செயல்படுத்துவாருன்னு சொல்லுறாங்க. ஆனா, உங்களுடைய ஆசிர்வாதத்தால், அன்பால் அப்படிப் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா என்னுடைய ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்கள் இதுக்கு எல்லாம் ஏமாற மாட்டாங்க. ஆனா, ஒரே ஒரு விஷயத்துலதான் ரொம்ப ஏமாறுறாங்க. அது எதுனு நான் சொல்ல விரும்பலை. (கூட்டம் முழுக்க ஒரே கைத்தட்டல்)

அரிசி நல்லா வெந்தால்தான் சோறாகும். அதே மாதிரி படம் நல்லா இருந்தால்தான் வெற்றி அடையும். நீங்க என்னதான் தலைகீழா குட்டிக்கரணம் அடிச்சாலும் ஒண்ணுமே செய்ய முடியாது. நான் நல்ல படங்கள் கொடுத்திருப்பதால் இப்ப இங்க நிக்கிறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் இதைச் செஞ்சிட்டு இருக்கேன்.

21 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கட்சிக்கு ஆதரவு தர வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. அந்தக் கட்சிக்கே என்னை வாழ வெச்ச தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைச்சாங்க. அப்ப இருந்து என் பேரு அரசியலில் அடிபட ஆரம்பிச்சுடுச்சு. என் ரசிகர்களில் சில பேர் ரொம்ப ஆர்வமா அரசியலில் ஈடுபட ஆரம்பிச்சுட்டாங்க. சில அரசியல்வாதிகள் அவங்களைப் பயன்படுத்திக்கிட்டாங்க. இவங்களும் அவங்களைப் பயன்படுத்திக்கிட்டாங்க. அதுல நிறையப் பணம் கூடப் பார்த்துட்டாங்க.

 பூனை ருசி கண்ட மாதிரி அந்த ருசி அவங்களுக்குத் தெரிஞ்சு போய்டுச்சு. அதைப் பார்த்து அடுத்த அடுத்த தேர்தல் வரும்போது எல்லாம், இவங்க அவங்களை நாடுவது... அவங்க இவங்களை நாடுவது, நான் இந்தக் கட்சிக்கு ஆதரவு தருகிறேன்னு சொல்றது எல்லாம் நடந்தது. அதுனாலதான் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்படுகிறேன். நான் வந்து ஒரு பெரிய அரசியல் தலைவரோ, சமூக சேவகரோ, ஒரு பெரிய ஆளோ, எல்லாரும் என் ஆதரவுக்காகக் காத்திருக்கிறதோனு அப்படி எதுவும் கிடையாது. என் பேர் சொல்லி யாரும் ஏமாத்திடக் கூடாதுனுதான் நான் அறிக்கைவிடுறேன்.

நிறைய ரசிகர்கள் லெட்டர் எழுதுறாங்க. நாங்களும் உங்க படம் பார்த்துட்டு அப்படியே இருந்துவிடுவதா? நாம எப்ப முன்னேறுவது? நமக்கு அப்புறம் பிறந்தவங்க எல்லாம் ஒயிட் டிரெஸ் போட்டுட்டு இன்னோவால போறாங்க. நாம எப்ப அப்படி எல்லாம் போறது? நாம எப்ப பணம் சம்பாதிக்கிறது, நாம எப்ப ரெண்டு, மூணு வீடு வாங்குறதுனு லெட்டர் எழுதுறாங்க. சில பத்திரிகைகளிலும் பேட்டி கொடுக்கிறாங்க. கவுன்சிலர் ஆகணும், எம்.எல்.ஏ ஆகணும்னு நினைப்பதில் தப்பு இல்லை. ஆனா, அதை வெச்சுட்டுப் பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கும்போது வருத்தப்படுவதா? கோபப்படுவதா?  சிரிக்கிறதானு ஒண்ணுமே புரியலை.

 “அரசியலுக்கு நான் வந்தால், தனிக்கட்சிதான்!”

நான் அப்பவும் சொல்றேன். இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையிலதான் என் வாழ்க்கை இருக்கு. இந்த உடம்பை நான் சுத்தமா வெச்சுக்கணும். ஆரோக்கியமா வெச்சுக்கணும். இதயத்தைத் தூய்மையா வெச்சுக்கணும். அவ்வளவுதான். அந்த ஆண்டவனுக்கு நான் ஒரு கருவி. அவன் என்னைப் பயன்படுத்திட்டு இருக்கான். இப்ப நடிகனாகப் பயன்படுத்திட்டு இருக்கான். நடிகனா நடிச்சுட்டு இருக்கேன். நாளைக்கு அவன் என்னை என்னவாகப் பயன்படுத்தப்போறான்னு எனக்குத் தெரியாது. (இரண்டு கைகளையும் விரித்துக் காண்பிக்கிறார்)

அவன் என்னைப் பயன்படுத்தும்போது எல்லாம் நியாயமா, தர்மமா, உண்மையா இருக்கேன். அந்த மாதிரி என்ன பொறுப்பு கொடுத்தாலும் இப்படித்தான் இருப்பேன்.

என் தலையில அரசியல் எழுதலைனு சொன்னால் நீங்க ஏமாந்து போவீங்க. ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிற ஆட்களை அருகில் சேர்க்க மாட்டேன். அவங்களை என் மூலமாக அரசியலுக்குள் நுழைய விட மாட்டேன். அதனால் அப்படிப்பட்ட ஆட்கள் இப்பவே ஒதுங்கிடுங்க. இல்லைன்னா ஏமாந்து போவீங்க.” என்றவர் ’’யாரும் புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள்” எனப் பேச்சை முடித்தார் ரஜினி.

ரஜினி பேசி முடித்ததும் மீடியாக்கள் வெளியேற்றப்பட்டன. ரஜினி உட்கார்ந்தபடியே இருக்க ரசிகர்கள் குழுவாகப் படம் எடுத்துக்கொண்டனர். ரஜினி நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ``தலைவர், நிச்சயம் அரசியலுக்கு வருவார். ஆனால் வந்தால் தனிக்கட்சிதான் என்று எங்களிடம் சொல்லியிருக்கிறார்'' என உற்சாகமானார்கள்.

பாபாதான் பதில் சொல்லணும்!